பஞ்சான
பாறாங்கல்
கண்களைத் திறந்து
பார்த்தேன். ஒரே
கும்மிருட்டு. வெளி
முழுதும் என்னை சுற்றி இருட்டு
அப்பிக் கிடந்தது. ஏதோ
பாதாள குகைக்குள் நான் சிக்கிக்
கொண்டது போல் இருட்டுக்கு
இரையாகிக் கிடந்த உயிராக
உட்கார்ந்திருந்தேன்.
சில வினாடிகள் கூட
சில யுகமாகத் தெரிந்த உணர்வு.
இந்த குருட்டுச்
சிறையிலிருந்து தப்பிக்க
முயலும் முயற்சியையும் கை
விட்டேன். அர்த்தமற்றுப்
போன என் விழிகளை அகல விழித்தவாறு
அமைதியை என் போர்வையாக்கி
அமர்ந்திருந்தேன். உலகம்
நிச்சயமாக சுற்றிக் கொண்டு
தான் இருக்கிறது. எல்லாமே
எல்லாக் கணமும் மாறிக் கொண்டே
தான் இருந்தாக வேண்டும்.
என் கண்களின் மேல்
திரையை மெல்ல அசைத்தது போல்
ஒரு அசைவு. இருட்டு
இப்போது அத்தனை அடர்த்தியாக
இல்லையோ! ஏதோ ஒரு
சின்ன மென்மையான மாற்றம்.
என்னை சுற்றி இருந்த
அறைச் சுவர்கள் மிதக்கும்
துணிகளைப் போல் லேசான ஒரு
பிரமை. மூலையில்
இருந்த நாற்காலியில் இரண்டு
கால்கள் மெதுவாக தோற்றம்.
உயரே மூடிய ஜன்னல்
துளையிலிருந்து ஆடும் அகல்
ஒளி போல் ஒரு படரும் வெளிச்சம்
கீழே பார்த்தேன். தரையின்
மொசெய்க் கோடுகள் தானாக தெரிய
ஆரம்பித்தன. இப்போது
கிழே வைத்திருந்த கூஜாவும்
கிண்ணமும் என் அம்மாவின்
சின்ன உருவப் படமும் ….நிலைக்
கதவும் செல்லும் வழியும்
இப்போது என் கை ரேகையும்
படுக்கையில் இரைந்திருந்த
புத்தகங்களும் இப்போது
எல்லாமே எப்போதும் போல் தெரிய
ஆரம்பித்து விட்டன.
அந்த
இருண்ட பாறாங்கல் என்னவாயிற்று?
யார் அதை உடைத்து
பஞ்சாக்கி ஒன்றுமில்லாமலாக்கி
அப்புறப் படுத்தினார்கள்?
அமைதியாய் இருந்ததைத்
தவிர என்னால் என்ன செய்ய
முடிந்தது? ஒரு
வேளை நம்மை சுற்றி இறுக்கும்
இருட்டு விலக இது தான் நமக்கு
தரப்பட்ட ஒரே மனவிழிப்போ?
வாழ்க்கையில் துன்பங்களும்
அப்படிப்பட்ட இருட்டு
தான்..என்று தோன்றியது.
. தானாக நம்மை சூழ்ந்து
கொண்டு தானாக நம்மை விட்டு
விலகக் கூடியது தான்.என்று
மனம் உணர ஆரம்பித்தது.
அமைதியாக
விழிப்புடன் சலனமற்று சும்மா
இருப்பது தான் அதற்கு தீர்வு
என்று எனக்குள் ஒரு வெளிச்சம்
நேர்ந்ததை இன்று விடியலில்
கண்டுணர்ந்தேன்.. எல்லா
இருட்டுக்குள்ளும் நிச்சயம்
ஏதோ ஒரு சூரியன் மறைந்து
கொண்டிருக்கிறான்!
- கவிஞர் வைதீஸ்வரன்,
18 டிஸம்பர் 2018
__________________________________________________________________________________________