vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, October 13, 2016

அசந்தர்ப்பம் - வைதீஸ்வரன்

        அசந்தர்ப்பம் 
வைதீஸ்வரன் மேம்பாலத்தை  விட  சுரங்கப் பாதையில்வாகனம்  ஓட்டுவது  சிக்கலானது. . அப்படித்தான் தோன்றிற்று.  அவனுக்கு,  வண்டியின்  இரண்டு சக்கரங்களும் இரட்டைகளைப் போல் மிகவும்  ஒற்றுமையான  வேகத்தில் தரையைத் தொட்டும்  தொடாமலும்  சுற்றியது  போல் இருந்தது பூமியை  சீண்டிக்  கொண்டே  பாயும் வேகத்தில்  மனம்  மிதக்கிறது .

 இந்த சுரங்கப் பாதையில்  இறங்கி   ஏறித்  தாண்டி விட்டால் பிறகு  இரண்டு  மூன்று  குறுக்கு சந்துகளில் வளைந்து நுழைந்து   பெரிய  தெருவுக்குள்  திரும்பி  விட்டால்  வந்து விடும்  அந்தப்  பெரிய  ஆஸ்பத்திரி.

  அந்த ஆஸ்பத்திரியை  அவன்  இதற்கு  முன்பு  எத்தனையோ தடவை  கடந்து போயிருக்கிறான். அப்போதெல்லாம்  அது ‘வெறும்” ஆஸ்பத்திரியாக  இருந்தது.  ஆனால்  இன்றைக்கு  அது  அவனுக்கு ஒரு  தாயார்  மாதிரி.  ஒரு  பரந்த கருணையுடன்  அரவணைக்கும்  ஆலமரம்  மாதிரி. இன்று அவனுக்காக  அது  காத்திருப்பதாகத்  தோன்றியது..!!

  அவனுடைய  இரண்டு பிஞ்சுக்குழந்தைகள்  அங்கே  சின்னக் குழாய்களைப் பொருத்திக்  கொண்டு  மூடிய கண்ணாடிப் பேழைக்குள் உயிர்த் துடிப்புடன் தூங்கிக்  கொண்டிருக்கின்றன..  பிறந்து  சில மணி நேரம் தான்  ஆகி இருந்தது.
  வீட்டில்  தொலை பேசியில் செய்தி கேட்டவுடன் அவனுக்கு  சந்தோஷமும்  துக்கமுமாக  மனசும்  உடலும் பரபரத்தது.  சில நிமிஷங்கள்  அவன்  என்ன செய்தானென்றே  நிதானிக்க  முடியாமல்  இருந்தது. அப்படி  ஒரு  பரபரப்பு.  ஒரு  குட்டிக் கரணம் போட வேண்டுமென்று தோன்றியது. இரண்டு மூன்று முறை  காற்றைக்  குத்தினான்! சுவற்றில் மாட்டியிருந்த  மனைவியின் போட்டோவைத் தூக்கிக் கொண்டு  சுற்றி சுற்றி  வட்டமிட்டான்.

  முத்தமிட்டான். சமையலறை  அலமாரியைத் திறந்து  அரிசியை இரண்டு கைகளிலும் வாரிக் கொண்டு  வந்து  வீட்டின் கொல்லை வெளியில் எறிந்தான். “ஹாஹ் ஹா..”  என்று  மரங்களில்  வேடிக்கை பார்க்கும்  காக்கைகளைப்  பார்த்து  சிரித்தான்.

  பரபரப்பு அடங்கி  அவன்  மீண்டும்  இயல்பாகி  வழக்கமான  இறுகிய  முகத்துடன் ஆஸ்பத்திரிக்கு  கிளம்புவதற்கு  அரை மணி  ஆகி விட்டது.  சாலையில் அதிக வாகனங்கள்  இல்லை. இருந்தாலும் அவைகள் அவனை சுலபமாக ஓட்ட முடியாமல் தடங்கல்  செய்வது  போல்   ஆத்திரப் படுத்தியது.. ஆனாலும் மசிந்து அவன் வேகத்தைக்  குறைக்க விரும்பவில்லை.

   அதே சமயம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று விட்ட  மகா  அசதியுடன்   அந்த மகா வலியைப் பொறுத்துக் கொண்டு  கணவனின் வருகைக்காக  காத்துக்  கொண்டு கண் மூடிப் படுத்திருக்கும் அவன் மனைவியின் முகம்  அவனைப்  மேலும்  பறக்க வேண்டும்  என்று துரத்தியது..

   அவன் மனோ வேகத்துக்கு சமமாக வாகனத்தை ஓட்ட முயன்றான். சுரங்கப்  பாதையை அருகி விட்டாலே  ஆஸ்பத்திரியை  நெருங்கி விட்டது போல்  தான்......... இதோ வந்து  விட்டது...

     சுரங்கப் பாதையின்  இறக்கம்  இன்று மேலும்  இறக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது.  இறக்கம் முடிந்து மேலேறும் போது வாகனம் ஒரு துள்ளுத்  துள்ளி எம்பியது போல்  எழுந்து  இறங்கியது. . அந்தத் துள்ளல்  அவனுக்குள்  சிரிப்பை வரவழைத்தது.  தனக்குத்  தானே சிரித்துக்  கொண்டான்.  ஒரு அம்பின் வேகத்தில் அவன் பாலத்தின் மேலேறியிருந்தான்.

. அப்போது  நிதானமாக இடது பக்கத்திலிருந்து  திரும்பிய  ஒரு பெரிய சுமை லாரியை அவன்  வாகனம்  கவனிக்கவில்லை.!!.......................

 லாரிக்கடியிலிருந்து வந்த   ‘அம்மா..’ ....என்ற முனகல் அந்தக் கணத்திலேயே காற்றோடு போய் விட்டது.

அங்கே கடந்து போனவர்கள்  என்ன நேர்ந்தது என்று அனுமானிப்பதற்கே  பல நிமிஷங்கள்  ஆகி இருக்கலாம். மல்லாந்து ஓரமாக நொறுங்கிக் கிடந்த வாகனத்தின் ஒரு சக்கரம் மட்டும் வேகமாக  தன்னந்தனியாக  சுற்றிக் கொண்டிருந்தது..

   ஆஸ்பத்திரி  பிரசவ வார்டில்  படுக்கையிலிருந்து இரண்டு முறை கைகளை  ஊன்றிக் கொண்டு எழுந்திருக்க  முயற்சி  செய்து  மீண்டும் விழுந்தாள்  அவன் மனைவி..   நாலாவது  கட்டிலிடம் நின்று கொண்டிருந்த  வயதான  நர்ஸ் ஒருவள்  அதைக் கவனித்து  அவள் அருகே வந்து  நின்று பார்த்தாள்.

 “என்னம்மா..கண்ணூ..?  இப்ப  நீ எழுந்துருக்கக் கூடாதும்மா...  கொஞ்ச  நேரம் பொறுமையா  இரு..”  என்று  பரிவுடன் நெற்றியைத்  தடவி  போர்வையை சரி செய்து  விட்டாள்.

  மனைவியின் பார்வை  நாலாபக்கமும்  அலைந்து கொண்டே இருந்தது. கதவுப் பக்கம் பார்த்தது. ஜன்னல் வழியே  தெரிந்த வெளியைப் பார்த்தது. . அவள் கைவிரல்கள்  போர்வையைப் பிறாண்டிக் கொண்டிருந்தன. உதடுகள்  பேசுவதற்கு  நடுங்கியது.

  “ என்னாம்மா?.......”

“ இல்லே  அவர் எங்கே?  அவரு ஏன்   வரலே?...இன்னும்  ஏன்  அவர் வரலே?.. அவரைப்  பாக்கணும்..”   வாய் லேசாக  முணகியது.

   “வந்துடுவாரும்மா..........போன் பண்ணியிருக்கேனே!...........”

“ இல்லே  ஒரு வேளை... அவரு  வர மாட்டாருன்னு  நெனைக்கிறேன். ...!
“ஏன்  அப்படி  சொல்றே? “...........

“   ரெட்டைக் குழந்தை பொறந்ததுலே  அவருக்கு  கோபமா  இருக்கலாம்!”  “
  “ அப்படிப் பேசாதே கண்ணு....அவருக்கு என்ன கோபம்?. அவருக்கு தெரியாதா  என்ன?   நான்  போய் மறுபடியும் போன் பண்ணிப் பாக்கறேன்..  நீ  பேசாம படுத்துக்கோ! “

 மனைவி மேலும் சொன்னாள்..

 “ இல்லே... ரெட்டையின்னாலும்  பொறுத்துக்கலாம்.... எனக்கு  பொறந்துருக்கறது  ரெண்டும்  ஒரே  மாதிரி..  “பாமா.....ருக்மணி...  .
  “ இதுக்காக  அவரு யாரு மேலே  கோபப் படுவாரு  கண்ணூ?.. சும்மா எதையாவது நெனைச்சிக்காதே .. நான்  இப்போ போய் கெளம்பிட்டாரான்னு  மறுபடியும் போன் பண்றேன்..”

“ இல்லே ஸிஸ்டர்.. வேண்டாம்... மறுபடியும்  எதுக்கு  போன் பண்ணணும்?  அவரே  வரட்டும்.  கோபம்  தணிஞ்சு  எப்படியும் அவரே  வந்துடுவார்... அவரு வர்ர வரைக்கும்   நான்   என் கொழந்தைகளைப் பாத்துகிட்டு இருக்கேன். ...கொழந்தைகளை  கொண்டு வாங்க.....”  என்றாள் மீண்ட நம்பிக்கையுடன்..

  அவள்  நம்பிக்கை  சிதறி போகும்  அந்த  அதிர்ச்சியான  கணம்  மெள்ள  நெருங்கிக்  கொண்டிருந்தது.   .

No comments:

Post a Comment