எறும்பும் நிழலும்
- வைதீஸ்வரன்-
நான் அந்த எறும்புக்குள் எப்போது நுழைந்தேன்?
என் உடம்புக்குள் வாழ்க்கை ஓயாமல் பரபரக்கிறது. உயிரைப் பற்றிய பயங்கள் ஆயிரம் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தினால் நான் அன்றாடம் உயிர்வாழ முடியாது.
எனக்குத் தூக்கமில்லை. ஆயுள் முழுதும் பரபரத்துக் கொண்டே இருப்பது தான் எனக்கு வாழ்க்கை,
ஆனால் ஒரு சாபமாக இந்த நிழல் ஏன் என்னை ஒட்டிக் கொள்ளுகிறது?
இரவில் சற்று நேரம் தொலைந்து போகும் இந்த நிழல் பகலில் நான் பெற்றெடுத்த குறைப் பிரசவம் போல் என்னைத் துரத்திக் கொண்டே அலைகிறது? நான் கடித்துக் குதற முடியாத ஒரு குட்டிப் பேயாக பீடித்துக் கொண்டு தொடர்கிறது.
இந்தக் கருப்புப் படையிலிருந்து நான் விட்டு விடுதலையாவது எப்போது?
நான் தரையெல்லாம் சத்தமற்ற ஓலத்துடன் நாளெல்லாம் அலைகிறேன். என் மௌன ஓலம் அந்த தெய்வத்துக்கு கேட்பதில்லையோ
என்னவோ?
நின்று மௌனமாக மூச்சற்று எனக்குள் மூழ்கி விடை தேடி விசாரத்தில் மெய்மறந்து நிற்கிறேன். பளிச்சென்று ஒரு மின்னலடித்தது.
"நானற்றுப் போய் விடு ...நிழலற்றுப் போவாய்!".
"நானற்றுப் போவதா? எவ்வாறு? "
"சாத்தியமுண்டு. ஆனால் உன்னுடைய பிறவியில் அது இயலாத காரியம். அதற்கு முன் நீ இறக்க நேரிடலாம். நிழலையும் நீயாக பாவித்து அரவணைத்துக் கொள். அது தான் உன் இயல்புக்கு இடம் கொடுக்கும் ஒரு பாவனை!. பேதங்கள் பார்ப்பது அறியாமையென்று அறிந்து கொள்.
வாழ்க்கை பிறகு சகஜமாகும். துயரற்ற வாழ்க்கையும் ஒரு வகையில் சாபமே! என்று புரிந்து கொள்! " என்றது ஒரு குரல்
நான் எறும்பை விட்டு புத்துயிர் பெற்றவனாக எப்போது வந்தேன் என்று எனக்கு நினைவில்லை.
__________________________________________________