பாம்புக் கதை
வைதீஸ்வரன்
பத்தாவது பரிட்சை முடிந்து விட்டது.. ஆவலுடன் காத்திருந்த கோடை
விடுமுறை ஆரம்பித்துவிட்டது. மனதில் ஒரு துள்ளல். ஊரை விட்டுப் பிரிந்தவர்களுக் குத் தான் திரும்பி ஊருக்கு போகும் போது ஏற்படுகிற இந்த சிலிர்ப்பை உணர்ந்துகொள்ள முடியும்.
நான்
சென்னையிலிருந்து சேலத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.. ஏதோ ஒரு வித ஒவ்வாமையினால் நான் சேலத்தை விட்டு பள்ளிப் படிப்பை சென்னையில் தொடர
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. அப்போது இது மதறாஸ். ..பெற்றோர்களைப் பிரிந்து என் மாமா
வீட்டில் வளர வேண்டிய ஒரு கட்டாயம்.
அதனால் விடுமுறை எப்போது வரும் என்று
எப்போதும் ஒரு ஏக்கம்.. வந்தால் சொந்த
ஊருக்குப் போக ஒரு அவசரம். அப்பா அம்மாவை விட என் சிறு வயது சிநேகிதர்களைப் பார்ப்பதில் தான் சொல்லமுடியாத ஆவல்.....
நான் சேலத்தில் இறங்கினவுடனேயே என் சிநேகிதர்கள் என்னைப் பார்க்க ஓடிவந்துவிட்டார்கள். சென்னையிலிருந்து நான் எப்போதுவந்தாலும் என்னைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஏதோ ஒரு விதமான பூரிப்பு. நான் திடீரென்று சொந்த ஊரைப் பிரிந்துபோய்
பட்டணத்துக்குப்படிக்கப் போனதில் அவர்களுக் குள் ஏதோ ஒரு வருத்தம். அதனால் எப்போதுமே என்னைப் பார்க்கும் போது பாசமும் நெருக்கமும் சற்றுகூடுதலாகவே இருக்கும்.ஒவ்வொரு முறை
சந்திக்கும்போதும் நாங்கள் ஏதோ ஒரு விதமாய்
மாறிக்கொண்டிருந் தோம். இப்போது ராமு சற்று ஒல்லியாக உயரமாக இருந்தான். கனகராஜ் சற்று கறுத்துப்போய் வினோதமாக முடி வெட்டிக் கொண்டிருந்தான்.
அவன் கன்னத்தில் லேசாக கறுப்பு ரோமங்கள்...... ஆறுமுகம் ஸாண்டோ மாதிரி
உடற்கட்டுடன் இருந்தான் அதிகமாக கஸரத் எடுப்பான்
போல...ரங்கராஜு பேசுவதற்கே கஷ்டப்பட்டான்.
குரல் கட்டையாகிக் கொண்டிருந்தது.
நான் போன மறுநாளே நண்பர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டுஎங்கேயாவது சுற்றுலா போக வேண்டு மென்று தீர்மானித்துவிட்டார்கள். அம்மாவிடம் இதைச் சொன்ன போது “என்னடா...வந்து ரெண்டு நாள்கூட
ஆகலே..நான் இன்னும் உன்னை முழுசா பாக்கலை... அதுக் குள்ளே பசங்களோட ஊரைச் சுத்த றேன்னு கெளம்பறே?’என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்டாள்.
“இன்னும்ரெண்டுமூணுவாரம்இங்கே தானே இருக்கப் போறேன்.. .நிதானமாப் பாரேன்...” நான் நண்பர்களுடன் சுற்றுலா கிளம்பி விட்டேன்.
எங்கள் சுற்றுலாக்களுக்கு எப்போதும்பெரிய ஏற்பாடுகள் ஒன்றும் தேவைப்படாது அடிக்கடி ஒவ்வொரு வருடமும் இப்படி திடீரென்று திட்டம் போடாமல் எங்காவது போய்வருவதுவழக்கம்தான்.எங்களுக்குபோவதற்குநிறைய இடங்களுண்டு சேலத்தைச் சுற்றிவரிவரியாக விதவித மாக நிறைய மலைக் குன்றுகள்.. ஏற்காடு...... குமரக் கரடு...... .நாம மலை...பொய்மான் கரடு இப்படி இன்னும் எத்தனையோ.. சின்னக் குன்றுகள்.....
நாங்கள் இப்போது ஏற்காட்டுப் பக்கம் போய்க் கொண்டிருந்தோம் எல்லோ ரிடமும் சைக்கிள் இருந்தது.. ஏற்காடு எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம்
தான் எங்கள் வீட்டு தெற்குப் பக்க ஜன்னலைத் திறந்தால் ஏற்காட்டு மலை
ஜன்னலை அடைத்துக்கொண்டு நீண்டு படுத்திருக்கும் அழகை ரஸிக்கலாம் .இரவில் மலைக் காற்றுஜிலுஜிலுவென்றுவீசும்..எல்லோரும் வீட்டிலிருந்து உணவுப்பொட்டலம் கட்டிக்கொண்டுபோனோம். ஆறுமுகம் சற்றுப் பெரிய டிபன்செட்டை
கொண்டு வந்திருந் தான்.
சைக்கிள்கள் எங்கள் மனம் போலவே சாலையில் மிதந்து பறந்தன . சைக் கிளை மிதிப்பதில் அப்படி ஒரு இளமைக்கே உரித்தான வேகமும் வெறியும். கூடி இருந்தது...மண்சாலைஆனாலும் சக்கரம் சுழல்வதற்குஇதமாக இருந்தது.சாலை யில் ஒருபக்கம் மூக்கனேரி. பரந்து கிடந்தது. தண்ணீர் அதன் கழுத்து வரை அலையடித்துக் கொண்டிருந்தது..மற்றொருபுறம்தலையாட்டும்சோளக்காடு. தென்ன்னந்தோப்பு தானிய வயல்கள் ஏற்றக் கிணறு. அதில் ஏறி இறங்கி வரும்சவலை.மாடுகள். மூலைக்குமூலை விருட் விருட்டென்று கூட்ட மாகப் பறந்து போகும் குருவிக் கூட்டங்கள்... மெல்ல சிவக்கும் வானம்!......
சைக்கிளை மிதிக்க மிதிக்க உடம்பெல்லாம் ரத்தம் பாய்ந்தோடியது. வெது வெதுப்பும் குளிர்காற்றும் எங்கள் மனங்களை
பூரிக்கச் செய்தன. சந்தோஷத்தில்
எல்லோரும் வித விதமான ஸ்தாயியில் மனம் போனபடி கத்திக் கொண்டே வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தோம் அதோ கன்னங் குரிச்சி வந்துவிட்டது..
”ரங்கராஜு “டேய் ...எல்லாரும்..அந்தக் கடை யண்டே எறங்குங்கடா....” என்றான். அது அவனுக்குத்தெரிந்தகடை.அவன் வீட்டுப்பால்காரன்தான் அங்கே பெட்டிக்கடைவைத்திருந்தான். எங்களைப்பார்த்தவுடன் அவனுக்கு குஷி. “என்னடா தம்பிகளா?மலை ஏற வந்தீங்களா ஜாலியா?..” என்றான்.
“அண்ணா...நாங்க இங்கே சைக்கிளை
வைச்சிட்டு சாயங்காலம் வந்து
எடுத்துகிட்டுப் போகவா?” என்றான் ராஜு.
“தாராளமா..... ஆனா பாத்துப் போங்கடா...வெளிச்சத்துக்கு முன்னால கீழெ இறங் கிடுங்க... ‘
“சரி அண்ணா”
நாங்கள் சைக்கிளை வைத்து
விட்டு சோற்றுப்பையை தோளில் போட்டுக் கொண்டு அடிவாரத்தை நோக்கி விறு விறுவென்று நடந்தோம்.
மேலே செல்லும் பாதை மண்ணும் கல்லுமாகத் தான் இருந்தது.. இரண்டு
பக்கமும் புதர்கள்.. திடீரென்று பரந்த சரிவுகளில்
மரக் காடுகள் துள்ளலும் நடையுமாக நாங்கள்
மூச்சிரைக்க ஏறிக் கொண்டிருந்தோம். அரைமணி நேரமாவது ஏறி இருப்போம். உடம்பின்களைப்பைவிடவித்யாசமானமலைக்காட்டுச்சூழலும்மரங்களின் மணமும்திடீரென்றுசத்தமற்றுப்போன வெளியும் எங்களுக்கு வினோதமான சிலிர்ப்பையும் திகைப்பையும்
ஏற்படுத்தியது.. சற்று நேரம் ஏறிய பிறகு அங்கே இருந்த பாறை ஒன்றில் உட்கார்ந்து கொண்டு மூச்சு வாங்கியவாறு கீழே பார்த்தோம் எங்கள் ஊர் கீழே தூரத்தில்
தெரிந்தது.
“நம்ப வீடு தெரியுதாடா....” நான் கேட்டேன்.
“எல்லா வீடும் இங்கெருந்து பாத்தா ஒண்ணாத் தான் தெரியுது “ கனகராஜ் ..சொன்னான். எல்லோரும்சிரித்தோம்...பாறைக்குப்பக்கத்துசெடிகளில்விதவிதமான நிறங்களில் அகலமாகப் பூக்கள் பூத்திருந்தன ஆளுக்கொன்று பறித்துக்கொண்டோம்... உள்ளே இருந்து
விர்ரென்று சிறு வண்டுகள் பறந்து போயிற்று பூக்களை வைத்துக் கொண்டு கூத்தாடி னோம் ராமுவுக்கு திடீரென்று குஷி பிறந்து விட்டது “மன்மத லீலையைவென்றார்உண்டோ?..”என்றுகையில்பூவுடன் கனகராஜைக்கட்டிக்கொண்டுஉரக்கப்பாடி னான் அப்போது ஊரெல்லாம் முழங் கிய பாட்டு...அது... பாட்டு இரண்டு
வரிகளுக்கு மேல் அவனுக்கு வரவில்லை எல்லாரும்
சேர்ந்து பலகுரலில் அந்தப் பாட்டை முடித்து விட்டு பலமாக சிரித்தோம்.
நான் “வாராய் நீ வாராய்...” என்ற மந்திரி குமாரி படப் பாட்டை பாடிக் கொண்டே ராமுவை இழுத்துக் கொண்டு
மலை ஏறினேன்....
“புலி எனைத்
தொடர்ந்தே புது மான் நீயே வாராய்...”
மந்திரி குமாரிபடத்தில் வில்லன் கதாநாயகியை மலை உச்சியிலிருந்து உருட்டி விட
இழுத்துப் போன காட்சியை ஏற்காட்டில் தான் எடுத்திருந்தார்கள்...ஏற்காட்டில் அந்த இடம் சில வருஷங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு பார்ப்பதற்கு ஒரு முக்கியமான இடமாக இருந்தது ...
சற்று தூரம் ஏறிப்போய் நான் ராமுவை தள்ளி விட்டேன் அவன் என்னைத் தள்ளிவிட்டான்....அதற்குள் கனகராஜ்கீழேகிடந்தகுச்சிஒன்றைஎடுத்துக்கொண்டு “டேய்....எங்கிட்டே வாடா...நான்தான் எம்ஜிஆர்...”என்றான். ஆறுமுகம் இன்னொரு குச்சியை எடுத்துக் கொண்டான்..அவன் நம்பியாராகி விட்டான் நான் “டாண் டீன் டாண் டீன் “என்று கத்தி சண்டைக்கு பின்னொலி கொடுத்தேன் சண்டை மிக உக்கிரமாகப் போய்க்கொண்டிருந்த்து.. இருவரும்
சுற்றி சுற்றி வந்தார்கள் எம்ஜி ஆர் நம்பியாரை பாறை ஒன்றில் சாய
வைத்து குச்சியை அவன் கழுத்தில் வைத்து
அழுத்திக் கொண்டிருந்தார்...
இரண்டு பேரும் நிஜமாகவே உக்ரமாக மாறி விட்டார்களோ என்று லேசாக பயம்வந்துவிட்டது.ஆறுமுகம்கோபமாகபல்லைக்கடித்துக்கொண்டிருந்தான். நான்
“இன்டெர்வெல்...இன்டெர்வெல்...” என்று கத்தினேன்....
“ஏண்டா...தம்பீங்களா....என்னடாஇங்கே மலங்காட்டுலவந்து ஆட்டம்போட்றீங்க...” குரல் கேட்டு திரும்பினோம் விறகுச் சுள்ளிகளை தலையில் சுமந்து கொண்டு இரண்டு குடியானப் பெண்கள் கீழே இறங்கிவந்து கொண்டிருந்தார் கள் நாங்கள் குச்சிகளைப்போட்டு விட்டு சிரித்தோம்...
“தம்பீங்களா...மேல மழை வரும் போல இருக்கு... உச்சிக்கு போகாதீங்க.....பொழுதுக்கு முன்னால கீழெ எறங்கிடுங்க....”
“பசங்களுக்கு நல்ல தகிரியந் தான்...” ஒருபெண் என் கன்னத்தைக் கிள்ளி விட்டு சிரித்துக் கொண்டே கீழே இறங்கினாள்.. நான் அவள் இடுப்பைக் குலுக்கியவாறு சரிவில் இறங்கி நடப்பதை
பார்த்துக்கொண்டே நின்றேன்...மனம் இனம் புரியாமல் குறுகுறுத்தது.
“டேய் வாடா...போகலாம்..”என்றுஇழுத்தான்ராமு.எங்களுக்குபசித் தது. சாப்பிடுவதற்கு இடம் தேடி இன்னும் சற்று தூரம் மலை ஏறினோம். சற்று தூரத் தில் ஒரு ஒற்றையடிப் பாதைஇடதுபக்கமாகத்திரும்பியது.நாங்கள்அதைத்தொடர்ந்து கொஞ்சதூரம்சென்றோம். இரண்டுபெரியமரங்கள் பரந்த நிழல் பரப்பிக்கொண்டு . குளிர்ச்சியாக பசுமையாக இருந்த்து.... காய்ந்தும்
காயாமலும் இலைகள் தரையில் பட்டுப்பாய் போல்
மெத்தென்று விரிந்து கிடந்தன. சாப்பிடுவதற்கு
அருமையான இடம்..
சோற்றுப் பொட்டலங்களைப் பிரித்தோம். வீட்டிலிருந்துபெயர்ந்து வந்துஇந்தமாதிரி அன்னியமான காட்டுநிழலில்உட்கார்ந்துசாப்பிடும்போது அதன்ருசி பன்மடங்காகஇருந்தது. சாப்பிட்ட பிறகு தான் எங்களுக்குத் தண்ணீரைப் பற்றிய ஞாபகம் வந்தது. தொண்டைஅடைத்தது.உடனடியாகதண்ணீர்குடித்தாக வேண்டும் வீட்டிலிருந்துகிளம்பும்போது அப்போது அவ்வளவு முன்னெச்சரிக்கைகள் எடுத்துக்கொள்வதில்லை. ஆறுமுகமும்கனகராஜுவும்மூலைக்குமூலை போய்த்தேடிவிட்டுவந்தார்கள் சிலஇடங்களில் சுனைநீர்மலைமேலிருந்துகீழே கொட்டிக் கொண்டிருக்கும் நானும் ராமுவும் இன்னொரு பக்கம் போனோம்... அங்கே பெரிய கிணறு போல பள்ளம் தெரிந்தது... இலைச் சத்தைகள்
நிறைய மிதக்க அந்த பள்ளத்தில் தெளிவான தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. அதிக ஆழமில்லாவிட்டாலும் தண்ணீர் எங்கள் கைக்கெட்டாத ஆழத் தில் இருந்தது...நான் எல்லோரையும் கூப்பிட்டேன் “இவ்வளவுகீழே இருக் கேடா ? எப்படி தண்ணியை இழுக்கறது?”. எல்லோரும் யோசித்தோம்..
நான் என் சட்டையைக்
கழற்றினேன். கனகராஜு பனியன் போட்டிருந் தான்... .அவன்அதைக்கழற்றினான்..ஆறுமுகம்டிபன்பாக்ஸ் கொண்டுவந்த நீளமான பையைக் காட்டினான் ராமுவிடம் கைக்குட்டை இருந்தது.... எல்லாவற் றையும் நீளமாக வைத்து முனைகளில் முடிச்சுப் போட்டோம். ஆறுமுகத்தின் டிபன் பாக்ஸ்
கொக்கியை ஒரு முனையில் கட்டினோம்..
மெதுவாக அதை பள்ளத்துக்குள் இறக்கிப் பார்த்தோம்..டிபன்பாக்ஸ்நீர்மட்டத்தைத்தொடுவதற்கு இன்னும்அரைஅடிநீளமாவதுதேவையாகஇருந்தது.நாங்கள்ஏமாற்றமுடன் காலி டிபன் பாக்ஸை மேலுக்குஇழுத்தோம்..எனக்கு
தாகம் பொறுக்க வில்லை. நாக்கு உலர்ந்து ஒட்டிக்கொண்டது. ..நான் இடுப்பை
சொறிந்த போது எனக்கு அது மனதில் தட்டுப்பட்டது. நான் ஒதுக்குப் புறம்போய் இடுப்பிலிருந்த என் அரணாக் கயிற்றை
முடிச்சவிழ்த்துக் கொண்டு வந்தேன் இப்போது கட்டிய
போது நீளம் சரியாக இருந்த்து. டிபன் பாத்திரத்தில் தண்ணீரை இழுத்து இரண்டு மூன்று
மிடறு குடித்தோம்...ஆறுதலாக இருந்தது.....
எல்லோரும் சற்று நேரம் அப்படியே
மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்....திடீரென்று
கூட்டமாக மேகங்கள் திரண்டு வானத்தை
அடைத்துக் கொண்டது பறவைகள் கூட்டமாக பறந்து கடந்தது. எல்லோரும் உட்கார்ந்து கொண்டோம்.. .
கனகராஜுஎழுந்திருந்து கிணற்றைக்குனிந்து பார்த்தான்.“ஏய்இது நல்லதண்ணி தானே! ஏதோ அவசரமா குடிச்சுட்டொம்...”அவனுக்கு திடீரென்று ஒரு சந்தே கம்..
“ஏண்டா...அப்படி நெனைக்கிறே? அதெல்லாம் நல்ல தண்ணீயாத் தான் இருக்கும்...”ஆறுமுகம் சொன்னான்.
“மீண்டும் நாங்கள் எல்லோரும் குனிந்து பார்த்தோம். இப்போது தண்ணீரைப் பார்க்கும் போது சற்றுக் கலங்கலாக தெரிந்தது. உள்ளே காட்டுச் செடிகள்
பக்கவாட்டில் நிறைய மண்டிக் கிடந்தன. மேலே மேகங்கள் சூழ்ந்து வெளியெங்கும் இருள் மூண்டு கொண்டிருந்தது.
“ டேய்.....டேய்....அங்கெ உள்ளே பாருடா.....” கனகராஜு பலமாகக் கத்தி
னான். நாங்கள் அத்தனை பேரும் உன்னிப்பாக உள்ளே பார்த்தோம்.
தண்ணீரில் இரண்டு பாம்புகள் மிதந்து நெளிந்து
சுற்றிக் கொண்டிருந் தன... “அய்யோ....பாம்புடா...”என்றுநான்கத்தினேன்...வானில்திடீரென்று இடிஇடித்தது. நாங்கள் நடுங்கினோம்.சுற்றுப்புறம்மேலும் இருண்டு கொண்டிருந்தது...
“அய்யோ...இந்த தண்ணியைத்தானே நாம்பஎல்லாரும்குடிச்சிருக்கோம்...பாம்புஇருக்கே!! ஒருவேளைதண்ணிலேவெஷம்கக்கிஇருக்குமோ?...”ராமுபதற்றமுடன் கேட்டான்..
“தண்ணிலெ வெஷமெல்லாம் இருக்காதுரா!......” நான் சொன்னேன்.
“ஏன்இருக்காது? எங்க பாட்டிசொல்லியிருக்காடா......அந்தக்காலத்துலேகாளிங்கன்னு ஒரு பெரிய பாம்பு ஆற்றுக்கு அடியிலே பதுங்கிண்டு விஷத்தைக் கக்கி நீர் குடிக்க வந்தஆடுமாடுகன்னுஊர்ஜனங்கள்எல்லாரையும் நாசமாக்கியதுன்னு சொல்லீருக்காடா..... “ ராமு சொன்னான்...
அது கதைடா...” என்றான் கனகராஜ்.
“கதைன்னாலும் இப்போபாம்பைப் பாக்கும்போது பயமா இருக்குடா”, என்றான் ஆறுமுகம்.
“டேய் .அப்போ நாம்ப எல்லாரும் செத்துப் போயிடுவோமோ?. “ ராமு குரல் நடுக்கத் துடன் என் தோளைப்பற்றிக்கொண்டு கேட்டான்.. அவன்எப்போதும்
கொஞ் சம் பலஹீனமான
சுபாவமுள்ளவன் .
“செத்துப்போறதுக்குள்ளே வீட்டுக்குப்போயிடமுடியுமாடா?“ தழுதழுத்தான் ஆறுமுகம்.
ஒருவரை ஒருவர்
திகிலுடன் பார்த்துக் கொண்டோம்.
“டேய்...
பயப்படாதடா.....அப்படி ஒண்ணும் ஆகாது....தண்ணி குடிச்சி இவ்வளவு நாழியா நமக்கு ஒண்ணும் ஆகலியே! “ நான் பயத்தை மறைத்துக் கொண்டு சமாதானம் சொன்னேன்...
ஆனாலும் எனக்கும் காட்டுக் கிணறுகளை பூதம் காத்த கதைகளும் நீருக்குள் முளைத்த விஷ செடிகளை
மாடுகள் தீண்டிவிடுவதால் இறந்துபோனதாக கேட்ட சேதிகளும் நினைவுக்கு வந்தன.
“டேய்வாங்கடா...போயிடலாம்....”என்று நான் பரபரத்தேன். பாம்பைப்பற்றிய அச்சம் எனக்குள்ளும்துளிர்த்தது.மறுபடியும்நாங்கள்கிணற்றுக்குள்எட்டிப்பார்த்தோம் இப்போதுபாம்புகளைக் காணவில்லை...பயம்இன்னும்அதிகரித்தது “சீக்கிரம்டா... சீக்கிரம்.. நாம்ப இங்கேயிருந்து ஓடிடுவோம்...” ராமு அவசரப்படுத்தினான்.
எல்லோரும் அவரவர் சட்டை பனியன்களைப் போட்டுக்கொண்டோம். நான்
அரணாக் கயிற்றை இடுப்பில் மீண்டும் கட்டிக்கொண்டிருந்தேன்.
அப்போது “டேய்....டேய்......டேய்....” என்று கனக ராஜு குரலை எழுப்பாமல் தொண் டைக்குள் சப்தம் கொடுத்தான்.. நாங்கள் அவனைப் பார்த்தோம். அவன்
தரையைப் பார்த்து ஜாடை செய்தான். கிணற்றுக்குள் நாங்கள் பார்த்த அதே பாம்பு சர சர வென்று கிணற்றின் பக்க வாட்டுப் பாறைகளில் ஏறி பொந்து
வழியாக நுழைந்து மேலே மெள்ள வந்து
கொண்டிருந் தது... மேலே தரைக்கு வந்து
எங்கள் கால்களுக்கிடையில் நுழைந்து ஈரமாக மின்னல் நெளிந்தது போல் நிதானமாக ஊர்ந்து மூலைப் புதருக்குள் மெள்ள சென்று மறைந்தது..
எங்களுக்கு .நெஞ்சு படபடத்தது..... அன்று வரை பாம்பை அவ்வளவு
அருகாமையில் நான் பார்த்ததில்லை.பயம் எங்களை சற்று நேரம் மண்ணுக்குள்
நட்டு வைத்தது போல் கால்களை நகர்த்த முடியாமல் இறுகிப் போயிற்று.. நாங்கள் உறைந்து போனோம். ராமு வாயைப் பொத்திக் கொண்டு அலறி அழுதே விட்டான்... “
“டேய்..கத்தாதேடா.....சத்தம்போட்டா பாம்பு நம்பளைத்துரத்தும்..சீக்கிரம் வாங்கடா ...ஓடிடுவோம்...” நாங்கள் பரபரவென்று
சருகுகளை மிதித்துக் கொண்டு ஒற்றையடிப் பாதை வழியாக வெளியே ஓடினோம்.. திடீரென்று
மழை மேலும் வலுத்துவிட்டது... காட்டு மழை. நாங்கள் பீதியும் அவதியுமாக கீழே இறங்கும் மண்பாதை யில் குதித்துக்குதித்து வேகமாகஇறங்கினோம் ஈரமும் சேறுமாக பாதை பல இடங் களில் எங்களை சறுக்கித் தள்ளப் பார்த்தன. அச்சம் எங்களை மேலும் மேலும் நெட்டித் தள்ளிக்கொண்டேஇருந்தது.அடிவாரம்வரை நிற்காமல்மூச்சிரைக்கஓடிக்கொண்டேஇருந்தோம்.ஒருவாறு அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம். நெஞ்சு பதைபதைத்து விம்மிக் கொண்டிருந்தது. வயிற்றை சுருட்டிவலித்தது...
நாங்கள் மேலும் ஓட இயலாமல் தள்ளாடி சோர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம்.
இப்போது மழை குறைந்து லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.... .கன்ன்ங் குரிச்சியில்
அந்தக் கடையில் எங்கள் சைக்கிள்கள் மழையில் நனைந்த வாறு சாய்ந்து கிடந்தன. காற்று வேகமாக அடித்திருக்கலாம். நாங்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டுவிரைவாகக் கிளம்பி னோம். மழைக்கு ஒதுங்க இடம் இருந்தாலும் நிற்பதற்கு அச்சமாக இருந்தது...ஏதோ ஒன்று எங்களைத்
துரத்தி வருவதாக ஒரு பிரமை...நாங்கள் வேகமாக சைக்கிளை மிதித்தோம்.
ஊருக்குள் போகப் போக இருள் குறைந்து மாலையில் ஊர் வெளிச்சமாக இருந்தது. மூச்சி ரைப்பு சற்று ஆறி அடங்கி பயம் தெளிந்தமாதிரி இருந்தது. அப்பாடா...வீடு
வந்து சேந்தாச்சு....
எல்லோரும் சைக்கிளை நிறுத்தி
இறங்கி விடைபெற்றுக் கொண் டோம். “நாளைக்குப் பாக்காம்டா...” என்றேன் நனைந்து சொட்டிய சட்டை யைப் பிழிந்து
கொண்டே...
ராமு என்னிடம்
நெருங்கி வந்து “ இன்னும் எனக்கு பயமாத் தாண்டா இருக்கு....குடிச்சது
விஷத் தண்ணியா...........”
“ஒண்ணும்
பயந்துக்காதடா...நாளைக்கு நிச்சயமா பாப்போம்...”
*************************
வீட்டுக்குள் நுழைய நுழையஎனக்குஉடம்புவெடவெடவென்று நடுங்கியது.அம்மா கவலையுடன் வாசல்திண்ணையிலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்..“ஏண்டா...இப்படிஎல்லாம் ஊரைசுத்திட்டுதொப்பறயாவரணுமா? உள்ளெவந்து தொடைச்சுக்கோ!...”
அன்று இரவு சாப்பிட்டு விட்டு சீக்கிரமே படுத்துக் கொண்டு விட்டேன்.. சாப்பிடும்போது கூட
என் நினைவுகள் அந்தக் காட்டுக்கிணற்றையே சுற்றிக் கொண்டிருந்தது.
அம்மா என் படிப்பைப்பற்றி
பட்டண வாசத்தைப் பற்றி பள்ளிக்கூடத்தை
பற்றி என்னென் னவோ கேட்டுக் கொண்டிருந்தாள்... அரை குறையாகத் தான் பதில்
சொல்லிக்கொண்டிருந் தேன்...
“என்னடா....மத்யானமெல்லாம்மலைஏறிசுத்தினாஇப்படித்தான் அசத்தும்....தூங்கு...” அம்மா விளக்கை அணைத்தாள்.
விளக்கு அணைந்தவுடன் எனக்குள் ஏதோ விழித்துக்கொண்டது போல் தோன்றியது. உடம்பு. வினோதமாக
குளிருக்கும் சூட்டுக்குமாக மாறிக் கொண்டிருந்தது. கால்கள் தன்னிச்சையாக புரண்டு புரண்டு ஆடிக் கொண்டிருந் தது.
ஞாபகங்கள் உண்மையும்பொய்யுமாககுழம்பி ஏதேதோதொடர்ச்சியற்ற சம்பவங்கள் மின்னி மின்னி மறைந்து கொண்டே இருந்தன.. என் கன்னத்தைக் கிள்ளிய அந்தக் குடியானவப்
பெண்..பக்கத்தில் வந்து சிரித்தாள்..மேலும்
என்னென்னவோ சேஷ்டைகள் செய்தாள். .நான் கோபத்தில்
அவளை விரட் டித் தள்ளிவிட்டேன். ..அப்போது தெருக்களில் நான் அடிக்கடி பார்த்து வெட்கப் பட்டு சிரிக்கும் அந்த இரண்டு நாய்கள்.. எனக்கெதிரே வந்து இழுத்துக்கொண்டே
என்னை சுற்றிச்சுற்றி
வந்தன...நான் அதைத் துரத்திக் கல்லடித்தேன். அவைகள் என்னைத் துரத்தி வந்தன. திடீரென்று அங்கு ஒரு குட்டைக் குதிரை வந்தது. அதில் சடாரென்று ஏறிக் கொண்டு நான் குதித்துக் குதித்து சவாரி செய்கிறேன்..
ஊரெல்லாம் சுற்றுகிறேன்.. ஆனந்தமாக இருக்கிறது..
குதிரை எங்கோ ஒரு மலைக் கோவில்
பக்கத்தில் போய் நிற்கிறது... கோவிலில் உத்ஸவம் சாமி ஊர்வலத்தில் பயங்கரக் கூட்டம். கூட்டத்தின் நெரிசலில் நடுவில் நான் எப்படியோ சிக்கிக்கொண்டுவிட்டேன் எனக்குப் பின்னால் என் சின்ன வயது பள்ளித் தோழி
ஒருவள் என்னை நெருக்கிக்
கட்டிக்கொண்டு கழுத் தில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறாள். .அவளைத் தவிர்க்கமுடியவில்லை. லை. மனதுக்கு இன்பமாக இருந்தது. .காண்டா மணிகள் உயரே ஆடி
ஆடி இடித்துக்கொள்ளுகின்றன. வேதகோஷங்கள்திடீர்
திடீரென்று உச்சஸ்தாயியில் மாறி ஒலித்து என்உடம்பைமனதையும் சிலிர்க்கவைக் கிறது..நான் அங்கிருந்து எப்படியோ வெளியேறி மாலையில் நாங்கள்
போய் பயந்து ஓடி வந்த அந்தக் காட்டுக் கிணற்றருகில் நிற்கிறேன். ...
எனக்குத் தப்பித்து ஓட வேண்டுமென்று கால்கள் பரபரக்கின்றன. ஆனால்
முடியவில்லை.
எனக்குக் கீழே தரையில் சருகுகளைத் தடவிக்கொண்டு அதே ஈரப் பாம்பு என் காலருகில் நெருங்கிவருகிறது. வட்டமாக சுருண்டு
தலைதூக்கிப் படமெடுத்து ஆடுகிறது... நாக்கை நீட்டி நீட்டி என்னை ஈரப்படுத்துகிறது.. வாயை அகலத் திறந்து உஷ்ணமாக சீறிக் கொண்டே விஷத்தைக்
கக்குகிறது...விஷம் கொப்ப ளித்து என் கால்களில் வழிகிறது.. நான் கூசி கூசி நகருகிறேன். பாம்பு மெள்ள படத்தை
சுருட்டிக்கொண்டு வாலை ஆட்டியவாறு
புதருக்குள் சென்று மறை கிறது...
நான் சோர்ந்துபோய் ஒரு பாறையைப் பிடித்து சாய்ந்து கிடப்பது போல் தோன்று கிறது. உடம்பெல்லாம் நனைந்து சொட்டியது போல் பிரமை.. .இந்த விபரீத கனவு களிலிருந்துமீண்டுஎப்போதுதூங்கிப்போனேன்என்று நினைவில்லை. வெகு நேரம் தூங்கி இருப்பேன்.
கண்விழித்தபோது நன்றாக விடிந்து போய்விட்டது. என் போர்வை விரிப்புகள் எல்லாம் போர்க்களம் போல் இங்குமங்கும் சிதறிக் கிடந்தன... கூடத்து மூலையில்
எறும்புகள் சாரி சாரியாக ஊர்ந்து கொண்டிருந்தது.
நான் எழுந்துஉட்கார்ந்து என்னைஅரற்றிய மோசமானதூக்கத்திலிருந்து விடு பட்டு சகஜ மாவதற்கு சற்று நேரம் பிடித்தது..
“என்னடா......இன்னிக்கு
இவ்வளவு தூக்கம்?” என்றாள் அம்மா என் தலையைத் தடவி விட்டுக் கொண்டே...அவள் ஸ்பரிசம்
எனக்கு சுகமாக இருந்தது. . கையில் காபி கொண்டு
வந்திருந்தாள்.
********************************
நான் விடு முறை கழிந்து மீண்டும் சென்னைக்குப்போகும்போது இந்த
முறை அப்பா எனக்கு டிராயருக்குப் பதிலாக பேண்ட் வாங்கிக்
கொடுத்தார்.
அது தான் நான் முதன்முதலாக அணிந்து கொண்ட பேண்ட். எனக்குப் பெருமையாக இருந் தது. சென்னையில் தோளில் பையும் கைப்பெட்டியுமாக மாமா வீட்டுக்குள்
நுழைந்து “மாமீ...” என்று குரல் கொடுத்தேன்..
கைக்காரியமாக இருந்த மாமி உள்ளேயிருந்து வெளியே வந்து என்னைப் பார்த்தவுடன் அன்புடன் “வா“ என்று சிரித்தாள். நான் பேண்ட் போட்டுக் கொண்டிருப்பதைமுதல் முதலாகபார்த்ததால் அவளுக்கு சற்று வியப்பாக இருந்தது..
“ என்னடா.........பெரியவனாயிட்டயா!!!!! “ என்றாள்.
நான் அப்போது தலையை எப்படி எந்த விதமாக ஆட்டினேன் என்பது இப் போது எனக்கு நினைவில் இல்லை.