vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, May 11, 2020

பயம் - ( சிறுகதை )





பயம் 
சிறுகதை )

வைதீஸ்வரன் -




வகுப்பின்  கடைசி   பீரியட்  இன்னும்   பாக்கி  இருந்தது.  வனிதா தோள்பையோடு  வகுப்பை விட்டுப் படியிறங்கி வெளியே  வந்தாள்.  மாலை மூன்று  மணி  இருக்கும்,  வெய்யில் சுரீரென்றது.

காலையிலேயே  அம்மா  அவளை   காலேஜை விட்டு சீக்கிரம் வரச் சொல்லி இருந்தாள்.  அவளுடைய  மாமா பெண்ணுக்கு  நிச்சயதார்த்தம்.  கண்டிப்பாக  போக வேண்டிய  உறவு.

 வகுப்பை  மிஸ்  பண்ணி விட்டு  நானும்  வர  வேண்டுமா? “  என்று வனிதா கூடக் கேட்டாள்.

  இந்த மாதிரி  பங்ஷனுக்கெல்லாம்   நீ   கண்டிப்பா   வரணும்..…இல்லேன்னா  எல்லாரும்  கோவிச்சுப்பா!    என்றாள்  அம்மா.

இந்த  மாதிரி  உறவினர்கள்  கூடும்  நிகழ்ச்சிகளில்  நல்ல  வரனும்  சம்பந்தமும்  கிடைப்பதற்கு  நிறைய  சாத்தியம்  உண்டு.  இப்படி  வனிதாவின்  அம்மா மட்டுமல்லஎல்லா அம்மாக்களும் மனதில் வளர்த்துக் கொள்ளுகிற நம்பிக்கை. வனிதாவால்  இதை ஊகித்திருக்க முடியாது.

காலேஜ் கட்டடத்திலிருந்து  வெளி காம்பௌண்டு வரை நடப்பதே  வெகுதூரமாக பட்டது..  சின்னப் பாலைவனமாக  ஒரே மணல் .  மாலை  சூட்டு வெய்யிலில்  நடப்பது  அவளுக்கு  வேதனையாக  இருந்தது.  அம்மா  வருகிற வழியில்  ப்யூட்டி பார்லருக்கு வேறு  போய் விட்டு வரச் சொல்லியிருந்தாள்.   அழகு ஆபத்தில் கொண்டு விடுகிறது  என்று எத்தனை அனுபவப்பட்டும்  இந்த அம்மாக்களுக்கு  தன் மகளை   அழகாக்கிப் பார்க்க வேண்டுமென்று  ஏன் இவ்வளவு  மோகம்? அவளுக்கு  ஆத்திரமாக  வந்தது.

காலேஜ் கேட்டைத் தாண்டி சாலையின் குறுக்கே கடந்து  போனால் பஸ் ஸ்டாப். வழக்கமாக  காலேஜ் விடுகிற  சமயங்களில்  அந்த  பஸ் ஸ்டாப்பில்  கூட்டம்   நெட்டித் தள்ளும். ஆனால்  பஸ்  முழுவதும்  பெண்கலாகவே  இருப்பார்கள். அது  ஒரு  விதத்தில்  நிம்மதி   தான்!

வனிதா கலேஜ் கேட்டை நெருங்கி விட்டிருந்தாள்  வழக்கம் போல் இன்று சிநேகிதிகள்  உடன் இல்லாமல்  தனியாக  நடந்து  வருவது என்னவோ  போல்    இருந்தது.  துணையற்றுப் போய் விட்ட உணர்வு.  மதியத்திலிருந்தே  அவளுக்கு ஏதோ  உடல் உபாதை.

காலேஜ்  கேட்டை  அடைத்துக்  கொண்ட  மாதிரி  சற்று  இடைஞ்சலாக  இரண்டு  மூன்று  ஆட்டோக்காரர்கள்  நின்று  கொண்டிருந்தார்கள்.  

தினந்தோறும் சாலையில்  இடிபடாமல் வீட்டுக்கு  வருவதே  பெரும் பிரயத்தனமாக  இருக்கும்.

இவ்வளவு அகலமான கேட்டின் வாயிலில்  மீன் பிடிப்பதற்கு  வலை கட்டியமாதிரி ஏன் இப்ப்டி  வழியடைத்து  நிற்கிறார்கள்? இவர்களை  ஏனென்று  யாரும் கேட்பதில்லையா?  இந்த  ஆட்டோக்கள் எல்லாமே  ஆபத்தான  மனிதர்களின் சொந்தமாகி விட்டதா?

  வனிதா  இன்னும்  நெருங்கி வர  அவளுக்கு அந்த  ஆட்டோக்காரரின் முகம் மேலும் பயங்கரமான  தெளிவுடன்  தெரிகிறது.

அவன் கூட இன்னும் இரண்டு பேர் கிழிந்த  கால் சட்டடையுடன்  சட்டையை முன்னால் முடிந்து  கொண்டு  பான்பராக் வழிய இவள் வருவதைப் ரசித்துக் கொண்டே பல்குத்திக் கொண்டிருந்தார்கள்.

வனிதாவுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது.  திரும்பி  ஓடி விடலாம் என்று  கால்கள்  நினைத்துக்  கொண்டன.  மனம் குழம்பிய  நிலையில் இவள் மேலும் மேலும்   நடந்து  கொண்டே  இருந்தாள். அவளால்  நிற்க முடியவில்லை

அவள்  கேட்டைத் தாண்டி பிளாட்பாரத்துக்கு  வந்த  அதே சமயம்   ஆட்டோக்காரன் இருவருடன் ஆட்டோவில்  ஏறிக் கொண்டான். பலத்த  சத்தத்தோடு  ஆட்டோ  கிளம்பியது.  அது  தன்னை நோக்கி வருவதாக வனிதாவுக்கு     நிச்சயமாகத்  தோன்றியது.

 அய்யோஅம்மா!”….என்று  தலையைப் பிடித்துக்  கொண்டு அலறியவாறு  பின்னால் நகர்ந்து  குதித்தாள். ..அல்லது அப்படி  நினைத்துக் கொண்டாளா!.....கத்திய சப்தம் அவளுக்கே கேட்கவில்லை.

 ஆட்டோ  இவளைப் பொருட்படுத்தாமல்  கடந்து  சென்றது.  இவளுக்கு மெதுவாகத் தான் தெளிவாகியது.

 இவள் மேல் எதுவும்  மோதவில்லைஎவனும் இவள்  மேல்  தாவிக் குதித்து   தள்ளி  இவள்  தலை பக்க சுவற்றில்  மோதவில்லை.  மண்டையில்  ரத்தம் வழிய  மண்ணில்  மயங்கிக் கிடக்கவில்லை.  இன்னும் பத்திரமாக்  நினைவோடு  உயிரோடு  தான்  இருந்தாள்.

 முகமும்  உடம்பும்  வேர்த்து வழிய  பலஹீனமான காலகளுடன் மெதுவாக  பதறிக் கொண்டு நின்றாள்.

ஏண்டீ வனிதா!...இங்கேயே   நின்னுகிட்டிருக்கே.!  பஸ் ஸ்டாப்புக்கு வரலியா?..”  பின்னலிருந்து  அவள் சிநேகிதி  சுபா  முதுகைத் தட்டினாள்சற்று அவளை உற்றுப் பார்த்தவாறு.

  ஏன்ன இப்ப்டி  உடம்பெல்லாம்  நடுங்குதே!..ஜுரமா?...காலேஜ் விட்டு அதான்  சீக்கிரமா  போறியா?  நானும்  பாதி க்ளாஸ்  கட்ஏண்டீ,,, WHAT  HAPPENED  TO  YOU? “

  வனிதாவுக்கு  உடனே  பேச்சு  வரவில்லை.  நாக்கு  வறண்டுபோய் இருந்தது..இரண்டு  மூன்று  வினாடிகள்  கழித்து..”  நல்ல வேளை  நீ வந்தே!”  என்று  மெதுவாக  முனகினாள்.

   “”ஏன்னடீ..என்ன ஆச்சு?..போன மாசம் நம்ப  காலேஜ் வாசல்லே  ஆச்செஅந்த மாதிரி  அசம்பாவிதம்  எதாவது  நடந்ததா?..எவனாவது….  பொறுக்கி வந்து  உம்மேலே  இடிச்சானா?..”

இல்லை..”

பின்னே! “

அப்படி எதுவும்  நடக்கலே!”

பின்னே  என்னடீ! 

என்னமோ  தெரியலே!..அப்படி  நடந்துட்டதாக  ஏதோ பிரமை!...அந்த  ஆட்டோக்களைப் பாக்கும்போது  அதே  மாதிரி  ஆபத்து  எனக்கும் நேந்துட்ட மாதிரி  ஏதோ  உள்ளூர  பயம்!..அதிர்ச்சி..என்னையறியாம..”  வனிதா அந்த  உணர்விலிருந்து  இன்னும்  மீள் முடியாமல்  இருந்தாள்.

போடீ..பைத்தியம்!.   .YOU ARE  AN  IDIOT!..வாடீ….பஸ் ஸ்டாப்புக்குப் போகலாம்…”

சாலையின் குறுக்கே  கடந்து  இருவரும்  பஸ் ஸ்டாப்புக்குப்  போனார்கள்.
அங்கே  இவர்களையும் சேர்த்து  நாலைந்து  கல்லூரிப் பெண்கள்  நின்று கொண்டிருந்தார்கள்

ஒரு  வாட்ட சாட்டமான  போலீஸ்காரர் மட்டும்  இங்கும் அங்குமாக  நடந்து  கொண்டிருந்தார்.  பாதுகாப்புக்காக  என்று  தோன்றியது.  போன மாதம் இந்தக் கல்லூரி  வாசலிலே நேர்ந்த    அசம்பாவிதத்தால் இந்த  ஏற்பாடு என்று  தோன்றியது.

 போலீஸின்  முறுக்கி விட்ட அடர்த்தியான  மீசையும் சிவந்த  கண்களும்  கட்டுமஸ்தான  உடம்பும்  அவரைக் கடுமையான காவலுக்குப் பொருத்தமானவராகத்  தான்  காட்டியது.

அவர்  அடிக்கொருதரம் வனிதா நின்று கொண்டிருந்த பக்கமாக கடந்து  போய்க் கொண்டிருந்தார்.  ஒவ்வொரு முறையும்  வனிதா  பின்  நகர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

  வனீஏண்டி இவனைப்   பாத்தா  பயப்படறே!..  இப்ப   எல்லாம் நமக்காக பாதுகாப்பு போட்டிருக்காங்க..பஸ் ஸ்டாப்பிலே!..ஏன்  அனாவசியமா பயப்படறே!”

காவல்காரர்    திரும்பி  இவர்கள்  நின்ற  பக்கம் நெருங்கி   மெதுவாகக் கடந்து  செல்ல  வனிதா    மீண்டும்  தலையைத் திருப்பிக் கொண்டாள்.

 இப்பவும் எனக்கு பயமாத் தாண்டீ இருக்கு!..ஏன்னு  தெரியலே!..”

 இவர்களைப் பாத்தாக் கூடவா?      சுபா  பலமாக  சிரித்தாள்………..

.வனிதாவுக்கு  சிரிப்பு வரவில்லை,
_________________________________________________________________________

 [கணையாழி  1998]

No comments:

Post a Comment