vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, November 25, 2015

இரவுப் பறவை

இரவுப் பறவை

வைதீஸ்வரன்


 இரவு  பற்றிய  ஞாபகங்களைப் பற்றி  என்னைக் கட்டுரை எழுதப் பணித்தபோது  எழுதிய  கட்டுரையின்  ஏறக் குறைய உண்மை யான  நகல் இது.

* * *   * * *   * * *
 இரவைப் பற்றி  சிந்திக்கும்போது  எனக்கு  இரவு தந்த  கவிதை  தான் முதலில் நினைவுக்கு வருகிறது:

  “கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்  தூக்கி விடு
  நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு..
  மணக்கும்  அவள் உடலை மணல் மீது  தோய விடு
   நடுங்கும் ஒளியுடலை  நாணல் கொண்டு போர்த்தி  விடு.

எழுத்துபத்திரிகையில் வந்த  என் முதல் கவிதை.
               
* * *   * * *   * * *
 “இருளுக்கு ஒளியைவிட ஈர்ப்புஅதிகம்.   இருட்டுக்குள் இருக்கும்போது நம் உடல்   விழித் துக்கொள்ளுகின்றன. நம்மைக் காத்துக்கொள்ளும் எச்சரிக்கை மேலும் உன்னிப்பாகி கவனம் உடலோடு ஒட்டிக் கொள்ளுகிறது.

 ஒளியின் மெல்லிய குறுகிய முனகல்…அல்லது, அதன்  ஆரம்ப உச்சரிப்புதான்  இருட்டு என்று நினைக்கத் தோன்றுகிறது.

 இரவைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு பயமாக இருப்பதில்லை.. ஆனால்   மருட்சி யாக  இருந்திருக்கிறது.

 அந்தத் தருணங்களில்   எனக்காக  உயரே ஒரு நிலவும் சில நட்சத்திரங்களும்  துணைக்கு வரும் போது  மனம் லேசாகி இனிய கனவு நிலைகளில்  மிதக்கின்றன.

 இரவுக்குள் நிச்சயமாக  ஒரு  சூரியன் மறைந்துகொண்டிருப்பதை  உணரும்போது  மன தில் நம்பிக்கையும்  துணிவும் துளிர்க்கிறது.

 சின்ன வயதில் வாரம்  ஒரு முறை  கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு என் அப்பா வுடன்  மாட்டுவண்டியில்  பயணம் செய்வதுண்டு. அங்கே தோட்டத்தில் உள்ள  தென் னோலை வேய்ந்த கொட்டகையும்  கிணறும் கயிற்றுக்கட்டிலும்  கட்டாந்தரையும் வாலாட்டிக்கொண்டு சுற்றி வரும் ஜிம்மியும்  வித்தியாசமான  மகிழ்ச்சியை  அனுபவத் தைக்  கொடுக்கும்.

 சில சமயங்களில்  என் அப்பாவுடன் அங்கே  ராத்தங்கி விட்டு  மறுநாள் தான் திரும்பு வோம்.

 ராத்திரி  கயிற்றுக் கட்டிலில்  வானத்தைப் பார்த்துக்கொண்டு  தூங்குவேன்.  அது ஒரு வினோதமான  அனுபவம்.  வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருக்க சிலருக்கு  பயம் ஏற்படுவதுண்டு. எங்கோ அனாதியாக  மிதப்பதுபோல் ஒரு பிரமை  ஏற்படுவதுண்டு. எனக்கு அப்படித் தூங்குவது  சகஜமாக  சந்தோஷமாக  இருந்தது.

நான்  பல வருஷங்களுக்கு முன் ஒரு முன்னிரவில் கடற்கரை மணலில் சலனமற்று ஆழ்ந்த  விசாரத்தில் படுத்துக் கிடந்தேன். என் வாழ்க்கை சூழல் அப்போது  குழப்பம் நிறைந்ததாக  விடையற்ற  கேள்விகள் நிறைந்ததாக   இருந்தது.

படுத்திருந்த சற்று நேரத்துக்குப் பின் என் உடல் லேசாகிக்கொண்டு வந்தது. பூமியின் பிடியிலிருந்து  நான் விடுபட்டுக்கொண்டிருந்தேன்  என் உடல் மெல்ல் மெல்ல  எழும்பி காற்றில் மிதந்து  உயரே  நகருவதை நான் உணர்ந்துகொண்டிருதேன். அது எனக்கு சகஜமாகத் தோன்றியது.

 பறவைக்கும் எனக்கும் வித்யாசமற்ற  ஒரு  பௌதீக உணர்வு  எனக்குள் பரவிக் கொண்டிருந் தது.  என் மூச்சே  என் துணையாக  ஆதாரமாக இருந்தது. நான் பறந்து கொண்டிருந்தேன்.

எனக்கு திசையும் இலக்கும் தேவைப்படவில்லை. என் உடல் பறப்பே  ஒரு  ஆனந்த நிகழ்வாக  இருந்தது.  இது  ஒரு வித்யாசமான  “பொய்க்கணம்

 இப்படி எவ்வளவு  நேரம்  கடிகாரக்கணக்கில் கழித்தேன் என்று அனுமானிக்க முடிய வில்லை. ஆனால்  அது ஒரு தற்காலிக  நிலை என்பது மட்டும்  தோன்றிக்கொண்டே இருந்தது.  நான்  பூமியில் மீண்டும் விழுந்து  மீண்டும் கண் விழித்தேன்!!

  பிறந்த கணத்தில் பார்த்த விழிகளைப் போல்  எனக்கு பூமியும் மணலும் கடலும் புத்தம் புதியதாக இருந்தது. நானே புதியவனோ என்று  எண்ணத் தோன்றியது.

 நான் மெல்ல எழுந்து  நடக்கலானேன். எனக்கு சில தப்படிகள் இடைவெளியில்  பின் தொடர்ந்தவாறு   யாரோ  வருவதுபோல் உணர்ந்தேன்.  திரும்பிப் பார்த்தேன்.

ஒரு அழகான  பாலகனைப் போல் சுருட்டை  முடியுடன்  ஒருவன்  கண்களை மூடிய வாறு  என்  காலடிகளைப்  பின்பற்றி  வந்துகொண்டிருந்தான்.   அரையிருட்டில்  முகம் தெளிவாகத்  தெரியவில்லை.

திகைப்பு நிறைந்தவாறு  நான்  நிற்காமல் சற்று வேகமாக  நடக்கலானேன். ஒருவேளை அவன் என்  பின்னால்  நடந்து  வருவது ஒரு தற்செயல் நிகழ்ச்சியோ..என்று  எண்ணிக் கொள்ள விரும்பினேன். அவனை  அலட்சியப்படுத்தியவாறு  நடந்து  செல்ல முற்பட் டேன்.

ஆனாலும்  அவன்  என்னைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தான். ஒரு வேளை என் உடலற்ற சஞ்சாரத்தில் என்னைக் கண்டறிந்துகொண்ட  வேற்றுகிரகவாசியோ  என்றும் கற்பனை செய்துகொண்டேன்.

வேகத்தை எப்படி மாற்றி நடந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள  இடைவெளி  மாறா மல்  இருந்தது... நான்  அவனைத் தொடவோ பேசவோ முடியாத  தூரத்தில் அவன்  வந்து கொண்டிருந்தான்!

அவன்  யார்? என் நிழலா? என் நகலா? என் பிரக்ஞையின் பிரதியா? என் மனத்துக் குள்  ஆழப் புதைந்து போய் இப்போது  திடீரென்று  வெளியில் விரியும் கற்பனை பிம்பமாயார்  இவன்யார்  இது?

  இன்று வரை அந்தப் புதிர்  அவிழவேயில்லை.

 நான்  வேகமாக  கடற்கரை மணல் மேட்டிலேறி  கரை தாண்டி சாலை ஓரங்களில்  இருந்த கடை வெளிச்சங்களில்  நுழைந்து அவன் முகத்தைத் தெளிவாகப் பார்த்து விட வேண்டு மென்று  இப்போது திரும்பி நின்று  பார்த்தேன். அவன்  மறைந்துவிட்டான்.

 வெளிச்சங்களில்  தெரியாமல்  இருட்டில் மட்டும் எனக்கு வெளிச்சமாகத் தெரிந்த  அந்த அழகு உயிர்..அல்லது  உருவம் யார்இன்று வரை எனக்கு அந்த மர்மம் தீரவேயில்லை....

 உடலுக்கு அப்பால் உள்ள ஏதோ  மாயரூபங்களை  தரிசிக்கும் ஆற்றல்  தற்காலிகமாஎன்னுள்  எழுந்து மறைந்ததா?  இதென்ன..நிகழ்வு?

 ஆனால் இரவு இப்படி எனக்கு  ஏதாவது  வினோதமான  அனுபவங்களை  உத்வேகங் களைத் தந்து கொண்டு தானிருக்கிறது.

 எனக்கு  சுமார் ஏழு வயதிருக்கும். சேலத்தில்  என்  மண்வீட்டுக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன்.  மூலையில் வைத்திருந்த  சிம்ணி விளக்கு  அநேகமாக  அணைந்து விட்டது.

 என்னை  யாரோ எழுப்புவது போலிருந்தது. இரவு பன்னிரண்டு மணியிருக்கும்....            ”வா...வெளியே  போகலாம்..என்று குரல் கேட்டது. என் பள்ளிக்கூட நண்பர்களைப் போல் பரிச்சயமாக  இருக்கவில்லை.

 ‘கதவை நானே  திறந்து கொண்டேனாஅல்லது  யாராவது  திறந்து கொண்டார்களா?’’

 சற்று நேரத்தில் நான்  தெருவின்  நடுவில்  நள்ளிரவு இருட்டில் நடந்துகொண்டிருந்தேன்.  நடக்க  நடக்க  படபடப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது. என்னை  ஏதோ ஒரு வேகம் பின்னா லிருந்து உந்திக்கொண்டே  இருந்ததுபோல் என் நடை மேலும் மேலும்  துரிதமாகிக்கொண்டே இருந்தது.  மூச்சு  வாங்கியது.  வேண்டும் போல் ஆனாலும் பயமும் துக்கமும்  தொண் டையை  அடைத்துக்கொண்டே இருந்தது.

 நான் திக்குத் தெரியாமல் போய்க் கொண்டிருந்தாலும்  தெருவின்  கடைசியில் இருந்த  ரயில் ஸ்டேஷனுக்கு  வந்து விட்டேன். ..

 நான் அழுது கொண்டிருந்ததைப்  பார்த்த  பெரியவர்  ஒருவர்  “எங்கேடா... இந்த  அர்த்த ராத்திரிலே  இங்கே வந்தே?”  என்று என் தோளைப் பிடித்து நிறுத்தினார்.

 நான்  பதில் சொல்லத் தெரியாமல் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன்.  என் உடம் பில் துணியில்லை!

 “ அம்மா...அம்மா..”  என்று  வார்த்தை வராமல்  அரற்றினேன்.

அவர் வா..வீட்டுக்குப் போகலாம்..என்று  என் கையைப் பிடித்துக்கொண்டு  நடந்தார்.

அவர்  எங்கள்  வீட்டுக்கு  எதிர் வீட்டில் வசிப்பவர். எங்களுக்குத் தெரிந்தவர்.

  வீட்டுக்குள்  நுழைந்தவுடன்  அப்பாவைக் கூப்பிட்டு  பெரிதாக சத்தம் போட்டார்.

 “ஏண்டா...சுந்தரம்... குழந்தை  ராத்திரி நேரத்துலே கதவைத் திறந்துண்டு போயிருக் கான்... அது கூடத் தெரியாம  எல்லாரும்  தூங்கறீங்களா? நல்ல குடும்பம்!

குரல் கேட்டு என் அத்தை தான் முதலில் ஓடி வந்தாள்.

இனிமேலாவது  ஜாக்கிறதையா  இருங்க..! “  என்று சொல்லிவிட்டுப் போனார்.

 மறுநாள்  என் அத்தை  தூக்கத்தில் நடக்கும் என் பழக்கத்திற்கு  வைத்தியம் செய்ய  ஒரு மாந்த்ரீகனிடம் கூட்டிக் கொண்டு போய் சாம்பிராணி ஊதி  என் வலது கையில் அவன் கொடுத்த ரட்சையைக் கட்டி விட்டார்.

ஆனால் மறு இரவும் நான் அந்த மாதிரி எழுந்து  கூடத்தை சுற்றி நடக்க ஆரம்பித்திருக் கிறேன்.

 இரவு துங்காமல் காவல் காத்துக்கொண்டிருந்த என் பாட்டி இதைப் பார்த்துவிட்டாள். என் பாட்டி விவரம் அறிந்தவள்....

அன்றிலிருந்து அவள் என்னை தன்னருகில் படுக்க வைத்துக் கொண்டு என் அரணாக் கயிற்ரை தன் சேலை முந்தானையில் முடிச்சுப் போட்டுக் க்கொண்டாள்.

 அதற்குப்பிறகு  நான்  தூக்கத்தில் நடப்பதேயில்லை!!
                  


Ø       .
No comments:

Post a Comment