vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, February 26, 2013


கவிஞர் சி.மணிக்கு    எனது  நினைவாஞ்சலி
  
கவிஞர் சி.மணி பற்றிய சில நினைவுகள்
                     --------------------------
 வைதீஸ்வரன்
ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்  தமிழ் நாடு அரசு''வாழ்நாள் சாதனைக்காக '' குறிப்பிட்ட  சில மூத்த படைப்பாளிகளுக்கு  பரிசளித்து பணமுடிப்பளித்து கௌரவம் செய்தது.   தேர்வான அந்த பேர் களில்  கவிஞர் சி.மணியின் பெயரை பார்த்ததும் எனக்கு  மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 பல வருஷங்களுக்கு முன்பே  இலக்கிய சுழலில்  இருந்தும் எழுத்து உலகத்திலிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டு  உடல் நலிவுற்று வாழ்ந்து  கொண்டிருந்த ஒரு முக்கியமான ஆரம்பகால புதுக் கவிஞரை  மீண்டும் நினைவு கூர்ந்து சரியான சந்தர்ப்பத்தில் அவரை கௌரவித்தது ஒரு  நல்ல  நிகழ்வு..

ஒரு துறையில் முக்கியமான பங்களிப்பு செய்தவர்கள் வெகு சீக்கிரம்   ஞாபகத்திலிருந்து மறைந்து போய்விடுகிறார்கள்   .அல்லது  அவர்களை  ஞாபகம் வைத்துக்கொள்ள அரசாங்கத்துக்கு விருப்ப மில்லை .

கவிஞர் சி. மணியும்  நானும் ஒரு ஊரை சேர்ந்தவர்கள். அவர்  இறந்தபோது அவருக்கு வயது 69.  அவரை விடஎனக்கு  அவர் கவிதைகள் தான் அதிக பரிச்சயம். என்னோடு அவர் பேசிய  சில சந்தர்  ப்பங்களில் நான் தான் அதிகம் பேசியதாக ஞாபகம்.. ஆனால்  அவருடைய  விமர்சனக் கட்டுரைகள் மூலமும் கவிதைகள்   மூலமும் அவருடைய  வாசிப்பின் யோசிப்பின் ஆழத்தை என்னால்  உணர்ந்து கொள்ள முடிந்தது. 

தமிழ் இலக்கியத்துக்காகவும்  புதுக் கவிதைகளின் ஆதாரமானவளர்ச்சிக்காகவும்  அவர்  தன்  சிந்தனை யையும் சொந்த  பொன் பொருளையும்  அளவுக்கு அதிகமாகவே வாரிக்கொடுத்திருகிறார் என்பது உண்மை.

சி. மணி ஒரு தீவிர படிப்பாளி.  சைதாப்பேட்டை ஆசிரியர்பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்த சமயம்தான் அவருக்கு ''எழுத்து '' அறிமுகமானது என்று எண்ணுகிறேன். அவர் தேர்ந்து கொண்டது ஆங்கில  ஆசிரியர் பயிற்சி என்றாலும் அவருக்கு தமிழில் சிறந்த புலமையும் ஆழ்ந்த  தொல்லிலக்கிய பரிச்சயமும்இருந்தது.
 
இந்த அடிப்படை தகுதியுடன்  அவர் தமிழ் கவிதையை புதிதாக படைக்க வேண்டுமென்ற தன்னார் வத்துடன்   அவர்  ''எழுத்து' பத்திரிகையில்  எழுத விழைந்தார்.  செல்லப்பாவுக்கு  மணியின் மேல் அளவு கடந்த மதிப்பும் விசேஷ நட்பும்  இருந்தது.

அந்த கால கட்டத்தில் ஆங்கில நவீன கவிதைகளின் பரிச்சயமும் தமிழின் பாரம்பரீய  அறிவும் ஒருங்கிணைந்த சில பேர்களில் மணி  முக்கியமானவர். 

அவருடைய கவிதை முயற்சிகள் அனேகமாக  இத்தகைய விசேஷ பிரக்ஞையை  ஊடுபாவியதான  வெளிப்பாடுகள்..

அன்றைய சமூகத்தின்  ''நவீன மோஸ்தரான '' மொழிஅடையாளங்களையும்  தமிழின் செவ்வியல் வார்த்தைகளையும்  குலுக்கிக் கலந்து ஒரு  வித்யாசமான அனுபவத்தை ''அவஸ்தையை ''ஒரு  புதிய சோதனையாக தமிழுக்கு  கொண்டுவந்தார்.

அவருடை ய  ''நரகம்'' இவ்வகையில் ஒரு முக்கியமான நீண்ட கவிதையாக பேசப்படுகிறது.

'எழுத்து'' ஒரு தீவிரமான சிற்றிதழாக  உள்ளடக்கத்தில் ஒரு  கட்டுப்பாடான  வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருந்தது. 

அந்த  இறுக்கமான  வட்டத்திலிருந்து  மாறி ஒரு விரிந்த தளத்தில் பிற கலைகளையும்  ஒருங்கிணை த்துக்கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழ்  வர வேண்டுமென்று மணியும் அவருடைய  நெருங்கிய நண்பர்களான முத்துசாமி வெங்கடேசன் இன்னும் சிலரும் தீர்மானித்தார்கள்.  ''நடை'' அப்படிபட்ட வித்தியாசமான   கட்டமைப்புடன் மிக  அழகாக தயாரிக்கப்பட்ட      அருமையான சிற்றிதழ்.

மணி ஆசிரியராக  ஏற்று  நடத்திய ''நடை'' தமிழ் சிற்றிதழில் சிறந்த  உதாரணமாக இன்றும் பேசப் படுகிறது.

பல நவீன ஓவியர்களின் சங்கமம்  அதன் மூலம் தமிழ் பத்திரிகைக்கு கிடைத்தது...   தமிழ் பாரம் பரீய கலைகள் பற்றிய விஷயங்கள்  ஐரோப்பிய  நாடகங்கள் ஓவியங்கள் தமிழில்  நவீன நாடகங்கள்  என பல புதிய பகுதிகள்  அதில் இடம்பெற்றன.

பொருள் நஷ்டத்தை லட்சியம் செய்யாமல்  சி.மணி ஏற்று குறுகிய காலம்  வெளிக் கொணர்ந்த ''நடை''  மணி  தமிழுக்கு செய்த கொடை என்று சொல்லலாம்.

யோசித்துப் பார்க்கும் போது  சி.மணிக்கு  அவர் வாழ்க்கையிலும் கவிதையிலும் உடம்பு தான் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்திருக்கிறது.

''இந்தக் கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? வெறும் தோள் முனைத் தொங்கல் ? என்று ஒரு கவிதையில் அவர் கேட்கிறார்.  உடம்பை உபயோகப் படுத்த முடியாமலோ விரும்பாமலோ   உடம்பை விட்டு  விலகி அந்தரத்தில் நிற்கும்  மனம் இப்படி ஒரு விசாரம் கொள்ளுகிறது.   அல்லது இந்த உலகத்தில் உடம்பின் இயக்கம்  அர்த்தமற்றதாக அபத்தமாக தோன்றக்கூடிய ஒரு  மனநிலை.

அவருக்கு உடம்பு  இந்த  உலக யதார்த்தத்தில்  நரக அவஸ்தைக்கு தள்ளப்படுகிறது..  உடம்பு என்பது மணியின் கவிதைகளில் அநேகமாக  பாலுணர்வின்  மொத்தக் கிடங்காகி.. இந்த சமூகத்தின்  ''கவர்ச்சி நாகரீகத்துக்கும் ''  நன்னெறிக் கட்டுகளுக்கும் இடையில் வடிகாலற்று  புரண்டு புலம்பும் தீராத வேதனையாக    சித்தரிக்கப்படுகிறது.

பல சமயம் இது ஒரு வலிந்து விகாரப்படுத்தப்பட்ட  அல்லது விவகாரப்படுத்தப்பட்ட  ஒரு கவிப் பொருள் என்று  எனக்குதோன்றுவதுண்டு.

கவிஞர் சி.மணிக்கு  5 ஆண்டுகளுக்கு முன் விளக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அதற்காக  எனது வாழ்த் துரையை நான் அவருக்கு  எழுதி  வழங்கினேன். மணிக்கு அது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. .... அதற்கு நன்றி கூறி  எங்களுடைய நெடுங் காலக்   கவிதையுறவுகளையும்   என் கவிதை ''கிணற்றில் விழுந்த நிலவு பற்றிய   நெகிழ்ந்த ரஸனைகளையும் குறிப்பிட்டு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியி ருந்தார்.       

அது தான் அவர்   எனக்கு  முதல் முதலாக எழுதிய கடைசி கடிதம்..!

அந்தக் கடிதம்  நான் இருக்கும் வரையில் என்னிடம் பத்திரமாக இருக்கும்..அவர் கவிதைகளின் ஞாபகங்கள்போல.


[சி.மணி  மறைந்த போது  பிரசுரிக்கப்பட்ட  கட்டுரை]


Tuesday, February 19, 2013

நிழலாடும் நினைவுகள்


நிழலாடும் நினைவுகள்

                 ---------------------

    வைதீஸ்வரன்      

நீண்ட காலம் நம்மோடு  வாழ்ந்து மறைந்த  மிக நெருங்கியவர்களைப் பற்றிய நினைவு களைப் பகிர்ந்து கொள்வது அவ்வளவுஎளிதானதல்ல. அதுவும்  94 வயதில்  காலமான  என் தாயாரைப்  பற்றிய  என் 72  கால நினைவுகளை  இங்கே சில வார்த்தைகளிலகட்டுக் கோப்பாக   பகிர்ந்து கொள்வது  அவ்வளவு எளிதானதல்ல.

நினைத்துப் பார்க்கும்போது என்  ஆறு ஏழுவயதில் என் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு மார்க்கண்டேய புராணம் கேட்ட  பொழுதுகள்  ஞாபகத்துக்கு வருகிறது..எமனுடன் போராடி ஆயுளை நீட்டிக்கொண்ட மார்க்கண்டேயன் கதையில் என் தாயாருக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது
 
ஞாயிற்றுக் கிழமைகள் வந்தால் எங்களுக்கு வயிற்றைக் கலக்கும். கையில் விளக்கெண் ணைக் கரண்டியை வைத்துக் கொண்டு எங்களைத் துரத்துவார்.. எப்படியாவது எங்கள் மூக்கைப் பிடித்து வாயில் ஊற்றி விடுவார். எங்கள் ஆரோக்கியத்தின் மேல்  அவள் கொண்ட இந்த கசப்பான  அக்கறையை நாங்கள்  பல வருஷங்கள் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

 
அதே போல் நாங்கள் விஷமம் செய்தால் எங்களை அடிக்க மாட்டார். மாறாக சுக்கை அரைத்து கண்ணில் போட்டு விடுவார்.  நாங்கள் பாதி கண் பாதியாக சேர்ந்து அழுது அரற்றி விடுவோம். இந்த தண்டனை கண் ஆரோக்கியத்துக்கு  நல்லது என்று அப்போது பரம்பரை நம்பிக்கை.. எங்க ளால் ஒப்புக் கொள்ள முடியாத நம்பிக்கை.

 
அம்மா  பிறந்த போதே தன் அம்மாவை இழந்தவர்..  மூன்று சகோதரர் களும் இரண்டு சகோதரியுமாக  ஒர் பெரிய குடும்பம்   சரியான பராமரிப் பும்பரிவும் அற்ற  சூழலில்  தத்தளித்து  வளர்ந்தது ..அந்த  ஆதரவற்ற சூழலிலிருந்து தப்பித்துக் கொண்டு வீட்டை  விட்டு ஓடிய என் தாயாரின் சகோதரன் 'பாய்ஸ் கம்பனியில்  சேர்ந்து  பல சோதனைகளை   தாண்டி வளர்ந்து  பிற்காலத்தில்  சிறந்த நாடகக் கலைஞராக மிளிர்ந்த எஸ்.வி ஸஹஸ்ரநாமம் ' என் அண்ணா என்ன? நானும் நடித்திருக்கிறேன் '' என்று ஜம்பமாக சில சமயம் அம்மா சொல்வதுண்டு.

ஆறு வயது குழந்தையாக இருந்தபோது பள்ளிக் கூடத்தில்ஞானசௌந்தரி  ' நாடகத்தில் கதாநாயகியாக நடித்து''அழுது புலம்பியிருக்கிறாராம் '' சிறப்பாக ''அழுததற்காக சிறப்பு பரிசு பெற்றதாக சொன்னார்.  ''எப்படி அப்படி அழுதாய்? என்று கேட்டேன். 

 ''பொண் கொழைந்தெளுக்கு அழுகறத்துக்கு என்ன கஷ்டம் ?''
  
சிரிக்கத்  தான் முடியாது.. அப்போதெல்லாம் சிரிச்சாலும் அது குத்தம் ''.

அவர்களுக்கு  பல விஷயங்களில் ரொம்ப பிடிவாதம் உண்டு. அதை கௌரவமாக வைராக்கியம் என்றும் சொல்லலாம்.  சொந்த பேரன் கல்யா ணத்தில் கூட  சாப்பிடுவதற்கு  மறுத்து  தனியாக சமைத்துச் சாப்பிடுவார். ஆசாரம்; மடி என்ற  பரம்பரை வறட்டு வழக்கத்தில்.

 சின்ன வயதில் ஸாமிக்கு நமஸ்காரம்  செய்து ஸ்லோகம் சொல்லும்படி ஒரு கட்டளையாக  என்னை வற்புறுத்துவார். அந்த ஸ்லோகத்தை ஒரு படத்தின் முன்னால் நின்று கொண்டு தான் சொல்ல வேண்டுமா.. நடக் கும்போது விளயாடும் போது அல்லது  மனத்துக்கு தோன்றும்போதெல் லாம் சொல்லக் கூடாதா? என்று எனக்குள் எப்போதும் ஒரு போராட்டம் ஏற்படுவதுண்டு. நான் பெரியவனாகி முரண்டு பிடிக்கும் வரை  என்னை ஸாமியின் முன் நிறுத்துவதில்  கருத்தாக இருந்தார்.

 இந்த பிடிவாதங்களால் மற்றவர்களின்  மௌனமான கோபத்துக்கும் நிராகரிப்புக்கும்  ஆளாவதை அவள் பொருட்படுத்தியதே இல்லை. அவளுக்கென்று ஒரு  கடமையை ஒரு சூழலை ஒரு உலகத்தை ஏற்படுத் திக் கொண்டு  திருப்தியுடன்  வாழ்வில் ஆசையுடன் நல்ல  சுவையான  ஆகாரங்களில் நப்பாசையுடன்  வாழ்ந்து முடிந்தவர்.

   93 வயது வரை வாசிப்பையும் யோசிப்பையும் அவர் விடவேயில்லை. அந்த காலத்து மடிசிஞ்சி பத்திரிகை முதல் சமீபத்திய வணிகப்பத்திரிகை வரை  சளைக்காமல்  வார வாரம் கேட்டுக்கேட்டு வாசிப்பார்...என்னுடைய  கதையோ கவிதையோ  படிக்க நேர்ந்தால்  நேரடியாக என்னிடம் சொல் லாமல் என் மனைவியிடம் அதை படித்ததாக சொல்லுவார்..

என் காரணமாக  சில பத்திரிகை இலக்கிய ஆசிரியர்களை வீட்டில் பார்த் திருக்கிறார். அவர்களுடைய  படைப்புகளை அடையாளம்  கண்டு கொண்டு என்னிடம் அதை சுட்டிக்   காட்டுவார். அமுதசுரபி ஆசிரியரின் எழுத்தை எங்கே படித்தாலும் அல்லது ஊடகத்தில் பார்த்தாலும்  உடனே  எனக்கு சொல்லுவார்.  [இது நிஜமான தகவல்].

  நூறு வயது வரை வாழவேண்டுமென்று அவருக்கு ஆசை   இருந்திருக் கிறது. இந்த வாழ்க்கையும் இந்த உலக சூழலின்  வேதனைகளும் அவரை  தீண்டவேயில்லை என்று தோன்றியது..

 இருதயம் தன் செயலை மெள்ள மெள்ள  குறைத்துக் கொண்டு  வந்த அவருடைய கடைசி தருணங்களில் கூட  அவருக்கு   உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற  சபலம் இருக்கத் தான் இருந்தது. மிகுந்த தள்ளாமையையும் மீறி  அவர் நாற்காலியைவிட்டு  எழுந்து நின்று  கீழே விழுந்தார்.. பிறகு நகர முடியாத நிலையில் படுக்கையோடு  இரண்டொரு நாட்கள்  பிதற்றிய வண்ணம் கிடந்தார்.

 சாவதற்கு சில மணி நேரங்கள்  முன்  ஏதோ நொறுங்கிய சத்தம்  கேட்டு நான் அவள் அறைக்கு சென்று பார்த்தேன். அவள் அருகில் ஸ்டூலில் வைத்திருந்த கடிகாரம் கீழே விழுந்து கண்ணாடி சிதறித் தரையில் கிடந்தது.. காலத்தை நொறுக்கியதான திருப்தியுடம்  என் அம்மா
 
கண்களை  மூடிக் கொண்டு கிடந்தார்..

 
பனிப் பேழைக்குள் [ice box ]  படுத்திருந்த அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்  அவள்  எதற்காகவோ சிரிப்பது போல் எனக்கு தோன்றிக்கொண்டேயிருந்தது..


       
       
                   
0

Saturday, February 2, 2013                    
  மரத்தில் வாழ்ந்தவன் 

வைதீஸ்வரன் [செப் 2009]             
எனக்கு தெரிந்த வரையில் என் முந்தைய இரண்டுதலை முறைகளை  மரங்கள் தான்  காப்பாற்றி பேணி வளர்த்திருக் கின்றன.  அதற்கு முன்பு  வாழ்ந்த என் தலைமுறை மக்கள் தக்காண பீட பூமியில்  இன்றைய மைசூருக்கு அருகில்  எங்கோ வாழ்ந்து வந்ததாகவும் முகலாயர் ஆட்சி காலத்தில்  ஏற்பட்ட கலகங்களினால் விரட்டப்பட்டு இடம் பெயர்ந்து மெள்ள மெள்ள தர்மபுரி மேட்டுர் பக்கம். நகர்ந்து சேர நாட்டிற்கு இன்றைய சேலம் ஜில்லாவிற்குக் குடியேறியதாக எனக்கு கிடைத்த பழைய   தகவல்  சொல்லுகிறது

என் கொள்ளு தாத்தாவின் காலத்திலிருந்து மேட்டுர்   அருகில் உள்ள நங்கவள்ளி கிராமத்தில்  ஒரு  தென்னந் தோப்பை பராமரித் துக்கொண்டு  ஜீவனம்  செய்து வந்திருக்கிறார்கள்..என் முந்தை யவர்கள்..

 மாரிக் காலம் பார்த்து நிலத்தை உழுது பண்படுத்தி சவலை  மாடு களைப் பூட்டி கிணற்றில் ஏற்றம் இரைத்து தென்னம்பிள்ளைக ளுக்கு  நீர் பாய்ச்சுவதும்  தேங்காய்களை இறக்கி  வண்டியில் போட்டு வாரச்சந்தையில் வியாபாரம் செய்வதும் தான் அவர்களுக்கு வாழ்க்கையாக  வாழ்க்கையின் பேராசையற்ற  சுகமாக  இருந்திருக்கிறது..

 இன்று நமக்கு தெரிய வருகிற வர்ணாஸ்ரம விதிகளும்  குலங்களுக்கு ஏற்ற தொழில்முறையும் என் முந்தைய தலை முறை களை  எப்படி கட்டுப்படுத்தாமல் இருந்தது என்று எண்ணி  நான் ஆச்சரியப்படுகிறேன்..என் தாத்தாக்கள் அதை பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை!

 என் தாத்தாவும் அவருடைய அப்பாவும் குடியானவர்களுக்கு சரி சமமாக நிலத்தில் வேலை செய்ததை என் தந்தை எனக்குசொல்லியிருகிறார்.. சின்ன வயதில் என் அப்பாவுடன் நங்கவள் ளித்  தோட்டத்திற்கு போன போதெல்லாம்  கிணற்று ஏற்றத்தில் இரண்டு  மாடுகளைப் பூட்டி தண்ணீர் இறைத்துக் காட்டி  என்னை குஷிப்படுத்தியிருக்கிறார்.

 என் அப்பாவின் தலை முறை முடியும் போது பல வேறு   புற வாழ்க்கை மாற்றங்களினால்  அந்த தொன்மையான பாரம்பரிய   நிலம் எங்கள் கைவிட்டுப் போனது.. ஒரு முன்னூறு வருடங் களாக எங்களை காப்பாற்றி வந்த   இளமை மாறாத அந்த தாயை   பரராமரிக்க முடியாமல் விற்று விட்டோம்..இந்த சோகமான இழப்பு அநேகமாக கடந்த பரம்பரைகள்  எல்லாவற்றிற்குமே நேர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை.

                     *****
        
இந்த பரம்பரை ஞாபகத்தினாலோ என்னவோ எனக்கு  சின்னவயதிலிருந்தே மரங்களின் மீது அலாதியான பற்று  ஏற்பட்டிருந்தது.

பிற்காலத்தில் மரங்கள் எனக்கு நிறைய நல்ல கவிதைகளை தந்திருக்கின்றன....

 என் இளம் பிராயத்தில் நான் ஏற்காடு அடிவாரத்தில் சின்ன திருப்பதியில்  குடியிருந்தேன்..கிராமமா வயற்காடா என்று தீர்மானிக்க முடியாத பரப்பில்  ஒரு பத்து வீடுகளுக்கு இடையில் இருந்த ஓட்டு வீடு  எங்களுடையது. சுற்றிலும் பசுமையான வயற்காடு.. தூரத்தில் மெலிதாக   நெளிந்தோடும்  ஒரு ஓடை..

  
வாசலில் அழகான பசுமையான லட்சணமான பாதாமி மரம்..  கொல்லைப் புறத்தில்  ஒரு செழிப்பான கொய்யா மரம் .இரண்டுமே எனக்கு உயிர்த் தோழர்கள் போல..

 பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் என்னை மரத்தின் மேல் தான் பார்க்கலாம்!..அதுவும்  முன் வாசலில் இருந்த மரத்தில் கிளைகள்அருமையாக அளவாக விரிந்து நான் உட்காருவதற்கு ஏற்ற பான்மையில் இருக்கும்..

 மரத்தில் உட்கார்ந்து பாடம் படித்தால் மனத்தில் நன்றாக பதிவது போல் இருக்கும்..அதுவும் காற்றுக் காலங்களில் மரத்தின் பலவிதமான   அசைவுகளின் எதிர்பாராத ஆட்டங்களை எதிர்பார்த்து ஏமாறுவது எனக்கு  சந்தோஷமான பொழுது போக்கு..ஒரு தாய் மடியின் சுகத்தை நான் அந்த 
 
சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

அந்த மரக் கிளைகளில் நான் பலசமயங்களில் தலை கீழாக தொங்குவதும் உண்டு. ஆனாலும்  அந்த வயதுப் பையன்கள் போல் நான் ஒரு முறை கூட  மரத்திலிருந்து   விழுந்து கையை உடைத்துக் கொண்டதில்லை...

இது அந்த மரத்தின் கருணையாகத் தான் இருக்க வேண்டும்!
                    
 ********

 அந்த  வயதில் எனக்கு திடீரென்று  நெஞ்சில் கபம் கட்டி மூச்சுத்  திணறல் ஏற்பட ஆரம்பித்தது.. இரவு நேரங்களில் தீராத அவஸ்தை..

 
உட்கார முடியாமல் படுக்க முடியாமல் ஓயாத இருமலுடன் போராடுவதே  என் நிலைமையாகி விட்டது. இரவு நேரங்களில்  ஓடி ஓடிப் போய்   டாக்டரை கூப்பிட்டு வருவார் என் அப்பா.. ‘’ஆஸ்த்த்மா”” என்றார்  டாக்டர்..

ஆஸ்த்மாவுக்கு  இன்று போல் அந்த நாட்களில் மருந்துகள் இல்லை..  எப்போதும் ஊசி தான் போடுவார்கள்.. ஊசி போட்ட சில வினாடிகளில்  இருதயம் தொண்டைக்கு ஏறியது போல் விம்மி விம்மி பயங்கரமாக   படபடக்கும்.  வாயிலிருந்து மூக்கிலிருந்து கபம் கொட்டும்.. பிறகு  உடல் ஓய்ந்துபோய்  மூச்சடங்கி விடியும் வரை வெலவெலத்துக் கிடப்பேன்  ..இப்போது இந்த   ஊசி  மிகவும் ஆபத்தானது  என்று டாக்டர்கள் இதை தவிர்க்கிறார்கள்.

  நாளுக்கு நாள் என் உபாதைகள்  இடைவெளியற்றுப் போய் நான்   உணவு செல்லாமல் பலஹீன மாகிப் போனவுடன் என் பெற்றோர்கள்   ரொம்ப கவலைப் பட்டு பயந்து போனார்கள்..காரணம் தெரியாத கஷ்டங் களுக்கு  கடவுளையும் கேட்க முடியாத  நிலைமை யில் ஜோஸியம் பார்ப்பது  தான்  ஒரு தற்காலிகமான  ஆறுதல்..

எங்கள் உறவுக்காரர் ஒரு கனபாடிகள்..நல்ல ஜோஸியர் என்று  அறியப் பட்டவர்..அவர் என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு என் பெற்றோர்களின்  கவலையை மேலும் அதிகரித்தார்..””பய்யனுக்கு  பதிமூணாவது வயசுலே  ஆயுசுல கண்டம்..உடனடியா பரிகாரம் பண்ணலைன்னா  நீங்க தான்  வருத்தப்படுவேள் “ என்றார்.

அவசரம் அவசரமாக  ‘’ஆயுஷ்ஹோமத்திற்கு என் வீட்டில் ஏற்பாடு செய்  யப்பட்டது.. நான்கு புரோகிதர்கள் ஹோமம் வளர்த்து உரத்து கோஷமாக  மந்திரங்கள் .....பரிகாரம் நான்கு நாட்கள்..  வீடு நிறைய  உறவினர்கள் கும்பல் ..சாப்பாடு  அல்லோலகல்லோலம் ..  வந்தவர்கள் எல்லாம் என்னை அனுதாபமாக பார்த்து கண்ணை துடைத்துக்  கொண்டார்கள்.. நாளுக்கு நாள் புகையின் மூட்டம் தாங்கவே முடியவில்லை
  
 
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி எனக்கு மரம் தான்.. நான்  பாதாமி மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி உட்கார்ந்துகொண்டு காற்றாடிக் கொண்டிருந்தேன்.. 
   
 
 
வீட்டுக் கூடத்தில் நான் இல்லாதது கண்டு திடீரென்று என்னைத் தேடினார்கள்..என் அம்மா சொன்னாள்; அவன் மரத்தில் தான் இருப்பான்   என்று. என் பெரியப்பா மரத்தடிக்கு வந்து மேலே இருந்த என்னைப் பார்த்தார்..அவர் முகம்  சற்று  கலவரமாக மாறியது..

கொழந்தே..நீ அசையாம இருந்தா  ஒனக்கு பேனா வாங்கி தருவேன்  என்றார் . எனக்கு பேனா என்றால் உயிர் .. நான் அசையாமல் இருந்தேன்..

பெரியப்பா  அருகில் கிடந்த நீளமான தடி ஒன்றை எடுத்து மேலே என்னருகில் கழுத்துப் புறமாக உயர்த்தி தடியை வேகமாக பக்கவாட்டில் இழுத்தார்.

 
ஒரு நீளமான பாம்பு கிளை விழுந்தது போல் மண்ணில் விழுந்தது..பெரியப்பா  கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் மண்டையில் ஒரு போடு போட்டார்..

 
நான் திகைத்துப் போனேன்.. மரத்தை விட்டு மெள்ள இறங்கினேன்..

 பெரியப்பா உரத்த குரலில் ‘’சுந்தரம்.. சுந்தரம்..என்று கத்தினார்..

 
உள்ளேயிருந்து என் அப்பா ஓடி வந்தார்..””ஒம் பிள்ளையோட  கண்டம்  இன்னியோட போச்சு .. பாரு பாம்பு எவ்வளவு நீளம் ..நல்ல வேளையா அது என் கண்ணுல பட்டது.... குழந்தே  இனிமே தைரியமா இருடா...” என்று என்னைத் தட்டிக் கொடுத்தார்.

என் அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.. கனபாடிகள்  ஒரு விதியை தடுத்து  மாற்றியது போல்  வந்திருந்தவர்களை கர்வமாக பார்த்து தலையை ஆட்டினார். உறவினர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள்..

எனக்கு இதனால் அதிர்ச்சி பெரிதாக  ஏற்படவில்லை.  குழப்பமாக  இருந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு பின்  எனக்கு சங்கடங்கள் தான் அதிகமானது. 

டேய்..இனிமே இந்த மரத்துலெ ஏறினே..காலை ஒடிச்சுடுவேன்”, என்று மிரட்டினார் அப்பா, கண்டிப்பான குரலில். 

 ”
பேசாம இந்த இரண்டு மரத்தையும்  வெட்டிடுங்கோ! என்றாள் என் அம்மா .என்னால் மரம் ஏறும் வழக்கத்தை  விட முடியாது  என்பது  அவளுடைய  எண்ணம்.

நான் அழுது அடம் பிடித்து தரையில் புரண்டு அழுதேன்..நான் நிச்சயமா இனிமே மரம் ஏற மாட்டேன்..தயவு செஞ்சி அந்த மரத்தை  மட்டும்  வெட்டிடாதீங்க “” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

நல்லவேளை மரம் பிழைத்தது.. ஒரு பாம்பு  இருந்த காரணத் துக்காக  மரத்தையே வெட்டுவது எவ்வளவு அநியாயம்? மரத்தை வெட்டுவது ஒரு பாவச்செயலாக யாருக்கும் தோன்றுவதில்லையா? எத்தனை அறியாமை!

 மேலும் அந்தப் பாம்பு இவர்கள் கண்ணில் படாமல் எத்தனையோ நாட்கள்  என்னுடன் கூட மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்திருக்கலாம். என்னயும் சக நண்பனாக ஏற்றுக்கொண்டு நான் ஸ்வாரஸ்யமாக படிப்பதை காதருகில் உராய்ந்து ரஸித்திருக்கலாம்.

 இந்த பெரியப்பா அதை பார்த்திருக்க வேண்டாம் . அந்த நல்லபாம்பை கழியால் அடித்துக் கொன்று விட்டு என்னை ஏதோ கண்டத்திலிருந்து என்னை காப்பாற்றி விட்டதாக எல்லோரி டமும்  மார் தட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.

 ஏனென்றால் அந்த பரிகாரங்களுக்குப் பின்பும் எனக்கு மூச்சிரைப்பும் ஆஸ்த்மா நோயும்  பல வருஷங்கள்  என்னை  தொந்தரவுபடுத்திக்கொண்டுதான் இருந்தன!!!