vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, November 19, 2020

தவம்

 


தவம்

- வைதீஸ்வரன் -
    

சொல்லின்  சூழ்ச்சியிலே

சோர்வடைந்து  நான்  விழித்தேன்

உள்ளத்துள்  பேரொளியை

உற்று  நோக்க  நான் விழைந்தேன்

 

நினைவின்  விளிம்பினிலே

நெடுங்காலம்  குழம்பி நின்றேன்

நிலவைக்   காணாத 

இருள்வானைப்  போல் மருண்டேன்...

 

உணர்வின்  தூரலிலே

உனைத்  தேடித்  தவித்திருந்தேன்..

உலகில்  வழிதொலைந்த

குருடரைப் போல்  நான் உழன்றேன்

 

மனதின்  ஆழ்பரப்பில்

மறைந்துநிற்கும்  பேரொளியே

எனையே  நான்  இழந்தேன்

எதிரே  நீ  இருந்தாய்!!

____________________________________________________________________________________ 

21- 12 1961  

Sunday, October 4, 2020

எப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)

  எப்போதோ  எழுந்த விசாரங்கள்  

(1962  டைரிக் குறிப்பிலிருந்து)

வைதீஸ்வரன் -                                   

நான்  ஒரு  குழந்தையிடம்  கேட்டேன் :  ”நீ  ஏன்  அப்பாவை  நேசிக்கிறாய்?”  என்று.

எங்க அப்பா  தான் எனக்கு சட்டை பொம்மையெல்லாம் வாங்கித்     தராங்க!  அதனால  தான்…”  என்றது

"நீ ஏன் அம்மாவை  நேசிக்கிறாய்?"  என்று கேட்டேன்.

எங்க அம்மா தான் எனக்கு  சாதம் பாலு  எல்லாம் தராங்க!”  என்றது.

இதை விட  நேரான  எளிமையான யதார்த்தமான  பதிலை    பெரியவர்களால் கூட  சொல்ல முடியாது.  இதே கேள்வியை  பெரியவர்களிடம் கேட்டிருந்தால்  பொய் சொல்லி யிருப்பார்கள்அன்பு  பாசம்  நேசம் என்றல்லாம் வார்த்தைகளால்  விளையாடி யிருப்பார்கள்  ஆனால்  உண்மை  குழந்தை  சொன்ன  பதிலில் தான்  நிறைய  இருக்கிறது

இதே  விஷயத்தை  இன்னும் சற்றுத் தொடர்ந்து  பார்ப்போம்.  ஒரு  குழந்தைக்கு அப்பா இல்லை என்று வைத்துக் கொள்வோம்அந்தக்  குழந்தைக்கும் சட்டை பொம்மை எல்லாம் கிடைத்து விடுகிறது.   என்றாலும்

எனக்கு அப்பா இல்லையாம்மா?   எனக்கு  அப்பா வேண்டும்!“  என்று கேட்கும்.

அப்பா  இருக்கிற  குழந்தைக்கு  பொம்மை சட்டை   கிடைக்காவிட்டால் அதை  வாங்கித் தாவென்று  அப்பாவிடம்  அழும்.

ஆக குழந்தைக்கு  அப்பாவும் வேண்டியிருக்கிறது..  பொம்மையும்   வேண்டியிருக்கிறது. !!!

பொம்மையும் வேண்டும் அதை வாங்கித் தர அப்பாவும் வேண்டும்!  பொம்மை வாங்கித் தந்த  நற்பணிக்காக   அப்பாவை  நேசிக்கவும் வேண்டும்

ஆக,  குழந்தையின் அன்பு  அப்பாவிடம் மட்டுமில்லை.   பொம்மையிடம் மட்டுமில்லை.  அப்பா –பொம்மை   என்ற  இரண்டு  வளையங்களுக்கு நடுவே ஏதோ  ஒரு  இடத்தில் பதிந்து  போயிருக்கிறது.

அந்த  அன்பு  எங்கே  இருக்கிறது?  ஏன் ஏற்பட்டது?

அந்த இடத்தில் தான் மனிதப் பிராணிகளின் இயல்பான  தொன்மையான தற்காப்பு நிலை  தெரிய வருகிறது.

டார்வின் ஆய்ந்தறிந்த  முடிவின் உண்மையை மேற்கூறிய  குழந்தையின் இயல்பிலிருந்து ஊகிக்க முடியும்.

தன்னைப் பாது காத்துக் கொள்ளவும் தன்னை  துன்பங்களிலிருந்தும் அபாயங்களிலிருந்தும் மீட்கவும்  தனக்கு சௌகரிங்களை  உண்டாக்கித் தரவும்  ஒரு சாதனத்தை  தேடுகிறது குழந்தை

அந்த சாதனமே  முடிவில்  அப்பாவாக  முடிகிறது.  அதுவே  உயிரினங்களின் இடையறாத தொடர்ச்சிக்கு  அணு சக்தியாக  அமைகிறது.

 

                                                   **************

                     

எப்படித்  துதிப்பேன்?

                  

கோவில் சன்னிதியில் நின்று கொண்டு  பக்தர்கள் தெய்வத்தை  சேவிக்கும் போது நான் அவர்களையே பார்த்துக் கொண்டு  நின்றேன் .  அந்த பக்த கோடிகளின் முகங்களைப் பார்வையிட்டேன். அத்தனை  முகங்களிலும் ஏதோ  இனமறியாத சோகம்  கவ்விக்  கொண்டிருந்தது.  ஏன் என்று விளங்கவில்லை

தெய்வத்தைத் தொழும்போது  மனிதன் ஏன்  வருத்தமாக  தோன்ற  வேண்டும்?

வருத்தமாக  துன்பத்தில்  உழலுவது போல் கடவுளிடமே  பாசாங்கு  செய்து  விட்டு நிறைய  புண்ணியங்களை  அள்ளிக் கொள்ளலாம்  என்று  அசட்டு சாதுர்யமா?

அல்லதுஎதற்காக  கோவிலுக்கு  வந்தோம்எதற்காக தொழுகின்றோம் ?  என்ற அடிப்படைக் கேள்விகளை –பக்தியினாலோ  அறியாமையினாலோ –சரியாகப் புரிந்து  கொள்ளாத  குற்றத்தால்  வழி தெரியாத  குருடன்  நிலையில் அலை மோதும் குழப்பத்தினாலா??

அல்லது -  நான் எதை  வேண்டுவது?  எனக்கு என்ன வேண்டும்நான் வேண்டினால் கிடைத்து விடுமாஅது கிடைத்து விட்டால்  எனக்கு  வேறெதுவும்  வேண்டாமா?  என்ற  தீராத  சந்தேகங்கள்  க்ஷண  நேரத்தில்  புற்றீசல்  மாதிரி  கிளம்பி மடிந்த அயர்வு தான்  முகத்தில்  பிரதி பலிக்கிறதா?

அல்லது -  நான்  செய்வது  பாபமா?  புண்ணியமா?  பாபம் எதுபுண்ணியம் எது?  நான் இதைச் செய்த  காரணத்திற்காகத் தான்  இதாக  ஆனேனா?  அப்படியானால்  எதாக  ஆவதற்கு  எதைச்  செய்ய வேண்டும்  என்கிற  தொன்மையான மனக்    கிலேசங்களுக்கு  தீர்மானமான விடை  தெரிந்து கொள்ள  முடியாத ஜன்மத்தை  எடுத்த மனத் தாபமா?.....

இவ்வளவு கேள்விகளும் எழாத  மன நிலை  நமக்குக்  கிட்டி விட்டால்நாம் கோவில் சன்னிதியில் மலர மலர  சிரிக்க முடியும்கோலாட்டம்  ஆட முடியும்கவிதைகளைப் பொழிய முடியும்கடவுளை  பயமில்லாமல் ஒரு  சக நண்பனைப் போல்  பார்த்து  சம்பாஷிக்க முடியும்

இப்போது  என்னுடைய  பிராத்தனை  -  அத்தகைய மனநிலை  கிட்ட வேண்டும்  என்பது  தான்!!


(நன்றி : அம்ருதா  அக்டோபர் 2020 )    

____________________________________________________________________________________

               

 

 

   

Monday, September 21, 2020

அந்திம நினைவலைகள் - செப் 22

 


 

அந்திம நினைவலைகள் - செப் 22

 

      - வைதீஸ்வரன் -
 

நாங்கள்  இருவரும் பிறந்த  தேதியும்  மாதமும் ஒன்று தான்.  ஆனால்  அசோகமித்திரன்  எனக்கு நான்கு வருடங்களுக்கு முன் பிறந்தவர்.

 

நாற்பது ஐம்பது ஆண்டுகளாக  இந்த நாளில் நானும்  அவரும்  சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம்

 

ஆனாலும் அவருக்கு  பிறந்த நாள் பற்றிய  விசேஷமான  அபிப்ராயம் கிடையாது. எனக்கும் அப்படித்தான்இருந்தாலும் பேசிக் கொள்வோம். ஏதோ மகிழ்ச்சியாக இருக்கும்   அவர்  கடைசி சில வருடங்களில் சற்று விரக்தியாக சிரித்துக் கொண்டு பேசுவார்.   “ வைதீஸ்வரன்….இந்த தேதியெல்லாம் ஏதோ  அன்றாட வசதிக்காக  நாம்ப  ஏற்படுத்திக் கொண்ட கணக்குகாகிதத்தைக் கிழிக்கிற மாதிரிஆனா  நமக்குள்ளே   தான் நெஜமான  கடிகாரம் ஒண்ணு இருக்கு..அதுக்குத் தெரியும்  எப்போ நிக்கணும்னு!! “ என்று சொல்வார்அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் பேசிய கூட்டத்தில்  “  நான் இன்னும் ரெண்டு மூணு  மாசம் தான் இருப்பேன்! “ என்று சொன்னார். அது உண்மையாக இருந்தது. அந்த உண்மை அவருக்கு எப்படித் தெரிந்ததென்று எனக்கு ஓரளவு  தெரியும்!!!

 

சுமார் 40 வருஷங்களுக்கு முன்பு  நான் ஆஸ்துமா அரக்கனால் கொடுமையாக  அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அசோகமித்திரன் அடிக்கடி கணையாழிக்கு கவிதைகள் கதைகள் வேண்டுமென்று வீட்டுக்கு வருவார்ஒரு  நாள் என் வேதனையைப் பார்த்து  சொன்னார்.

 

இந்த  மாதிரி மருந்துக்கு கட்டுப் படாத  வேதனைக்கெல்லாம் நம் முன் ஜன்ம வினை தான் காரணம்னு சொல்லுவாங்க!  உங்களுக்கு  நாடி ஜோசியத்துலே  நம்பிக்கை  உண்டா? “

 

நீங்கள்  உங்களுக்கு பார்த்திருக்கிறீர்களா?  என்று கேட்டேன்

 

அவர் ஆமாம்என்று   தனக்குள்  சிரித்துக் கொண்டு பதில் சொன்னார்.

 

அடுத்த வாரம்  கஸ்தூரிபாய் நகரிலுள்ள  நாடி ஜோசியர் ஜயராம் நாயுடு வீட்டுக்குப் போனோம்.  முதலில் தொகையை வாங்கிக் கொண்டார்கள். சற்று அதிகம் தான்.  பிறகு  என் பெயரை மட்டும்  கேட்டுக் கொண்டு ஒரு 40 நிமிட நேரத்தில்  முப்பது பக்கத்துக்கு என்  வாழ்க்கை விவரங்களை  நோட்டுப் புத்தகமாக கையில் கொடுத்து விட்டார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் அதில் குறிப்பிட்டிருந்த கடந்த காலத் தகவல்கள்  சரியாகவே இருந்தன.  வெண்ணையுண்ட வீணயம்மாஎன்று என் அம்மாவின் பெயர் இருந்தது  உண்மையான பெயர் கிருஷ்ணவேணியம்மா!!  என் தந்தையின் பெயரை அழகு என்றும் சொல்லுவார்கள் என்று இருந்தது.  அவர் பெயர்  சுந்தரம்!  அதே போல் நான் பிறந்த வளர்ந்த  ஊர் சரியாக இருந்தது. ..  உத்யோகம் விண்வெளிஊர்தி காப்போன்என்று  இருந்தது!! எல்லாம் சரியாக இருந்தது!   நான் வியப்புடன் அசோகமித்திரனைப்  பார்ததேன்

 

இதனால நாம்ப  சந்தோஷப் பட முடியாது..  ஆரம்பத்துல நமபற மாதிரி சொல்லி பின்னால   தகவலகள்  அப்ப்டி இல்லாம போனாலும் போயிடறது! “என்றார்

 

என்னுடைய  வியாதி அவஸ்தைகளுக்கு  என் போன ஜன்ம வாழ்க்கையை விவரித்து அதில் செய்த பாவங்கள் தான் காரணம் என்றும்  ஏதோ ஒரு மந்திரத்தை கூறி அதை   முறைப்படி ஜபித்துக் கொண்டு வந்தால்  வியாதி,  உடனே குணமாகி  நல்ல பலன் கொடுக்கும்  என்றும் எழுதியிருப்பதை   விவரமாக சொன்னார் ஜயராம் நாயுடு.

 

ஆனால்  உடனே"  என்கிற வார்த்தைக்கு  வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கலாம் என்று நான் அப்போது உணரவில்லை.  நான் மேலும் எட்டு வருடங்கள்  அவஸ்தைப் பட வேண்டியிருந்ததுஆனால் அசோகமித்திரனுக்கு தன் முடிவு தேதியைக் கூட சொல்லி விட்டதாக  மெதுவான குரலில் எனக்குத் தெரிவித்தார். அவர் விஷயத்தில் அது சரியாகவே நடந்தது.

 

ஒரு மூன்று வருஷங்களுக்கு முன் மாலை வேளயில் உட்கார்ந்த  நிலையிலேயே  அவர்  உயிர்  பிரிந்தது.  நல்ல ஆத்மாக்களின் உயிர் உட்கார்ந்த நிலையிலேயே பிரியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்

 

சுமார் 70 வருடங்களாக அவருடன் எனக்கு ஏற்பட்ட  தோழமை.. கடந்த பிறவியின் தொடர்ச்சியாக  எனக்கு பல சமயம் தோன்றுவதுண்டு

 

அவர்  நட்புறவால் என் வாழ்க்கையும் எழுத்தும் ஏதோ ஒரு விதத்தில் பரிமளித்ததென்ற  உணர்வு எனக்குள் இந்த  அந்திம வருஷத்தில் மீண்டும்  நினைவலைகளை  எழுப்புகிறது !!

 

                                         ************

 

ஓரு சுயநலமான கவிதை

 

இந்தக் கொரொனா காலத்தில்

உடலும்   உடலும்

விலகி  நிற்கட்டும்

எனக்குக் கவலை இல்லை

உடலைப் பற்றிய  உயிர் மட்டும்

விலகாமல்  இருக்கட்டும்

{எத்தனை பேராசை! }

________________________________________________________________________

வைதீஸ்வரன் - 22 செப் 2020