vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, July 11, 2013

தவளையின் ரத்தம்

                  
தவளையின் ரத்தம் 
 [வைதீஸ்வரன்]





       
தவளையின் ரத்தம் 
 [வைதீஸ்வரன்]

ன் அத்தையைப்பற்றி எப்போது நினைத்துக்கொண்டாலும்  எனக்கு மனம் அமைதியற்றுப் போய்விடுகிறது. எப்போதோ அறுபது வருடங்க ளுக்கு முன் வாழ்ந்துவிட்டுப்போன அவளுடைய வாழ்க்கைச்சம்பவங்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து மறந்துவிட   நினைத்தாலும் துக்கத்தை மீண்டும் கிளறிவிடுகின்றன.

எனக்கு அத்தையின் முகம் நினைவில் பதியும் வயதில் அவளுக்கு வயது நாற்பதைத் தாண்டி  இருக்கலாம். வயதுக்கணக் கெல்லாம் தெரி யாத அந்த வயதில்  அவள் முட்டாக்குப் போட்ட  மழித்த தலையும்  நார் மடிப் புடவை மணமும் நிழலாடுகிறது.  எண்ணற்ற வருத்தங்கள் கீற லிட்டுப் போன  முகமும், அதை மறைத்துக்கொள்ள அவள் அடிக்கடி சிரித்துக்கொண்டே பேசுகின்ற சுபாவமும்   மங்கலாக ஞாபகத்திலிருக் கிறது.   நான்கைந்து வயதான நான் அடிக்கடி அத்தையின் வீட்டுக்கு ஓடிப்போய் விடுவேன். நாங்கள் அத்தையின் வீடு விசாலமாக இருக் கும்... அந்த வீட்டின் ஒரு பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். அவள் பிள்ளை கண்ணன் எனக்கு நிறைய விளையாட்டுக் காட்டுவான்.   அவனுக்கு அப்போது பதினாறு வயதிருக்கும் .

என் தந்தையுடன் கூடப்  பிறந்த  நாலைந்து  சகோதரிகளில் என் அத்தை கடைசியாகப் பிறந்தவள். சொற்ப வருவாயுடன் காலந்தள்ளிக் கொண் டிருந்த  என்  தாத்தாவால் எல்லாப் பெண்களையும் சௌகரியமாக கல்யா ணம் செய்துகொடுக்க முடியவில்லை. அநேகமாக எல்லோருமே இரண்டாம் தாரம் அல்லது மிக ஏழ்மையான பெரிய குடும்பம்…..  இப்படித்தான் வாக்கப் பட்டார்கள். அந்த விஷயத்தில் என் அத்தை கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வேண்டும்.

முதல்தாரம் இழந்து நாற்பது வயதாகி விட்டவரென்றாலும்; என் அத்தை யின் கணவர்  நல்ல வசதி உள்ளவராக  இருந்தார். தமிழ்நாட்டிலும் பர்மாவிலும் பெரிய வியாபாரம் செய்து வந்த காரைக்குடி செட்டியாரி டம்  தலைமைக் கணக்கு வேலை பார்த்துவந்தார். நிறைய வருமானம் வந்தது.  வியாபார விஷயமாக அடிக்கடி பர்மாவுக்கும் போய் வர வேண்டியிருந்தது.

பொதுவாகஎல்லோருமே வறியநிலைமையில் இருந்தபோது  இப்படி ஒரு  அத்தை செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்தது மற்ற சகோதரிகளுக்கு  சற்று உறுத்தலாகத் தான் இருந்திருக்கக் கூடும் 

 அத்தை இதைப் பெரிதாகப்  பாராட்டியதில்லை.  மிகவும் சிநேகிதமாக மற்றவர்களை அரவணைத்துப் போகும் சுபாவம் உள்ளவளாகத் தான் இருந்திருக்கிறாள்.

 சமீபத்தில் என் பழைய இரும்புப்பெட்டியில் செல்லரித்துப்போயிருந்த என் தாத்தா காலத்துப்    பத்திரங்களை பிரித்துப் படிக்க   நேர்ந்தபோது    அதில்  அத்தை தன் ஐநூறுரூபாயைக் கொடுத்து உதவி தாத்தாவின்   வீட்டை  ஏலத்தில் போகாமல் காப்பாற்றியிருக்கிறாள் என்ற நெகிழ்ச்சி யான விவரம் எனக்குத் தெரிய வந்தது.  ஐநூறு ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இது நடந்த வருஷம் 1906.

ஆனால் வசதியும் வாழ்வுமாக இருந்தாலும்  அவளுக்கு பல வருஷங்கள் குழந்தைப்பேறில்லை.  இதனால் தனக்குள் மருகிக் கொண்டிருந்த ஏக்கத்தைவிட ஊராரும் உறவுகளும் இடித்துப் பேசிய பழிப்புகளை அவ ளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும், வருடத்துக்கு ஒன்றா கப்  பெற்றுக்கொண்டிருந்த  மற்ற ஏழை சகோதரிகளுக்கு   சுகமாக பிடுங் கலற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தையின் சந்தோஷத்தைக் கலைத் துப் பார்ப்பதில் ஒரு குரூர ஆனந்தம்.

 அடிக்கடி  தன் வேலை விஷயமாக  பர்மாவுக்கு போய்வந்து கொண்டி ருந்த அத்தையின் கணவர்  குழந்தையில்லாத துக்கத்தையோ வெறுப் பையோ அதிகம்  காட்டிக்கொள்ளவில்லை.   அத்தையிடம் மிகுந்த பிரிய முடன் அக்கறையுடன் தான் பழகி வந்தார்.

ஆனால் அத்தையின் மனதில்  தான் தாயாகவேண்டும் என்ற ஆசை  நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டுவந்தது எப்படியாவது தன்னிடம் உள்ள குறைகளைக் கண்டறிந்து நீக்கி தடங்கல் இல்லாமல்   பேற்றுக்கு வழி செய்யக்கூடிய மருத்துவச்சிகளைத் தேடிக்கொண்டிருந்தார். அப்படித் தான் அப்போது அவளுக்கு ஒரு பெண்சித்தர் பரிச்சயமானாள்.

இந்த பெண் சித்தர் அப்போது அந்தப் பக்கங்களில் பிரபலமாகிக் கொண் டிருந்தார். நீளமாக வெள்ளைப்பாம்பு போல் தொங்கும் சடையிட்ட கூந்தலும் மஞ்சள் சேலையும் சிவப்புத் தகடு போன்ற நெத்திப்பொட்டும் பழுப்புக் கண்களும்  சற்று முன் தூக்கிய அவள் காவியேறிய பற்களும் பார்ப்பவர்களை ஏதோ ஒரு விதத் தில் பயப்படுத்தி பணிய வைத்தது.. .தன் குறைகளுக்கெல்லாம் இவளிடம்   பரிகாரம் கிடைக்கும் என்று ஊர் மக்களிடையே விட்டு விலக முடியாத ஒரு பிடிமானத்தை ஏற்படுத் தியது

அத்தை பழத்தட்டு  நிறையப் பணத்தோடு போய் அவள் முன் வணங்கி நமஸ்கரித்தாள்.  தன் தீராக் கவலையை சொல்லி  தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தாள்.  சித்தர் கை நிறைய அவளை அள்ளி ஏற்றுக் கொண்டு அவள் குறையை நிச்சயம் தீர்த்துவிட முடியுமென்று வாக்கு சொன்னாள்..

அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் அத்தையின் கணவர் வெளியூர் போகாமல் தங்க வேண்டுமென்றும் தான் கொடுக்கும் கருப்பு வில்லை களை கணவருக்குத் தெரியாமல் பாலில் கலந்து படுக்கப் போகும்முன் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.   இரண்டொரு மாதம் கழித்து வரச் சொன்னார்.

இரண்டு மாதம் சென்றது.    அத்தை  பெரிய பழத்தட்டில் பொன் காசு களுடன் வந்து சித்தரம்மாவை நமஸ்கரித்தாள். அவள் முகம் சந்தோ ஷத்தால் மலர்ந்திருந்தது.   சித்தரம்மா புரிந்துகொண்டார். ஆனால்இது ஆரம்பவெற்றி தான்...இனிமேல் தான் உன் தவமே தொடங்கப்போகிறது என்றார் சித்தரம்மா

சித்தரம்மா கடைப்பிடிக்க சொன்ன விரதங்கள் கடுமையாக இருந்தன. சில கசப்பான தழைகளைக் கொடுத்து அடிக்கடி தின்ன சொன்னாள். ஒரு மந்திரத்தை உபதேசித்து தினம்  ஆயிரத்தெட்டு முறை உச்சரிக்க சொன் னாள். மண் தரையில் சாப்பிடச் சொன் னாள். நள்ளிரவில் கிணற்றடியில் குளிக்கச் சொன்னாள். பகலில் ஒரு வினாடியும் கண்மூடாமல் பாராய ணங்கள் செய்யச் சொன் னாள்.

அத்தை மூர்க்கமாக இந்த கடமைகளை பின்பற்றிவந்தாள். தாய்மை என்கிற அந்தஸ்தை அடைவதற்கு அவள் எந்தக் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தாள்...அவள் நம்பிக்கை பழமாகத் திரண்டு வந்துகொண்டிருந்தது.

 குழந்தை பிறக்கும் நன்னாளில் அத்தை அதன் அப்பா ஊரிலிருக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினாள். ஆனால் அது சாத்தியப் படவில்லை. பர்மாவில் வியாபாரத்தில் ஒருபெரிய நெருக்கடி நேர  சமரசம் செய்து வைக்க செட்டியார் அத்தையின் கணவரை பர்மாவுக்கு அவசரமாக அனுப்பிவைத்தார்..  “குழந்தை பொறந்தாச்சுன்னு   தகவலனுப்பு..அடுத்த கப்பலிலேயே நான் ஓடி வந்துடறேன்.. என்று பிரியாவிடை பெற்றுக்கொண்டு அத்தையின் கணவர் புறப்பட்டுப் போனார்.

 “ஆமா... எங்கே..உடனே  தகவலனுப்பறது?....பர்மாவுக்கு கடுதாசி போய் சேர்றதுக்கே பத்து நாள் பிடிக்கிறது?....  அத்தை தனக்குள் முணு முணுத்துக் கொண்டாள்

குழந்தை ஒல்லியாக இருந்தாலும் அழகாக சிவப்பாகவே பிறந்தது. அது வும் அப்பாவைப் போலவே! அத்தைக்கு கர்வமும் பெருமிதமும் தாங்க முடியவில்லை. ...

எல்லோரும் குழந்தையை சூழ்ந்துகொண்டு தொட்டிலிட்டுப் பாடினார் கள். அத்தைக்கு மனசு முழுவதும் கணவரின் ஞாபகமாகவே இருந்தது.  தந்தித் தபாலில் இந்த நல்லசேதியை இரண்டு நாட்களுக்கு முன்பா கவே பர்மாவுக்கு அனுப்பியாகிவிட்டது....அது போய்ச் சேர குறைந் தது  இன்னுமிரண்டு மூன்று நாட்களாகும்.. சேதி கேட்டு அவர் அடுத்த கப்பலிலேயே புறப்பட்டுவந்தாலும் வந்துசேர இன்னும் மூன்றுநாட்கள்...  நாட்கள் நகரவே மறுத்தன. ஊரும் உறவுகளும் எத்தனை வந்து கொஞ்சி னாலும் அப்பா வந்து குழந்தையை வாஞ்சையோடு அணைத்து மகிழ் வதைப் பார்க்கும் போது தாய்க்குள் நிகழும் அந்த அற்புத இன்ப சிலிர்ப் புக்கு எது ஈடாகும்?

அத்தை இன்று காலை விடிந்ததிலிருந்தே வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிச்சயம் இன்று வந்து விடுவார் என்று ஊகம் தோன்றி யது. ஆனால் தந்திக்காரன் தான் முதலில் வந்தான்.. அத்தை தந்தியை வாங்கி  மேஜையில் வைத்தார்..எப்போதுமே அப்படித் தான் வழக்கம். இதை அவர் வந்து படித்துக்கொள்வார். அத்தைக்கு படிக்கவும் தெரியாது. மறுபடியும்  வாசல்திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.. மடியில் பிஞ்சுக் குழந்தை பிஞ்சுக் கைகளை ஆட்டி அசைத்துக் கொண் டிருந்தது...

 திடீரென்று  மோட்டார் கார் ஒன்று வந்து வாசலில் நின்றது. மோட்டார் காரின் முன் கதவைத் திறந்து செட்டியாரே வந்து இறங்கினார். அத்தை யைப் பார்த்தவுடன்  தலை குனிந்தவாறு வணங்கி வாயில் துண்டைப் புதைத்துக்கொண்டு விம்மினார். பின் கதவைத் திறந்து இரண்டு கூலிகள் நீளமான பெட்டி ஒன்றைத் தூக்கி வந்து திண்ணையில்   வைத்தார்கள்... அத்தை இந்த விபரீத மான நிகழ்வுகளைக்  கண்டு கலவரத்துடன் எழுந்துநின்றாள் அவளுக்கு ஓரளவு புரிந்த மாதிரி இருந்தது.....

 “அம்மா......எப்படி இந்த சமாசாரத்தை சொல்றதும்மா....ரொம்ப வேத னையா இருக்கு அம்மா...செட்டியார்  நெகிழ்ந்த குரலில் சொன்னார்.. அய்யாவுக்கு இப்படி திடீர்னு... நெஞ்சு வலி... வரும்னு எதிர்பாக்கலேம்மா.. நாங்களும் என்னன்னவோ சிகிச்சை செஞ்சு பாத் தோம் எதுவும் கை கொடுக்கலே.... தந்தியைப்  பாத்துட்டீங்களா?... என்னோட வியாபாரத்துக்கு பெரிய பலமே அய்யாவோட உழைப்புத் தான்...இப்படி  என்னை தவிக்க வுட்டுட்டு போய்ட்டாரும்மா... உங்களையும் இப்படி நிர்க்கதியா...... செட்டியார் மேலே பேச முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு கேவினார்.

கூலிகள் அழுதவாறு  பெட்டியை லேசாகத் திறந்தார்கள்.

அம்மா.....அய்யா முகத்தை பாருங்க அம்மா...

அத்தை பார்த்தவுடன் ஓவென்று அலறிவிட்டாள். குழந்தையைத் தரை யில் போட்டு விட்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு அரற்றி னாள்..

அலறல் கேட்டு அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஓடி வந்தார்கள்.

செட்டியார்  மீண்டும் அத்தையை  வணங்கி  அவள்  காலடியில் ஒரு தோல் பையை வைத்துவிட்டு பெட்டியைத் தொட்டு வணங்கிவிட்டு மெள்ளக் காரில்  ஏறிக் கொண்டார்.

 உறவினர்கள் அத்தையை சூழ்ந்துகொண்டு  மயக்கமாக சாய்ந்த அவளை மெள்ள தாங்கிப்பிடித்து உள்ளே கொண்டு போனார்கள். சில மூத்தவர் கள் ஆகவேண்டிய காரியங்களை பார்க்க கூடிப் பேசிக்கொண்டிருந்தார் கள். சிலர் சவப்பெட்டியை மெள்ள உள் கூடத்தில் தூக்கிப்போய் வைத் தார்கள். கத்திக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையை என் பெரிய அத்தை தூக்கிக்கொண்டுபோய் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். என் அத்தை யிடம்   வாஞ்சையுடன் இருந்த என் பெரியம்மா செட்டியார் வைத்து விட்டுப் போன தோல் பையை லேசாகத் திறந்து பார்த்தாள்.  சற்று நேரம் கண்களை நம்பமுடியாமல் திக்கென்று நெஞ்சு படபடத்து  வாயைப் பொத்திக் கொண்டாள். உடனே அவசரமாக பையை மூடி மிக பத்திரமாக அதை   மறைத்துக்கொண்டுபோய் அத்தையின் மரப்பெட்டியில் வைத்து பூட்டினாள். அதில் அத்தையின் ஆயுட் காலத்துக்குப் போதுமான பணமிருந்தது.



000
னக்கு  முதன் முதலில் நினைவு பதியும் போது அத்தை ஏற்கனவே இத்தகைய சோக அதிர்ச்சிகளில்  அடிபட்டுக் கடந்து வந்திருந்தாள். வாழ்க் கையின் ஒரே ஊன்றுகோலான தன்  மகன் கண்ணனின் பாசப் பிணைப் பினால் மட்டுமே உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாள். அவனைப் போர்த்திப் போர்த்தி போஷித்து வளர்த்தாள். அவனுக்கு எந்த சிறு வருத் தமும் இல்லாமல் பார்த்துப் பார்த்து அவன் ஆசைகளைப் பூர்த்திசெய் தாள்..

கண்ணனுக்கு  பதினாறு வயதாகி இருந்தது.  காத்திரமில்லாமல் சற்று மெலிந்தவனாக இளஞ்சோகை பிடித்தவனாகத்தான்  இருந்தான். அவன்   ஆசைப்பட்டபடி அத்தை அவனுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்திருந் தார்.  அக்காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அந்தஸ்துள்ளவர்கள்..!! பெண் கொடுப்பவர்கள்கூட மாப்பிள்ளை சைக்கிள் வைத்திருந்தால் பெரு மையாக நினைப்பார்கள்!! 
  
கண்ணன்  எப்போது வெளியில் போனாலும் சைக்கிளில் தான் போவான். அத்தை செலவுக்கு  தாராளமாக காசு கொடுத்து அனுப்புவார்.  அவன் பத்தாவது  படித்துக்கொண்டிருந்தான்.  அப்பொழுது   பத்தாவது  படிக்கும் மாணவர்கள் வழக்கமாக  பழகித் தேர்ச்சி பெறுவது  ஆங்கில தட்டச்சு பயிற்சி. கண்ணனும் அதைப் பயின்றுகொண்டிருந்தான். அன்றைய சூழ லில் தட்டச்சு தெரிந்தால் போதும்.உடனே வெள்ளைக்காரன் கம்பனியில் ஒரு வேலை கிடைத்து விடும்.

நேர்த்தியாக உடை அணிந்துகொண்டு கையில்  வெள்ளைக் காகிதச் சுருளுடன் சைக்கிளில் ஏறி  கண்ணன் தட்டச்சு வகுப்புக்கு போவதை தினமும் வாசலுக்கு வந்து பார்ப்பதில் அத்தைக்கு மிகப் பிரியம். அப்போது அவள்.  கண்களில்  ஈரமும் வாழ்க்கையில் நம்பிக்கையும் துளிர்க்கும்.

கண்ணனுக்கு  உடனடியாக கல்யாணம் செய்துவிடவேண்டுமென்று அத் தைக்கு  வேகம் வந்துவிட்டது. தன்  குலம் தழைக்கவேண்டும். அதுவும் தன் ஆயுள் முடிவதற்கு முன்பே பேரன் பேத்திகளைப் பார்க்க வேண் டும்   ....  அத்தைக்கு மனம் பரபரத்தது...

 கண்ணனுக்கு கல்யாணமாகும்போது அவனுக்கு பதினெட்டு வயதுதான். மனைவி பார்வதிக்கு பதினாலு. கல்யாணம் மிக விமரிசையாக சந்தோ ஷமாக நிறைவேறியது. அத்தையிடம் இருந்த செல்வமெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு செழிப்பை ஊட்டியது. கண்ணனுக்கு ஒரு  உத் யோகமும் கிடைத்து விட்டது.

அத்தை  ஏங்கி எதிர்பார்த்த மாதிரியே  கண்ணனுக்கு ஒரு செல்வி பிறந் தாள்.அத்தைக்கு  வாழ்க்கையில்எல்லாம் கிட்டிவிட்டது போல் இருந்தது .

பேத்தியை மடியில் கிடத்திக்கொண்டு மறந்துபோன  தாலாட்டுப் பாட்டுக ளையெல்லாம் பாடுவதில் அவள் பொழுது நிறைந்திருந்தது.  முருகா.. .எனக்கு இனி வேறென்ன  வேண்டும்.....இதோட கண்ணை மூடினாலே   போறுண்டா?“  இரவு படுக்கப்போகும் அவள் கொட்டாவியுடன் கலந்து வெளிப்படுவது இந்த வார்த்தைகள் தான்..

ஒருநாள் பலமாக புயலும் மழையுமாக ஊரெங்கும் அடித்தது. தெருவெங் கும் வெள்ளம். கண்ணன்  இன்னும் திரும்பவில்லை.  அத்தையும் பார்வதி யும் பதறிபோய்விட்டார்கள்.  அத்தை எல்லா தெய்வங்களையும் வேண் டிக்கொண்டு சித்தரம்மாவை எண்ணி ஜபித்துக்கொண்டு வாசல் திண் ணையிலேயே ராந்தலையும் குடையையும் வைத்துக்கொண்டு நள்ளிரவு வரை குத்திட்டு உட்கார்ந் திருந்தார்கள்.

கண்ணன்  வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான் மறுநாள் காலை அவனால் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. ஜுரம் நெருப்பாய் கொதித்தது

அத்தை தனக்கு மிகவும் அனுபவமான கஷாயத்தை காய்ச்சிக் குடிக்கச் கொடுத்தாள்.

 காய்ச்சல் சற்றுத் தணிந்தது போலிருந்தது.  ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை  மீண்டும் காய்ச்சல் திரும்ப வந்து கொண்டிருந்தது.  அத்தை தனக்குத் தெரிந்த கைவைத்தியங்களெல்லாம் செய்துபார்த்தார்.  ஜுரம் தணிய வில்லை. 

 எங்கள்தெருமுனையில் அப்போது ஒரு இங்கிலீஷ்மருத்துவர் டாக்டர்  ராஜன் வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார். அத்தை  அவரைக் கூட்டி வந்து காண்பித்தார். டாக்டர் ராஜன் நாடித் துடிப்பு நெஞ்சு  நாக்கு இவைக ளைப் பரிசோதித்துவிட்டு  ஒரு  ஊசி போட்டு விட்டு சிலமாத்திரைகளை கொடுத்தார்.

 இரண்டு நாட்களில் ஜுரம் தணிந்துவிடும்  இருந்தாலும் சில சோதனை கள் செய்யவேண்டும்  எனக்கு சொல்லி அனுப்புங்கோஎன்று சொல்லி விட்டுப்போனார்

இரண்டு நாளில் ஜுரம் தணியவில்லை.  அத்தைக்குத் தெரிந்த பக்கத்து வீடுகளிலிருந்த மாமிகள் வந்து பார்த்தார்கள்..

என் மனசுக்குப்பட்டதை சொல்றேன்....உனக்கு ஒரே பிள்ளை ராஜா வாட்டமிருக்கான்.. தெருவுலே மத்தவா மாதிரி உனக்கு எந்தக் கொறை யுமில்லே தரித்திரமில்லே....சுத்துவட்டாரக் கண்ணெல்லாம் ஒங் குடும் பத்து மேல தான்... நா  வரட்டுமா?...என்று ஒரு பாட்டி யாரையோ ஜாடை  காட்டிவிட்டுப் போனாள்..

அத்தைக்கு சுரீரென்றது.  பிள்ளைக்கும் குடும்பத்துக்கும் திருஷ்டி கழிக்க வேணுமென்று தீர்மானித்துக்கொண்டாள்..அவளுக்கு சித்தரம்மாவின் நினைவுதான் வந்தது

சித்தரம்மா  சற்று வயதானாலும் இப்போது மிகப் பிராபல்யமாய் இருந் தாள் இப்போது அவளைப் பார்ப்பதற்கு கூட இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.  ஆனால்,வசதியான அத்தையால் அவளை மறுநாளே வீட்டுக்கு அழைத்துவர முடிந்தது.

சித்தரம்மா கண்ணனை பரிசோதித்துப் பார்த்தாள்.  அவன் வலது கை வலிப்பதாக சொன்னான். கையைத் தூக்கிப் பார்த்தபோது அவன் அக்கு ளில் சிவப்பாக ஒரு கட்டி முளைத்திருந்தது.  டாக்டர் ராஜன் பார்த்த போது அது ஒருவேளை ஆரம்பநிலையிலிருந் திருக்கலாம்

சித்தரம்மா சற்றுநேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தாள். “ஊர்க்  கண்ணெல்லாம் அங்கேதான் ஒக்காந்திருக்கு... என் பக்கத்துலெ வா   அத்தையை பக்கத்தில் அழைத்து அவள் காதோடு எதையோ சொன் னாள். 

இன்னிக்குராத்திரிக்கே இதை  செஞ்சுடு..ரெண்டு  நாள்ளெ கட்டி ஒடைஞ் சுடும்....இதை யாருக்கும் சொல்லக் கூடாது.....சரியா......

 மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு அத்தையின் தலையில் கைவைத்து  ஏதோ ஜபித்துவிட்டு போய்விட்டாள்.

மறுநாள் ராத்திரி  கண்ணன் நிலைமை மிகவும் மோசமாகிவிட்ட்து. அரு கில் நெருங்கினாலே  அனல் சூடு பரபரத்தது. உடம்பு தூக்கிப்போட்டது.   அத்தை பாதி ராத்திரியில் எங்கள் வீட்டுக் கதவை இடித்தாள்.

 “சுந்தரம்..சுந்தரம்...சீக்கிரம் வா....கண்ணனுக்கு ரொம்பமுடியல... அந்த ராஜன் டாக்டரை வந்து பாக்க சொல்லலாம்...


என் அப்பா உடனே ராந்தலை எடுத்துக்கொண்டு டாகடர் ராஜனிடம் ஓடிப் போய்க் கதவைத் தட்டினார்...



இவ்வளவு  நாளா..என்ன  பண்ணிகிட்டிருந்தீங்க?“ என்று சத்தம் போட்டுக் கொண்டே அப்பாவுடன்  மருந்துப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு   வந்தார்.   டாக்டர்.

கண்ணனின் அறைக்குள் நுழைந்தபோது கண்ணன் படுக்கையில் புரண்டு புரண்டு அலறிக்கொண்டிருந்தான். அடிக்கடி விழி மேலே போய்க் கொண் டிருந்தது.  மார்பு எம்பி எம்பி விழுந்து கொண்டிருந்தது.

டாக்டர்  மேல் போர்வையை  அகற்றி கண்ணா...கண்ணா...என்று கூப்பிட் டவாறு அவன் கையைப் பிடிக்கப்போனார்.

பெரிதாக அவன் ஊளையிட்ட மாதிரி கத்தினான்.

 Oh  My  God  இதென்னா?  இதென்ன?“  கண்ணனின் வலது அக்குளில் பொட்டலம் மாதிரி ஒன்று இருந்ததைப் பார்த்துக் கையிலெடுத்தார்.

அழுகிய, ரத்தமும் நிணமும் வாடையும் கலந்த,வயிறு கிழிந்த தவளைக் குஞ்சு ஒன்று தொப்பென்று கீழே விழுந்தது..

 “அய்யய்யோ,   இதென்னா..?  இது  யாரு சொன்ன வைத்தியம்?... யாரு வைச்சது  இதை?....யாரு பண்ண  வேலை  இது? “

அப்பா அம்மா பார்வதி  நான்  எல்லோரும் அதிர்ச்சியுடன்  அத்தையைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.  

தலையைக் குனிந்துகொண்டு அத்தை வாயைப் பொத்திக்கொண்டு  பதறிக் கொண்டிருந்தாள்.பார்வதி உடனே விம்மிக்கொண்டே சொன்னாள். இரண்டு நாளைக்கு முன்னே சித்தரம்மா இங்கே  வந்துட்டுப் போனாங்க. ஏதோ சொன்னாங்க.. அத்தை என்னை உள்ளே விடலே.

அய்யோ, இதென்ன  முட்டாத்தனம்? இதை ஏன் எங்கிட்டே முன்னமே சொல்லலே?” எனக்கு ஏன்  சொல்லலே?டாக்டர் கத்தினார்

அந்த அம்மா...சொல்லக்கூடாதுன்னு சொன்னா..-அத்தை முணு முணுத் தாள்.

 தலையை இங்குமங்கும் ஆட்டிக்கொண்டிருந்த   கண்ணனிடமி ருந்து  ஹா..  என்ற சத்தம் வெளிவந்தது. அடுத்த கணம்  விழி மேலே குத்தி நின்றுபோய்விட்டது..

 “எல்லாம் முடிஞ்சுது. போச்சு.. அவ்வளவுதான்”,  மருந்துப்பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு டாக்டர் கோபமாக அறையை விட்டு வெளி யேறினார்.  போவதற்கு முன் திரும்பிவந்து   அத்தையைப் பார்த்துக் கை நீட்டிக் கத்தினார்....

ஒம்பிள்ளையை நீயே கொன்னுட்டே! .


000
தற்குப் பிறகு அங்கே நடந்த கோரக் காட்சியை முழுமையாக இங்கே விவரித்துவிட முடியாது. அஞ்சு வயசுக் குழந்தை நான்  அங்கு நடப்ப தைப் பார்த்து பயந்துவிடுவேனென்று என்னை எதிர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். சில வருஷங்களுக்குப் பிறகு அது எனக்குத் தெரியவந்தது.

 அத்தை தலையிலும் நெஞ்சிலுமாக அடித்துக்கொண்டு தரையில்  வாச லுக்கும் கொல்லைக்குமாக புரண்டு புரண்டு அழுதிருக்கிறாள்

எதிர்பட்ட சுவர்களிலும் தூண்களிலும் தலையை மோதி மோதி இடித்துக் கொண்டிருக்கிறாள் தொண்டை நரம்பு கிழியும்படி அலறி பாவி.... பாவி என்று கூச்சலிட்டிருக்கிறாள்

ஒரு பத்து நாள் வரை இரவு பகலாக  அடங்கி அடங்கி குமுறிக் குமுறி அழுது  புலம்பிக்கொண்டே இருந்திருக்கிறாள்.. சுத்தமாக ஆகாரம் தண்ணீ ரில்லாமல் கிடந்திருக்கிறாள்

அதற்குப்பிறகு சிலநாட்களே அவள் உயிரோடு இருந்திருக்கிறாள்.   அவள் புத்தி கலங்கிப் போயிருந்தது....சுற்றிலும் நடந்தது பற்றிய சுரணை எதுவுமே அவளுக்கு இல்லாமல்போய்விட்டது.

பொட்டில்லாமல் வெள்ளைப்புடவை கட்டிக்கொண்டு குழந்தையோடு அவளுக்கு முன்  நின்ற பதினேழு வயதுப் பார்வதியைக் கூட அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.




000