vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, June 28, 2015

என் அம்மாவின் காப்பிப் பாட்டு

         
                என்  அம்மாவின்  காப்பிப்  பாட்டு  

வைதீஸ்வரன்
------------இந்த    “காப்பி ”  குடிக்கும் வழக்கம்  நமக்கு  எப்போது  தொத்திக்  கொண்டது?   இந்த  வழக்கத்தை   நம்  கலாசாரத்தோடு  கலந்து  கரைத்தது   வெள்ளைக் காரர்கள்தான்  என்று  தெரிகிறது.   எனக்குத் தெரிந்தவரை  1920க்கு  மேல்  தான்  பிராமணக் குடும்பங்களின்  சமையலறைக் குள்   இந்தக்  காப்பி பானம்  சகஜமாக  புகுந்திருக்கலாம்.

1916ல்  கல்யாணம்  செய்து  கொண்டு புகுந்த  வீட்டுக்கு  வந்தபோது  குடும்பத் தில்   புருஷர்கள்  மட்டும்  தான்  காப்பி   குடிக்க  அனுமதிக்கப் படுவார்கள்  என்று  என்  தாயார்  சொல்லக்  கேட்டிருக்கிறேன் .

பிறகு  இந்த  பானத்தின்  ஆதிக்கம்  மெள்ள  மெள்ள   பொதுவான  காலைப்  பழக்கமாக  மாறி  பிராமணக் குடும்பத்தைத்  தாண்டி  சமூகத்தின்  பிற  ஜாதி  வட்டங்களிலும்   இன்றியமையாத  பானமாக நிலைத்து  விட்டது.
..
1920க்கு முன்பு .. காப்பி குடிப்பது  ஆசாரத்துக்கு அவ்வளவு பொருத்தமான விஷயமாக   ஒப்புக்கொள்ளப் படவில்லை. மேலும் அது வெள்ளைக்காரனின்   நாகரீகம் என்ற அன்னியத்வேஷமும்   நிலவி வந்திருக்கக்  கூடும்.. ..

ஐம்பதுகளில்  வெளிவந்த  ஒரு  சினிமாவில்  கூட   என்.எஸ்.கிருஷ்ணன்  பகட்டான  வாழ்க்கையை  கேலி  செய்து  பாடுகிற பாட்டில்  “ அவ  கார்லெ  போவா.... ஊரைச்  சுத்துவா...கண்ணாடி  பாப்பா...காபீ  குடிப்பா.....”  என்று  இளக்காரமாக  பாடுவார். கஞ்சி  குடிப்பது  தான் நமது கலாச்சாரப் பண்பு...என்று  சொல்லுவார்.

ஆனால் சூடான காப்பியின்  விறுவிறுப்பு  உள்ளே போனபோது அது இந்த   சம்பிரதாய தயக்கங்களை மீறிக்கொண்டு நாக்கையும் மனதையும்   வளைத் துப் போட்டு விட்டது. முக்கியமாக சங்கீதக்காரர்களும்  கலைஞர்களும்  இதை சோமபானமாகவே’’ பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் ..கர்நாடக சங்கீதத்துக்கும்  காப்பிக்கும்  ஏதோ ஒரு அபாரமான  பொருத்தம்..  மெள்ள மெள்ள காப்பியின் இந்த ஆக்ரமிப்பு  இந்தியக்  குடும்பங்களில் இன்றிய மையாத  ஒரு கலாசார அடையாளமாகவே  மாறிவிட்டது.

 ஒரு சுமுகமான வரவேற்புக்கு  காப்பி ஒரு அவசியமான ஆரம்பமாக ஆகி  விட்டது...

வீடு  தேடிப்  போன  போது  ஒரு  வாய்க்  காப்பி  கூடவா  கொடுக் கலே... அந்தக்  கடங்காரி..”  என்ற  வசனத்தை  நாம்  கேட்டிருக்கிறோம்.

இந்த காப்பி பானத்தின் அன்னியத்தன்மையை பின்னுக்குத்  தள்ளி  நம் கலாசாரத்தோடு சகஜமாக  ஒட்டவைக்கும் முயற்சி அந்தக்  காலத்தில்  பரவலாக  இருந்திருக்கும்போல்  தெரிகிறது..

அதற்கு  ஆதரவாக  அந்தக் காலத்தில்  யாரோ ஒருகாப்பி வெறித் தாத்தாஒரு பாட்டு எழுதி  எல்லோரையும்  பாடச்  சொல்லி  சமூகத்தின்  உளவி யலை பாதித் திருக்கிறார்..

 கீழ்க்காணும்காப்பி  பாட்டை “  என்  அம்மா தான்  சிறு வயதில் கேட்ட  பாட்டை  தன்  90  வயதில் எனக்கு  பாடிக்காட்டினாள்அதை  உடனே  எழுதிக்கொண்டேன். “அந்தக் காலத்துலே  எல்லாரும் பாடுவா. கல்யாணத் துலே  கூட  பாடுவா... கேலியும்  சிரிப்புமா  இருக்கும்..  ஆனா  வார்த்தை  கொஞ்சம்  விட்டுப் போயிடுத்து...”  என்றாள்..
  

                   *****

       காப்பீ குடிக்க வேணும் ஜனங்களெல்லாம்
       க்ருஷ்ணனை ஸ்மரிக்க வேணும் ஜனங்களெல்லாம்
       காசு பணம் செலவில்லை ஜனங்களுக்கு
       கடன் காரன் தொல்லையில்லை ஜனங்களுக்கு

       *க்ளப்புக்கு போகவேண்டாம் ஜனங்களெல்லாம்
காபி  வீட்டில்  அனுமதியில்லை...க்ளப்புக்குப்  போக வேண்டியிருந்தது ..என்கிற   சூழ்நிலை  தெரிகிறது..}

       ஜப்திவாரண்டு இல்லை இல்லை ஜனங்களுக்கு

     [அடுத்த சில வரிகள் தெளிவாக இல்லை }
  [விருத்தம் ]

        உத்தரத்து  உரியிலேருந்து  பாலெடுத்து
        ஆசையெனும் பாத்திரத்தில் பொடியைக்கொட்டி
        பாசமுள்ள வஸ்திரத்தில் வடியக் கட்டி
        நேசமுடன் சூடு பண்ணிய  திக்குக்   காப்பி
        திக்குத்  திக்கான  காபி.....]
              **

       தருமர் சாப்பிட்ட தரமான காப்பி
       அர்ஜுனன் சாப்பிட்ட அசலான காப்பி
       பீமன் சாப்பிட்ட பேஷான காப்பி
       நகுலன் சாப்பிட்ட சூடான காப்பீ
      சகதேவன் சாப்பிட்ட ஸ்ட்ராங்கான காப்பீ

       எல்லாரும் சாப்பிடுங்கோ..
       தேவாளும்  தேடி வருவா!!!

                 
             ******

       [வேதாந்தப் பாட்டு   எஸ். வி கிருஷ்ணம்மாள்]
      


    


No comments:

Post a Comment