vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, January 31, 2014

வினோதமான  பேரிழப்பு
வைதீஸ்வரன்


எஸ்என்   அஜீஸை உங்களுக்குத்தெரியுமா?  மன்னிக்கவும் தெரிய நியாயமில்லை. 
ஆனால்  அவன் இன்று  இருந்திருந்தால் என் கேள்வி   அபத்தமாக இருக்கும்.இன்று அவன் பிரபலமான மத்திய மந்திரியாக இருந்திருக்கலாம். பிரதமமந்திரி பதவிக்கு வேட்பாளராகக் கூட இருந்திருக்கலாம்..

ஆனால் சுமார் அறுபது வருஷத்துக்கு முன்பு  என் கல்லூரி ஹாஸ்டலில்  என் மேல் தளத்தில்  22ம் நம்பர் அறையில் தங்கி என்னோடு படிக்க வந்த போது  அஜீஸ்  .
எங்களுக்கு  ஒருவினோதமான  புதிரான மாணவனாக தான் தெரிந் தான்.  
எங்களைப் போல்  கல்லூரியில் படித்து பாஸ் செய்து வேலைக்குப்போகும் கன 
வுடன் வந்தவனா கத் தெரியவில்லை. அவன் ஏதோ வித்யாசமாக தனி உலகத்தில் 
வாழ்ந்து கொண்டிருப் பவனைப் போல்  இருந்தான்... 

வகுப்புக்கு  அவன் வந்தாலும்  எங்களைப்போல் மற்ற மாணவர்களுடன் சகஜமாக 
அரட்டை யடித்து  சிரித்துக்கொண்டிருக்க  மாட்டான். ஆனால் யாரைப்  பார்த்
தாலும் பொது வாக  சிரி ப்பான்.  பாடங்கள் சம்பந்தமாக  மற்  மாணவர்கள்  தீவிர 
மாக பேசிக் கொண்டி ருக்கும்போது அவன்  தனக்கும் அந்த விஷயத்துக்கும் எந்த  
சம்பந்தமும்   இல்லாதது போல் தனியாக ஒரு சிகப்பு நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு நிற்பான். .


எப்போதும்  வகுப்பில் அவன்  கடைசி  பெஞ்சியில்  தான் உட்காருவது வழக்கம். 
அநேகமாக தனியாக.....ஆசிரியர்  பாடம்  சொல்ல ஆரம்பித்ததும்  இரண்டு கைகளையும்  பெஞ்சின் மேல் மடக்கித் தலையணையாக வைத்துக்கொண்டு 
தலை சாய்த்து தூங்க ஆரம்பித்துவிடுவான்!வகுப்பைப் பற்றி அவன் கவலைப் 
பட்டதாகத் தெரியாது..  ஆசிரியர்  கண்ணுக்குப்  படாமல் அவன் எப்படி தப்பித்
துக் கொள்கிறான்? என்பது புதிராக இருக்கும்.  அல்லது  ஆசிரியருக்கும் இவனுக்
கும்இது ஏற்கனவே   உள்ள உடன் பாடா?  அவன் எப்படித்  தூங்குகிறான்?


எனக்கு  அவனைப்  பார்க்கும்போது  திகைப்பாகவும் சில சமயம் இனம் புரியாத 
ஆத்திரமாகவும் இருக்கும். அவன்  நடத்தை  அவனைப்பற்றிஎதுவும் ஊகிக்க 
முடியாமல்  எங்களுக்கு குழப்பமாக  இருந்தது.


வகுப்பு முடிந்தவுடன்  அவன்  தூக்கங்கலைந்து  எழுந்து  எதுவுமே  நடக்காதது 
போல் எங்களைப் பார்த்து  சகஜமாக முகத்தை துடைத்துக்கொண்டு சிரிப்பான். 
தம்பி... தூங்கிப் போய்ட்டேன்...வாத்தியார்  நல்லா சொல்லித் தராறா?” என்று முதியவனைப்  போல் பொதுவாக கேட்டுவிட்டு  போவான். அவன் கேள்வி எங்க
ளுக்கு எரிச்சலாக இருக் கும். யாரும் அவனுக்கு பதில் சொல்லமாட்டார்கள். 
இப்படி ஒரு கவலையற்ற  பொறுப்பற்ற  ஒரு பையனை   பார்த்ததே இல்லை என்று   தோன்றும்.

பெரிய  பணக்கார வீட்டுப் பையனா  இருப்பான்  போலிருக்குடா!என்றார்கள் 
என்  சிநேகிதர்கள்..ஒருவேளை கீழ்ப்பாக்கத்துலெ சேக்கறதுக்கு பதிலா இவனை
காலேஜு லெ  சேத்துட்டாங்களோ? “  என்பார் கள்.  ப்போது  கீழ்ப்பாக்கம்  
என்றால் பைத்தியக்கார  ஆஸ்பத்திரி. என்று பொருள்.  யார்  இந்த  அஜீஸ்?


அது  ஆகஸ்ட்  15ந்தேதி  சுதந்திர தின  விழாவை எங்கள் ஹாஸ்டலில் கொண்
டாடிய போது தான்  எங்களுக்கு ஓரளவு  தெரிய  வந்தது.


அப்போது வருடம் 55ஓ  56ஓ  இருக்கும்   ஆகஸ்ட்   15  சுதந்திர விழா அப்போது
கல்லூரி யில் மிக ஆர்வமுடன் விமரிசையாக கொண்டாடப்படும்..நாள்.... .சுதந்
திரம் அப்போது நெகிழ்ச்சியுடன் புதிய உற்சாகத்துடன்  கொண்டாடப்படும் ஒரு 
தினம். அந்த சமயத்தில்  அஜீஸ்  மிகவும்  சுறுசுறுப்பாகிவிட்டான். நான்கு நாட்க
ளுக்கு முன்பே  வகுப்புக்கு வருவதை நிறுத்திக்கொண்டுவிட்டான்.


முன் வருஷங்களைப்  போல் இல்லாமல்  விழாவில்  அன்று  வெளியிலிருந்து சில 
கலைக் குழுக்கள்  வந்து   மேடையில்  நிகழ்ச்சிகளை  நடத்தினார்கள்..அவர்களெல்
லாம் அஜீஸைப்பார்த்து மரியாதையுடன் வணக்கம் செலுத்தினார்கள். பிறகு  கதர்  
ஜிப்பா வேஷ்டி அணிந்து கொண்டு ஒரு வயதான பிரமுகர் வந்தார். அவரைப் பார்த்தவுடன் மற்வர்கள்எம்.எல்.ஏ. வந்திருக்கிறார்.. என்றார்கள். மேடையில் இருந்து பிரின்ஸிபால் இறங்கிவந்து அவரை அழைத்துச் சென்றார்.


அவர்  அஜீஸைப்  பார்த்தவுடன்   முகம்மலர்ந்து அவன்  தோளில்  கைபோட்டு ஏதோ 
பேசினார்.  எங்களுக்கு  ஆச்சரியம்.   யார் இந்த  அஜீஸ்?


வரவேற்புரை முடிந்து  எம் எல்    அவர்கள்  சுதந்திர  இந்தியாவின் அருமை 
பெருமைகளைப் பேசிவிட்டு  மாணவர்கள்  தான் இந்தியாவின் முதுகெலும்பு 
என்றும் மாவர்கள் தேசீய உணர்வுடன் வாழ வேண்டுமென்றும்  பேசி விட்டு
இங்கே உங்களின் ஒருவ ரான  மாணவராக  அஜீஸ்  நாட்டுப்பற்றும் கடமை உணர்வும் கொண்ட மாணவராக க வளர்ந்து வருவதை அறிந்து நான் பெருமைப்
படுகிறேன். வர்தான்  உங்களுக்கு ஒரு  சிற ந்த  முன்னுதாரணமாக இருக்க
வேண்டும்”, என்று என்று  முடித்தார்.  


பிரின்ஸிபால்  ஆசிரியர்கள் எல்லோரும்  கைதட்டினார்கள். ங்களுக்கெல்லாம் 
ஆச்சரியம். பிறகு அஜீஸ்  நன்றி உரை  கூற  வந்தான்.

எம்.எல். ஏ அவர்களின் வரவுக்கு மிகுந்த தழதழத்த குரலில் நன்றி சொல்லி விட்டு இந்த  நாள்  நமக்கெல்லாம் விழிப்புணர்வைத் தரக் கூடிய நாளாக  
இருக்க வேண்டும்  மகாத்மா  காந்தி  பண்டித ஜவஹர்லால்நேரு தமிழ்த்தலை வர் காமராஜர் அவர் களின் லட்சியப்பாதையில் நடப்பதற்கு நாமின்று சபதம் எடுத்துக்கொள்ளவேண்டும்  “எழுமின்  விழிமின்“  என்று  அறை கூவிய  விவே                     கானந்தரின் மொழிகள் தான்  நமக்கு  இன்றைய  புதிய  மந்திரம்  மாணவர்கள்  
தங்கள் திறமைகளை  செவ்வன விழிப்புடன்  வளர்த்துக்கொண்டு  உயிர்  உடல் ஆவிதனை இந்தியாவின்  நலத்துக்கும் வளத்துக்கும்  அர்ப் பணிக்க வேண்டும் 
பொறுப்புடன் செயல்படவேண்டும்.  வாழ்க சுதந்திரம்..வாழ்க   நம்  தியாகத் தலைவர்கள்!  வந்தே  மாதரம் என்று  பேசிமுடித்தான்.


எல்லோரும்  கரகோஷம் செய்தார்கள்.. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படி செய்து
விட்டொமென்று பிறகு  தோன்றியது....அஜீஸ் இவ்வளவு வீராவேசமாக மேடையில்    பேசுவான் என்று  நம்பமுடியாமலிருந்தது. அஜீஸைப் பற்றி எனக்கிருந் குழப்பம் 
இப்போது நீங்கிவிட்டது.  ஆனால் எங்கள்  வயதில் உள்ள ஒரு  கல்லூரி மாணவன் இப்படியெல் லாம்  அப்பட்டமான முரண்பாடுகளுடன் செயல்படுவது எனக்கு நெருட லாக  ஒப்புக் கொள் ள முடியாத  விஷயமாக இருந்தது.    


அதற்குப்  பிறகு  எல்லோரும்  அஜீஸைப்பார்த்தால்  மரியாதையாக  ஒதுங்க ஆரம்
பித்தார் கள்.  அவன்  வகுப்பில் தூங்குவதை  பொருட்படுத்தாமல்  சகஜமாக எடுத் துக்கொள்ள முற்பட்டார்கள்.. ஆசிரியர்  ஏன் அவனை கண்டிக்கவில்லை என்பதும் இப்போது எங்களால் ஊகிக்கமுடிந்தது.

அஜீஸ்  அடிக்கடி  வகுப்புக்கு வராமலும் இருப்பான்.  திடீரென்று  வந்தபோது
மீண்டும் பொதுவாக சிரிப்பான். ஆனால் என்னிடம்  ஏனோ சற்று  நெருக்கமாக
 பழகினான்.


நேத்து மாயவரத்துலெ  கூட்டம்.......வெடிகாலம்  தான்  வந்தேன்.. என்பான் சகஜ
மாக. அவன் சொல்லும்  இந்த தகவல் எனக்கு உடனே  தெளிவாகப் பதியாது. இருந் 
தாலும் நானும்   அவனைஅனாவசியமாக   விளக்கங்கள்  கேட்பதைத் தவிர்த்து
வந்தேன்..


ஆனாலும் அஜீஸ்...நீ  எப்படிப் படித்து பரிட்சை பாஸ் பண்ணப் போறே ...?” என்று  
 எனக்கு அக்கறையாக கேட்கத்  தோன்றும்.  கேட்காமலிருக்க  நான் மிகவும் சிரமப்
பட வேண்டி யிருந்தது.


                     ***************


அப்போது  முழுப்பரிட்சைக்கு  ஒரு  வாரமே  இருந்தது.  அநேகமாக ஹாஸ்டலில் 
எல்லாஅறைகளிலும் இரவில் விளக்குகள்  எரிந்துகொண்டிருக்கும். வெகு நேரம் 
படித்துக் கொண் டிருப்போம்.. எங்கோ தூரத்தில் கேட்கும் நாய்க் குலைப்பைத் தவிர  வெளியெங்கும்  கனத்த நிசப்தமாக  இருக்கும்.


அப்போது ஒரு  நள்ளிரவில் திடீரென்று   மௌனத்தை  கலைத்துக் கொண்டு ஒருகுரல்  
கேட் டது.   மெல்லிய கூர்மையான  ஒரு  பெண்குரல்..... யாரோ ஒரு இளம்பெண் கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ நின்று உச்சஸ்தாயியில் மனதை உருக்கும் மெல்லி
சையாக உணர்வுடன் பாடிக்கொண்டிருக்கிறாள். சிலநொடிக ளில்மேற்கத்தியஇசை யில் Soprano என்கிற  பாவத்திலும் சில நொடிகளில் வங்காள நாட்டார் ங்கீ த மான  baul  போலவும்  அற்புதமாக  வித விதமான ஏற்றஇறக்கத் தில்  வெளியெங்
கும் பரவிக் கொண்டிருந்தது. அந்த  இசை அலை. இந்த இனிமை யான கீதத்திற்கு முன்  படிப்பு  இரண்டாம் பட்சமாக இருந்தது.  

இந்த நள்ளிரவில்  இந்த  மாணவர்  விடுதியில் எந்தக்  கன்னி   வந்து தன்னை மறந்து 
பாடிக் கொண்டிருக்கிறாள்? ஒரு  வேளை இது  ப்ரமையா? விண்ணொலியா?

நான்  அறையை விட்டு வெளியே  தாவாரத்துக்கு வந்து  வெகு நேரம் அந்த மெல்லி 
சையில் மயங்கி அது  வந்த திசையை ஊகித்துக் கண்ட றிய முயன்றுகொண்டிருந் 
தேன். இசை  உயரே மாடியிலிருந்து   வருவதாக தோன்றியது.  ஒருவேளை மொட்டை மாடியில் இருந்தாமேலும் உற்று கவனித்தபோது அந்த இசை மெள்ள  மெள்ள  
நகர்ந்து வருவதாக  தொனித்தது.. சப்தம் மெல்லமெல்ல கீழே இறங்கிவருவதாக கொஞ்சம்கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டு வந்தது.  

இசை மாடிப்படிகளில்  இறங்கி வந்துகொண்டிருந்தது.


நான்  ஆவலுடன்  மங்கிய  இருட்டில்  தெளிவற்றிருந்த   மாடிப்படிகளை ஆவலுடன்
 பார்த் துக்கொண்டிருந்தேன். 


அங்கே  நான்  பார்த்த உருவம் வித்யாசமாக  இருந்தது. து  அஜீஸா?  இல்லை 
அஜீஸ் உரு வத்தில்  வேறு  யாரோவா?  அது  தன் உடம்பில் பூப்போட்ட  லுங்கியை மேலாடையாகத் தரித்துக்கொண்டிருந்தது தலைமுடி பந்தி ருந்தது. கைகளில் ஏதோ வளையல் மாதிரி  ஆபரணங்கள்...


அது  அற்புதமாக  பாடிக்கொண்டே  மெய்மறந்தவாறு  தலையை மேல்வண்ணமாக 
சாய்த்து  கைகள்  இரண்டும்இசைக்கு  ஏற்றவாறு  காற்றில் ஆடிமிதக்க இடை  அழகாக  
நெளிந்து   பாதங்கள்  நளினமாக  நகர்ந்து  தன்முயற்சியற்றுப் பாடிக்கொண்டே படி யிறங்கி  வந்து கொண்டிருந்தது.  கண்கள்  பாதி மூடி இருந் தன. வானுலகத்திலிருந்து 
வரு வதுபோன்ற ஒரு பாவனைஅதற்கு. அவனு[ளு]க்கு எப்படி  கால் இடறாமல்  படிக ளில்  ஒழுங்காக ஒயிலாக  இறங்கி வர முடிந்தது?.

நான்  வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அஜீஸ்  இல்லை  அந்தப் பெண் என்
னரு கில்  வந்து  அன்புடன் என்னை பார்த்த வாறு  ஆடி  ஆடி  என்னை சுற்றி வந்து கொண்டிருந் தாள்... என்னை  அடையாளம் தெரிந்த மாதிரியும் இருந் தது ..  ஏதோ மயக்கநிலையில் தன் நினைப்பில்லா மல்  ஆனாலும்   மர்ம மான உள்மன உந்துதலுக்கு பணிந்து   ஆடிக் கொண் டிருக்கும்  அந்தப் பெண்மை ததும்பிய அஜீஸைஎப்படி எதிர்கொள்வதென்று புரியாமல்  திகைத்து நின்று கொண்டிருந்தேன். 

ஆனால்  சில  கணங்களுக்குப்  பிறகு  அவனேமெள்ள  நகர்ந்து  மீண் டும் மாடிப்ப
டிகளை நோக்கிப்  போகஆரம்பித்தான்   படியேற  ஆரம்பித் தான்  இப்போது  அவன்  பாட்டும் நடனமும்   மெல்ல குறைந்து  அடங்கிக் கொண்டிருந்தது..

அவன் அறைக்குள்  போகும் வரை  நானும்  பின்தொடர்ந்து  பார்த்துக்கொண்டிருந்
தேன். அவன்  பத்திரமாக படியேறிப் போக வேண்டுமேயென்று நான் கவலைப் பட் டேன்.அவன் கதவைத் தாளிடாமல் உள்ளே போனான். நானும்  உள்ளே நுழைந்து 
பார்த்தேன் .

அஜீஸ்  தன்  கட்டிலில்  தடாலென்று  சாய்ந்துஅடுத்த கணம்  ஆழ்ந்த நித்திரையில்  
மூழ்கி விட்டான்.  ஒரு வேளை மறுநாள்  அவன் விழித்தெழும் போது  அவனுக்கு தன்னுடைய தூக்கத்தில் நடந்த வினோத  நடத்தை எது வும்  ஞாபகம்  இருக்கா தென்று  தோன்றியது. நிர்ச்சலனமாக  தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன்  தூங்கிக்கொண்டிருந்ததைப்  பார்க்க  பயமாகவும்  பரிதாபமாகவும் இருந்தது..  நான்  அறையை  சுற்று முற்றும்  பார்த்தேன்.

அது  ஒரு  பத்திரிகை  ஆபீஸின்  பின்னறை போல  அலங்கோலமாக காட்சி யளித்தது.தரையில்எங்கு பார்த்தாலும்  காகிதங்களும்  துண்டுப்பிரசுரங்களும் கையெழுத்துப் பிரதிகளும்  சில கட்சித் தலைவர்களின்  புகைப் படங்களும் கிடந்தன.மாணர் காங் கிரஸ்“ என்று  அச்சடித்த  புத்தக அட்டைகள்  அச்சுக்கூடத்தி லிருந்து  அப்போது  தான் வந்தது  போல் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அஜீஸ்  இந்த  அறையிலிருந்துகொண்டு  முழு நேரமாக  வேலை  செய்வது வேறு
ஏதோ அமைப்புக்காக  என்று  நிச்சயமாகிவிட்டது.  பின் எதற்காக அவன் இங்கே  கல்லூரிக்கு  வந்து  படிக்க  வேண்டும்?

கல்லூரி  மாணவர்களை  அரசியலுக்கு ஈர்ப்பதற்கு  தலைவனாக செயல்பட வேண்டு மென்றால் அவனும் ஒரு   மாணவனாக  இருப்பது  அவசியம் என்று எனக்கு அப்போது புரியவில்லை..

 நான்  கதவை  மூடிவிட்டுக் கீழே   இறங்கி  வந்தேன்.

          ***************************

முழுப்பரிட்சை  முடிந்து  ஒரு  மாதம்  கோடை  விடுமுறையும்  கழிந்துவிட்டது.  நாங்கள்  பரிட்சைக்கு  உட்காரும்  நீண்ட  ஹாலில்  என்ன  தான் இடைவெளி விட்டு இடம்   
மாற்றி  எங்களை  உட்கார  வைத்தாலும்  வகுப்புத் தோழர்களை பார்க்காமல் இருக்க முடியாது. . 

நான்  அன்று பரிட்சை எழுதும்போது ஹாலில்  அஜீஸை பார்க்கவேயில்லை! எனக்கு வருத்தமாகவும்  இருந்தது.  ..  அஜீஸுக்கு வேறு  சில  திறமைகள்   இருக்கத் தான் இருந்தன  ஆனாலும் படிப்பில் கொஞ்சமாவது  கவனம் செலுத்தியிருக் கலாமே!

 பரிட்சை  ரிஸல்ட் வந்தது. நான் தேறியிருந்தாலும்  எனக்குகல்லூரி ஆபீஸுக்குப் போய் அஜீஸ்  விஷயம்என்ன  ஆயிற்று  என்று  தெரிந்து கொள்ள ஆர்வமாக  இருந்தது. 

அன்று ஏதோ விடுமுறையாக இருந்ததால், மேலும், தொடர்ந்து  வார இறுதியாகவும் இருந்ததால்  இரண்டு  மூன்று  தினம்  கழித்துத்  தான்  என்னால் கல்லூரிக்குப் போக  
முடியும்   என்ற சூழ்நிலை  நேர்ந்தது.

 ஆனால்  மறு  தினம் காலை  செய்தித் தாளின்  இரண்டாம்  பக்கத்தைப் புரட்டிய போது  எனக்கு  பேரதிர்ச்சி  காத்திருந்தது.

மாணவர் காங்கிரஸ்  தலைவர்  திரு. எஸ். என்.ஏ அஜீஸ் பி.ஏ. அவர்கள்நேற்று தன்  சொந்த  ஊரான  மாயவரத்தில் இரவில் சாலையைக்   கடந்து கொண்டிருந்த போது  .குறுக்கே  வந்த  லாரியில்  அடிபட்டு  சம்பவ  இடத்திலேயே  மரணமடைந்தார்   அவருக்கு  வயது  22.

செய்தியைக் கேட்ட  நமது  தலைவர்  விருதுநகரிலிருந்து  மாயவரத்துக்கு உடனே போய் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்து  இளம் வயதில்  உயிர் துறந்த  மாணவர் தலைவர் உடலத்துக்கு  மாலையிட்டு  மரியாதை  செய்தார்

இந்த  கோரமான சோகச்  செய்தி  எனக்கு  மிகுந்த  மன வேதனையளித்தது. 

இளம்வயதில் அற்பாயுசாக இப்படிப்பட்டவிபத்தை சந்திக்கநேர்ந்த அஜீஸின் முடிவை நினைத்தபோது கூடவே  பரிட்சை  எழுதாமலே  அவருக்குபட்டப் பெயர் கொடுத்த பத் திரி கையின்  தகவல் பிழையும் கண்ணை  உறுத்தியது.  இது  வேறு விதமான ஏற்பாடு களாக” இல்லாமல்பிழையாகவே இருந்தால் ஆஜீஸின் ஆன்மா சாந்தியடையும் என்று என்று  நினைத்துக்கொண்டேன்.

அஜீஸ் இறந்து போன  அன்றிரவு  அவன்   சாலையின் குறுக் கே  நடந்து போயிருக்கி றான். அவன் தூக்கத்தில் தான் கடந்துபோயிருக்கிறானென்று எனக்கு உறுதியாகத் தோன்றியது. அஜீஸின்அகால  மரணத்தால் அவரோடு மறைந் து போன  அந்த  அற்புத மான தெய்வீக  இசையின்  ஊற்றுக்கண் தான் நிஜமான ஒரு பேரிழப்பாக  எனக்குத் தோன்றியது.


அம்ருதா இதழ், பிப்ரவரி.         


0