vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, October 31, 2014

சின்னச் சொல் [Paul Coelho]

                      

 சின்னச்  சொல்

        [Paul  Coelho]                

தன்னை உணர்ந்து  கொண்டவனுக்குத்  தெரிகிறது – 

எல்லா  மொழிகளிலும்  சிறப்பான  சொல்.....


சின்னஞ்சிறு  சொற்கள்  தான்.


ஆமாம்...அன்பு...அறம்.. 

ஆனந்தம்...

  
போன்றவை.

மிக  சுலபமாக  மொழியக் கூடிய இந்த  எளிய  வார்த்தைகள்  பரந்து  விரிந்து உலக  வெளியின்  சூன்யத்தை  அற்புதமாக நிரப்புகிறது.

ஆனாலும்  இங்கே  நடைமுறையில் இன்னொரு  சின்ன வார்த்தை  இருக்கிறது. அந்த  சொல்  பலருக்குத்  சங்கடத்தை  ஏற்படுத்துகிறது..  அது  தான் பிறர்  அவச்செயலைக்  கண்டு  “ தவறுஎன்று  உரைப்பது.

வெளிப்படையாக  அவ்விதம்  சொல்லாதவன்  எண்ணிக்  கொள்ளுகிறான் _
தான்  மிகப்  பணிவுள்ளவனாக  கர்வமற்றவனாக  பிறர்  மனதைப்  புண்படுத்த  விரும்பாத    சாதுவான ஆத்மாவாக    இருப்பதாக............

பக்குவமானவன்  இந்த  தன்னேய்ப்பில்  சிக்கி  விடுவதில்லை.

அவனுக்குத்  தெரிகிறது...அப்படிப்பட்ட  செயலை  “சரிஎன்று  சொல்கின்ற அதே  சமயம்  அவன்  மனம்  அதைத்  தவறு  என்று  சொல்லுகிறதென்று.


அதனால்  தான்  மனம்  தவறு  என்று  நினைக்கும் ஒன்றை  உதடுகள்    சரி  என்று  சொல்ல அவன்  எப்போதும் அனுமதிப்பதில்லை

Friday, October 17, 2014

முள்


  முள்

-வைதீஸ்வரன்பச்சைத்  தழலாக
இலைகள்............
இளங்காலை  வெளியில்.
கிளையில்  காக்கை 
தன்னையே  கொத்திக்  கொள்ளுகிறது
சுயவிமரிசனம்  போல்.

கரையெல்லாம்
கண்ணீர்த்  துளியுடன்
குழந்தைப்  பூக்கள்
ஆதவனின்  வருடலுக்கு  ஏங்கியவாறு.

வேதனைக்கும்  வாழ்வுக்கும்
வித்தியாசம்  குறைந்து
மனம்  குழம்புகிறது
துதிப்பதா  தூற்றுவதா...
என  நிகழும் பல
மனித வினோதங்களால்  மருண்டு.
.

வாசலெங்கும்
வாய்திறந்த கழிவு நீர்ப் பதுக்கங்கள்
மனிதப்  பேதைகள் முத்துக்  குளிப்பதற்காக

நடையும்  தாண்டலும் 
தப்பிப்புமாக  அன்றாட  வாழ்க்கை.

தைத்த  இடந்தெரியாமல்
பாதமெங்கும்  முள்ளைத்  தேடி
கழிகின்றன  என்  நேரம்
பாதையில்  முள்ளை  வீசியவனை
வானத்தில்  தேடியவாறு.

Friday, October 3, 2014

.....பிடித்தவற்றுள்......கவிதை


             
.....பிடித்தவற்றுள்......கவிதைஅம்மாவைத்  தொட்டு
           
அம்மா!
எனக்கு  ஆட்டோ வரும் முன்பே
உனக்கு
பேருந்து வந்து  விடுகிறதே!
அம்மாஒவ்வொரு  நாளும்
பள்ளியிலிருந்து  வீடு திரும்புகையில்
யாருமே  இல்லாத  வீட்டைப்  பார்க்கையில்
எதுவுமே
இல்லாதது  போல் தோன்றுகிறது  எனக்கு.
இரவு ஒன்பது  மணிக்குள்
எப்படியும்  வந்து  விடும்
உன்னையும்
பதினோரு  மணிக்குள்
வந்து விட முயற்சிக்கும் அப்பாவையும்
பள்ளிக்கூடத்தில் நினைக்கையில்
மங்கலாய்த்  தான்
ஞாபகம் வருகிறது.
இப்போதெல்லாம்
டாம் ஜெர்ரியும்
போகோ  டீவீயும்  புளித்து விட்ட்து.
F
ரிட்ஜுக்குள்  ஸ்னாக்கும்
செல் போனில்  உன் குரலும்
அலுத்து விட்ட்து
வரவேற்பறையை
அலங்கரிக்கத்  தெரிந்த உனக்கு
உன்  ஸ்பரிசங்களுக்கு ஏங்கும்
என்னை  ஏனம்மா புரிந்து கொள்ள
இயலவில்லை
வீட்டு  வேலைகளை
ஞாயிற்றுக்  கிழமைகளுக்குத்
தள்ளிப் போடும்
உன்னைப்  போலவே
ஏக்கங்களைத்  தள்ளிப் போட
எனக்கும்  தெரிந்து  விட்டது
அன்பான  வார்த்தைகளால்
தற்காலிகத்  தாயாராகிவிடும்
வேலைக்கார  ஆயா.....
அப்போதெல்லாம்  தோன்றுகிறது  எனக்கு
அவளுக்கே  நான்  பிள்ளையாகப் இருக்கலாமோ!
உன் பிள்ளையென
உணர்த்த நான்
நன்றாகப் படிப்பதாய்
மார்  தட்டுகிறாய்..
என்  அம்மாவென  உணர்த்த
என்ன  செய்யப்  போகிறாய்  நீ???      சூர்ய பிரகாஷ்.


0