vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, April 16, 2013

சிறுகதை


மூன்றாவது  தந்தி.
                   -----------------------------------------------வைதீஸ்வரன்   

 சைக்கிள்மணிச் சத்தம்  கேட்டது.   வாசலில் தாழ்வாரத்தைத் தாண்டி திண்ணைத் தூணருகில்  கருமை கலந்த காக்கிசட்டையில்       காகிதங்களுடன்   தந்திச் சேவகன்  நின்றுகொண்டிருந் தான்.   பச்சை வர்ணமடித்த அவன் சைக்கிள்  அருகில்    நின்று கொண்டி ருந்தது.
லேசான  கலவரத்துடன்  அம்மா  எட்டிப்பார்த்துவிட்டு    அப்பாவின் முகத்தைப் பார்த்துக்கொ ண்டிருந்தாள்.   மணி சத்தம்  காதில் கேட்டும்  கேட்காதது   போல அப்பா கொடியில் உலர்த்திய வேஷ்டியை எடுக்க முயன்று கொண்டிருந்தார்.  எனக்கு கையும் காலும் பரபரத்தது....   “அப்பா....... தந்தித்  தாத்தாப்பா......  அப்பாவின் கவனத்தைத் திருப்பினேன்.  தந்திக்காரத் தாத்தா  மறுபடியுமொரு முறை  சைக்கிள் மணியை   ஒலித்தார்..... அப்பா   அமைதியாக இருந்தார்....
அம்மாவுக்கு  பரபரப்பு கூடிக்கொண்டுவந்தது.  “போயி வாயிண்டு வாயெ ண்டா...அம்மா என்னை ஏவினாள்... நான் சந்தோஷத்துடன் குதித்துக் கொண்டு வாசலுக்கு ஓடினேன்...அந்த தந்திக் கடுதாசியையும்   இணைந்த படிவத்தையும்  வாங்கிக்கொண்டுவந்து அம்மாவிடம் கையெழுத்துவாங்கிக் கொண்டு படிவத்தை தாத்தாவிடம் கொடுத்து விட்டு ஓடி வந்தேன்.
 அம்மா  தந்தியைக் கையில் வைத்துக் கொண்டு அப்பாவின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்தாள்.  அப்பா அதிகம்  கவலைப்படவே இல்லை. உரு விய வேஷ்டியை மடித்துக்கொண்டிருந்தார்.  எனக்கு மனசு பரபரத் தது.  ரயிலில் சிங்கநல்லூருக்குப் பயணம்  செய்ய  இன்னொரு சந்தர்ப்பம்   அதுவும்  ஒரு மாதத்துக்குள்  இது மூன்றாவது  முறை.
தந்தி வந்தவுடனெயே  நான் மனதில்  ரயில் ஜன்னலோரம் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டு விட்டேன்.   ஜில்லென்று   மூஞ்சி யில் காற்றடிக்கிறது.  மலைகளும் மரங்களும்  பாலங்களும் பல வேகங் களில் பின்னுக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றன.  உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டுகுடிமக்களை  பார்வையிடும்  இளவரசனைப்போல் நான்  ரயிலில் மிதந்துகொண்டிருக்கிறேன்.  இடைஇடையே கடந்துபோகும் ஸ்டேஷன் களின்  பெயர்ப்பலகைகள் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டிருக்கின் றன.  செவ்வாய்ப்பேட்டை மகுடஞ்சாவடி   சங்ககிரி   திருப்பூர்...... இரண் டாவது  தடவை பயணம் செய்தபோதே எனக்கு அநேகமாக  இந்தப் பெயர் கள்   நினைவில் அத்துபடி ஆகி விட்டது...........ஆனால் இப்போது  மூன்றாவது தடவையாக     அம்மா  தந்தியைக் கையில் வைத்துக் கொண்டு  அப்பாவை  துக்கமும் நிராசையுமாக  பார்த்துக்கொண்டிருந்தார்.
இதே தந்தி  ஒரு மாதத்துக்கு முன்பு  முதல்முறையாக வந்தது
கமலா.....அப்பாவுக்கு  மூச்சுத்திணறல்....டாக்டர் பாத்துட்டு போய்ட்டார்   நிலைமை  ரொம்ப  மோசம் உடனே புறப்பட்டு வா...அண்ணன் ராமு
 தந்தியைப் பார்த்த   அப்பா அப்போது  நடந்து கொண்ட விதமே  வேறாக இருந்தது..
கமலா.... இதுக்குப் போயி இவ்வளவு  கவலைப் பட்டுக்கறயே?. .உடனே போயி ஒங்க அப்பாவை பாத்துட்டு வாயேன் . ஒண்ணும் ஆயிருக்காது.... உசுரோட தானே.. .இருக்கார்... .நிலைமை கொஞ்சம்   மோசமா இருக்கு ,; புறப்பட்டு வான்னுஒங்க  அண்ணா  எழுதி இருக்கான்...அவ்வளவுதானே ! போயி ஒரு நடை பாத்துட்டூ வாயேன்..
  “ ஒங்களுக்குத் தெரியாது......எழவு சேதியெல்லாம் தந்திலே அப்பட் டமா தெரிவிக்கமாட்டா.......கவலைக்கு  இடம்னுசொன்னாலே  அது தான்..   அர்த்தம்.... பாவம் கடைசிலே  எப்ப்டி உசுரு போச்சோ   தெரியலே.... பாவம்  எவ்வளவு கஷ்டப்பட்டாரோ?.....”  அம்மாவுக்கு கண்ணில் மளமள வென்று  கொட்டியது.

 “இத பார்...ஒங்க அப்பா  இன்னும் சின்னக் கொழந்தையா?  வயசு எம் பதைத் தாண்டப் போறது..இருந்தாலும் தெடமாத்தான் இருக்கார்...நீ ஏன் எதையோ கற்பனை பண்ணிருக்கேபதட்டப்படாமெ மளமளன்னு கெளம்பு.. ஒடனே போய் பாத்தூட்டு வந்துடு  அவருக்கும்  ஆறுதலா இருக்கும்..  இன்னும் முக்கா மணிலே   பாஸஞ்சர் பொறப்படறது.   மள மளன்னு   பொறப்படு.. கூட கோபுவையும் கூட்டிண்டு போ.. பாவம்  தாத் தாவுக்கு  பேரன்பேர்லெ கொள்ளைப்பிரியம்...பொறப்படு..போயி   எனக்கு  தகவல் தெரிவி..

அப்பா  அவசரஅவசரமாக  அக்கறையோடுஎங்களை  வண்டியேற்றிஅனுப்பி  வைத்தார்.

சிங்கநல்லூர் ஸ்டேஷனில் வண்டிநின்றதுமே   பரபரவென்று இறங்கி   பையை எடுத்துக் கொண்டு என்னை ஒரு கையிலிழுத்துக் கொண்டு அம்மா வேகமாக நடந்தார்.   எங்கள் மாமாவின்  வீடு  அதிக தூரமில்லை.
போகிற வேகத்துக்கு  பத்து நிமிஷத்தில்போய் சேர்ந்து விடலாம்..

 வீடு நெருங்க நெருங்க  அம்மாவுக்கு  அழுகையும் துக்கமும்  விம்மிக் கொண்டு வந்தது.  சேலைத்தலைப்பால்  கண்ணையும்மூக்கையும் துடைத் துக்கொண்டவாறு  காலை எட்டி எட்டி வைத்து நடந்தாள். எனக்கும் வேக மாகப்போவது  சந்தோஷமாகத் தானிருந்தது.   அங்கே   என்   மாமா பையன் கள்  ராஜுவும் நட்டுவும்   நல்ல  ஜோடி... பின்னால் விசாலமாக இருக்கும் தென்னந் தோப்பும்  மணலும் கல்மேடையும் விளையாட   எங்களுக்காக   காத்துக்கொண்டிருக் கும்  ஜோவென்று காற்று வேறு.... மெய்ன் ரோட்டிலிருந்து  வலது பக்கம் திரும்பியவுடன்   அக்ரஹாரத்தின்   நாலாவது  வீடு மாமாவுடையது. 

வலது பக்கம்திரும்பிவிட்டோம்.   வாசலில்  நிறைய பேர் கூட்டமாக நிற் பார்கள். அழுகை ஓலங்கள் கேட்கும் என்று   எதிர்பார்த்தாள்  அம்மா... ஆனால் அப்படி ஏதும் தெரியவில்லை....ஒரு  வேளை சீக்கிரமே எடுத்து விட்டார் களோ!.  ஏனோ அம்மாவுக்கு இப்படி  ஒரு ஊகங்கள்  ...
  ஆனால் வாசல்  நிசப்தமாக  இருந்தது.  அம்மா சற்றுக் குழம்பியவளாக   நிதானித்து  சேலைத்தலைப்பைப் பொத்திக்கொண்டு  படியேறி உள்ளே சென்றாள். என்னை சத்தம்போடாமல்  வர வேண்டுமென்று சைகை   காட்டினாள்.
 உள்ளே  கூடத்து  முற்றத்தில் கொல்லைப்புறத்தைப்பார்த்தபடி உட்கார்ந்துகொண்டு அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். மாமி.  கூட்த்தில் அவ்வளவு  வெளிச்சமில்லாமல் சற்று  இருள் பூசி இருந்தது.
  மாமீ...  அம்மா  குரலை அடக்கி மெதுவாக கூப்பிட்டாள்...
 மாமிக்கு எப்போதுமே  காது சற்று மந்தம்.  அம்மாவின் அடங்கிய குரல் மாமியின் காதில் விழவில்லை. மாமி மேலும்   புடைத்துக் கொண்டிருந் தாள்.
 வாடீ..கமலீ... மாப்பிளை  வரலையா?  “    தாத்தாவின் குரல் கணீரென்று எங்களுக்குப் பின்னா லிருந்து கேட்ட்து.  உக்ராண அறையிலிருந்து  தாத்தா வெளியே வந்துகொண்டிருந்தார். .  திடுக்கிட்டு திரும்பிப் பார்த் தோம்.
தாத்தா  மெள்ள கூடத்திற்கு வந்து   வலது மூலையில் உள்ள பெஞ்சியில்  உட்கார்ந்து கொண்டு “என்னடீ  திடீர்னு பொறப்பட்டு வந்துட்டே?  இங்க ஏதும் விசேஷங்கூட இல்லையே?வெத்திலையை  இடிக்க ஆரம்பித்தார் தாத்தா திடமாகத் தான் இருந்தார்.
அப்பா.....  அப்பா....எப்படீருக்கேள்  அப்பா....?நன்னா  இருக்கேளா.... எப்படி.. .இருக்கேளப்பா? மனதுக்குள்  திகைப்பையும் துக்கத்தையும்   அடக்கிக்கொண்டு  வார்த்தைகளைத் திரட்டிக் கொண்டிருந்தாள் அம்மா.பக்கத்தில் போய்  தாத்தாவைத்தொட்டுப் பார்த்தாள்.  தாத்தா  உயிரோடு  தான் இருந் தார்!!.  அதிர்ச்சியாக  இருந்தது.
தான்  அனாவசியமாக  கற்பனை செய்துகொண்ட  பயத்தை எண்ணி   வருத் தப்பட்டுக் கொண்டாள்..
 “என்னடீ  கமலி  திடுதிப்புன்னு  வந்து  நிக்கறேப்ரமேயம்கூடஇல்லையே!  தாத்தா மறுபடியும் கேட்டார்
இல்லேப்பா....சும்மாத் தான்....ஒங்கபேரன் தான் குதிச்சான் உங்களைப் பாக்கணும்னு..             அம்மா  சமாளித்து என்னைக் கண்ணைக் காட்டினாள்...
 பின் கட்டிலிருந்து  மாமா  வேர்வையைத் துடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.  அம்மா  “என்னடாஇது?”  அண்ணாவைக்  கோபத்துடன் பார்த்தாள்..
 மாமா  அந்த கோபத்தைப்  புரிந்துகொண்டார்..
வா...வா...நான்  என்னடி  பண்றது?  நாம்பநினைக்கறது,ஒண்ணு  நடக்கறது ஒண்ணு....உள்ளே வா எல்லாம்  சொல்றேன்..
தாத்தாவுக்கு  அதிகம் புரியவில்லை. அவர் தொடர்ந்து வெத்திலையை இடித்துக்கொண்டிருந் தார்..
 “ நேத்து மத்யானம்  அப்பா  வெளியில்   போய்ட்டு வந்த உடனெ  திடு திப்புனு கீழே  சாஞ்சுட்டா....ஒரேடியா வேத்துக் கொட்டி வெள்ளமா ஓடித்து..வாய்  வறண்டுபேச்சு  உளற  ஆரம்பிச்சுடுத்து....நான்  தான்  நம்ப பக்கத்து வீட்டு பையனை ஓடிப்போயி உனக்குத்  தந்தி கொடுத்துட்டு வரச் சொன்னேன்...வந்து பாத்த வைத்தியரும் நாடியைப் பாத்தூட்டு  இனிமே தாங்காது தந்தி  அனுப்பிடுன்னு  சொன்னார்.  நாங்க ரெண்டு மணிக்கு மேல தாங்காதுன்னு நெனைச்சோம்..திடீர்னு எழுந்து ஒக்காந்துண்டுட்டார்.. எங்களால   நம்பவே முடியலெ.......என்று இழுத்தான்..
 “வந்ததோ வந்தே  இன்னும் இரண்டு நாள் இருந்துட்டுப் போயிடு... உடனே திரும்பிப் போனா  அப்பாவுக்கு  சரியா  பதில் சொல்ல முடியாது..
நாங்கள்  இரண்டு நாள் சிங்கநல்லூரிலேயே தங்கினோம்.  எனக்கு ஏக   சந்தோஷம்  மாமா பசங்களோடு  கும்மாளம்  அவ்வப்போது  கொல்லை மரத்திலிருந்து  தள்ளிய இளநீர்..  மாமி கையில் மணக்கும் தயிர் சாதம்  ஊறுகாய்...
நாங்கள்  சேலம்  திரும்பியவுடன்  அப்பா   அம்மாவைத் திட்டினார்..”  நான்  தான்  ஏற்கனவே சொன்னேனில்லே...ஒங்க அப்பாவுக்கு ஒண்ணும்  ஆயிருக்காதுன்னு... அனாவசியமா ...தத்துபித்துன்னு நெனைச்சிண்டு   அழுதியே! இப்ப என்ன ஆச்சு?.எல்லாத்தையும்  நிதானமா எடுத்துக்கணும்...
ஆனால்  ஒரு  வாரம்கழித்து  மறுபடியும்  அதே மாதிரி  தந்திவந்தது. “அப்பாவுக்கு அபாயம்... உடனே வரவும்..” 
என் அம்மா   உடனே  புறப்பட  பரபரத்தார்..என் தந்தையார்  தடுத்துப் பார்த்தார்.என்னடீ இது ஒரு வாரத்துக்குள்ளெ மறுபடியும் தந்தியா? எதுக் கும் ஒரு நாள்  காத்திருந்து  பார்க்கறது நல்லது இல்லையா ஒங்க   அப்பா   நெஜமாவே  போய்ட்டார்னா  இன்னொரு தந்தி  வருமில் லையா?”
 “அப்பாவுக்கு  ஆபத்து  அபாயம்னு  தந்தியைப் பாத்த பின்னாலும் எப்ப டிங்க  இங்கே  கல்லு மாதிரி ஒக்காந்திருக்க முடியும்?  உடனே  போனாத் தான் நெலமை தெரியும்  கூடமாட  உதவியா இருக்கமுடியும்? போகாம இருந்து ஒருவேளை மூஞ்சியைக் கூட பாக்க முடியாம போயிடுத்துன்னா?...”
அப்பா அரை மனதோடு மறுபடியும் எங்களை அனுப்பிவைத்தார்
இரண்டாவதுதடவையும் அம்மாவுடன்  நானும் போனேன்.. இந்த தடவை போனபோது  என்  தாத்தா கொல்லைப்புறத்தில் தென்னோலை   சீவிக் கொண்டிருந்தார்.  என்  மாமா  அம்மாவை  சமாதானப்படுத்துவதற்குரொம்ப சிரமப்பட்டார்.  இத பாரு கமலீ ஒன்னை கலவரப்படுத்த ணும்னு எனக்கு என்ன ஆசையா..ஆத்திரமா?  நேத்து நீ பாத்துருக்கணும்  அப்பா கெடந்து அவஸ்தைப்படறதை  நேர்ல  பாத்துருந்தா தெரியும்.   மாமியைக் கேட்டுப் பாரு..சேர்லேருந்து தடார்னுகீழெ விழுந்துட்டார்,,,கண்ணு முழியெல்லாம்  மேல சொருகிடுத்து...மூச்சு அநேகமா நின்னே போயிடுத்து...அப்பறம் வைதியரைக் கூப்பிடறதுக்குள்ளெ எப்படியோ எழுந்து ஒக்காந்துட்டார்.. மாமி  தான் அதுக்குள்ளெ  தந்தி குடுக்க  ஆளை அனுப்பிச்சுட்டா.. 
 “அண்ணா...நீ  சொல்றதை நம்பத்தான் முடியலே...எதோ ஆண்டவன் இப்படி தாத்தாவை வச்சி கண்ணாமூச்சி ஆடறார்னு நெனைக்கறேன். .என்ன பண்றது?...அதுக்காக   அப்பா  இன்னும் செத்துப்போகலியேன்னு  நாம்ப    அவர்மேல கோவப்படமுடியுமா  என்ன...?  எல்லாத்துக்கும்   நேரம் வரணு மொல்லியோசரி  நான்  அடுத்த ரயில்லையே  கெளம்பறேன்.. சேதியைக் கேட்டா அவர்  ரொம்ப       கோவிச்சுக்கப் போறார்......... 
அம்மாவும் நானும்  திரும்பி சேலம் வந்தோம்.. ரயிலில்வந்து கொண்டி ருந்த போது  நான்  அம்மாவைக் கேட்டேன்.. ஏம்மா....சின்ன வயசுலெ   தாத்தா  நல்லா நடிப்பாருன்னு  சொல்லீ ருக்கயே...இப்பவும் செத்துப் போற  மாதிரி .......?..”
அதிகப்பிரசங்கியா பேசாதடா.....அம்மா என்னைக் கோபித்துக் கொண்டார்
நாங்கள் போய் இறங்கியதும்  அப்பாவுக்கு கடுங்கோபம்..  “ஏண்டீ..ஒங்க அண்ணா  என்ன  பூச்சாண்டி காட்றானா?  வாரத்துக்கு ஒரு தரம் ரயில்கார னுக்கு அழறதுக்கு எங்கிட்டே  அவ்வளவு கொட்டிக் கெடக்கா? அப்படி என்ன அவசரம் தந்தி அனுப்ப?  அடுத்த தரம் தந்தி வரட்டும்.... வந்தா   சுக்கு நூறா கிழிச்சுப்போட்டுடுவேன்...ஆமா....
இரண்டு வாரங்கள் கழித்து  மூன்றாவது தடவையாக  இப்போது தந்தி வந்திருக்கிறது.  .  அப்பா கோபத்தை அடக்கிக்கொண்டு  சற்றும் அக்கறை இல்லாதவர் போல் நடந்துகொண்டார். தந்தியைக் கிழித்துப்போட வேண்டுமென்று அவருக்கு  கை  பரபரத்தது.  அம்மாவுக்கும் சற்று அவ நம்பிக்கையாகத் தான் இருந்தது.  ஆனால் கொஞ்சம்  கவலையாகவுமி ருந்தது.. ஒருவேளை செய்தி உண்மையாக இருந்துவிட்டால்..! அண்ணா  ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி நடந்து  கொள்வானா
 “ என்னாங்க.....தந்தியை  நீங்க  நம்பவேண்டாம் ஆனா  ஒருதடவைஅதைப் பிரிச்சாவது பாக்கக் கூடாதா?  பிரிச்சு பாத்துட்டு  வழக்கம் போல அப்பாவுக்கு அபாயம்னுவந்திருந்தா  கிழிச்சுப்  போடலாமே!  எங்கஅப்பா ஆயுளோட  ஆரோக்கியமா  இருக்கறதுலே எனக்கும்  சந் தோஷம்தான்... தந்தியை பிரிச்சுத்தான் பாருங்களேன்....
சரி...இந்த தடவை  பிரிச்சுப்  படிக்கிறேன்.. இதுதான் கடைசி தடவை.   வழக்கமான   சேதியா இருந்தா நீ மூட்டை  கட்டிண்டு கெளம்பறேன்னு பொலம்பக் கூடாது......அது  நடக்காது... ஆமா.. சொல்லிட்டேன்
  “சரி..சரி...படியுங்கோ!...
 தந்தியைக் அப்பா பிரித்துப் படித்தார்..
படித்தவுடன்  பலமாக  சிரித்துவிட்டார்.  எனக்கும் அம்மாவுக்கும் இது விபரீதமாக இருந்தது.
என்ன  ஆச்சு? ஏன் இப்படி சிரிக்கறேள்?...”
 அப்பாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. தந்தியை அம்மா கையில் கொடுத்துவிட்டு மேலும் சிரித்துக்கொண்டிருந்தார்.
 அம்மா  தந்தியைப் படித்தார்.
 “கமலா...என்னை  நம்பு..    இந்தமுறை நமது  அப்பா   நிஜமாகவே   செத் துப்போய் விட்டார்.... ஏமாற்றவில்லை  உடனே புறப்பட்டு வா .. இப்படிக்கு அண்ணன் ராமு..
 அம்மாவுக்கும்  சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு மரணச்செய்தியை  படித்துவிட்டு   எல்லோரும் சிரித்தது   இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
 என்  தாத்தாவும்  இதைத் தான்   விரும்பினாரோ!