ஒரு கொத்துப் புல்
-நூல் அறிமுகம் -
- கே.எஸ்.சுதாகர் -
`வித்யுத்’ பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும், வைதீஸ்வரன் அவர்கள் எழுதிய `ஒரு கொத்துப்
புல்’ சிறுகதைத்தொகுப்பை இன்று தான் படிப்பதற்கு வாய்த்தது.
அவரே கீறிய அட்டைப்படம் அசத்தல். பின் அட்டைப்படம் கம்பீரம்.
முதல் கதை மட்டுமல்ல, தொகுப்பின் பல கதைகள் `வாழ்க்கையின் தீராத பற்றை’த் தான்
சொல்கின்றன. அதனால் தான் தொகுப்பிற்கு `ஒரு கொத்துப் புல்’ என்று பெயரை வைத்திருக்கின்றார்
போல் தெரிகின்றது. `ஒரு கொத்துப் புல்’ கேதார்நாத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசையைத்
தூண்டி நிற்கின்றது. ஆசிரியர் கண்ட தரிசனங்களைப் பார்த்துவிட என் மனதும் துடிக்கின்றது.
குட்டிக்குதிரை என்று ஆசிரியர் குறிப்பிடுவது கோவேறு கழுதையைத்தான் என நினைக்கின்றேன்.
நமக்கெல்லாம் அந்தப்பயணம் ஒரு முறையோ இரண்டு முறையோ தான் வாய்க்கும். ஆனால் அந்தக்
குட்டிக்குதிரைகளுக்கு தினமுமல்லவா? `ஒரு கொத்துப் புல்’ எங்கே கதையில் வரவில்லையே
என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, முடிவாக வந்து மனதைப் பதற வைத்தது.
தொகுப்பில் `ஒரு கொத்துப் புல்’, `பயணத்தில் தவறிய முகம்’, `ஓவியங்களுக்கு இடையில்
ஒரு காட்சி’ என்பவை எனக்கு மிக மிகப் பிடித்தமானவை. அற்புதமான கதைகள் இவை.
`பாலைவனமும் ஒரு பட்டி தொட்டித்தான்’ கதை சிறுகதைக்குரிய தன்மையை இழந்து காணப்படுவது
போல எனக்கிருந்தது.
எழுத்து பத்திரிகையில் வந்த வைதீஸ்வரனின் முதல் கவிதையை இன்றுதான் படிக்க சந்தர்ப்பம்
கிடைத்தது. `கிணற்றில் விழுந்த நிலவு’ – அதுவே `குவியம்’ அமைப்பினர் இயக்கிய வைதீஸ்வரன்
பற்றிய ஆவணப்படத்தின் தலைப்பும் ஆகியது.
`தோன்றியது’, `பெயர்’, `கல்லை எறிந்தவன்’, `ஆபத்சகாயம்’ நல்ல படிப்பினைக் கதைகள்.
`ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி’ – அவுஸ்திரேலியா, கன்பராவில் பார்த்த ஓவியக்
கண்காட்சி, `ஓவியரின்’ பார்வையில் நல்லதொரு கதையாகப் பரிணமித்திருக்கின்றது. Paul
Gaugin என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளைப் பேசி நிற்கும் கதை. ரசிகனுக்கும்
ஓவியனுக்கும் இடையேயான வேறுபாட்டைச் சுவைபடச் சொல்கிறது.
வைதீஸ்வரனின் பிறப்பும் (`அது ஒரு அந்தநாள்’), இளமைக்காலத்துச் சம்பவங்களும்
(ஜன்னல் கச்சேரி, கசங்கிய காகிதம்) கதைகளாகி வாசித்து வியந்து நிற்கின்றேன். பாவம்
அவர் நண்பரின் வாழ்வு கசங்கிய காகிதமாகிவிட்டது. இதே மாதிரியான சம்பவமொன்று எனக்கும்
பல்கலைக்கழகத்தில் நேர்ந்திருக்கின்றது. விரிவுரையாளராகவிருந்த என் நண்பன் ஒருவனின்
தற்கொலை இன்னமும் மனதிற்குள் நெருடிக்கொண்டிருக்கின்றது.
வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களில் சிலர் `இப்படியுமா?’ என அதிர்ச்சி கொள்ள
வைக்கின்றது `ஒரு பறவையின் நினைவு’.
`இருட்டுக்குள் கதறியவன்’ நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத கதை. சிரித்துச் சிரித்து
வயிறு புண்ணாகிவிட்டது.
26 கதைகளும் வெவ்வேறான வாசிப்பு அனுபவத்தைத் தந்தன. எல்லாமே யதார்த்தமான கதைகள்.
அவற்றுள் பல கதைகள் புதிய தரிசனத்தைத் தந்தன. ஏற்கனவே சொல்லப்பட்ட வர்ணனைகள் என்றில்லாமல்,
புதிது புதிதான வர்ணனைகளைத் தந்துகொண்டே இருக்கின்றார் ஆசிரியர். சில கதைகள் `ஓ ஹென்றி’ப்
பாணியில் எதிர்பாராத முடிவுகளைத் தந்து திகைக்கவும் வைத்தன.
முன்னுரையில் வெங்கடேஷ் அவர்கள் குறிப்பிடுவது போல – ஒரு கவிமனம், புனைகதை எழுதினால்
என்னவெல்லாம் மாயம் செய்யுமோ, அவை அத்தனையும் இக்கதைகளுக்குள் பொதிந்திருக்கின்றன - சத்தியமான உண்மை
மேலும் படைப்புகள் தந்திட வாழ்த்துகள்.
Vidyuth Publications, Chennai, India.
Phone : 044 – 22654210 / Cell :
9003107654
Email : vidyuthpublications@gmail.com
_________________________________________________________________________
No comments:
Post a Comment