vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, July 3, 2018

மாய வேலி - வைதீஸ்வரன்


மாய வேலி

வைதீஸ்வரன்
amrutha  July  18
 










எங்களுக்கு பள்ளி விடுமுறையென்றால் எங்கள் பெற்றோர் சொன்னது போல் நாங்கள் ""அவிழ்த்து விட்ட கழுதைகள் "” தான்.

எனது பள்ளிப் பருவம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவமில்லாத ஸ்வாரஸ்யமான வருஷங்கள்.

அப்போது கிரிக்கட் தெருவுக்கு வரவில்லைகோலிகுண்டு கில்லித் தாண்டு பம்பரம் அல்லது பக்கத்து செட்டியார் தோட்டத்துக் கிணற்றில் குடுக்கை கட்டிக் கொண்டு நீச்சல்..... அங்கங்கே தென்படும் செழுமையான கொய்யா மரங்களில் ஏறி அணிலுக்குப் போட்டியாக கிளைகளில் ஆடிப் பழங்களைப் பறித்துத் தின்பது அல்லது பக்கத்து ஊர்களில் இருக்கும் மாமா அத்தை வீட்டுக்குப் போய் எதிர்கால வயதுக்கு [மிகவும்உபயோகமான சில தகவல்களை தெரிந்து கொண்டு வருவது...{ அநேகமாக மாமா அத்தை வீடுகளில் விளையாட்டுப் பொம்மை போல சின்னப் பெண்கள் இருப்பார்கள்!!} இப்படித் தான் எங்கள் விடுமுறை எங்களை பெரியவர்களாக்கும்!!

[இப்போது கைப்பேசியும் தொலைக் காட்சியுமே கதி என்று சோபாவில் கழுத்து வளைந்து சோர்ந்து கிடக்கும் பையன்களைப் பார்க்கும்போது மனம் அனாவசியமான வருத்தத்தால் ஊமையாகி விடுகிறது!}

ப்போது ஜெமினியின் சந்திரலேகாஓஹோவென்று ஓடிக் கொண்டிருந்ததுஎம்.ஜி.ஆர் இன்னும் நட்சத்திரமாகவில்லை..

நானும் ரகுவும் சந்துருவும் குப்பனும் ராதா ரஞ்சனாக ஆளுக்கொரு முருங்கைக் குச்சியை வைத்துக் கொண்டு கண்ட திசைகளில் ஆட்டிக் கொண்டு கண்ணில் தென்பட்ட ஸ்டூல் பெஞ்சு.... திண்ணை.... வாசல் படிக்கட்டு... மூலையில் சாய்த்துக் கிடக்கும் அரிசி மூட்டை இப்படி எதிலாவது ஏறிக் குதித்துக் கொண்டு வாள் யுத்தம் புரிவோம்சில சமயம் உத்தரத்தில் கூட தொங்குவோம்எங்கள் ஆறு வயது சின்னத் தம்பி சுண்டு "டாம் டீம்....." என்று அதற்கு பின்னொலி கொடுத்து உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பான்

அந்த மாதிரி ஒரு விடுமுறையில் தான் என் அத்தை பையன் பசுபதி காசியிலிருந்து வந்தான்அவனுக்கும் எங்களைப் போல் பத்து பன்னிரண்டு வயது இருக்கும்.

எங்கள் உறவினர்களில் அவ்வளவு தூரத்தில் காசி போன்ற ஊரில் போய் குடியேறிய ஒரே அத்தை குடும்பம் அது ஒன்று தான்.

த்தைக்கு திருமணம் ஆன சில வருஷங்களிலேயே என் அத்தையின் கணவர் சாமியார்களைத் தேடிப் போக ஆரம்பித்து விட்டார்அவரை ஓடி விடாமல் பிடித்து வைத்துக் கொள்வது அக்காலத்தில் பெரிய பாடாக இருந்திருக்க வேண்டும்.

பிறகு ஒரு நாள் காசியில் சமுஸ்குருத வாத்தியாராக பணி செய்ய ஒரு பெரிய தெய்வபக்தர் இவரை அழைப்பதாகவும் தான் உடனே அங்கே போகப் போவதாகவும் ஒற்றைக் காலில் நின்றார்என் தாத்தா அவரை தடுக்கவில்லைஆனால் அவருக்கு சேவை செய்வதற்காக அவர் கைப்பிடித்த என் அத்தையையும் கூட அழைத்துப் போக வேண்டுமென்று அன்புக்கட்டளையிட்டார்அப்படித்தான் என் அத்தை குடும்பம் காசிக்குப் போய்க் குடியேறி இப்போது பத்து வயதில் அவர்களுக்கு பசுபதியும் வளர்ந்து வருகிறான்.

காசியில் பிறந்து வளர்ந்ததால் பசுபதி பேசுவதைக் கேட்பதற்கே எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. . நாலைந்து ஹிந்தி வார்த்தைகளுக்கு இடையில் இரண்டு தமிழ் வார்த்தை பேசுவான்அவன் இப்படி விசித்திரமாக பேசுவது அவனுக்குத் தெரியவில்லை. . என் அத்தை தான் ஒவ்வொரு முறையும் அவன் பேசுவதை எங்களுக்கு மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.

பசுபதி உச்சியில் சின்னக் குடுமி வைத்திருந்தான் அவன் வட்டக் கராப்பைப் பார்த்தால் எங்களுக்கு சிரிக்கத் தோன்றும்.

காலையில் எழுந்தவுடன் முகம் கழுவிக் கொண்டு நெற்றியில் விபூதி தரித்துக் கொண்டு ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருப்பான்.

அப்போது நாங்களெல்லாம் கன்னா பின்னாவென்று அட்டகாசமாக ஆடிக் குதித்துக் கொண்டிருப்போம்.

நண்பன் ரகு நன்றாக சிவப்பாக இருப்பான்அவனை எல்லோரும் டி.ஆர்.ராஜகுமாரியாக பாவித்து படத்தில் வரும் ரஞ்சனைப் போல் தூக்கிப் போட்டு வளைத்து சேஷ்டைகள் செய்து அழ வைத்து விடுவோம்.

.பசுபதி இதையெல்லாம் புரியாத மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பான்உதடுகள் ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கொரு தரம் கிழக்கைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வான். . அவன் ஒவ்வொரு செய்கையையும் அத்தை கண்காணித்துக் கொண்டே இருப்பாள்அவன் இப்படி செய்வதெல்லாமே அத்தையின் பல வருஷமாக பாடம் பண்ணிய பழக்க வழக்கங்களாக இருக்கும்.

அவனை நாங்கள் விளையாடக் கூப்பிட்டால் வரத் தயங்குவான். . பந்தைத் தூக்கி அவனிடம் எறிந்தால் அதைப் பிடிக்க முயற்சி செய்யாமல் பயந்து நகர்ந்து விடுவான்அநேகமாக அதற்குள் அவனை அத்தை கூப்பிட்டு விடுவாள்.

பசூ....வாடா...சந்தியாகாலமாச்சு..கோவிலுக்குப் போகணும்...” என்று அவனை இழுத்துக் கொண்டு போய் விடுவாள்.

பசுவை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கும்ராத்திரி தூங்கும்போது கூட அவன் முகத்தைப் பார்த்தால் ஏதோ இருட்டுக்கு பயந்து கண்ணை மூடிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.

ரு நாள் இரவு நிலா வெளிச்சமாக இருந்தது சாப்பிட்டவுடன் "வாடா பசு...வாசலில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கதை பேசலாம் "” என்றேன்.

“ பயமா..இருக்குடா!...” என்றான்.

“ வாடா..” என்று இழுத்துக் கொண்டு போனேன்.

வாசலில் தென்னை மரங்கள் ஆடிக் கொண்டு காற்று சுகமாக வந்து கொண்டிருந்ததுபசு என்னிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டான்,

“ பசு,,,,டார்ஜான் கதை தெரியுமா?....”

“ தெரியாதுடா...”

“ நல்ல கதைடா!......ஒரு காட்டுலே ஒரு குழந்தை தனியா கிடக்கறது அவன் அப்பா அம்மா இரண்டு பேருமே பாம்போ ஏதோ கடிச்சு செத்துப் போயிடறாங்க்க!...”

“ அய்யோ....என்னடாது கதை...இது? “

“ ஆமாம்அப்புறம் கதை ரொம்ப நல்லா இருக்கும்அங்கே உள்ள பசு மாடு ஒண்ணு இந்தக் குழந்தைக்கு பாலு கொடுக்கும்பறவைகளெல்லாம் கனிஞ்ச பழங்களையெல்லாம் கொத்திக் கொண்டு வந்து இந்தக் குழந்தைக்கு ஊட்டும்இதையெல்லாம் சாப்பிட்டு டார்ஜான் நல்ல பல சாலியா பெரியவனா வளந்துடுவான் அங்கே உள்ள சிங்கக் குட்டியெல்லாம் இவன் கூட அன்பா ஸ்நேகிதமா பழகி விளையாடும் அவன் அதன் மேலே ஏறி சவாரி செய்வான் அம்பு வில்லேல்லாம் தோளில் மாட்டிண்டு மரங்களின் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு "யாஹூ...”என்று கத்திக் கொண்டு தாவி காடெங்கும் சுற்றுவான் சிங்கத்துக்கு வேண்டிய இரையை வேட்டையாடி அவைகளுக்கு கொடுப்பான்சிங்கம் டார்ஜானை தன் உயிர்நண்பனா நேசிக்கும்... பல சமயம் சிங்கங்கள் இவனைக் காப்பாத்தும் ! ...என்னடா...பசு கதையைக் கேக்கறயா...இல்லையா?....” என்றேன்சட்டென்று நிறுத்தி.

பசு என் கதையை பாதி கூடக் கேடகவில்லை. “டேய்...அந்த சுவத்துக் கட்டை மேலே பார்ரா.......நீளமா பல்லி ஒண்ணு ...பாக்க பயமா இருக்குடா! “ என்றான்...எனக்கு அவன் மேல் ஆத்திரமாக வந்தது.

ஏன்னடா...மண்டுவா இருக்கே!... பல்லி ஒண்ணூம் பண்ணாதுரா! “ என்றேன்அவன் என்னிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டான். .

“ சரி....நீ இப்போ எனக்கு கதை சொல்லு! “ என்றேன்.

பசு குரலை செருமிக் கொண்டு எனக்கு கதை ஒண்ணும் தெரியாதுடா!... ஆனா எங்க ஊர்லே ஒரு சாமியார் இருக்கார்டா!.. அவர் பேர் ஷொம்புஜால்மகராஜ்..அவர் மடத்துக்கு என்னை அம்மா அடிக்கடி கூட்டிண்டு போவா!...அவர் பெரிய மகானாம்... சாமி கிட்டே பேசுவாராம் அம்மா சொல்லியிருக்கா! “ என்றான்.

“ சரிடா.....அவர் உங்கிட்டே பேசுவாரா? “ …...........

“ எங்கிட்டே அல்லாம் பேசமாட்டார்ஆனா பெரிய பெரிய மனுஷா எல்லாம் கார்லே வருவாஅவா கிட்டே ஏதோ பேசுவார்...”காலித் தட்டை அப்படியே சுத்துவார்..அதிலே நிறையா சில்லறைக் காசு வரும்!...வெளிலே பிச்சைக்காரர்களுக்கு கொடுக்க சொல்லுவார்...”

“ சரி...அப்புறம்...”

“ இல்லேடாஅதை விட ஒரு அதிசயம் என்னன்னா....அவர் தினம் இமயமலையிலேருந்து தான் வராராம்அந்த சிஷ்யர்கள் சொல்லுவா! “

அப்படியாஆச்சரியமா இருக்கேஎப்படி தினம் அப்படி வரார்! “

“ கேளூ.....அந்தக் கூடத்துலே வாசலைத்தவிர வேற கதவே இல்லைநான் நல்லாப் பாத்திருக்கேன்...ஆனா சுவத்துக்குப் பின்னாலே இருந்து வருவார்....."

“ எப்படிடா வருவார்விவரமா சொல்லு! “

“ டேய் நீ நம்பமாட்டே!... ஆனா சொல்றேன்நாங்க எல்லாரும் காத்துண்டிருப் போம்... சிஷ்யாள் எல்லாம் சத்தம் போட்டு ஜபிச்சிண்டே இருப்பா....திடீர்னு மின்னல் மாதிரி ஒரு வெளிச்சம் கூடத்து பின் சுவர்லே வரும்உடனே சிஷ்யா திரையை மூடிடுவா...அப்பறம் இன்னொரு வெளிச்சம் வரும் அப்போ திரையை விலக்குவாஅங்கே ஷொம்புஜாலமகராஜ் அபய முத்திரையோட நின்னுண்டிருப்பார்சிஷ்யாள் எல்லாம் சொல்லுவா..இமய மலையிலேருந்து தரிசனத்துக்கு வந்திருக்கார்னுநாங்க எல்லாரும் சாஷ்டாங் கமா சேவிப்போம் அம்மா என்னை நிறைய வேண்டிக்க சொல்லுவா!...சில பேர் விக்கி விக்கி அழக் கூட செய்வாடாஎனக்கு பயமாக் கூட இருக்கும்!..”

பசுபதி சொன்னது ஸ்வாரஸ்யமாக இருந்தது.

.“டேய்..நல்ல கதை சொல்றேடாஸ்வாரஸ்யமா இருக்கு! “ என்றேன்.

“ டேய்...இது கதையில்லேடா.....நெஜமா அவர் இருக்காரு...” என்றான் பசு.

சரி....எனக்கு கதை...உனக்கு நெஜம்.......எனக்குத் தூக்கம் வருதுடா!...நாளைக்கு இன்னும் நெறைய கதை சொல்லுடா!..” என்று அவன் முதுகைத் தட்டிக் கொண்டு எழுந்தேன்.

.” இல்லேடா...இது நெஜம்..” என்று முனகிக் கொண்டே அவனும் என்னைத் தொடர்ந்தான்.

*********
று நாள் மாலை பசுபதியும் அத்தையும் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந் தார்கள்காலையில் எழுந்தவுடன் பசுபதிக்கு அந்த வித்தையைக் காட்டி விட வேண்டும் என்று எனக்கு இரவெல்லாம் பரபரத்தது.

காலையில் எழுந்து முகம் அலம்பிக் கொண்டவுடன் பசுவை அவசரமாகக் கூப்பிட்டேன்எதிர்த்த வீட்டு ரகுவையும் வரச் சொன்னேன்.

எங்கள் வீட்டுக்கு ஒட்டினாற்போல ஒரு காலிமனை இருந்ததுஅதில் பின்புறம் கொஞ்சம் புதர் மண்டிக் கிடக்கும் அதை ஒட்டிய மாதிரி பின்புற எல்லையில் ஒரு மூங்கில் வேலி நட்டு வைத்திருப்பார்கள்.

நான் கூப்பிட்டவுடன் ரகுவும் பசுபதியும் அங்கே வந்து விட்டார்கள்.

“ ரகு..நான் இப்போ பசுபதிக்கு ஒரு மந்திர வித்தை காட்டப் போறேன்பசு பயப்படாம நீ தான் பாத்துக்கணும்என்று சொன்னேன்ரகுவுக்கு முதலில் கொஞ்சமாகப் புரிந்ததுபிறகு நன்றாகவே புரிந்துவிட்டது. “ .....அதுவாடா!..” என்று உரக்கக் கத்தினான்நான் ''ஸ்ஸ்ஸ்"  என்றேன்.

பசுபதி எதுவும் புரியாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“”பசு...நீ...நேத்து சொன்ன சாமியார் கதையை நான் முதலில் நம்பவே இல்லைடா!..ராத்திரி பூரா அதையே நெனைச்சிண்டிருந்தேன்அப்போ திடீர்னு அந்த ஷொம்புஜாலமகராஜ் என் கனாவிலே வந்து மிரட்டினார். “

“ அய்யய்யோ..! “ என்றான் பசுபதி.

“ ஆமாம்...அப்பறம் அவர் கால்லே விழுந்து நமஸ்காரம் பண்ணி மன்னிப்புக் கேட்டேன்அவர் என்னை மன்னிச்சி ரொம்ப மனசு இரங்கி எனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார்அதை மந்திரத்தை நான் ஜபிச்சா நானும் அவர் போலவே மாயமா மறைஞ்சி பின்னால வெளிலே வருவேனாம்... இப்போ நான் அது மாதிரி செஞ்சி காட்டப் போறேன்..பாக்கறயா!” என்றேன்.

பசுபதிக்கு உடம்பெல்லாம் லேசாக நடுங்க்கியது..” டேய்...நெஜமாவா?..” என்றான் மெல்லிய குரலில்.

“ ஆமாம் ...பாரு.......இப்போ அந்த ஜபத்தை சொல்லிண்டே அந்தப் புதருக்குள்ளே போகப் போறேன்...நீயும் ஜபிக்கணும்...அப்பறம் காணாம போயிடுவேன்...”

“ அய்யய்யோ.....பயமா இருக்குடா!...”

பயப்படாதேஅப்பறம் அந்த சாமியார் எப்படி சொல்றாறோ..அப்படி வருவேன்..பாரு!..” என்று சொல்லி ரகுவிடம் "டேய் பசுபதி பயப்படாம பாத்துக்கோடா! ''''என்றேன்.

“” மாவேலீ...மாவேலீ.. மாவேலீ...என்று உரக்கக் கத்தினேன் பசுபதியையும் அந்த மந்திரத்தை விடாமல் கத்திக் கொண்டே இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு எதிரே இருந்த புதருக்குள் ஓடி மறைந்து விட்டேன்!

பசுபதி சிரத்தையுடன் மாவேலி மந்திரத்தைக் கத்திக் கொண்டே இருந்தான்ஒரு ஐந்து நிமிஷம் ஆகி இருக்கும்அவனுக்கு நான் எங்கே போனேன் என்றே தெரியவில்லைரகு இதை தமாஷாகப் பார்த்துக் கொண்டே சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

பசுபதிக்கு மந்திரத்தைக் கத்தி கத்தி தொண்டை வறண்டு விட்டதுகொஞ்சம் பயமும் வந்து விட்டதுஅவன் ரகுவைப் பார்த்து "ஏன்னடா..புதருக்குள் போனவன் இன்னும் வரலை... பயமா இருக்குடாஎங்கேயாவது தொலைஞ்சி போய்டுவானா? “ என்று கலவரத்துடன் கேட்டான்.

ரகு வந்துடுவாண்டா....நீ மந்திரம் ஜபிச்சியோல்யோ! “ என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்அப்போது எதிர் வீட்டுத் திண்ணையில் நின்று கொண்டிருந்த நான் டேய்...பசுபதீ..” என்று கத்தினேன்பசுபதி தன் கண்களை நம்பமுடியாமல் வாயடைத்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் நான் அவன் அருகில் வந்து முதுகைத் தட்டினேன்.

ஏப்படிடா...எப்படிடா....இந்தப் புதருக்குள்ளே போய்ட்டு எதுத்த வீட்டுக்கு வந்தே!.. எப்ப டிடா?..” என்று என் கையைப் பிடித்துக் கொண்டான்

இரு...இரு... இப்ப மறுபடியும் பாக்கறயா?..

மாவேலீ.. மாவேலீ.....கத்து.... கத்துடா......கத்து...”ஏன்று சொல்லிவிட்டு மறுபடியும் புதருக்குள் ஓடி மறைந்து கொண்டேன்.

பசுபதி இந்த முறை சற்று நம்பிக்கையுடன் கத்திக் கொண்டிருந்தான்ஐந்து நிமிஷம் கழிந்தது என் வீட்டுப் பக்கவாட்டு ஜன்னல் வழியாக பசுவைப் பார்த்து நான் உரக்கக் கூப்பிட்டு பலமாக சிரித்தேன்.

பசுபதி இப்போது என்னை ஏதோ பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்பேச வரவில்லை.. என்னை ஏதோ மாயப் பிறவியாக சித்தனாக நினைத்துக் கைகட்டிக் கொண்டு நின்றான்.

எனக்கும் ரகுவுக்கும் சிரிப்புத் தாங்கவில்லை.

ஏன்னடா..பசு...உங்க குரு ஷொம்புஜாலமகராஜ் எந்த மாதிரி வித்தையைக் கத்துக் கொடுத்திருக்கார்..பாத்தியா?...” என்றேன்

அவன் மேலும் பேசாமல் என்னை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

பசு சாயங்காலம் ஊருக்குக் கிளம்ப்த் தயாராகிக் கொண்டிருந்தான் அவன் கிளம்பும் வரை என்னிடம் அதிகம் நெருங்கவில்லைவித்யாசமாக விலகி நின்றான்.

அத்தையிடம் மட்டும் மெதுவாக அம்மா...இந்த ராமு..ஏதோ வித்தையெல்லாம் பண்றான்....எனக்கு ஆச்சரியமா இருக்குஎனக்கு ஏம்மா..அது வரலே!” என்று கேட்டான்.

அத்தைக்கு அவன் சொன்னது சரியாகப் புரியவில்லை.

“ ராமூ ஏதாவது குறும்பு பண்ணுவாண்டா.. எப்பவுமே அவன் அப்படித் தான்குறும்புக்காரன் என்று சொல்லிக் கொண்டே பெட்டியைப் பூட்டி வாசலில் வைத்துக் கொண்டிருந்தாள்.


த்தையையும் பசுபதியையும் வழியனுப்ப ஸ்டேஷனுக்கு நானும் கூடப் போனேன்குதிரை வண்டியில் பசுபதியுடன் நெருங்கி உட்கார்ந்து கொண்டேன்.அவனுக்கு சற்று சங்கடமாக இருந்தது.

நான் பசு...பசூ.....” என்று காதோடு கூப்பிட்டேன்அவன் ஏனோ சற்று விலகி உட்கார்ந்து கொண்டான்.

“ டேய்....ஊருக்கு போனா என்னை மறந்துடுவாயாடா?..”

அவன் எனக்கு பதில் சொல்லாமல் கையைக் கட்டிக் கொண்டான்.

டேய்...ஏண்டா...பேசமாடேங்கறே?...என் மேலே கோவமா?... ஏண்டா?..” என்று அவன் கையைப் பிடித்துக் கேட்டேன்.

அவன் முனகிக் கொன்டே பேசினான்.

“ போடா...ஒன்னைப் பாத்தா..பயமா இருக்குநீ அந்த சாமியார் மாதிரி மந்திர மாயமெல்லாம் பண்றே/ “

எனக்கு பலமாக சிரிப்பு வந்து விட்டதுஅத்தைக்குக் கேட்காமல் அடக்கமாக சிரித்தேன்குதிரை வண்டியின் சலங்கை சத்ததில் அது அதிகம் கேடகவில்லை.

நான் பசுவிடம் மெதுவாக ரகஸியம் போல் பேசினேன்.

“ ஏண்டா....என் மந்திர வித்தையைப் பாத்து பயந்துண்டயாஅதெல்லாம் தந்திரம்டா.. சும்மா விளையாட்டுக்கு! “

“ என்னடா..சொல்றே? “

“ ஆமாண்டா... அந்த புதருக்குள்ளே ஒடினேன் இல்லையா?..

“ ஆமா...அப்பறம் எப்படீடா...எதுத்த வீட்டுக்கு வந்தே?”

கேளூ.. அந்தப் புதருக்குள்ளே போனா அங்கே அந்த வேலிப் படலை நகர்த்தி பின் பக்கமா போக முடியும்பின் பக்கத்துலே அங்கே ஒரு சின்ன ஓடை மாதிரி பள்ளம் இருக்கும் அதில தண்ணியே இருக்காதுஅந்த ஓடைப் பள்ளத்தில் இறங்கித் தாண்டி அந்தப் பக்கம் போனா நம்ம வீட்டுக்கு பின்னால உள்ள தெருவுக்குக் போயிடலாம்அந்தத் தெருவுலே கொஞ்சம் நடந்து வளைஞ்சி வந்தா நம்ம தெருவுக்கு நம்ப வீட்டுக்கு வந்துடலாம். .இது தான் அந்த மேஜிக்!

நாங்க யாராவது புதுப் பையன் வந்தா அவனுக்கு இந்த வித்தையைக் காட்டி அழ வைச்சிடுவோம்இப்ப ஒன்னையும் அழ வைச்சுட்டோம்அட மண்டு...இது மாயமும் இல்லே..மந்திரமும் இல்லே!..” என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டேன்.

பசுபதிக்கு இப்படிப்பட்ட சாதுர்யம் மிகவும் நம்ப முடியாததாக இருந்ததுஆச்சரியமாக இருந்ததுஅநேகமாக இது அவன் ஆயுளிலேயே முதலாவதாக் கேட்ட கெட்டிக்காரத்தனமான தந்திரமாக இருக்கும்அவன் சாதுவான எளிமையான மூளையால் அதை ஜீரணிக்க இன்னும் அவகாசம் தேவையாக இருந்தது. .

சுபதி ரயிலில் ஏறிக் கொண்டு ஜன்னல் ஓரம் கம்பியைப் பிடித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்ரயில் நகர சில நொடிகள் தான் இருந்தன.

""அப்போ... அந்த ஷொம்புஜால மகராஜும் இப்படித் தான் மேஜிக் பண்றாரா? “ என்று பளிச்சென்று ஒரு கேள்வி கேட்டான்.

அதற்குள் ரயில் ஊதி விட்டதுவண்டி நகர ஆரம்பித்து விட்டது

“ நான் பசுவுக்கு கையாட்டி பலமாக தலையாட்டிக் கொண்டிருந்தேன்ரயில் மறைந்து கொண்டிருந்தது.