vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, May 29, 2020

பேத்தியின் ஓவியம்






 பேத்தியின் ஓவியம்

வைதீஸ்வரன் 


(Still Life - By K H Ara)


                                       
                     
விடிந்தவுடன்  நான்  எப்போதும்  என் பேத்தியைத் தான்  தேடுவேன்.  அவள்  படுக்கையை விட்டு எழாமல்  தூக்கமும் விழிப்புமாக தனக்குள் பேசிக் கொண்டிருப்பாள்.  கனவின் மிச்சத்தை ஏதோ கதையைப் போல் சொல்லிக் கொண்டு  சிரித்துக் கொண்டிருப்பாள்.   அதை   நானும் கேட்க வேண்டுமென்று எனக்கு ஆவலாக  இருக்கும் அவள் கதைகளில்  சில சமயம் மகாபாரத  கடோத்கஜனும் டைனசோரும்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.  ஆஞ்சனேயரும்  மிக்கி மௌஸும்  ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள் .


“ எப்படி கண்ணு...உனக்கு  கனாவிலே  இப்படியெல்லாம்  வருது?  ன்னு கேப்பேன்.
அவள்  கண்ணை சிமிட்டிக் கொண்டு  "  இல்லே தாத்தா..இதுலே  பாதி  கனா....பாதி  புருடா!...”  என்று கண்ணை சிமிட்டிக் கொண்டு பலமாக  சிரித்தவாறு  படுக்கையிலிருந்து  குதிப்பாள்.


ஆனால்  இன்று அவள்  படுக்கையில் காணவில்லை.  வீட்டின் பின்புறம் தோட்டத்துக்கு போகும் கதவுக்கருகில் இருந்த வாசற்படிகளில்  உட்கார்ந்து  கொண்டு  உன்னிப்பாக  தலையைக் கவிழ்த்துக் கொண்டு ஒரு வெள்ளைக் காகிதத்தில்  என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.


நான்  அருகில்  சென்று என்னவென்று பார்த்தேன்.  வெள்ளைக் காகிதம் முழுவதும்  கருப்புக்கலர் பென்சிலால் மேலும் கீழுமாகக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.  அடிக்கடி முன்னே விழும் தலை மயிரை ஒதுக்கி விட்டுக் கொண்டே கிறுக்கிக் கொண்டிருந்தாள்.


 “ கண்ணூ.... என்ன  பண்றே?  காயிதம் பூரா...ஒரே  கிறுக்கலா  இருக்கேஎன்று  கேட்டேன்.
அவள்  கூந்தலை ஒதுக்கிக் கொண்டு தலை தூக்கி என்னை பார்த்து  " டிராயிங்க்..வரையரேன்......தாத்தா!..”   என்றாள்.


 “டிராயிங்கா!..இதுவா..டிராயிங்க்!....என்ன  சொல்றே..நீ?  ….என்றேன்

 “ஆமாம் தாத்தா....இது  டிராயிங்க் தான்....இது  என்னோட  HAIR  டிராய்ங்க்!     என்று சொல்லி விட்டு பலமாக  சிரித்தாள்.


அதை  தமிழில்  சொன்னால்  ஒரு வேளை கொச்சையாக  இருக்கும்  என்று  நினைத்தாளோ!.!!..

அவள்  சொன்ன  பதிலை  என்னால்  மறுக்க முடியவில்லை. 

இதைப் போய்  டிராய்ங்க  வரையணுமா?....என்று இயல்பாக  எழுந்த கேள்வியை  நான் அடக்கிக் கொண்டேன். 

பெரிய  ஓவியர்கள்  இப்படி  ஏதாவது  வரைந்திருந்தால்  இந்தக் கேள்வியை  நான் கேட்க முடியுமா?  என்ற  சிந்தனை எழுந்தது..


 சில கலைஞர்கள்  " fucks ...”  என்று  சொல்லி  என்னை ஈனமாக  பார்த்திருப்பார்கள்.  “  ஏன் இது  உன்  கண்ணைக் குத்துதா?”  என்று  கேட்டிருப்பார்கள்.


இந்தக் குழந்தைக்கு  அப்படிக் கேட்கத் தெரியாது.  ஆனால்  தன் சுதந்திரத்தை ஏன் தாத்தாவால்  பாராட்ட முடியவில்லை...என்று அதன் உள்மனத்தில் ஏதோ உறுத்தல் நேர்ந்திருக்கலாம்.


 நவீன  ஓவிய  வளர்ச்சியில்  Dadaism “  என்று ஒரு  வகை போன நூற்றாண்டின்  ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அதிர்ச்சிகரமான சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.    கலைகளில்  உன்னதம் சாதாரணம் என்று எதுவுமே கிடையாது.   தனி மனித சுதந்திரத்துடன் இந்த  உலகத்தை வாழ்க்கையை எந்தவித  யதார்த்த ஒழுக்கத்துக்கும் கட்டுப் படாமல் விடுதலையாக  வெளிப் படுத்துவது தான் இந்தக் குழுவின் நோக்கமாக  இருந்தது.  
மலத்தைக் கூட  மனம் விரும்பினால்  ஓவியமாக வரையலாம்!...


அறுபதுகளில் நான் சில மாதங்கள்  மும்பையில் இருந்தேன். {அப்போது  அது  பம்பாய்!}   அங்கே  அப்போது  Progressive Artist Association என்ற பெயரில் மிக முற்போக்கான  ஓவியக் குழு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிக முக்கியமான நவீன ஓவியக் கலைஞர்கள்  அப்போது இளைஞர்களாக  ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்  நானும் K.K. Hebbar அவர்களின் சிபார்சு மூலம்  ஒன்றிரண்டு ஓவிய வகுப்புகளுக்குப் போயிருக்கிறேன்!


    
அப்போது  அவர்கள்  ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள்.  அதில் ஒரு ஓவியம்  எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது...  கவர்ந்தது என்பதை விட மிகவும் உறுத்தியது என்று சொல்ல வேண்டும்.


அது ஒரு பெரிய படமாக மாட்டப் பட்டிருந்தது.  ஆனால் அதில் படம் எதுவும் இல்லை!   கேன்வாஸின் குறுக்கே  கத்தியால் நறுக்கென்று கீறி விடப் பட்டிருந்தது.  அவ்வளவு தான் படம்  அந்தப் படத்தை வரைந்தவர் அல்லது  கீறியவர்  பெயர்  K. H. Ara...அப்போது  ஓரளவு பிரபலமான நவீன ஓவியர்.


நான் அதிர்ச்சியுடன்  அதைப் பார்த்து அருகில் இருந்த  நண்பரிடம் " இது என்ன? “  என்று கேட்டேன்  "  உனக்கு என்ன தோன்றுகிறதோ..அது தான்! “ என்றான் 
"எனக்கு எதுவும் தோன்றவில்லை.யே!!  .ஆனால் மிகவும் வேதனையாக இருக்கிறது.......ஒரு நல்ல  கேன்வாஸை ஏன் இப்படிக் கிழிக்க வேண்டும்.  மனதைக் கீறிய மாதிரி இருக்கிறது,,” ….. என்றேன் .


 “அது  தான்  இது...Heart of an Artist “  [ ஓவியனின் சோகம்]    என்றான் ….


  “Heart of That  Artist”  (அந்த ஓவியனின் சோகம்) "  என்று  மனதுக்குள்  சொல்லிக் கொண்டேன்..


அவசரமாக  நகர்ந்து போய்  அந்தக் கண்காட்சிக் கூடத்தின் இன்னொரு பகுதியில்  மாட்டியிருந்த  பால் கொகானின் தஹிதி  ஓவியங்களைப் பார்க்க சென்றேன்  அவைகள் பிரதி எடுக்கப் பட்ட ஓவியங்கள் தான். இருந்தாலும் மிக நேர்த்தியான  பிரதிகள்...


தஹிதியின் பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த அதீதமான வாழ்க்கையை  அது  உன்னதமான அழகுடன் கனவுலகம் போல்  சித்தரிக்கப் பட்டிருந்தது.


மனித வாழ்க்கையின் சந்தோஷத்துக்காக என்று எண்ணிக் கொண்டு  நாம் இன்று உற்பத்தி செய்து கொண்டிருக்கும் அநேக சாதனங்கள் நமக்குத் தேவையே  இல்லாதவை.  மிகவும் அற்பமானவை  என்று தோன்ற வைக்கும் அந்தப் படம் என்னை நெகிழச் செய்தது. 


நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது பால் கோகினை நினைத்துக் கொண்டேன்.

இந்தப் படங்களை  அவர் வரைந்து கொண்டிருந்த போது அவனுக்கு கைகளில்  விரல்களே  குறைந்து போய் வளைந்து போயிருந்தது. கைகளில் துணி கட்டிக் கொண்டு வரைந்து கொண்டிருந்தான்!!!!


அந்தக் கலைஞனின்  தனிப்பட்ட வேதனையை அந்தப் படங்கள் பிரதி பலிக்கவே இல்லை!!    That was  the  Heart of  a  Great  Artist.



____________________________________________________________________________

(அம்ருதா -  அக்டோபர்2018 )











Monday, May 11, 2020

பயம் - ( சிறுகதை )





பயம் 
சிறுகதை )

வைதீஸ்வரன் -




வகுப்பின்  கடைசி   பீரியட்  இன்னும்   பாக்கி  இருந்தது.  வனிதா தோள்பையோடு  வகுப்பை விட்டுப் படியிறங்கி வெளியே  வந்தாள்.  மாலை மூன்று  மணி  இருக்கும்,  வெய்யில் சுரீரென்றது.

காலையிலேயே  அம்மா  அவளை   காலேஜை விட்டு சீக்கிரம் வரச் சொல்லி இருந்தாள்.  அவளுடைய  மாமா பெண்ணுக்கு  நிச்சயதார்த்தம்.  கண்டிப்பாக  போக வேண்டிய  உறவு.

 வகுப்பை  மிஸ்  பண்ணி விட்டு  நானும்  வர  வேண்டுமா? “  என்று வனிதா கூடக் கேட்டாள்.

  இந்த மாதிரி  பங்ஷனுக்கெல்லாம்   நீ   கண்டிப்பா   வரணும்..…இல்லேன்னா  எல்லாரும்  கோவிச்சுப்பா!    என்றாள்  அம்மா.

இந்த  மாதிரி  உறவினர்கள்  கூடும்  நிகழ்ச்சிகளில்  நல்ல  வரனும்  சம்பந்தமும்  கிடைப்பதற்கு  நிறைய  சாத்தியம்  உண்டு.  இப்படி  வனிதாவின்  அம்மா மட்டுமல்லஎல்லா அம்மாக்களும் மனதில் வளர்த்துக் கொள்ளுகிற நம்பிக்கை. வனிதாவால்  இதை ஊகித்திருக்க முடியாது.

காலேஜ் கட்டடத்திலிருந்து  வெளி காம்பௌண்டு வரை நடப்பதே  வெகுதூரமாக பட்டது..  சின்னப் பாலைவனமாக  ஒரே மணல் .  மாலை  சூட்டு வெய்யிலில்  நடப்பது  அவளுக்கு  வேதனையாக  இருந்தது.  அம்மா  வருகிற வழியில்  ப்யூட்டி பார்லருக்கு வேறு  போய் விட்டு வரச் சொல்லியிருந்தாள்.   அழகு ஆபத்தில் கொண்டு விடுகிறது  என்று எத்தனை அனுபவப்பட்டும்  இந்த அம்மாக்களுக்கு  தன் மகளை   அழகாக்கிப் பார்க்க வேண்டுமென்று  ஏன் இவ்வளவு  மோகம்? அவளுக்கு  ஆத்திரமாக  வந்தது.

காலேஜ் கேட்டைத் தாண்டி சாலையின் குறுக்கே கடந்து  போனால் பஸ் ஸ்டாப். வழக்கமாக  காலேஜ் விடுகிற  சமயங்களில்  அந்த  பஸ் ஸ்டாப்பில்  கூட்டம்   நெட்டித் தள்ளும். ஆனால்  பஸ்  முழுவதும்  பெண்கலாகவே  இருப்பார்கள். அது  ஒரு  விதத்தில்  நிம்மதி   தான்!

வனிதா கலேஜ் கேட்டை நெருங்கி விட்டிருந்தாள்  வழக்கம் போல் இன்று சிநேகிதிகள்  உடன் இல்லாமல்  தனியாக  நடந்து  வருவது என்னவோ  போல்    இருந்தது.  துணையற்றுப் போய் விட்ட உணர்வு.  மதியத்திலிருந்தே  அவளுக்கு ஏதோ  உடல் உபாதை.

காலேஜ்  கேட்டை  அடைத்துக்  கொண்ட  மாதிரி  சற்று  இடைஞ்சலாக  இரண்டு  மூன்று  ஆட்டோக்காரர்கள்  நின்று  கொண்டிருந்தார்கள்.  

தினந்தோறும் சாலையில்  இடிபடாமல் வீட்டுக்கு  வருவதே  பெரும் பிரயத்தனமாக  இருக்கும்.

இவ்வளவு அகலமான கேட்டின் வாயிலில்  மீன் பிடிப்பதற்கு  வலை கட்டியமாதிரி ஏன் இப்ப்டி  வழியடைத்து  நிற்கிறார்கள்? இவர்களை  ஏனென்று  யாரும் கேட்பதில்லையா?  இந்த  ஆட்டோக்கள் எல்லாமே  ஆபத்தான  மனிதர்களின் சொந்தமாகி விட்டதா?

  வனிதா  இன்னும்  நெருங்கி வர  அவளுக்கு அந்த  ஆட்டோக்காரரின் முகம் மேலும் பயங்கரமான  தெளிவுடன்  தெரிகிறது.

அவன் கூட இன்னும் இரண்டு பேர் கிழிந்த  கால் சட்டடையுடன்  சட்டையை முன்னால் முடிந்து  கொண்டு  பான்பராக் வழிய இவள் வருவதைப் ரசித்துக் கொண்டே பல்குத்திக் கொண்டிருந்தார்கள்.

வனிதாவுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது.  திரும்பி  ஓடி விடலாம் என்று  கால்கள்  நினைத்துக்  கொண்டன.  மனம் குழம்பிய  நிலையில் இவள் மேலும் மேலும்   நடந்து  கொண்டே  இருந்தாள். அவளால்  நிற்க முடியவில்லை

அவள்  கேட்டைத் தாண்டி பிளாட்பாரத்துக்கு  வந்த  அதே சமயம்   ஆட்டோக்காரன் இருவருடன் ஆட்டோவில்  ஏறிக் கொண்டான். பலத்த  சத்தத்தோடு  ஆட்டோ  கிளம்பியது.  அது  தன்னை நோக்கி வருவதாக வனிதாவுக்கு     நிச்சயமாகத்  தோன்றியது.

 அய்யோஅம்மா!”….என்று  தலையைப் பிடித்துக்  கொண்டு அலறியவாறு  பின்னால் நகர்ந்து  குதித்தாள். ..அல்லது அப்படி  நினைத்துக் கொண்டாளா!.....கத்திய சப்தம் அவளுக்கே கேட்கவில்லை.

 ஆட்டோ  இவளைப் பொருட்படுத்தாமல்  கடந்து  சென்றது.  இவளுக்கு மெதுவாகத் தான் தெளிவாகியது.

 இவள் மேல் எதுவும்  மோதவில்லைஎவனும் இவள்  மேல்  தாவிக் குதித்து   தள்ளி  இவள்  தலை பக்க சுவற்றில்  மோதவில்லை.  மண்டையில்  ரத்தம் வழிய  மண்ணில்  மயங்கிக் கிடக்கவில்லை.  இன்னும் பத்திரமாக்  நினைவோடு  உயிரோடு  தான்  இருந்தாள்.

 முகமும்  உடம்பும்  வேர்த்து வழிய  பலஹீனமான காலகளுடன் மெதுவாக  பதறிக் கொண்டு நின்றாள்.

ஏண்டீ வனிதா!...இங்கேயே   நின்னுகிட்டிருக்கே.!  பஸ் ஸ்டாப்புக்கு வரலியா?..”  பின்னலிருந்து  அவள் சிநேகிதி  சுபா  முதுகைத் தட்டினாள்சற்று அவளை உற்றுப் பார்த்தவாறு.

  ஏன்ன இப்ப்டி  உடம்பெல்லாம்  நடுங்குதே!..ஜுரமா?...காலேஜ் விட்டு அதான்  சீக்கிரமா  போறியா?  நானும்  பாதி க்ளாஸ்  கட்ஏண்டீ,,, WHAT  HAPPENED  TO  YOU? “

  வனிதாவுக்கு  உடனே  பேச்சு  வரவில்லை.  நாக்கு  வறண்டுபோய் இருந்தது..இரண்டு  மூன்று  வினாடிகள்  கழித்து..”  நல்ல வேளை  நீ வந்தே!”  என்று  மெதுவாக  முனகினாள்.

   “”ஏன்னடீ..என்ன ஆச்சு?..போன மாசம் நம்ப  காலேஜ் வாசல்லே  ஆச்செஅந்த மாதிரி  அசம்பாவிதம்  எதாவது  நடந்ததா?..எவனாவது….  பொறுக்கி வந்து  உம்மேலே  இடிச்சானா?..”

இல்லை..”

பின்னே! “

அப்படி எதுவும்  நடக்கலே!”

பின்னே  என்னடீ! 

என்னமோ  தெரியலே!..அப்படி  நடந்துட்டதாக  ஏதோ பிரமை!...அந்த  ஆட்டோக்களைப் பாக்கும்போது  அதே  மாதிரி  ஆபத்து  எனக்கும் நேந்துட்ட மாதிரி  ஏதோ  உள்ளூர  பயம்!..அதிர்ச்சி..என்னையறியாம..”  வனிதா அந்த  உணர்விலிருந்து  இன்னும்  மீள் முடியாமல்  இருந்தாள்.

போடீ..பைத்தியம்!.   .YOU ARE  AN  IDIOT!..வாடீ….பஸ் ஸ்டாப்புக்குப் போகலாம்…”

சாலையின் குறுக்கே  கடந்து  இருவரும்  பஸ் ஸ்டாப்புக்குப்  போனார்கள்.
அங்கே  இவர்களையும் சேர்த்து  நாலைந்து  கல்லூரிப் பெண்கள்  நின்று கொண்டிருந்தார்கள்

ஒரு  வாட்ட சாட்டமான  போலீஸ்காரர் மட்டும்  இங்கும் அங்குமாக  நடந்து  கொண்டிருந்தார்.  பாதுகாப்புக்காக  என்று  தோன்றியது.  போன மாதம் இந்தக் கல்லூரி  வாசலிலே நேர்ந்த    அசம்பாவிதத்தால் இந்த  ஏற்பாடு என்று  தோன்றியது.

 போலீஸின்  முறுக்கி விட்ட அடர்த்தியான  மீசையும் சிவந்த  கண்களும்  கட்டுமஸ்தான  உடம்பும்  அவரைக் கடுமையான காவலுக்குப் பொருத்தமானவராகத்  தான்  காட்டியது.

அவர்  அடிக்கொருதரம் வனிதா நின்று கொண்டிருந்த பக்கமாக கடந்து  போய்க் கொண்டிருந்தார்.  ஒவ்வொரு முறையும்  வனிதா  பின்  நகர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

  வனீஏண்டி இவனைப்   பாத்தா  பயப்படறே!..  இப்ப   எல்லாம் நமக்காக பாதுகாப்பு போட்டிருக்காங்க..பஸ் ஸ்டாப்பிலே!..ஏன்  அனாவசியமா பயப்படறே!”

காவல்காரர்    திரும்பி  இவர்கள்  நின்ற  பக்கம் நெருங்கி   மெதுவாகக் கடந்து  செல்ல  வனிதா    மீண்டும்  தலையைத் திருப்பிக் கொண்டாள்.

 இப்பவும் எனக்கு பயமாத் தாண்டீ இருக்கு!..ஏன்னு  தெரியலே!..”

 இவர்களைப் பாத்தாக் கூடவா?      சுபா  பலமாக  சிரித்தாள்………..

.வனிதாவுக்கு  சிரிப்பு வரவில்லை,
_________________________________________________________________________

 [கணையாழி  1998]