ஐந்து கவிதைகள்
- வைதீஸ்வரன் -
வினை
பூக்கடை
மார்க்கட்டுக்குள்
பல
நீளமாய்க் கை நீட்டும்
வண்ணத்
தோரண வாசனைகள்...
ஆவலாதியுடன்..........
அடியில்
நயவஞ்சகம் போல்
மெல்லக்
கடக்கும்
சாக்கடை
நீர்.
_________________________________________________________________________
----------
அவன்
சந்தோஷமாக நின்று
பேசிக்
கொண்டிருந்தான்....
கால்
கட்டை விரலுக்கடியில்
துடித்துக் கொண்டிருந்த
சிற்றெரும்பை
அறியாதவனாய்!.........
_____________________________________________________________________________________
அன்புக்கும்
வெளி உண்டு
….....எழுந்தவுடன்....
அதுவும் பறக்க
ஆரம்பித்து விட்டது.
என்றது போல!
சின்ன வண்ணப்
பூச்சி.
Good Morning “ என்றேன்....
ரொம்பத் தெரிந்தவன்
போல்.
சிறகால்
சிரிக்கிறது.
நகர நகர எனக்கு
ஆசைகாட்டி
காற்றில்
நடைபாவாடை விரிக்கிறது!
அன்பு மீறும்
போது
என் கைகள்
நீண்டு போகுமென்று
அதற்கு எப்படியோ
தெரிகிறது...
இடைவெளியை
எப்போதும்
குறைத்துக்
கொள்வதில்லை!
_________________________________________________________________________
எல்லோரும்
ஓரினம்
வெள்ளை
முகிலெனக்
குட்டிப்
பூனை.....
மூன்று
நாள் முட்டைக் கண்கள்
வயிற்றருகில்
வளைத்துப்
பாசமுடன்
நாத்தடவும்
பழுப்புத்
தாய்
ஆவலால்
முகிலைத்
தொட்டுத்
தடவ நீளும்
என்
விரலை சீறிப் பிறாண்டி
விரட்டுது
எப்போதும்....
காவல்
படைபோல் அப்பூனை
பார்த்து
ஏங்குவது தவிர
ஸ்பரிஸம்
சாத்தியமில்லை எனக்கு
நாட்கள்
கடந்து போகிறது
மதில்
மேல் இன்று
பூனைகள்
…..... தாயும்....மகளுமா!!......
திடீரென்று
பாய்ந்து சிறுசைக்
கடித்து
துரத்துகிறது
பெரிசு.
நிழலைக்
கூட வெறுக்கும்
கொதிப்புடன்!!
இப்படி
துவேஷமா தாய்க்குள்!
விவரம்
தெரிந்த பிறகு
விரட்டி
விடும் ஜாதிகளில்
இந்தப்
பூனைகளையும்
சேர்த்துக்
கொள்ளலாம். போல!
_________________________________________________________________________
பரிவர்த்தனை
நண்பனை பார்த்த போது
நண்பனை பார்க்கவில்லை....
அவனிடமிருந்து சிரிப்பை
வாங்கிக் கொள்ளத் தான் ஆதங்கப்பட்டேன்.
அவன் குழந்தையைக் கொடுத்தான்.
நான் அழுகையை வாங்கிக் கொண்டேன்....
அரைக் கணம் அவஸ்தைக்குப் பின்..
நான் திரும்பக் கொடுத்தேன்.
அவன் சிரிப்பை வாங்கிக் கொண்டான்!
_________________________________________________________________________