vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, September 21, 2020

அந்திம நினைவலைகள் - செப் 22

 


 

அந்திம நினைவலைகள் - செப் 22

 

      - வைதீஸ்வரன் -




 

நாங்கள்  இருவரும் பிறந்த  தேதியும்  மாதமும் ஒன்று தான்.  ஆனால்  அசோகமித்திரன்  எனக்கு நான்கு வருடங்களுக்கு முன் பிறந்தவர்.

 

நாற்பது ஐம்பது ஆண்டுகளாக  இந்த நாளில் நானும்  அவரும்  சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம்

 

ஆனாலும் அவருக்கு  பிறந்த நாள் பற்றிய  விசேஷமான  அபிப்ராயம் கிடையாது. எனக்கும் அப்படித்தான்இருந்தாலும் பேசிக் கொள்வோம். ஏதோ மகிழ்ச்சியாக இருக்கும்   அவர்  கடைசி சில வருடங்களில் சற்று விரக்தியாக சிரித்துக் கொண்டு பேசுவார்.   “ வைதீஸ்வரன்….இந்த தேதியெல்லாம் ஏதோ  அன்றாட வசதிக்காக  நாம்ப  ஏற்படுத்திக் கொண்ட கணக்குகாகிதத்தைக் கிழிக்கிற மாதிரிஆனா  நமக்குள்ளே   தான் நெஜமான  கடிகாரம் ஒண்ணு இருக்கு..அதுக்குத் தெரியும்  எப்போ நிக்கணும்னு!! “ என்று சொல்வார்அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் பேசிய கூட்டத்தில்  “  நான் இன்னும் ரெண்டு மூணு  மாசம் தான் இருப்பேன்! “ என்று சொன்னார். அது உண்மையாக இருந்தது. அந்த உண்மை அவருக்கு எப்படித் தெரிந்ததென்று எனக்கு ஓரளவு  தெரியும்!!!

 

சுமார் 40 வருஷங்களுக்கு முன்பு  நான் ஆஸ்துமா அரக்கனால் கொடுமையாக  அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அசோகமித்திரன் அடிக்கடி கணையாழிக்கு கவிதைகள் கதைகள் வேண்டுமென்று வீட்டுக்கு வருவார்ஒரு  நாள் என் வேதனையைப் பார்த்து  சொன்னார்.

 

இந்த  மாதிரி மருந்துக்கு கட்டுப் படாத  வேதனைக்கெல்லாம் நம் முன் ஜன்ம வினை தான் காரணம்னு சொல்லுவாங்க!  உங்களுக்கு  நாடி ஜோசியத்துலே  நம்பிக்கை  உண்டா? “

 

நீங்கள்  உங்களுக்கு பார்த்திருக்கிறீர்களா?  என்று கேட்டேன்

 

அவர் ஆமாம்என்று   தனக்குள்  சிரித்துக் கொண்டு பதில் சொன்னார்.

 

அடுத்த வாரம்  கஸ்தூரிபாய் நகரிலுள்ள  நாடி ஜோசியர் ஜயராம் நாயுடு வீட்டுக்குப் போனோம்.  முதலில் தொகையை வாங்கிக் கொண்டார்கள். சற்று அதிகம் தான்.  பிறகு  என் பெயரை மட்டும்  கேட்டுக் கொண்டு ஒரு 40 நிமிட நேரத்தில்  முப்பது பக்கத்துக்கு என்  வாழ்க்கை விவரங்களை  நோட்டுப் புத்தகமாக கையில் கொடுத்து விட்டார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் அதில் குறிப்பிட்டிருந்த கடந்த காலத் தகவல்கள்  சரியாகவே இருந்தன.  வெண்ணையுண்ட வீணயம்மாஎன்று என் அம்மாவின் பெயர் இருந்தது  உண்மையான பெயர் கிருஷ்ணவேணியம்மா!!  என் தந்தையின் பெயரை அழகு என்றும் சொல்லுவார்கள் என்று இருந்தது.  அவர் பெயர்  சுந்தரம்!  அதே போல் நான் பிறந்த வளர்ந்த  ஊர் சரியாக இருந்தது. ..  உத்யோகம் விண்வெளிஊர்தி காப்போன்என்று  இருந்தது!! எல்லாம் சரியாக இருந்தது!   நான் வியப்புடன் அசோகமித்திரனைப்  பார்ததேன்

 

இதனால நாம்ப  சந்தோஷப் பட முடியாது..  ஆரம்பத்துல நமபற மாதிரி சொல்லி பின்னால   தகவலகள்  அப்ப்டி இல்லாம போனாலும் போயிடறது! “என்றார்

 

என்னுடைய  வியாதி அவஸ்தைகளுக்கு  என் போன ஜன்ம வாழ்க்கையை விவரித்து அதில் செய்த பாவங்கள் தான் காரணம் என்றும்  ஏதோ ஒரு மந்திரத்தை கூறி அதை   முறைப்படி ஜபித்துக் கொண்டு வந்தால்  வியாதி,  உடனே குணமாகி  நல்ல பலன் கொடுக்கும்  என்றும் எழுதியிருப்பதை   விவரமாக சொன்னார் ஜயராம் நாயுடு.

 

ஆனால்  உடனே"  என்கிற வார்த்தைக்கு  வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கலாம் என்று நான் அப்போது உணரவில்லை.  நான் மேலும் எட்டு வருடங்கள்  அவஸ்தைப் பட வேண்டியிருந்ததுஆனால் அசோகமித்திரனுக்கு தன் முடிவு தேதியைக் கூட சொல்லி விட்டதாக  மெதுவான குரலில் எனக்குத் தெரிவித்தார். அவர் விஷயத்தில் அது சரியாகவே நடந்தது.

 

ஒரு மூன்று வருஷங்களுக்கு முன் மாலை வேளயில் உட்கார்ந்த  நிலையிலேயே  அவர்  உயிர்  பிரிந்தது.  நல்ல ஆத்மாக்களின் உயிர் உட்கார்ந்த நிலையிலேயே பிரியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்

 

சுமார் 70 வருடங்களாக அவருடன் எனக்கு ஏற்பட்ட  தோழமை.. கடந்த பிறவியின் தொடர்ச்சியாக  எனக்கு பல சமயம் தோன்றுவதுண்டு

 

அவர்  நட்புறவால் என் வாழ்க்கையும் எழுத்தும் ஏதோ ஒரு விதத்தில் பரிமளித்ததென்ற  உணர்வு எனக்குள் இந்த  அந்திம வருஷத்தில் மீண்டும்  நினைவலைகளை  எழுப்புகிறது !!

 

                                         ************

 

ஓரு சுயநலமான கவிதை

 

இந்தக் கொரொனா காலத்தில்

உடலும்   உடலும்

விலகி  நிற்கட்டும்

எனக்குக் கவலை இல்லை

உடலைப் பற்றிய  உயிர் மட்டும்

விலகாமல்  இருக்கட்டும்

{எத்தனை பேராசை! }

________________________________________________________________________

வைதீஸ்வரன் - 22 செப் 2020