vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, September 19, 2017

ஒரு அனுபவம் - எஸ். வைதீஸ்வரன்

அசோகமித்திரனின்  பிறந்த நாள்  இன்னும் சில நாட்களில் வர இருக்கி றது  22- செப்  2017
அவருடைய    “இன்னும் சில நாட்கள்என்ற
இரண்டாவது  சிறுகதைத் தொகுதிக்கு  நான் எழுதிய முன்னுரையை  இப்போது மீள்நினைவு கொள்கிறேன்.  
எழுதிய  தேதி ஆகஸ்ட் 1972.    15 – 8 1972
                 
  எஸ்வைதீஸ்வரன்
                                       

ஒரு  அனுபவம்
             
   நல்ல  படைப்புகளைப்  படித்து  படித்து முடித்தவுடன்  மனம் உயர்ந்த அனுபவத்தால்  நிறைவு கொள்ளுகிறது. அந்த  நிறைவு தரும் மௌனத்தில் மிதப்பது  தான்  வாசகனுக்கு மிக  சுகமான  நிலை. அந்த நிலையை  வார்த்தைகளாக மாற்றி அபிப்ராயங்களாகக் குழைத்து கதைகளைப் பாராட்ட முயலும்போது  அது வார்த்தைகளில்  பிடிபடாமல் போகலாம்!.

 இன்று அசோகமித்திரன்  கதைகளைப் பற்றி எழுத முயலும்போது  அதே மனத்தயக்கத்துட்ன் தான் எழுதுகிறேன்இந்த விமர்சன சாத்தியத்தை  மீறிய உணர்வு தான்  ஒரு கதையை உயர்ந்த படைப்பாக நிலைக்க வைக்கிறதென்ற நிச்சயம்  ஏற்படுகிறது.

வாழ்விலே ஒரு முறைக்குப் பிறகு  அத்தலைப்பின் பொருளைப் பொய்யாக்கிக் கொண்டு வெளிவரும் அசோகமித்திரனின் இரண்டாவது  தொகுப்பு  " இன்னும் சில நாட்கள்

  முதல் தொகுப்பில் பல காரணங்களால்  விடுபட்ட பல நல்ல கதைகள்  இத் தொகுப்பில்  ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றன.

  அசோகமித்திரன் கதைகள்  தமிழ் நாட்டு வாசகர்களுக்கு  ஏற்கனவே அறிமுகமானவைஇவருடைய கதைகள்  வாழ்வின் முழுமையை  அதன் இயல்பான  ஓட்டத்தை  நுணுக்கமான  கலையுணர்வுடன்  தேர்ந்து  காட்டக் கூடியவை. இவர் கதைகளை வாசிக்கும் போது எனக்கு “” MAN  IS A FONDLING  ABANDONED  BY  THE  FORCES  THAT  CREATED  HIM “   என்கிற கவி வரிகள்  நினைவுக்கு வருகின்றன.

 இவர் கதைகளில்  வாழும் மனிதன்  தெய்வத்துக்கும் அசுரத்தன்மைக்கும் இடையில்  சிக்கிக் கொண்டு விடுதலைக்கு ஏங்குபவன்.  FRANCIS BACON ஓவியங்களில் வரும் மனித முகம்துக்கமும் கோமாளித்தனமும்  ஆணவமும் குற்றச் சுமையும்  பல பல  கோணங்களில்  காட்டும் உருக்கமான  பாவனையைக் காட்டுபவை. வறுமையிலும் புறவாழ்வுப் போராட்டங்களிலும்  “தன்னைஇழந்து உதவியற்று வேதனைப் படுபவன்.

  அதன் விளைவாக  குற்ற உணர்வுகளும்வாழ்வில் நிரந்தர அமைதிக்கு ஏக்கமும் அவனை  மௌனமான துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

தனக்கும் பிறருக்கும் தீங்கிழைத்துக் கொண்டு  வாழ்வைத் துன்பமாக்கும் தன் பலஹீன்ங்களைக் கண்டு பல சமயங்களில் வெட்கப் படுகிறான். விபரீதமான  சம்பவங்களின் மூலைகளில் வாயடைத்து நிற்கிறான். அகங்காரமான  காரியங்கள்  செய்து விட்டு அசடாகத் திரும்புகிறான்வழி தெரியாத  ஊருக்குப் பயணம் தொடங்கி விட்டு இடையில் ஒரு பெரிய குற்றச் சுமையுடன் தலைகுனிந்து நிற்கிறான்மிகச் சாதாரணமான  விஷமச் செயல்கள்  மகா பாதகமாகி விடும்போது  அவனுக்கு வாழ்வின் நியதியின் மேல் ஆத்திரமும் இனம் புரியாத  குழப்பமும்  ஆனால்  அதுவே ஒரு தெளிவின் ஆரம்பமாகவும் தெரிவதை உணர்கிறான்.

 வாழ்க்கை இவனை ஏமாற்றுவதும் இவன் வாழ்க்கையை  ஏமாற்றுவதும் சம்பவங்களுடன் தட்டாமாலை  சுற்றி மயங்கிப் போய் மூச்சு முட்ட நிற்பதும் இக்கதைகளில் இழையோடும்  IRONY . 

சம்பவங்களையே முதுகெலும்பாகக் கொண்ட இவர் கதைகளில்  சம்பந்தமற்றதெனத்  தோன்றும் மிகச் சாதாரண  நிகழ்ச்சிகளும் இயல்பாக  இசையின் இழையோட்டமாக சேர்ந்து கொண்டு வாசகனுக்கு புதிய தெளிவையும் ஆழ்ந்த பிரமிப்பையும்  கொடுக்கின்றன.

  பன்னிரண்டு   சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் தனித்தனியாக  ஒவ்வொரு கதை பற்றியும் நிகழ்ச்சி வருணனை செய்ய  நான்  விரும்பவில்லைஇதில் அநேகமாக  எல்லாக் கதைகளும் விசேஷமான படைப்புகள்.”குருவிக் கூடுகதை மட்டும் எனக்கு திருப்தி தரவில்லை. கதையில் வரும் குருவி  ஆசிரியராக  மாறி  ரஸனையின் குறுக்கே பறந்து தொந்தரவு செய்கிறது

அசோகமித்திரன் கதைகளின் படபடப்பற்ற  பாவனையும் எளிமையான  வார்த்தைகளும் சொற்சிக்கனமும் மேலோட்டமான  வாசகர்களை  ஏமாற்றி விடக்கூடியவை. சிந்தனைக்கு  சோம்பலுற்று இலக்கிய உணர்வுகளற்ற  அவசர  வாசகர்களின் பார்வையில்  இக்கதைகள்
நத்தையாக  சுருங்கிக் கொள்ளும்.


                                    


Tuesday, September 12, 2017

பூனைகள்


 பூனைகள்     ----------------------------
      வைதீஸ்வரன்           கணையாழி  செப் 2017   பூனைகளைத்  தெருவில்  பார்ப்பது
வர வர  அரிதாகி  விட்டது.
இப்போது  அடிக்கடி  குறுக்கே போவதில்லை அவைகள்
ஒரு  வேளை  நம்மை  விட  உயிர்ஆபத்து அதற்குத்  தான்
என்று  உணர்ந்திருக்கலாம்
பார்க்காத  போது நுழைந்து
பால்கனி  வழியாக  தப்பித்துப் போவது தான்
பூனை   என்றாலும்
அது  தப்பிக்கும்  லாகவத்தை
நீங்கள்  எப்போதாவது  பார்க்க வேண்டும்
அளவோடு  திருடுவதில்
பூனைகள்  பெருந்தன்மையானவை
அடுக்குப்  பாலின்  உயரத்தைக்  கொஞ்சமாக
குறைத்து  விட்டுப் போகிறது.
நமக்கு  எச்சம்  வைத்து  விட்டு!
பூனையின்  எச்சத்தை நாம்
நிராகரிப்பதில்லை....நாயினதைப்  போல!
ஏதோ ஒரு  ஆசாரத்தனம்!.
உதவாத சுயநல ஜன்மமென்றாலும் 
உள்ளே  வளைய  வரும்  சகஜத்தைத்
 தடுப்பதில்லை  வீடுகள்.
தனியாக  விடப்பட்ட  முதியோர்களுக்கு
 பகலில் வளைந்து வரும்  பேச்சுத் துணை..
 ஆனாலும் இப்போது வரவர
 பூனைகளைக்  கண்டாலும்  வாயடைத்துக்
கொள்ளுகின்றன..வீடுகள்
சில வீடுகளில்  முதியோர்களும் பூனைகள்  தான்!