vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, August 13, 2017

திசை காட்டி - ரமேஷ் கல்யாண் [ சொல்வனம்]

          திசை  காட்டி   
வைதீஸ்வரன்   எழுதிய நூல் குறித்த  புத்தக  மதிப்புரை  
-   ரமேஷ் கல்யாண்    [ சொல்வனம்]

 திசை காட்டி
எஸ் . வைத்தீஸ்வரன்
நிவேதிதா புத்தகப் பூங்கா
152 பக்கங்கள்
முதல் பாதிப்பு 2010
ஒருவர் தன் நினைவுகளின் கோப்பையில் விரல் நனைத்து எடுத்துச் சுண்டும்போது தெறிக்கும் சொட்டுக்கள்,அந்த கோப்பையின் உள்ளடக்கம்சுண்டும் விரல் இரண்டையும் பொருத்து படிப்பவனுக்கு பிடித்தமானதாகவோ பிடிக்காமலோ போகலாம்.  திசைகாட்டி எனும் எஸ்.வைதீஸ்வரனின் இந்த புத்தகம் துளிகளை ரசிக்கும்படியாகவே ஆக்கியிருக்கிறது.
இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அவரது பால்யகாலத்தில் இருந்து – சுமார் அறுபது வருடங்களுக்கு முற்பட்டவை – மீட்டெடுத்த நினைவுகளாக உள்ளன. ஆனால் அவற்றை தனது பிற்கால கவிதை வரிகளுடன் பொருத்தியும் பிற கவிதை வரிகளுடன் இணைத்தும் தொடர்பூட்டும்போது நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது. இவர் கவிஞராக இருப்பதன் மூல வித்து அந்த இளம் பிராய பார்வைகளில் இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. கவி இயல்பின் விதையிலைகளாக.
 இளம் பிராயம் என்பது ஒவ்வொரு  தலைமுறைக்கும் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறதுஆனால் அந்தவித்தியாசத்தின் தீவிரம் தற்போதுள்ள இளம் தலைமுறையில் அதிகமாகிப் போனதாக உணருகிறோம். இன்று குழந்தைப் பாடல்களே இல்லை. ரியாலிடி ஷோக்கள் மட்டுமே. மழலையின் கொஞ்சுப் பிதற்றல்கள் இல்லை. சற்று ஊன்றிப் பார்த்தால் குழந்தைகளுக்கு என்று தனித்துவமான ஒரு விளையாட்டு கொஞ்சுமொழி விஷமம் போன்றவை இப்போது காணவே முடியவில்லை. எங்கும் கணினிகளும் தொலைக்காட்சி களும் பீடித்துள்ளன. எல்லா குழந்தைகளும் ஏறக்குறைய ஒரே போலவே தம் குழந்தைமையை கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. குழந்தைப் பாடல்களுக்கான எளிய முயற்சி என்று தன் குழந்தைப் பாடல் ஒன்றுடன் கட்டுரை ஆரம்பமாகிறது.
இந்த தொகுப்பில் உள்ளவற்றுள் மிக நல்ல கட்டுரை ஒரு பறவையின் நினைவு.” இவருக்கு பரோடா அருங்காட்சியகம் அருகே வகுப்பு. படிப்பின் அங்கமாக டாக்சிடர்மி எனும் பயிற்சி. பறவைகளை துப்பாக்கியால் சுட்டு  அங்கம் சிதறாமல் அதன் உள்ளிடுகளை எடுத்துவிட்டு பஞ்சைப் பொத்தி நிஜ உருவம் செய்வது. இவர் அப்படி துப்பாக்கி மற்றும் பயிற்சி அறிவுரைகளுடன் காட்டுக்குள் செல்கிறார். குறி பார்ப்பதில் சமர்த்தர் அல்லர். உடன் வரும் நண்பன் ஒரு சிங்.(அப்படி வைத்துக் கொள்ளலாம் இப்போதைக்கு என்கிறார் ) கெட்டிக்காரன். மென்மை மனத்துடன் பரோபகாரம் செய்பவன்.  ஒருமுறை எங்குமே குருவிகள் தென்பட வில்லை. அவை இரைதேட வெகுதூரம் போயிருக்கும் என்று சொல்லி பறவையைப் போலவே சப்தமெழுப்புகிறான். சிறிய குஞ்சு ஒன்று தத்தி வந்து வெளியே எட்டிப் பார்க்கிறது. இவர்கள் கேளிக்கையாக ஆச்சரியமாக புன்னகைக்கும் அதே கணம் அவன் அதைக் சட்டென்று சுடுகிறான். இதை இவர் சொல்லும் விதம் குண்டு  நம்மேல் பாய்கிறது. அவனை இவர் கடிந்து கொள்ளும்போது இங்கே எதுக்கு வந்தாய். நீ படிக்க லாயக்கில்லை என்கிறான். இதைச் சொல்லிஅவன் இப்போது எங்கே என்னவாய் இருக்கிறானோ என்று நினைக்கையில் அச்சமாக இருக்கிறது என்கிறார். இளம் பிராய நினைவும் அதன் சாரத்தை சொல்லும் விதத்தில் ஒரு கவித்துவத் தொடலும் ஊடுபாவாக ஒரு செய்தியும்.  இதுதான் இதன் பலம். மிக நல்ல கட்டுரை
திசைகாட்டி என்ற தலைப்புக் கட்டுரை இப்போதைய நாட்களுக்கு ஒரு சாதாரணம் என்றாலும் அதில் ஒரு பார்வையை வைக்கிறார். விலாசம் தேடிக்கொண்டு காரில் செல்கிறார். இடம் தெரியவில்லை. சாலையில் யாருமில்லை. முன்னே நடந்து செல்லும் ஒருவரை நிறுத்தி கேட்க முயலும்போது அவர் பார்வை அற்றவர் என தெரிகிறது. ஆனால் அவர் பூந்தமல்லிதானே போகணும் .என்னை ஏற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லி பயணிக்கிறார். இடது வலது பாலம் என சரியாக சொல்லி ஒரு இடத்தில் நிறுத்த சொல்கிறார். அது அவர் வீடு. உள்ளே இருக்கும் தந்தையை அழைத்து நீங்கள் பூந்தமல்லி போக வேண்டும் என்றீர்களே இவருக்கு வழிகாட்டியபடியே செல்லுங்கள் என்கி றார். கார்க்காரருக்கும்தனக்கும்அப்பாவுக்கும் – உதவியபடியே பலங்களை பெரும் வழிக் கான திசைகாட்டி இவர் என்று தோன்றுகிறது. அவனுடைய அப்பாவை காரில் அழைத்துப் போகையில் அவர் அவனுடைய கவிதைப் புத்தகம் ஒன்றை தருகிறார்நேத்திரன் என்ற பெயரில் எழுதியது. அவன் திசை காட்டத் தெரிந்தவன் என்கிறது கட்டுரை மூன்று அடிகள் என்ற ஹைக்கூ பற்றிய கட்டுரை. இவரது கிணற்றில் விழுந்த நிலவு இன்றளவும் பேசப்படும் குறுங்கவிதை. ஆனால் ஹைக்கூ பற்றிய இந்த கட்டுரை முன்பே அதிகம் பேசப்பட்ட தொனி யிலேயே இருக்கிறதுஇவரைப் போன்று நிதானத்துடன் ஹைக்கூ எழுதுபவர்களிடமிரு ந்து நாம் பெற நிறைய இருக்கிறதுஇந்த கட்டுரையில் புதிய தகவல்கள் இல்லை. ஆனால் சில நல்ல ஹைக்கூக்களை தந்திருக்கிறார்.

அடை மழை
ஒரு குடையின் கீழ்
இரண்டு மெளனங்கள்  (Geoffry Daniel)
உம்பர்த்தோ எக்கோ   பற்றிய கட்டுரையில் அவருடைய எழுத்தைத் தழுவி எழுதியுள்ள கட்டுரை. போட்டிருப்பதில் விசேஷ கவனம் கொள்ள ஏதுமில்லை. அவரது செமியோடிக்ஸ் பற்றிச் சொல்லி இதைத் தொடர்ந்திருந்தால் இன்னும் வளம் பெற்றிருக்கும். பாங்கோ இன மக்கள்பற்றி இக்கட்டுரையில் சொல்லப்படுகிறதுஅவர்கள் பேசவரும்போதே, கவனி யுங்கள், நான் இப்போது பேசப்போகிறேன், என்று சொல்லிவிட்டுத்தான் பேசுவார்கள். வீட்டில் வீடு என்றும் கதவில் கதவு என்றும் பெயர்ப் பலகை எழுதி தொங்க விடுவார்கள். நாடகத்தில் வருபவர் தன் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டவுடன் அனைவரும் கைதட்டுவார்கள். இப்போது சிரிப்புக் காட்சிஎன்று அறிவித்து நடக்கும். அது முடிந்தவுடன்இப்போது கைதட்டுங்கள்என்றவுடன் அனைவரும் கரகோஷம் செய்வார்கள். ஒருவர் திண்ணையில் உட்கார்ந்திருக்க திடீரென்று ஒருவர் வந்துஉங்க பாட்டி லாரியில் அடிபட்டு செத்துடுட்டாங்கஎன்று சொன்னவுடன்  அருகில் இருந்தவர்கள் எழுந்து கைதட்டு கிறார்கள்சற்று தமாஷாக இருக்கிறது.  தற்போதைய அரசியல் மற்றும் ஊடக வெளிக்கு இதை உதாரணப்படுத்தும் எள்ளல் நன்றாக இருக்கிறது.
காட்சிப் பிழைதானோ என்ற கட்டுரையில் வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி அக்கச்சீ” என்ற பாடலை காட்சி கற்பனை கவித்துவம் கலந்து சிலாகித்து ள்ளது ரசனைக்குரியது. இந்த ஸ்தூலமான காட்சிக்கு பின் உள்ள ஆன்மீக குறியீடு என்ன என்று விசாரித்துப் போகும் கட்டுரை நமக்கும் தீனி.

கவிதையும் எண்ணங்களும்” கட்டுரையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அவரது காலத்தில் கவிதைகளுக்கு ஒரு சீற்றமும் பிரச்சார தொனியும் தேவையாக இருந்தன. காலத்தின் தேவையாக தானும் அப்படி எழுத நேர்ந்தமை பற்றி சொல்கிறார். நேருவின் அறைகூவல் காலத்தில் எழுதிய கட்டுரையில் பயிரைத் தின்னும் பகையை வீரப்படை கொண்டு மாய்த்திடுவோம்“ எனும் கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார். அது அந்தக் காலத்தின் தேவை. இத்தகைய கவிதைகள் இன்று பொருத்தப்பாடு இல்லாமல் போயிருப்பவை. இன்றைக்கு அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.  “வானம்பாடிகளே“ திசைமாறிப் பறந்த விஷயம் சமீப உதாரணமாகும். ஒருவேளை அதனால்தான் இப்போதெல்லாம் பெரும்பான்மையாக சுய புலம்பல்தோல்விகள் அல்லது பாலியல் தெறிப்புகளாக தட்டையாகிப் போனதோ என்றும் தோன்றுகிறது.  லட்சியங்களும் ஆதர்சங்களும் அற்ற ஒரு காலகட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம்அவரே இந்த கவிதையை இப்போது படிக்கையில் வருத்தமே மிஞ்சுகிறது. ஏனென்றால் இன்று நம் பகைவன் அந்நியன் இல்லை. நம்மிடையேதான் இருக்கிறான். பரஸ்பர சந்தேகத்துடன் உற்றுப்பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது“ என்பதாக எழுதும்போது ஐம்பது வருடமாக எழுத்துலகில் உள்ள ஒருவரின் பார்வையில் புலம்பலற்ற அழுத்தம் ஒன்று கிடைக்கிறது.

இதில் உள்ள ஒரு கட்டுரையில் .ரா ரசித்த பைத்தியக்காரன்“ என்றொரு நாடகம் பற்றி வருகிறதுஅதில் சிறு குழந்தைகள் பாவாடைசட்டைபூ,  பொட்டொடு விளையாடபைத்தி யம் போன்ற ஒருவன் வந்து, ‘எல்லாரும் வீட்டுக்கு போங்க. இல்லாவிட்டால் ஏதோ ஒரு கிழவனுக்கு மணம்செய்வித்து அவன் சாக உங்கள் பூ,பொட்டை பறித்துவிடுவார்கள்’ என்கி றான். பிறகு ஒரு சிறுமியை, ‘உன் பூ எங்கேஉனக்கு அப்படி ஆகிடக்கூடாது,’ என அவளுக்கு அலங்காரம் செய்து பூ வைத்து, ‘பொட்டு எங்கே. எங்கே.’ என தேடுகிறான்அய்யா அம்மா யாராவது கொடுங்க ளேன் “ எனக் கேட்கநெகிழ்ந்த நிலையில் உள்ள பார்வையாளர்க ளிடம் இருந்து குங்குமப் பொட்டுகள் வந்து விழுகின்றன.  கருத்தியலை கொண்டு சேர்க்கும் நிர்பந்ததில் இருந்த அந்தக்கால கலை வடிவம் நம் கவனத்துக்குரியது.  தீவிர நாடக இலக்கியம் தவிர்த்த மற்றுள்ள வெகுஜன நாடக உலகுக்கு இன்று இது மிக அந்நியப்பட்டி ருக்கிறது. ஆனால் பார்வையாளன் இன்று பிற ஊடக வடிவங்களில் விரவிக்கிடக்கிறான். சற்று ஊன்றிக் கவனித்தால் பார்வையாளனின் இந்த நெகிழ்வுணர்ச்சியை அன்று லட்சியம் சார்ந்து நெறிப்படுத்திப்போனார்கள். இன்று தொலைக்காட்சி பாட்டுப் போட்டிகளில் கண்ணீர் கதையாக்கிக் கொண்டிருக்கிறோம்காசு பண்ணுகிறார்கள். கட்டுரையை வாசிக்கையில் இந்த இடைவெளியை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.  பாலாபிஷேகம் செய்யும் இன்றைய  தமிழ் ரசிகர்களின் உணர்வுகள் கொச்சையாகித்தான் போயிருக்கின்றன என்பதை நாம் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மரணம் ஒரு கற்பிதம்” கட்டுரையில் தான் அறியாத பழைய உறவினர் ஒருவரின் மரண அறிவிப்பு கடிதம் வருவதை சொல்லி என்னைப் பொறுத்தவரை அவர் எப்போதுமே இல்லா மல் இருந்தவர்தான்ஒருவருடைய சாவு என்பது அவருக்கும் நமக்கு உள்ள நெருக்கம் மற்றும் சார்பைப் பொறுத்தது” என்கிறார்.  தற்போது திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு இளையவர்கள் யாரும் வருவதில்லை. ஒரு நாளில் யாரின் சாவும் யாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்கிற வருத்தத்துடன்தான் இதை படிக்க முடிகிறது.
சி.மணி பற்றிய இவர் கட்டுரை முக்கியம். ஏனென்றால் இருவரும் நண்பர்கள். வாழ்க்கை யிலும் கவிதையிலும் உடம்பு அவருக்கு முக்கியப்பட்டுள்ளது என்று சொல்லி தோள்முனைத் தொங்கல் என்ற கவிதையை குறிப்பிடுவது நயம். ஆனால் இந்த கட்டுரை சிறியதாக அமைந்து போனது ஏமாற்றம்.
பாலைவன நகரம் பற்றிய தெளத்ஹாரி எழுதிய புத்தகம் பற்றிய கட்டுரையில் சஹாரா பற்றிய விஷயம் சுவாரசியம். நீரில் சிவப்பு நிற உப்பு ஒன்றை கலந்து கொடுத்தால் ஒட்டகம் கொஞ்சம் குடித்தாலும் நீண்ட தூரம் பயணிக்கும்.  வழி தவறிப் போனால் செத்தது கூட யாருக்கும் தெரியாமல் போகும். மூதாதைகள் வழி விண்மீன்களை அடையாளம் வைத்து குச்சி வைத்துப் போதல். சிலர் மண் மலைகளை அடையாளம் வைப்பார்கள். ஆனால் மறுநாள் மலையாய் இடம் மாறி இருக்கும்.  ஒட்டகங்கள் எஜமான விசுவாசியான பிராணி. ஒரு முறை திருடன் இரவில் ஒட்டகத்தை ஒட்டிப்போக அது வட்ட வட்டமாக நடந்து தன் காலடி தடத்தை தான் எஜமானனுக்கு காட்டி உதவியது போன்ற செய்திகள்.
.ரா பற்றிய கட்டுரையில் பாரதியின் ஸ்பரிசம் பற்றிய அதே கைகள் தன் முதுகை தடவிக் கொடுத்ததை மகிழ்ந்து சொல்லி – இந்த கட்டுரையில் சுவாரசியமாக எதுவும் இல்லை எனும்போதும் –  என்னதான் பெரியவர்கள் தட்டிக் கொடுத்தாலும் வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்கள் நம் கைகளை நம்பித்தான் இருக்கின்றன என்ற பாசாங்கில்லாத வரியை வைக்கிறார்.
கட்டுரைகள் எந்த ஆண்டில் வந்தன என்ற குறிப்புகள் இல்லை. அது கட்டுரையை அதன் கால அனுமானத்துடன் படிக்க / கிரகிக்க ஏற்க/ மறுக்க ஏதுவாக இருக்கும்.

மிக எளிதாகவும் விரைவாகவும் வாசித்து முடித்துவிடக் கூடிய புத்தகம். ஆனால் அந்த வேகத்தில் இதில் உள்ள சுவாரசியமான சிலவற்றை நழுவ விடக்கூடாது என்பது முக்கியம்.