கடல் ஒரு மாயப்பிறவி
- வைதீஸ்வரன் -
கடலின் மொழியை
என்னால் புரிந்து கொள்ள
முடிந்ததில்லை.....
ஓராயிரம் கோடித் திமிங்கலத்தைப் போல
அசுர பலத்தோடு அது
அன்பை வாரி இறைத்துக் கொண்டு கிடக்கிறது
அனாதி காலமாய்.......
வாரியணைத்துக்கொள்வதும்
உதறித் தள்ளுவதும் அதற்கு
வாடிக்கையான பொழுது போக்கு..
இரவில் ஒரு குணம்
பகலில் ஒரு குணம்
இதென்ன கபடவேஷம்..
மதியம் ஒரு நிறம்
மாலை ஒரு நிறம்...
இதென்ன பொய் பூச்சு....
கோபத்தை பொத்தி..பொத்தி
வைத்துக் கொண்டு
திடீரென ஆங்காரமாய்
எரிமலைத்தணலாய் ..வெடித்து
ஆர்ப்பரித்து
அரவணைத்துக்கிடந்த ஊர்களையெல்லாம்
அழித்து அலங்கோலமாக்குகிறது.
கடலின் மொழியை
என்னால் புரிந்து கொள்ளவே
முடிந்ததில்லை !!!
வினோதமாக இரவின் ரகசியத்தருணங்களில்
என் செவிக்குள் காற்றென ஊர்ந்து
மனம் நிறையக்
கவிதைகளைத் தூவிவிட்டு
மறைந்து விடுகிறது!!!
இதென்ன மர்மம்!!
...........
ஒரு வேளை
மனித இயல்பைத் தான்
அது பிரும்மாண்டமாகப்
பழித்துக் காட்டுகிறதா???
________________________________________________________________________
(மே மாதம் 2023 )
No comments:
Post a Comment