vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, November 26, 2014

உறக்கத்துக்குள் ஒரு உறுத்தல்

  உறக்கத்துக்குள் ஒரு உறுத்தல்

_ வைதீஸ்வரன் கனவுகள்  மீது  நமக்கு  கட்டுப்பாடே  இல்லை.  கனவுகளை  முன்கூட்டியே  தீர்மானிக்க  முடிவதில்லை. 
அது  பலமயம்  சங்கடமாக  இருக்கிறது. 

கனவுகளுக்கு  பலன்கள்  வேறு சொல்லித் தொலைக்கிறார் கள்.....புதுமைப்பித்தன் பிசாசுகளைப் பற்றி  சொன்னதைப் போல் நம்மால் கனவுகளை  நம்பா மல்  இருக்க  முயன்றாலும்  ஏதோ சலனப் படுத்திவிடுகிறது.. 

எப்படி இந்த  மாதிரி  சம்பவங்களெல்லாம்  இந்த  மாதிரி
முகங்களெல்லாம்  நமக்குள்  தோன்றி  மயக்குகிறதென்று புதிராக  இருக்கிறது...

இதற்கெல்லாம்  ஒரு  சூசகமான  அர்த்தம்  இருக்கக் கூடுமா?  

அதுவும்  கடந்த  சில  நாட்களாக  எனக்கு  கனவுகளில்  சாதாரண  மனிதர்கள்  வருவதில்லை...


எல்லாம்  பெரிய  பெரிய  ஞானிகள்  பெரிய பெரிய அரசியல் வாதிகள்  நடிகர்கள்....என்  சராசரி  வாழ்க்கையில்  அண்டவே     முடியாத  ஆளுமைகள்....இவர்கள்  ஏன்  வருகிறார்கள்  என்று  தெரிவதில்லை. 

இவர்கள்  கனவில் வந்ததால்  எனக்கு  என்ன  பலன்  நேரப் போகிறதோ..... ஏதாவது நேரக்  கூடுமோ  என்று  குழப்ப மாகவும்  இருக்கிறது.

இப்படித்  தான்  போன  செவ்வாய்க்கிழமை  நள்ளிரவில்  ஏசு நாதர்  வந்தார்.  நான்  திடுக்கிட்டு நின்றேன். எனக்கு  மண்டி யிட்டு  வழக்கமும் இல்லை. பேசாமல்  பார்த்துக்கொண்டு நின்றேன். ”ஒரு  நடை  போகலாமா?”  என்று  கேட்டார். 

நான்  தயங்கினேன்.

“தயவு செய்து  வாருங்கள்.  பேசிக் கொண்டே  போகலாம்.” என்றார்.

நான்  தயக்கமுடன்  நடக்க ஆரம்பித்தேன். 

“நீங்கள்  முதலில் செல்லுங்கள் உங்கள்  பின்னால் நடந்து வருகிறேன்,”  என்றார்.

”எனக்குப்பின்னால்  நீங்களா?”  என்றேன். 

”ஆமாம்..அதனாலென்ன?  இதற்கெல்லாம்  பெரிய உள்ளர்த்தமே  இல்லை.”  என்றார்.

நான்  குறுகிப் போய்புரண்டு  படுத்தேன்......

மறைந்துபோய்விட்டார்.

மறு  வெள்ளிக்க்கிழமை  சங்கராச்சாரியார்.....வந்தார். மிக  சகஜமாக.....

சற்று  விடிகாலை  நேரமாக  இருந்தது... 

அவர் குளக்கரையில் 
என்னோடு  உட்கார்ந்து
கொண்டு தோள்    தட்டி அன்புடன் தன்  தம்பி 
யைப்  போல்  
“என்ன சௌக்கியமா? 
என்றார். 

 நான்  விலகி நின்று  
கைகட்டிக்  கொள்ள  முயன்றேன்.

அவர்  என்னை அருகில் உட்கார்த்தி வைத் துக் 
கொண்டு ஏதோ  பேசிக் கொண்டிருந்தார். 

கொஞ்சங்கூட  ஆன்மீக விஷயமாக  இல்லாமல்  எல்லாம்     லௌகீகமாகவே  இருந்தது...

”வீட்டில்  பவர்கட்  எப்படி?...கொசுத்  தொந்தரவு  இருக்கிறதா?  ஆட்டோக்காராசிலபேர்  நல்லவாளாவும்  இருப்பா...”  என்று  பேசுகிறார்...

எனக்கு மிகவும்  திகைப்பாக  இருந்தது.  அவருக்கு நமஸ்காரம் கூடப் பண்ண முடியவில்லை,  அதற்குள்  கண் விழித்துக் கொண்டேன்..

இவர்  எப்படி கனவில் தோன்றினார்...

கனவில்  வந்து என் உபாதைகளுக்கு விடிவுசொல்லியிருந்தால் கூட  நன்றாக  இருக்கும்  அதுவும் இல்லை..

ஒரு  திங்கட்கிழமை  என்று  நினைக்கிறேன்  விடிந்தும்  தூங்கிக்  கொண்டிருந்தேன்.....இல்லை  கனவு  கண்டு கொண்டிருந்தேன்..

அப்போது  தான்  புத்தர்  வந்தார்...”புத்தர்  இன்னும் எத்தனை யுகங்கள்  மனித ரூபத்தில்  வந்து கொண்டிருப்பார் என்று என்று  வியப்பாக  இருந்தது. 
ஒரு வேளை மனித வடிவத்தைத்  துறந்து பஞ்ச பூதங்களாக மாறவில்லையோ பூரணமுக்தியடையாத  நிலையில்  இருக்கிறாரோ’ என்று  ஆச்சரியமாக  இருந்தது. அவருக்கு  என்னிடம்  பேச  என்ன இருக் கிறதென்று  தெரியவில்லை. 

ஊரை பற்றி  உலகத்தைப் பற்றியும்  எதுவும்  அவரால் சந்தோ மாக  நம்பிக்கையாக  எதையாவது  சொல்லக் கூடுமா  தெரிய வில்லை... ..

நான்  நினைத்தது  சரியாகத்  தான்  போய்விட்டது.. அவர்  என் தோளைப்  பிடித்துக் கொண்டு  சற்று  அழுதார்.. 

நான்  சமாதானப்படுத்த  முயன்றேன்  எனக்குத்  துணிச்சலாகவும்  இருந்தது...

“நாங்கள்  நன்றாக  இருக்கிறோம்  அய்யா..  வருத்தப்படாதீர் கள்...ஆறுதலாக  அமைதியாக  இருங்கள்.....எல்லாம்  சரியாகி விடும்.  நாங்கள்  துக்கத்துடன் சந்தோஷமாகத் தான் இருக்கி றோம்..” என்று சொன்னேன்.

அவருக்கு  கனவை  விட்டுப்  போக  மனமே  இல்லை.”துக்கம்  தான் வாழ்க்கை”என்று  சொல்லிவிட்டு மறைந்து  போனார்.
 நான்  மிகுந்த  துக்கத்துடன்  அவரை  போகச்  சொல்லிவிட்டு     தூங்க  முயன்றபோது விழித்துக் கொண்டு விட்டேன்.

எனக்கு  இவர்களெல்லாம் என்  கனவில்  ஏன்  இடம்  பிடிக் கிறார்கள்  என்று    குழப்பமாகவும்  இதற்கெல்லாம் அர்த்தம் விளங்காமலும் இருந்தது.

ஆனால், அடுத்தடுத்த கனவுகளில் வந்த ஆளுமைகள்  என்னை ஆட்டி  அலைக்கழித்து விட்டன!

ஏதோ  ஊர்வலத்தில்  போய்க் கொண்டிருந்த  கலைஞர் கருணா நிதி    எங்கோ  தெருவோரத்தில் நின்று  கொண்டிருந்த என்னைப் இறங்கி வந்து  சிரித்து பேச  ஆரம்பித்து விட்டார்.


என்னை  உங்களுக்கு தெரியாதய்யா!” என்கிறேன்.

“இல்லை  இல்லை  தெரியும்  எத்தனையோ  வருஷங்களுக்கு முன்  பார்த்தாலும்  எனக்கென்ன  மறந்தா  போய் விடும்.  பத்திரிகை  ஆபீஸில்  பார்த்திருக்கிறேன்.. பேசி இருக்கிறேன்... நீ  தான்  என்னை  மறந்துட்டே!”  என்கிறார்.

 அவர்  மீண்டும்  என்னை ஏன் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்  என்று  புரியவில்லை. 

 ஊர்வலம்  எங்கள்  சந்திப்பினால் நின்றுபோய்விடுகிறது.

நான்  மிகவும் சங்கடப்பட்டு  விலகி நகர்ந்து  கூட்டத்தோடு போக  பிரயத்தனப் படுகிறேன்.

அவர் மேலும் ஏதோ பேசிக்  கொண்டிருக்கிறார். எனக்குத்தான் விளங்கவில்லை.

வெகுதூரம்  நகர்ந்து  போய்  மெதுவாக திரும்பிப்  பார்க்கிறேன்.

அவர்  இன்னும் தெரிந்து கொண்டு தான்  இருக்கிறார்…

’என்ன  இப்படி  சம்பந்தமில்லாத  ஒரு  கனவு’  என்று  அலுத்துக்  கொண்டே  எழுந்துகொண்டிருக்கிறேன்.

வர  வர  தூங்குவதற்கே  பயமாக  இருக்கிறது….

இருந்தாலும் முடியவில்லை  ஏதோ பலஹீனத் தில் நேற்று அயர்ந்து  தூங்கி விட்டேன்.

“அய்யொ..இதென்ன...” ரஜினீகாந்த்....ரஜினீகாந்தா இது…


என்னைக்  கை குலுக்கி  அழைத்துக்  கொண்டு  வேகமாக  இங்கு மங்கும்  நடக்கிறார்.

அவர்  நடை எப்போதுமே எதையோ உதைத்து  விரட்டிக் கொண்டு  போவது போலவே  இருக்கும்..

அவர்  மாதிரி  என்னால்  நடக்க  முடியவில்லை.

தடுமாறித்  தொங்கிக்கொண்டு இழுபட்டபடியே பின்னால் போகிறேன். 

அவரோ  அவர் வழக்கமான  சிரிப்புடன்  திரும்பி  நிற்கிறார்.. 

“வாங்க  பேசிக்கிட்டே  போகலாம்..ச்சும்மா...பல  விஷயத்தைப் பத்திப்  பேசறதை  நான்  Like பண்ணறதில்லே...இருந்தாலும்  சிலவிஷயத்தை பலவிதமா பேசினாலே  interest ங்கா இருக்கும்…. பெரியவங்க  எளுதறதெல்லாம்  நான்  படிக்கிற  அறிவு  இருக்கறதா...  எனக்குத்  தெரியலே..ஆனா....ஒரு  பார்வை  ஒரு  look    ஒரு  சின்ன வார்த்தை போதும் அதுலெ புரிஞ்சு  போவுது.. தெரியுது..... அது  தான்    த்ருஷ்டி...அருளு....  ஹா..ஹ..ஹா....வாங்க, டீ சாப்பி
டலாம்..”  என்று எங்கோ அழைத்துக்  கொண்டு  போகிறார்.

எப்படி  அத்தனை  மக்கள் கூட்டத்துக்கு மத்தியில்  தெருவில் தொந்தரவில்லாமல்  ரஜினியும்  நானும்  போய்க்  கொண்டிருக்கிறோம்..  நம்பவே  முடியவில்லை... அப்படி மக்கள் கவனிப்பில் லாமல்  நடப்பது  ஒன்றும் எனக்கு எந்த ஒரு  பெரிய வித்யாசமோ பாதிப்போ  இல்லை.. ஒரு  பெரிய  விஷயமே  இல்லை....ஆனால் அவரால்  எப்படி  இந்த மாதிரி நிலைமையை  சகஜமாக  எடுத் துக் கொள்ள  முடியும்? …

குழப்பமாக  இருக்கிறது.... கனவுகளே இல்லாமல் தூங்க வேண் டுமென்று  இப்போது  கடவுளைப் பிரார்த்தித்துக்  கொள்ளு கிறேன்...அடுத்தது  கடவுளே கனவில்  வந்து விடுவாரோ!!மனச்  சிக்கல்  மலச்சிக்கல்  இல்லாமல்  இருந்தால்  கனவுகள் வராதென்று  எங்கோ படித்திருக்கிறேன்  அது  இரண்டும் சாத்தி யமேயில்லை  என்னைப்  போன்றவர்  வாழ்க்கையில் .

இனிமேல் கனவுகள் கண்டாலும் அதை  வெளியே சொல்லுவதி ல்லை  என்று  தீர்மானித்துக் கொண்டேன்  அது  தான் மற்றவர் களுக்கு  பெரிய  ஆறுதலாக  இருக்கும்....என்று தோன்றுகிறது.

                     

No comments:

Post a Comment