vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, May 23, 2014

                    மாடு  நேர்மையானது

[எஸ்.வைதீஸ்வரன்}



எண்ணை  வியாபாரி  கடையில் உட்கார்ந்து  கொண்டிருந்தான்
எண்ணை  வாங்குவதற்கு ஒருவன்  தூக்குப் பாத்திரத்தோடு  வந்தான்.

வியாபாரி  பாத்திரத்தில்  எண்ணை ஊற்றிக்  கொண்டிருந்த  போது இடையில்  சற்று  நிறுத்தி  எதையோ  உற்று செவிசாய்த்துக்  கேட்டான்..  பின்கட்டில் அமைந்திருந்த  செக்காலையிலிருந்து  வந்த  சலங்கை  சப்தம்  நின்று போயிருந்தது..  உடனே  வியாபாரி  வாயில்  “டுர்...டுற்...”  என்று சப்தம்  செய்தான்  மறுபடியும்  சலங்கை சப்தம்  தொடர்ந்தது

எண்ணை  வாங்க  வந்தவன்  இதைக்  கவனித்தான்.“அதென்ன  சத்தம்  குடுத்தீங்க ?” ன்னு  கேட்டான்.

வியாபாரி  சொன்னான்.“ அது  ஒண்ணுமில்லே...பின்னால  எண்ணையாட்டறதுக்கு செக்கு மாடு  சுத்திக்கிட்டு  வருது...அது  சுத்துதா  இல்லையான்னு  இங்கேருந்தே  கவனிக்க  அது  கழுத்துலே  மணியை  கட்டி  தொங்க  விட்ருக்கேன்... மாடு நின்னா  சத்தம்  நின்னு போயிரும்  உடனே  நான்  குரல்  குடுப்பேன் ... அது மறுபடியும்  சுத்த  ஆரம்பிக்கும்...” அப்படீன்னான்.

வந்தவன்  சாதுரியமான  மனிதன்.அவன்  சொன்னான்...”அதெல்லாம் சரிப்பா......ஆனா  மாடுங்க ஒவ்வொரு  சமயம் சாமர்த்தியமா  ஓடாமயே  ஒரே  எடத்துலெயே  நின்னுகிட்டு    தலையை மட்டும்  அப்ப்ப்போ  ஆட்டிக் கிட்டே  இருந்தா மணிசத்தம்  கேட்டு  நீங்க  ஏமாந்துடுவீங்க  இல்லையா? “


பாத்திரத்தில் எண்ணையை  ஊற்றி  முடித்த  வியாபாரி  வந்தவனை உற்றுப்  பார்த்தவாறு  சொன்னான்... ”அய்யா.....நீங்க  சொல்றது  சரி தான்....ஆனா....அந்த  மாதிரி  ஏமாத்து வேலையெல்லாம்  மாடுங்க  செய்யாது...”””

                            *
ஒரு சொற்பொழிவில் கேட்டது

Friday, May 16, 2014

கவிதை                 சமாதி வார்த்தைகள்
_வைதீஸ்வரன்


                     
கொட்டி  முழக்கின
நாற்பதினாயிரம்  கரங்கள்
கோரமாய்  ஒலித்தன
பாராட்டுக்  கோஷங்கள்
வட்ட  மைதானத்தில்
நட்ட நடுப்  புள்ளியாய்
ஒரு  நாலடி  மனிதன்
கர்வத்தால்  காலகட்டி
வானத்தைப் பிய்ப்பது போல் 
ஆர்ப்பரித்தான்.
இரும்புத்  துண்டுகளாய்
இரண்டு  கரங்களைத்  தூக்கி
வளைய வந்து  
திசையை  ஆட்டினான்.
வெற்றி  வெற்றியென்று
செவிப்பறை  கிழியக்  கத்தினான்....
ரத்த  நிறத்து  மண்ணில்
கழுத்து  வக்கரித்து
நாக்கு நரம்பறுந்து  தொங்க
காற்றைக்  கிழித்த  கொம்புகள்
கழித்துப் போட்ட  கழிகளாகக்  கிடக்க
கருத்த  வயிறு பருத்து  வானம்  பார்க்க
ஒரு  காளையெனும்  அற்புதப்  படைப்பு
அவலப்  பிண்டமாய்
கிடக்கிறது  பூமியில்
தெறித்து  விழுந்தது  தெய்வமே  போல
பரந்து கிடக்கும் மண்ணில்
பராக்கிரமத்தை நிரூபிக்க 
மனிதனுக்குக்  கிடைத்தது
இந்த  மைதான  வட்டமும்
வன்மம் தெரியாத ஒரு
வாயற்ற  ஜீவனும்  தானா?
மனத்தின் வெறிகளை  விடவா
ஒரு மிருகத்தை  ஜெயிப்பது
பெருமைக்குரிய  மனித  சாதனை??



[தி  இந்து  தமிழ் 16/5/14 *The  words  are  the  reaction  to seeing the video on  “ Bullfight  in  Barcelona..”                       


Saturday, May 3, 2014


   

                  “........கொய்யாப்  பழங்கள்.......”  

வைதீஸ்வரன்

                               

எங்கள்வீட்டில்இருந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும் வழி செம்மண்சாலை. சற்று மழைத் தூறல் போட்டு நின்றதும் குளிர்ந்த காற்று வீசும்போது அங்கே நடந்தால் சாலையின் மணம். காற்றில் பரவும். ஸ்வாசிப்பதற்கு மிக ரம்மிய மாக இருக்கும். மனதுக்குள் பரவசமாயிருக்கும். துள்ளித் துள் ளிக் குதிக்க வேண்டுமென்று தோன்றும். மண்வாசனை என்றால் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது.

அதுவும் அந்த எட்டுவயதுப் பருவத்தில் எந்த சுமையுமில்லாமல் ஒரு ஸ்லேட்டுப் பலகையைதோளில் ஆட்டிக்கொண்டு தெருவைநின்று நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது வழியில் கற்றுக் கொள்வதற்கு ஸ்வாரஸ்யமான திறந்தவெளிப் பாடங்கள் நிறையவே  இருக்கும்.....

தெருமுனையில் ஒரு ராந்தல் கம்பத்தின் அடியில் எப்போதும் காதை ஆட் டிக் கொண்டு நிற்கும் இரண்டு அழுக்குக் கழுதைகளை  எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அருகில் செல்லும் போதெல்லாம்அவை இரண்டும் முதுகை சிலிர்த்துக் கொள்ளும்... நான் லேசாக வருடி விடுவேன்..கழுதைகள் உதைக் காது.

இன்றும் நான் அருகில் சென்று ஒரு கழுதையின் முதுகைத் தடவிக் கொடு த்தேன். அது கழுத்தைத் திருப்பி மூக்கை விரித்துக்கொண்டுஎன்னை நன்றி யுடன் பார்த்தது...அதைப் பார்த்து  இன்னொரு கழுதையும் கழுத்தை நீட்டி யது..

’’போ..போ....இதுதான் என் வேலையா?”என்று கொஞ்சி அதட்டி அதன் முது கில் தட்டுத் தட்டிவிட்டு எட்டிப்போனேன். அப்போது ஒரு கழுதையின் பின் னங்கால்களுக்கிடையில் தோல் குழாய்போல் ஒன்று நீண்டுகொண்டே இரு ந்தது.. .பிறகு மீண்டும் சுருங்கிக் கொண்டது.....பிறகு மீண்டும்  நீண்டது.
எனக்கு பார்க்க வேடிக்கையாக இருந்தது..அம்மா என்னைத் தேய்த்துக்குளிப் பாட்டும் போது  எனக்குள் ஏற்படும் கூச்சம் மீண்டும் இப்போது எனக்குள் பரவிக் கொண்டிருந்தது. அந்தக் கழுதையின் அப்பாவியான முகபாவம் எனக்குள் சிரிப்பு வரவழைத்தது. பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்க லாம்.விசித்திரமாக இருந்தது.ஆனால்  பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விடுமே!!

பள்ளிக்கூடத்துக்கு குறுக்குவழியாகப் போக இன்னொரு பாதை உண்டு. அத ற்கு ஒரு தோட்டத்தின் வழியாகப்  போகவேண்டும். அதை செட்டியார் தோட் டம் என்று சொல்லுவார்கள். அது ஒரு மிளகாய் செட்டியாருக்கு சொந்தமா னது...அப்பாவுடன் அடிக்கடி அந்த செட்டியார் கடைக்குப் போயிருக்கிறேன். வியாபாரம் மொள காய் மூட்டையாக இருந்ததால் அவருக்கு அந்தப் பெயர். இருந்தாலும் ஊருக்கு நடுவில் இப்படி ஒரு தோட்டத்தைப் அவர் பராமரித்துவந்தார்....

அங்கே எல்லாவித பூஞ்செடிகளும் பூமரங்களும் வண்ணச்செழிப்புடன்பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கும்.. விதவிதமான ரோஜாப் பூக்கள்.... சாமந்தி, அந்தி மந்தாரை, வேங்கை, பூவரசு மரங்கள் எருக்கஞ் செடிகள், அரளிப் பூக்கள் இப்படி வண்ணக் குவியலகள்..அந்தக் தோட்டத்தின் மணம் உடலுக்குள் ளெல்லாம் பரவும் அனு பவம் ஆனந்தமாக இருக்கும்.

அந்த தோட்டத்தின் வழியாகப் போகும்போது அம்மா சாமி கதை சொல்லும் போது ”மேல்லோகத்துல தேவர்கள்ளாம் இருக்கற இடம் எப்படீருக்கும்... தெரியுமோ? என்று வர்ணிப்பது ஞாபகத்துக்கு வரும்...இதைவிட அது இன் னும் கொஞ்சம் அழகா இருக்குமோ!!

நான் அங்கே போகும்போது பூக்களைப் பறிக்கமாட்டேன். தொட்டுத் தொட் டுப் பார்ப்பேன்.சுற்றி சுற்றி பறக்கும் வண்டுகள் அகலமான  சிவப்புப் பூக் களில் உட்காருவதும் பிறகு பறப்பதுமாக விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க ஸ்வாரஸ்யமாக  இருக்கும்..

விசேஷ நாட்களில்  எங்கள்  வீட்டில் உறவுக்காரக் குழந்தைகள் நிறைய பேர் வந்து விடுவார்கள் விசேஷம் முடிந்து விருந்து சாப்பிட்டுவிட்ட பிறகு நாங்கள் சிறுவர்கள் கூடத்தில் விளையாடுவோம்..கூடம் பெரிய கூடம்.. ஓடிப் பிடித்து விளையாடு வோம்...”தாய்ச்சியாக“ என் பாட்டியை உட்கார வைப்போம்.  தாய்ச்சியை தொட்டுக் கொண்டு நின்றால் எங்களுக்கு மற்ற வர்களிடமிருந்து பாதுகாப்பு..

இந்த வண்டுகள் இப்படித்தான் தாய்ச்சியைத் தொட்டுக்கொண்டுஎங்களைப் போல் ஏதோ விளையாடுகிறதா...எல்லாம்  வேடிக்கையாக  தோன்றுகிறது… இன்னும் சற்றுப் போனால் மஞ்சள் மஞ்சளாக தேன்பூக்கள் மலர்ந்திருக்கும். என் சிநேகிதன் முருகன் தான் அதைக் காட்டிக் கொடுத்தான். அதைப் பறி த்து காம்பை வாயில் வைத்து உறிஞ்சினால் வாயில் தேனின் சுவை ஊறி தித்திக்கும். .

அன்று நான் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்து வகுப்புக்குள் நுழையும்போது ‘லேட்டாகிவிட்டது...தெருவெல்லாம் இப்படி பராக்குப் பார்த்துக்கொண்டு போனால் அப்படித்தான்..... வாத்தியாரும் அதையேதான்  கேட்டார்..

வாத்தியார் கொஞ்சம் தொந்தியும் குட்டைக்காலுமாக இருப்பார்..லேசான முன் வழுக்கை.... வார்த்தை தெளிவாக  வராது....

“யேண்டா...லேட்டு.....ஊரெல்லாம் பராக்குப் பாத்துகிட்டு வந்தியா?“ 

எனக்கு அவர் கேள்வியை எப்படி மறுத்துப்பேசுவதென்றுதெரியவில்லை. வழியெல்லாம் நான் பார்த்த வேடிக்கைகளையும்அனுபவித்த சந்தோஷங்க ளையும்இவருக்கு எப்படி விவரிப்பதுஅதை ஒரு காரணமாக இவர் ஏற்றுக் கொள்வாரா?என்ன பதில் சொல்லமுடியும்லேட்டாகவந்ததற்கு காரணம் எதுவும் சொல்லும்படியாக இல்லை...

போ...போய்  பெஞ்சு மேல நில்லு...

எனக்கு வருத்தமாக இருந்தது... மற்ற பையன்களெல்லாம் என்னைப் பார்த் தவாறு இருந்தார்கள். ஆனால் பெஞ்சு மேல் ஏறி நின்று பார்த்தபோது ஜன் னல்வழியாக பூவரச மரங்கள் அழகாக  ஜிலுஜிலுவென்று இலைகள் குலுங் கியவாறு பசுமையாக சிரித்துக்கொண்டிருந்தன..என்னோடு சேர்ந்து அதுவும் பெஞ்சு மேல் நிற்பது போல் எனக்கு ஒரு தோழமை உணர்வு... சிறிது நேர த்தில் எனக்கு தண்டனை யின் அவ மானம் போய்விட்டது... நான் அந்த மர த்தின் கிளைகளில் ஓடியாடிக் கொண்டிருந்த அணில்களோடு ஒன்றி விட் டேன்...எவ்வளவு நேரம் என்று தெரியாது. அடிக்கடி அவைகள் ஏதாவது பழ ங்கொட்டையைக் கடித்துத்துப்பிக் கொண்டிருந்தன. வாலை தூக்கித் தூக்கி கத்திக்கொண்டிருந்தன. அது  ஒரு நல்ல பொழுது போக்கு.

அப்போதுதான் சந்திரா வந்தாள்.அவளுக்கும் ஏழெட்டு வயசுதான் இருக்கும். சந்திராவைப் பார்க்கும்போது எங்கள் எல்லோருக்குமே ஏதோ கிளுகிளுப் பாக இருக்கும். எப்போதும் பூக்கள் நிறையப் போட்ட குட்டை கவுனுடன் ரெட்டைப் பின்னல் போட்டுக் கொண்டு சிகப்பாக வருவாள்.

அவள்  சிரிப்பு  எங்களுக்கு  இன்னதென்று தோன்றாத கவர்ச்சியாக இருக் கும். ஆனால் அதிகம் நெருங்கிப்  பேசவும் ஏதோ தயக்கமாக இருக்கும்.! அவள் ஏதாவது பேசினால் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருப்போம். அவள் என்ன கேட்டாலும் நாங்கள் ஆசையாக தந்துவிடுவோம்.

அவள்இன்று ரொம்ப லேட்டாக வந்திருக்கிறாள். வாத்தியார் என்ன செய்யப் போகிறார் என்று  பார்க்க எல்லோருக்கும் மிகுந்த ஆவல்.

என்னைப் போல் அவளையும் எனக்கு  ஜோடியாக வாத்தியார் பெஞ்சு மேல் நிற்க வைப்பாராஅப்படி நடந்தால்  எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்....
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வாத்தியார்  அவளை எதுவும் கேட் பதற்கு முன்பே சந்திரா திடீரென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். நினைத்த மாத்திரத்தில் அவளுக்கு எப்படி அழுகை வருகிறதுகைகளால் கண்ணைத் தேய்த்துக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்தாள். எங்களுக்கும் பாவமாகத் தான்இருந்தது. அவள் தோளில் ஒரு பை தொங்கிக் கொண்டி ருந்தது..

வாத்தியார்அவளைக்கோபித்துக்கொள்ளவில்லை. ரொம்பஅனுதாபப்பட்டது போல் சொன்னார்”சந்திரா...சந்திரா...கண்ணு..வாடா இங்கே! ஏண்டா அழு வறேவாடா இங்கே..அய்யய்யொ!..எதுக்குடா இப்படி அழுவறே?”

சந்திரா கண்களைக்கசக்கிக்கொண்டே நகர்ந்தாள்ஸார்...நான்... லேட்டு…. லேட்  டா யிருச்சி...”.” மறுபடியும்  தேம்ப ஆரம்பித்தாள்..

”அட...செல்லமே...லேட்டா வந்தா இப்படி அழுவாங்களா?வாத்தியார் ஒன் னை அடிப்பேனா?” வா..இப்படி...

அவர் எழுந்துபோய் பரிவுடன் அவளை அணைத்துக்கொண்டு நாற்காலியின் பக்கத் தில் நிறுத்திக்கொண்டு உட்கார்ந்தார். சந்திராவின் கண்களைத் துடை த்துவிட்டார். சந்திராஅவர் நெருக்கத்தை விரும்பாமல் சற்று வேதனைப் பட்டு விலக முயன்றாள்.

அவர்அதை பொருட்படுத்தவில்லை.என்ன கண்ணூ..அழுவக்கூடாது...அவ ளை சற்று அணைத்தவாறு  சொன்னார். “ஏம்மா... தூங்கிப் போயிட்டியா..? பரவாயில்லேடா.....”

எங்களுக்குஅவரைப்பிடிக்கவில்லை.அவர் செய்தது சந்திராவுக்கும் பிடிக்க வில்லை என்று தெரிந்தது..  அவள்  விலக முயற்சி செய்து கொண்டிருந் தாள்..

நானும் லேட்டாகத்தான் வந்திருந்தேன்..என்னை கடுமையாகப் பேசி தண் டனை கொடுத்தவர்சந்திராவிடம் ஏன் இப்படி நேர்மாறாகநடந்துகொள்ளு கிறார்எனக்கு ஆத்திரமாக வந்தது.வாத்தியாருக்கு ஏன் இந்த பாரபட்சம்? என்னை அது மிகவும்காயப்படுத்தியது. வாத்தியார் மேல் கோபமாக இருந் தது.அவர் இப்படி ஏன் வித்யாசமாக நடந்துகொள்ள வேண்டும்.?அவர் நடந்து கொள்ளும் விதம் அன்பாகத் தெரியவில்லை.. அவர் ஒரு வாத்தியாராகத் தெரியவில்லை....

சந்திரா அவர் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள சிரமப்பட்டாள்.

ஸார்...விடுங்க ஸார்  இதை அம்மா..குடுக்க சொன்னாங்க....என்னை விடு ங்க...... இந்தாங்க... இந்தாங்க” என்று அவர் பிடியை விலக்கி தோளிலிருந்த பையை இடைமறித்து அவரது கைகளின் சேஷ்டைகளைத் தடுக்க முயன் றாள் “ 

அவர் பையை வாங்கிக்கொள்ளாமல் இருந்ததால் சந்திரா அவர் கைகளை இழுத்து பையைத் திணித்து  மேஜையில் வைத்தாள். அப்போதும் அவர் பையை பிடிக்காமல் போகவே அது மேஜையிலிருந்து நழுவி அதன் வாய் திறந்து கொண்டது.

அதிலிருந்த கொய்யாப்பழங்கள் மேஜையின் அடியில் சரசரவென்று சிதறி இங்குமங்கும் தரையில்  உருண்டன..... நல்ல வாசனையுள்ள பழங்கள்..

வாத்தியார்திகைப்புற்று சந்திராவைவிட்டு நகர்ந்து கீழே உருண்ட கொய் யாப்பழங்களைக்குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார்..அவரால் மேலும் குனிய முடியாது 

டேய்...கொய்யாப் பழண்டா.......டேய்.....!!!..  

முதல்பெஞ்சியிலிருந்து பையன்கள் குரல்கொடுத்தார்கள்.அடுத்த சில வினாடிகளில் எல்லாப் பையன்களுக்கும் ஏதோ குஷி வந்துவிட்டது. எல் லோரும் மேஜைக்கு அடி யில் முண்டியடித்துக்கொண்டு பாய்ந்துபோய் தவழ்ந்தவாறு கையில் கிடைத்த பழங் களை ஜேபியில் போட்டுக் கொண் டிருந்தார்கள்... வாத்தியார் செய்வதறியாமல்  “டே ய்...டேய்.. என்று கத்திக் கொண்டிருந்தார்.

ஒனக்கும் ரெண்டு...இந்தாடா..என் சிநேகிதன் பாபு  என் பையிலும் திணித் தான்..

வாத்தியார் பொறுமையிழந்து தள்ளாடியவாறு எழுந்துநின்று தடியைக் கையில்  எடுத்துக்கொண்டார்..தடியை ஓங்கி ஓங்கி மேஜையில்அடித்த வண்ணம் இருந்தார் . பையன்கள் அவரைக் கவனிப்பதாக  இல்லை.

வகுப்பு மொத்தமாக கலைந்துபோய்ஆளுக்கொரு கொய்யாப்பழத்தைக் கடித் துக் கொண்டிருந்தார்கள். சந்திரா இதை தூர நின்று வேடிக்கை பார்த்து கல வரத்தை ரஸித்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு இப்போது அழுகை நின்று விட்டது.

அந்த நேரம்பார்த்துதற்செயலாகவோகாரியமாகவோ ஹெட்மாஸ்டர் அங்கே வந்து நின்றார்...வகுப்பில் கண்ட அலங்கோலத்தைக் கண்டு அவர் திகைத்து நின்றார். அவருக்குக் கோபத்தில் முகம் சிவந்தது.

வாத்தியார் அவர் வந்ததை கவனிக்கவில்லை. மீண்டும் கோபமாக தடியை மேஜையில் அடிக்கும்போதுஅவர் ஓய்”...என்று கத்தினார்  ஹெட்மாஸ்டர். சத்தத்தைக் கேட்டவுடன் பையன்கள் கலைந்தபடியே பாதி கடித்த கொய் யாப்பழங்களுடன் நின்ற இடத்தில் நிசப்தமாக நின்றார்கள்.

ஓய்....இங்கே என்ன க்ளாஸ் நடத்துறீர்?...ஆடு மாடு மேய்க்கறீரா?”

வாத்தியார் பேச்சு வராமல் குழறினார்...

இல்லே  ஸார்...வந்து....

பையன்கள் எல்லோரும் கொய்யாக்கதுப்பின் ஈரம்வழிய பார்த்துக் கொண் டிருந்தோம்.. 

“என்ன ஓய் மரம் மாதிரி நிக்கிறீர்?.. என்ன க்ளாஸ் நடத்துறீர்?”

அழுதுகொண்டிருந்த சந்திராவைப் பார்த்தார்.
  
“என்ன பாப்பா....எதுக்கு அழுகிறே? வாத்தியார் அடிச்சாரா?” 

அவள் மேலும்விசும்பிக்கொண்டே என்ன சொல்வதென்று குழப்பத்துடன் வாத்தியார் பக்கம் பார்த்தாள்.

வாத்தியாரு என்ன செஞ்சாரு?சொல்லு....ஹெட்மாஸ்டர் அவள் பக்கத்தில் போய் குனிந்து மெதுவான குரலில்  கேட்டார்.

சொல்லு...சொல்லு...

இந்த வாத்தியாரு...இந்தவாத்தியாரு....எ..ன்..னை.....சந்திராவுக்கு மேலும் வார் த்தை வராமல் தேம்பினாள்.

வாத்தியார் கலவரத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

என்ன  செஞ்சாருசொல்லு....அடிச்சாரா? “

இல்லே....அடிக்கலே,,,,,,..”சந்திரா  மீண்டும்  கண்ணைக்  கசக்கினாள்.

பின்னே...........என்ன  செஞ்சாரு? ...”

“தெரியலீங்க  ஸார்...ஆனா  ஆனா... என்னை...என்னவோ  செஞ்சாரு!... “

பையன்கள் எல்லாரும்  சிரித்துவிட்டார்கள்.

ஹெட்மாஸ்டர் வாத்தியாரைக் கூட்டிக்கொண்டு வெளியே போனார்...

 அதன் பிறகு வாத்தியார் வகுப்புக்கு திரும்பி வரவில்லை...... 

வகுப்பு அதோடு நின்றுவிட்டது. நாங்கள் வீட்டுக்கு ஓடினோம். வீட்டுக்குப் போன பின்னும் வாத்தியார் மேல் எனக்கு ஏதோ சொல்லத்தெரியாத கோப மும் வெறுப்பும் வந்துகொண்டே இருந்தது.

அடுத்தநாள் சந்திரா வரவில்லை.அதற்குப்பிறகு வரவேயில்லை.. எங்களுக்கு வேறு வாத்தியார்  வந்தார்..பழைய வாத்தியாரை  வேறு வகுப்புக்கு  மாற்றி விட்டார்கள்...

ஆனாலும்அவரை வெளியில் பையன்கள் பார்க்கும்போதெல்லாம் அவரை சற்றுப் பின்னாலிருந்து “கொய்யா...கொய்யா..என்று கூப்பிடுவார்கள். அது தன்னைத் தான் என்று அவருக்கு தெரிந்தாலும் அவர் திரும்பிப்பார்க்க மாட்டார். வெகு நாட்களுக்கு அந்தப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டு விட்டது!!

[அம்ருதா மே 2014 இதழில் வெளியானது]




[அம்ருதா மே 2014 இதழில் வெளியானது]