vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, August 14, 2012


க்ளாவரின்
  இரண்டு பக்கம்
                     ----------------------------------------- வைதீஸ்வரன்.

எனக்கு ஐந்துவயதானபோது நான் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேரவில்லை. வீட்டுக்கு எதிராகவே இருந்த  “கூடத்துப்”  பள்ளிக்  கூடத்தில்  சேர்த்துவிட்டார் என் அப்பா.  அது உண்மையில் பள்ளிக் கூடம்  இல்லை. ஒரு  ஓட்டு வீட்டின் முன் தாழ்வாரத்து  மண்தரை யில் நீளப் பலகையைப் போட்டு எங்களை உட்கார வைத்து  எதிரே ஒரு  குச்சு நாற்காலியும் ஒரு  காலொடிந்த மேஜையும்போட்டுக் கொண்டு  ஆசிரியர்  உட்கார்ந்திருப்பார். அவருக்குப்  பின்னால் கரியை அரைத் துப்  பூசிய ஒரு நீளமான கரும் பலகை  சுவற்றில் ஏதோ ஒரு கோணத் தில் சாய்ந்து கொண்டி ருக்கும்.

எங்கள்  வாத்தியார் குள்ளம்.  ஒல்லியாக நெற்றியில் மெல்லிய நாமம்போட்டுக்கொண்டு   இருப்பார். குரல்பெண்ணைப் போல்   இருக்கும். வகுப்புக்கு வந்தவுடன்  எங்களை கடவுள் வணக்கம் பாடச்சொல்லி விட்டு  கரும்பலகையில்  ஒண்ணாம் வாய்ப்பாடு எழுதுவார். அவர் எப்போதும்  கணக்கு வாய்ப்பாடு தான் எழுதி  யதால் அவர் கணக்கு வாத்தியார் என்று தான்  இப்போது ஞாபகம்.

அவர்  குரலின் காரணமாக அவர் அநேகமாக எதையும் எழுதித் தான் கற்பித்துக்கொண்டிருந்தார்என்று  நினைக்கிறேன்.அதைப்  பார்த்து ஸ்லேட்டில் தப்பில்லாமல் எழுதவேண்டும் யாரும் பேசக்கூடாது என்று   சொல்லிவிட்டு சற்றுநேரம் கண்ணை மூடிக்கொள்வார். திடீ ரென்று கண்விழித்து  அவர் பையிலிருந்து கலர் கலரான நீள நீள மான  சாக்குத் துண்டுகளை[Chalkpiece}மேஜையின் மேல் எடுத்து வைப்பார். ஒரு பேப்பரில்   சுற்றி வைத்  திருந்த கூர்மையான முனை யில் தட்டையான ஊசி ஒன்றை எடுப்பார்.  சாக்பீஸைக்  கையில் எடுத்து  லாகவமாக அதை விரல்களில் பிடித்துக்கொண்டு  ஊசியால் அதை பல அழுத்தத் தில்   வருடுவார்.

தினந்தோறும் அவர் செய்யும் இந்தக் கைநேர்த்தியைப் பார்ப்பதற்கா கவே நான் வாய்ப்பாட்டை  அவசரமாக  எழுதிவிட்டு   அவரையே கவனித்துக்  கொண்டிருப்பேன்.

விரல்களால் திருப்பித்திருப்பி ஊசிமுனையால்மிக  நுண்மையாக  சாக்குக்கட்டியை செதுக்கிக்கொண்டே வருவார். அதன் மேல் படிந்த சாக்குத்  தூளை அடிக்கொருமுறை  ஊதி ஊதி அப்புறப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

அந்த சாக்குக் கட்டிக்குள் இருந்து ஒரு உருவம் வெளிப்படும். இன்று அது என்னவாக இருக்கும் என்று  நானும் மற்ற மாணவர்களும் ஆவலாகப்  யோசித்துக்கொண்டிருப்போம். மெல்லமெல்ல ஒரு  தலையும்அபிநயம் பிடிக்கும் கைகளும் அழகாக வளைந்து நிற்கும் கால்களும் உருவாகும். தலை குனிந்தோ சாய்ந்தோஒரு பார்வையின் கோணத்தைக் காட்டும்.

வாத்தியாருக்கு நாங்கள்  பார்த்துக்கொண்டிருப்பதுஎதுவும் தெரியாதுஅவருக்கு  சுற்றியிருக்கும் உலகமே தெரியாது. வீடு  உலகம் சுற்றி யிருக்கும் நாங்கள்  பள்ளிக்கூடம் எதுவும்அவர் ப்ரக்ஞையில் இருக் காது. ஒரு சிருஷ்டியை சேதமில்லாமல் அழகாக வெளியில் எடுக்கும் மருத்துவச்சியின் கவனிப்புடன் அவர் செதுக்கிக் கொண்டிருப்பார்.

செதுக்கி முடிந்தவுடன் சற்றுமுன்அவர் கையிலிருந்தசாக்குத் துண்டு  முற்றிலும் புதியபிறவி எடுத்திருக்கும்.  பாவாடையுடன் நிற்கும் பெண் ணாக  இருக்கும். முண்டாசு கட்டின கிழவனாக நிற் கும்.  நீண்டு வளைந்த  தென்னைமரமாகஇருக்கும். கண்ணுக்கு பழைய சாக்குக் கட்டி  தெரியாது.  

வீட்டில் என்  தூக்கத்தில்கூட அந்த வாத்தியாரின்  மென்மை யான  விரல்களும்  அதன் நாசூக்கான பரபரப்பில் வெளிப்படும் ஆச்சரிய மானஉருவங்களும்தான்மீண்டும்  மீண்டும் என்   நினைவில்  வந்து கொண்டேஇருக்கும்.ஒரு சிறந்த சிற்பக்கலைஞராக மிளிர வேண்டிய இந்தக் குள்ளமானஉருவம் ஒரு  ஓட்டுக் கட்டி டத்தில் ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாராகி உட்கார்ந்துகொண்டு  அற்புதமான சிருஷ்டி களை யார்கண்ணிலும்படாமல்  படைத்துப்பின் உடைத்துப்போடும்  மனப்பக்குவம் எப்படி நேர்ந்தது? அல்லது இது தான் அவருக்கு விதி க்கப்பட்டதா?  அல்லது அதுதான் அவர் தனக்கே  இன்னதென்று தெரியாமல் உள்ளும் புறமும் ஒன்றிப்போய் பூரித்துப்போகும் நிறை வான கலை அனுபவமாஅல்லதுஇதுஒரு  இயல்பாக அவருக்கு  வாய்த்த ஆன்மீகப் பயிற்சியா?   அல்லது யாரும் காணா பாலையில் தானே பூத்து தானே வாடி உதிர்ந்துபோகும் சில பூக்களின்  அற்ப வாழ்வைப் போன்றதா அவருடைய  அபூர் வமான கலைத் திறன் ?

தன்னுடைய கையிலிருக்கும்  சாக்குத்துண்டு ஒரு நிறைவான உரு வம்  பெற்றவுடன்  அவர் முகத்தில் ஒரு  மகிழ்ச்சியும் சிரிப்பும் தோன் றும். இரண்டு முறை அதை திருப்பித் திருப்பிப் பார்ப்பார்.

நான் அந்தநேரத்துக்காக  காத்துக்கொண்டிருப்பேன். “ஸார்..” என்று  கையை நீட்டுவேன்.அவர் என்னைப்பார்ப்பார்.வாய்ப்பாடெல்லாம்  ஒழுங்காஎளுதினயா?. எழுதிட்டேன் ஸார்.அவர் என் வார்த்தையை  நம்புவார். கையிலிருந்த  அந்த  அற்புதமான பொக்கிஷத்தை  என்னிடம்சந்தோஷமாக கொடுத்து விடுவார்.   நான் அதை தலை யில் வைத்துக்கூத்தாடிக்கொண்டு  வீட்டுக்கு வந்து  என் வாத்தியார்  செய்த பொம்மையை   எல்லா ரிடமும் பெருமையுடன் காட்டி அவர் என்னிடம் காட்டிய விசேஷ  பரிவையும் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுவேன்.

அப்போது ஒரு ஆசிரியராக அவர் எதையும் சொல்லிக்கொடுக்கவில் லையோ என்று தோன்றலாம். பாடம் நடத்தும்  நேரத்தில் அந்த ஆசிரியர் இந்த மாதிரி கைவேலைசெய்துகொண்டிருப்பதை மூத்த ஆசிரியர் என்று யாராவது    பார்க்க நேர்ந்தால்   அவரைக் கடிந்து கொள்ளக் கூடும்ஆனால் அவர் இந்த  மாதிரி   இல்லாமல் எங்க ளுக்கு  வாய்ப்பாடும் கணக்கும்  மட்டுமே கற்றுத் தரும்  வழக்கமான  வாத்தியாராக இருந்திருந்தால் நாங்கள் ஒரு நிறைவான என்றும் நினைவில் நிற்கக் கூடிய நெகிழ்ச்சி யான   கலை அனுபவத்தின் பாதிப்பை  அந்த சின்ன வயதில் இழந்திருப்போம்.

அதற்கு அடுத்த வருஷம்  நான்  அந்தக் கூடத்துப்பள்ளிக் கூடத் தின் உள்கூடத்துக்கு  மாற்றப்பட்டேன். ஒண்ணாம் வகுப்பிலிருந்து இரண் டாம் வகுப்புக்கு உயர்வு. இந்தவகுப்பில்  கணக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு உபாத்தியாயரும்  மீதி   நேரத் துக்கு உபரி யாக இன்னொரு வாத்தியாரும் வந்தார்கள். அந்த இன்னொரு வாத்தியார் டிராய்ங் மாஸ்டர் என்று சொல்லிக் கொண்டார்கள்.  கறுத்த முகமும் அழுக்கான  சட்டை வேட்டியும்   அணிந்துகொண்டு கையில் ஒரு   கசங்கிய  பழுப்பேறிய புத்தகத்துடன் எப்போதும் காட்சியளிப் பார்  அவர்.

அவர் வகுப்புக்கு வந்தவுடன்  கரும்பலகையில்   செங்குத்தாக ஒரு கோடு இழுப்பார். அதில் க்ளாவர் வடிவத்தின் ஒரு    பாதியை கோட் டுக்கு வலது பக்கம் வரைந்து விட்டு எங்களை அதேமாதிரி ஸ்லேட் டில் வரைந்து க்ளாவரின் உருவத்தை கோட்டுக்கு இடதுபக்கமும் முழுமைப்படுத்த வேண்டுமென்று சொல்லுவார். அதோடு அவர் பாடம்முடிந்தது.பிறகு காலைத் தூக்கிமேஜையில் வைத்துக்கொண்டு லேசாக ஆட்டிக்கொண்டவாறு   கையிலிருந்த கசங்கல் புத்தகத்தை படிக்கத்தொடங்குவார். படிக்கப் படிக்க அவர் கண்கள் கிறங்கிப் போகும்.   பக்கங்களை அவர் புரட்டப் புரட்ட அவர் கால்களின் ஆட் டம்  விறுவிறுப்படையும். வாயோரம் ஈரம் கசியும். அடிக்கொரு தரம் வேட்டியை சரிப்படுத்திக் கொள்வார்.

நாங்கள் க்ளாவரை வரைவதைவிட அவர்   காலாட்டத்தைப் பார்த்து ரஸிப்பதில் தான்  ஸ்வாரஸ்யம் கொள்வோம்.

அந்த வருஷம் முடியும்வரை அவரும் க்ளாவர்வடிவத்தின் அரைப் பகுதியை தாண்டி  வரையவில்லை. நாங்களும் ஒரு தடவை கூட அதை அதை முழுதாக வரைந்து காட்டவில்லை.

அன்று  எனக்கு க்ளாவர்  வடிவத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பும் ஒவ் வாமையும்  பல வருஷங்களுக்கு  மறையவேயில்லை.

இவர்எப்படிஒரு டிராய்ங் மாஸ்டராஎன்றுகேட்கத்தோன்றாதவயது  அப்போது. ஒரு வேளை  வேறு எதற்கும் லாயக்கில்லாதவராக இருந் திருக்கலாம்!
*********************
நன்றி    கணையாழி

Sunday, August 5, 2012


கல்லை எறிந்தவன்

                    -------------------------------  
வைதீஸ்வரன்

மீண்டும் பழைய கதையைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மனதுக் கென்று சில பாரபட்சங்கள் இருக்கின்றன.அது தனக்குத் தோன்றும் விஷயங்களை சத்தியமாக நம்புகிறது.!!

              ************ **** ***.
என்னுடைய பத்தாவது வயதில் எனக்கு என் தாய்மாமன் வீட்டிற்கு செல்வ தென்றால் அவ்வளவு சந்தோஷம்.  விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். பரிட்சை முடிந்த மறு நாளே கோயம் பத்தூருக்கு கிளம்பி விடுவேன்..

மரங்களும் செடிகளும் சூழ இருந்தது மாமாவின் சிவப்பு வீடு. மாமா ராணுவ கணக்கியல் துறையில் பணி புரிந்தாரென்று நினைக்கிறேன் அந்த வீடு  அந்தத் துறையில் வேலைசெய்பவர்களுக்காக ஒதுக்கப் பட்ட குடியிருப்புவாரியத்தில் அமைந்திருந்தது. மாமா இருந்த பகுதி யும் வீடும் எனக்கு மிகவும்பிடித்த பசுமையான சூழல்.அங்கேபக்கத்து வீட்டில் எனக்குப்பிடித்த  சினேகிதன் பாலு இருந்தான். பொழுது பர பரப்பாக போகும்.

வீட்டு இலக்கம் ஒன்றைத் தவிர மற்றபடி எந்த மாற்றமுமற்ற வீடுகள். தெருவோரம்  சீரான  இடைவெளிகளில் நட்டுவைத்த சிமெண்ட் கம்பங்களில் இழுத்துக்கட்டப்பட்ட  முள்கம்பிகள் தான்  அந்தத்தெரு முழுவதும் நீண்டு ஓடும் ஓரச் சுவர்.

பிரிட்டீஷ்காரர்கள் இன்னும்நாட்டைவிட்டுப் போகவில்லை.அப்போது வருஷம் 1945/46 இருக்கலாம்.ஆங்கிலேயர்கள் ரஸனைக்கேற்ப  கட்டிய அழகான வீடுகள் புகைபோக்கியுடன் காட்சி அளிக்கும். வெளியே நுழைவாசல் தவிர்த்து மீதி அறைகளில் கதவுக்குப் பதிலாக உயரமான வளைவுகள் இருக்கும். உள்ளே நடுக்  கூடத்தை அண்ணா ந்து பார்த்தால் ஒட்டடைக்கோல் எட்டாத அளவு உத்தரம் உயரமாக இருக்கும். ஆங்கிலேயர்களுக்கு உயரத்தின் மேல்  ஒரு  அபிமானம் போலும்!

வீட்டிலுள்ள மேஜைகள் கண்ணாடி பீரோக்கள் கோப்பைகள் எல்லாமே சீமையிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட மாதிரி..இதற்கு முன்பு இங்கே குடியிருந்த  ஆங்கிலேயர்  இங்கிலாந்து திரும்பும் போது  இவற்றையெல்லாம் விட்டுச் சென்றிருக்க வேண்டும்..

மாமா காரியாலயத்திலிருந்து மாலை திரும்பிவரும்போது கையில் சுருள் சுரு ளாக  நீளமான பழுப்புக்காகிதங்களுடன் பைநிறையப் பென்சில்களுடன் வரு வார். காரியாலயத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரும் அளவுக்கு வேலை யின்மேல் அவருக்கு ஓயாத வெறிப்பற்று. இந்தியர்களின் இத்தகைய  ஊழிய மனப்பான்மைதான்  அன்னியர்களுக்கு இன்றும் பிடித்த  குணவிசேஷம். எதிர் பாராமல்  30 வருடகாலமாக  அக்கறையுடன்  உழைத்த பிறகு இப்போது  தான் மாமாவுக்கு இந்த அந்தஸ்தும் இருப்பிட  வசதிகளும்  மற்ற சௌகரியங்களும் வாய்த்திருந்தன.

வீட்டில் மாமாவின் அறையில் அகலமாக ஒரு மேசை இருக்கும். மேசைக்கு மேல் ஒரு தொப்பிவைத்த மின்சார விளக்குக்கூரையில் பொருத்திய உருளை வழியாக இருகயிறுகளில்தொங்கும்.கயிறுகளைமாறிமாறி இழுத்தால்விளக்கு மேலும் கீழுமாக போய் மேசை யிலிருந்து அதன் உயரத்தை சௌகரியப்படி மாற்றிக்  கொள்ளும்படி இருக்கும்...

இந்த வசதியால் அறையின் பொதுவான வெளிச்சத்தை அவசியப்படும்போது மேசைக்கு  மாற்றிக்கொள்ளலாம். மாமா இரவு வெகு நேரம் அந்த மேசையில் காகிதங்களை  விரித்துக்கொண்டு  கழுத்தை வளைத்துக்கொண்டு  வேலை செய்வார்.

காலையில் சீக்கிரமே எழுந்து தன் பூஜைக் காரியங்களை முடித்து உணவருந்திவிட்டு புறப்படும்போதுதான் என்னைப் பார்த்து சிரிப்பார். போகும் போது அவரது பீரோவிலிருந்து இரண்டு புத்தகங்களை  கொடுத்துவிட்டுப் போவார். இரண்டுமே வீரதீரசாகஸங்கள் நிறைந்த என் வயதுக்கேற்ற புத்தகங் கள்.

மாமாவுக்குக் குழந்தைகள் கிடையாது. வீட்டில் மாமியும் பாட்டியும் மட்டுமே இருந்தார்கள். விடுமுறைக்கு நான் வரும் நாட்களில் நான் தான்அவர்களுக்குக் குழந்தை. எனக்குப் பிடித்த விதவிதமான தின்பண்டங்களை செய்துகொடுத்து நான் சுவைப்பதை ரஸிப்பார்கள்.

இன்றும் வழக்கம்போல் ஊரிலிருந்து வந்தவுடன் ஊர்க்கதையெல்லாம் பேசி விட்டு சந்தோஷமாககுதித்துக்கொண்டுதோட்டத்தை சுற்றிப்பார்க்க ஓடினேன்.  எனக்கு அதைவிட அவசரமாக பக்கத்து வீட்டு பாலுவைப் பார்க்க வேண்டும்..

தோட்டத்தில் மரங்கள் இன்னும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. மாமரத்தில் பிஞ்சுகள் தென்பட ஆரம்பித்திருந்தன. தேங்காய்கள் எந்த நேரமும் விழுநது விடுமோ என்ற பாரத்துடன் குலைகுலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. கொய்யா மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு காக்காய்கூடு. இந்த மரங்கள் எல்லா முமே என் விடுமுறையை தாங்க ளும் சேர்ந்து கொண்டாடுவதைப் போல்  மனதுக்குள் விடுதலை யான மகிழ்ச்சி  துள்ளியது. நான் பாலுவைப் பார்க்க ஓடி னேன்.

பக்கத்துவீட்டுக் கதவு பூட்டிக்கிடந்தது.எனக்கு அதிர்ச்சியாக இருந் தது.  இவர்கள் எங்கே போனார்கள்நான் ஏமாற்றமுடன் மீண்டும் வீட்டுக்குஓடிவந்தேன்.

"மாமீ...மாமீ......."

என்னடா கண்ணூ?”

பக்கத்து வீட்டு பாலு வீடு பூட்டி இருக்கே!  எங்கே போனாங்க அவங்க?”

ஓ..பாலுவா.?அவா ஏதோ கல்யாணத்துக்காக கிராமத்துக்கு போறதா சொன்னா நாலைந்து நாளில் வந்துடுவாளாம்..."

எனக்கு ஏமாற்றமும் வருத்தமும் பொங்கியது. "நாலு நாளா! இன்னும் நாலுநாளைக்கு பாலுவரமாட்டானாஅவங்கூட விளையாடலாம்னு  தானே இங்கே லீவுக்கு வரேன்..."

"பாலு வந்துடுவாண்டா...நாலுநாளு தானே...சாயங்காலம் மாமா வந்து ஒன்னை எங்கெயாவது கூட்டிண்டு போவார்..."

மாலை 4 மணி இருக்கும்..எதிர்வீட்டில் முள்வேலிக்குப் பின்னால் ஒரு பையன் நின்றுகொண்டிருப்பது  தெரிந்தது. அவன் என்னைப் பார்த்துக்கொண்டு நின் றான்.அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். ஆனால் என்னைவிட நல்ல வளர்ச்சியுடன் இருந்தான்.. அவன் கண்கள் நீலமாக இருந்தன. தலை அழுக் கான செம்பட்டையாக இருந்தது. வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறம் அவன் உடம்பு... அவனை ஆங்கிலேயன் என்று இப்போது சொல்லுகிறேன். அப்போது வெள்ளைக்காரன் என்று சொல்லுவதுதான் பேச்சுவழக்கு.

அந்தப் பையன் என்னைப் பார்த்து ஏதோ கைகளை ஆட்டிக்கொண்டிருந்தான் சில சமயம் முகத்தைப் பழிக்கிற மாதிரி கோணிக்கொண்டு சுட்டுவிரலை ஆட்டினான்.எனக்குஅவன் செய்கைகள் புரியவில்லை.இருந்தாலும் பொதுவாக அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றேன்.அவன் என்னை ஏளனப்படுத்து கிறான் என்று ஊகிக்கும் அளவுக்கு எனக்கு அப்போது  மன முதிர்ச்சி யில்லை.

திடீரென்று ஒரு பந்தைத் தூக்கி என்பக்கம் விட்டெறிந்தான்.நான் மகிழ்ச்சியுடன்  அதை எடுத்து அவனிடம் போட்டேன். அவன் மறுபடியும் வேகமாக பந்தை என் மேல் வீசினான். நான் அதை ஓடிப்போய் எடுத்து திரும்பவும் அவன் பக்கம் வீசினேன். எனக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது. எனக்கு  விளையாட ஒரு புதிய நண்பன் கிடைத்தான் என்று சந்தோஷத்தில் சற்று முன் இருந்த வருத்தம்  போய் விட்டது... அவன் வீசி எறிகிற பந்தை மீண்டும் மீண்டும் அவ னிடம் வீசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவன் போகப்போக பந்தை தாறுமாறாக வெவ்வேறு திசையில் வீச ஆரம்பித்தான்.அவன் வேண்டுமென்றே என்னை அலைக்கழிக்கிறமாதிரி இருந்தது. நானும் சில நேரம்  அவன்  அலைக் கழிப்புக்கு ஈடுகொடுத்து பந்தைப் பொறுக்கிப் போட்டுக் கொண் டிருந்தேன்.எனக்கு சற்று தாமதமாகத்தான் தெரிந் தது. அவன்  என்னுடன்  சகஜமாக விளையாடவில்லை என்று. அவன் என் அவஸ்தைகளைப் பார்த்து ஒவ்வொரு  முறையும் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் வேண்டுமென்றே என்னை ஒரு பிராணியைப் போல் ஓட வைத்து என்னுடைய வேதனையைப்பார்த்து  சந்தோஷப்படுவதாகத் தோன்றியது. எனக்கு  மேல் மூச்சு வாங்கியது. மேலும் அவனுடன் இப்படிப் பட்ட வினயமான விளையாட்டைத் தொடர  முடியா தென்று பட்டது. அவன் திரும்பத்திரும்ப பந்தை  வீசிக்கொண்டேயிருந்தான். எனக்கு  ஆத்திரம் வந்தது. நான் வந்த பந்தை எடுத்து பலத்தையெல்லாம் திரட்டி வீசி உயரமாக எறிந்தேன். பந்து அவன் வீட்டுக் கூரையைத் தாண்டிப் பின்பக்கம் எங்கோ விழுந்து விட்டது.

வெள்ளைக்காரப்பையனுக்கு மூஞ்சிசிவந்துவிட்டது.அவன் என்னைப் பார்த்து எச்சில் துப்பி   "blackgaurd" என்று   கத்தினான். அடுத்த நிமிடம் அவனிடமிருந்து ஒரு கல் என் நெற்றிப் பொட்டில் வேகமாக வந்து தாக்கியது. அடுத்தகணமே அவன் நிற்காமல் உள்ளே ஓடிவிட்டான்.நான்"ஓ"வென்று  கத்திக்கொண்டு  மாமியைக்கூப்பிட் டுக் கொண்டே  உள்ளே ஓடினேன்.

மாமி என் அலறலைக் கேட்டு கூடத்திற்கு ஓடி வந்தாள். 

"ஐய்யோ"

என் நெற்றியின் வலதுபொட்டிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.அது கண்களில் வழிந்து கன்னத்தில் தாரையாக இறங்கி சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.

என்னடா...என்னடா..ஆச்சு?”என்று  கேட்டுக்கொண்டே மாமி பஞ் சையும் மருந்தையும்எடுத்துக்கொண்டுஓடிவந்தாள். நான் கேவலுக்கு இடையே நடந்த சம்பவத்தை சொன்னேன்.
        
"யாருஅந்த வில்லியம்ஸ் பிள்ளையா?அவன் ரொம்ப துஷ்டையாச்சே!  நீ என்ன பண்ணினே?”                                                 

கலவரத்தைக் கேட்டு உள்அறையிலிருந்து பாட்டியும் வந்தாள்.என் ரத்தத்தை யும் மாமி துணியால் கட்டுப்போடுவதையும் பார்த்து அதிர் ந்து போய்விட்டாள்.

அய்யய்யோ,யாருடீ என் பேரனை இப்படி அடிச்சதூ?எதுத்த வீட்டுப்பைய்யனாஅந்த வெள்ளைக்காரப் பைய்யனாஅவன் கட்டேலெ போக..."  பாட்டி சபித்தாள்.

சபிக்காதேங்கோ பாட்டீ.. இன்னும் அஞ்சாறு மாசம் தானெ! எல்லா ரையும் கப்பல்லே ஏத்திக் கடத்தப் போறாளே!..."

கோந்தே..இங்க பக்கத்திலெ வாடாபாக்கலாம் அய்ய்யோ..நெத்திப்பொட்டில யே  அடிச்சிருக்கானே! நாசமாப் போறவன்.. இந்த வெள் ளைக்காராளுக்கு நம்பளை கண்டா அவ்வளவு இளப்பமா?..  ஏண்டா அவன் அடிச்சா நீ சும்மாவா வந்தே?”

"எங்கே பாட்டி..யாரையும் திருப்பி அடிக்கக்கூடாதுன்னு சொல்லித் தானே குழந் தைகளை நாம்ப வளக்கறோம்...இதுகளும் சாதுவா அடிவாங்கிண்டு வருது.." என்றாள் மாமி.

மாமி சொல்லுவதைக்கேட்டவாறே மாமா அப்போதுதான் உள்ளே  நுழைந்தார்.

"என்ன கலாட்டாஇங்கே? ரெண்டுபேரும் ஏதோஆர்ப்பாட்டமா பேசி ண்டிருக்கிற மாதிரி இருக்கு?”

"அந்த வில்லியம்ஸ்கூடத்தானே ஆபீஸிலேருந்துவந்தேள்?நாளைக்குஅவரைக் கண்டா சொல்லி வையுங்கோ,அவர் பையனை கண்டிச் சுவைக்கச் சொல்லி.!" என்றாள் மாமி.

மாமா என்னை அருகில் கூப்பிட்டு காயத்தையும் தலைக்கட்டையும் பார்த்தார் நடந்த விஷயத்தைக் கேட்டறிந்தார். என்னை சமாதானப் படுத்தினார்.

"இன்னும் ரெண்டு நாள்ளெ சரியாயிடும்டா.. பாலுவும் ஊர்லேருந்து வந்துடு வான். நீ இனிமே எதுத்த வீட்டுப் பய்யனோட வெளையாட வேண்டாம்.. சரியா?...."

இரவு எனக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை.என்னை வெறுக்கும் அளவுக்கு அந்தப் பையனை நான் என்ன தொந்தரவு செய்துவிட்டேன். எனக்கு விளையா டத் தெரியவில்லையாஎன்ற தெளிவற்ற குழப்பத்தில் நான் அரைத் தூக்கத்தில் இருந்தேன்..

அப்போது  மாமி "அவா ராஜ்ஜியம் தான் முடிஞ்சி போச்சே! இந்த கட்டத்திலும் கூட இந்த வெள்ளைக்காரர்கள் ஏன் நம்மிடம் சகஜமாக இருக்கக் கூடாது"என்று  மாமாவிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

மாமாஅதற்கு பதில் எதுவும்பேசவில்லை. கொஞ்சநேரத்தில் குறட்டைவிட்டுத் தூங்கி விட்டார்.

* * * * *

பத்துநாள் கழிந்தது.எனக்கு நெற்றியில்காயம் ஆறிவிட்டது. தலைக்கட்டை மாமி அவிழ்த்துவிட்டாள். நான் ஊருக்குத் திரும்ப  என்னுடைய துணிமணி களை எடுத்து வைத்துக்கொண்டேன். மாமி எனக் காக நெய்ததும்ப சுவையான மைசூர்ப்பாகு செய்து பயணத்திற்குக் கட்டிக்கொடுத்தாள்.

மாமாவின் நண்பர் சேலத்திற்குப் போய்க்கொண்டிருந்தார். அந்த நண்பர்துணை யுடன் நான் போக ஏற்பாடு செய்து ரயிலில் என்னை ஏற்றிவிட மாமா காத்துக் கொண்டிருந்தார். நான் மாமிபாட்டியை நமஸ்கரித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டேன்.

மாமா என்னைப் பாசமுடன் பார்த்து சிரித்துவிட்டு "இருடா ஒனக்கு நான்என்ன வாங்கிவைச்சிருக்கேன்னு தெரியுமா?”

தெரியாதென்று தலையாட்டினேன்.அவர் "எங்கே காலைக் காட்டு"  என்றார்.  அவர் கையில் எனக்காக வாங்கிய புத்தம் புது காலணி இருந்தது. நான் ஆசை யுடன் அதை அணிந்து கொள்ள காலை நீட்டினேன். மாமா என் காலைப்  பார்த்துவிட்டு"ஒரு நிமிஷம்அப்படியேஇரு,முழங்கால்லே என்னடா இவ்வளவு பெரிய   தழும்பு?”  என்றார்.

"அதுவா...மாமா  இது ரெண்டு மாசம் ஆயிடுத்து மாமா.. ஸ்கூல்லே ஒரு பைய் யன் என்னோடே ஹோம்வொர்க் நோட்டுப் புத்தகத்தை பிடுங்கப் பாத்தான்... நான் அவன் பிடிக்குத் தப்பாம  ஓடினேன்.  பின்னாலேருந்து பிடிச்சுத்தள்ளி விட்டான். நான் கால் மடங்கி விழுந்து முழங்கால்லே பெரிய காயம் பட்டூ         டுத்து...இப்போ ஆறிப் போச்சு  மாமா”, என்றேன்.

மாமா ஒரு நிமிஷம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பைய்யன் பேரு என்ன?” 

கதிர்வேலு."

மாமா ஒரு நிமிஷம் யோசித்து விட்டு  மாமியையும்  பாட்டியையும் பார்த்துக் கொண்டே கேட்டார்.


கதிர்வேலுவா? கதிர்வேலுவும்வெள்ளைக்காரப் பைய்யனா?"மாமா பெட் டியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தார்.