vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, August 16, 2020

கவிஞன் போலீஸ்காரனோ நீதிபதியோ இல்லை

 


      கவிஞன் போலீஸ்காரனோ                           நீதிபதியோ இல்லை


                    பேட்டி: எஸ். வைதீஸ்வரன் 


                                                       (ஓவியம்: வைதீஸ்வரன்) 


'கிணற்றில் விழுந்த நிலவு' உங்களுடைய முதல் கவிதை. 'எழுத்து'வில் வந்தது. அதை எத்தனாவது வயதில் எழுதினீர்கள் ?

'கிணற்றில் விழுந்த நிலவு' 'எழுத்து'வில் பிரசுரமான எனது முதல் கவிதை. என்னுடைய பிரசுரமான முதல் புதுக்கவிதைன்னு  அதுக்கு பேர் வந்தது.பேர் கொடுத்தது 'எழுத்து' செல்லப்பா.இது புதுக்கவிதைன்னு தெரிவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்னாலேயே நான் எழுதியது. ஏன்னா, அந்த பார்ம்லதான் அதனை வெளியிடணும்னு தோன்றியது. என்னுள்ளே எப்போதும் ஒரு கவிஞன் இருந்திருக்கிறான்.

இந்த இலக்கிய ஆர்வம் வரக் காரணமென்ன ?

என்னுடைய குடும்பம் முழுவதும் இலக்கிய ஆர்வலர்கள்தான். என்னுடைய கசின் பிரதர் என்.வி.ராஜாமணி, நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் முதல் குரூப்பில் படித்தவர். அவர்தான் 'இருளும் ஒளியும்', 'வானவில்' நாடகங்கள் எழுதியவர். அப்புறம் ஜெமினியில் உதவி டைரக்டராக. அவருடைய பாதிப்பு எனக்கு நிறைய உண்டு.

இலக்கிய நபர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மத்தியிலேயே இருப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால், எனது தாய் மாமா எஸ்.வி.சஹஸ்ரநாமம். அந்த நாடக சூழலில் இருந்ததுல, பல விதமான தாக்கங்கள், உணர்வுகளை வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதே சமயத்துல, philosophical outlook ல் தான் எனக்கு அதிக நாட்டம் இருந்தது. தத்துவமும், இயற்கையும். சிறு வயதில் நான் வளர்ந்த இடமே ஒரு ஒதுங்கிய கிராமச் சூழல். அதிக மனிதப் பிரச்னையில்லாத இடத்துலதான் நான் இருந்தேன். சேலத்துல, சின்னத் திருப்பதின்னு ஒரு இடம். ஏற்காடு மலையுடைய அடிவாரம். அங்கே அஞ்சு அல்லது எட்டு வீடு இருக்கும். நான் ஜன்னலபுரத்துல உட்கார்ந்தா , எனக்கு எதிர்ல மலைதான் தெரியும். மலையில் போற பஸ்தான் தெரியும். அதைக் கூட பின்னாலே ஒரு கவிதையா எழுதியிருக்கிறேன்.

அமிர்தா ஷெர்கில்னு  ஒரு அற்புதமான ஆர்ட்டிஸ்ட். சின்ன வயசுலியே செத்துப் போயிட்டா.  அவ சிம்லாவுலேயே குடியிருந்து, எப்பவுமே இயற்கை ஓவியம் பண்ணி, மலைநாட்டு மக்களை அருமையா பெயிண்ட் பண்ணியிருக்கிறாள். கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு வாழ்க்கை அனுபவம்தான் எனக்கு ஜாஸ்தி கிடைச்சது. நேச்சரோடு இருப்பது, பட்டுப் பூச்சிய பாக்கறது, இப்படியிருந்தது.அதே சமயம் எனக்கு வியாதியுள்ள இளமை. அவளுக்கு டி.பி. இருந்தது, எனக்கு ஆஸ்துமா. அதனால ஓடியாடி விளையாட முடியாது, ஒருத்தன்கிட்ட கத்தி ஆக்ரோஷமா பேச முடியாது, ஒருத்தன் ஓங்கி தப்பான விஷயம் பேசினா, நீ தப்பா  பேசினேன்னு நான் மனுசுக்குள்ளேதான் நினைச்சுக்க முடியுமே தவிர, அது தப்புனு அவனுக்கும் மீறின குரலிலே பேச முடியாது. அதனால எல்லாம் sub -conscious -குள்ள போய், இலக்கியத்தின் மூலமா வெளிப்பட்டிருக்கலாம்.

நான் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. கேட்க முடியாமல் அவசரப்பட்டு போறவன் நிறைய பேரு இருக்கான்னு தோணும். அதனால ஏதாவது ஒரு வடிகால் தேவையா இருந்தது.

ஒரு வடிகால் வேணும்னு, காலேஜ் முடிச்ச பிறகு இந்த டிராமா , சினிமா எல்லாம் கொஞ்சம் முயற்சி பண்ணேன். அப்புறம் யோசனை பண்ணி பாத்தா , பாடி லாங்க்வேஜில் என்னாச்சுன்னா, அந்த மூணு மணி நேரமும் கைய தட்டறான். அதுக்கு வெளிய வந்துட்டா, நாம என்ன பண்ணோம், என்ன பண்ணலைங்கறது பர்மனென்ஸ் இல்லாமல் போய்டும். ஆனா, யோசிச்சு பாத்தா , எதுக்குத்தான் பர்மனென்ஸ் இருக்கு? எதுக்கும் பர்மனென்ஸ் இல்ல - ஆனா அதுக்கு நடிப்புக்கு பர்மனென்ஸ் இன்னும் குறைவோன்னு தோணித்து. அல்லது, மேடைக்கலை மத்த  கலைகளை விட எபிமெரெல்லோனு  (ephemeral ) தோணித்து. அதை விட இன்னும் நிரந்தரமா இருக்கிறது எழுத்து. என்னுடைய பார்வையில். இது தப்பான லாஜிக்கா கூட இருக்கலாம்.

அப்புறம் ஒரு பெரிய சிற்பக் கலைஞர் சொன்னார், " நீ உடம்ப காட்டிக் காட்டி நடிக்கிற. ஆனா இந்த வருஷம் இருக்கிற உடம்பு அடுத்த வருஷம் இல்ல. பத்து வருஷம் கழிச்சு உன் மூஞ்சியே மாறிப் போயிருக்கலாம். இவ்வளவு வேகமா மாறும் உபகரணத்தை வெச்சு, நீ கிரியேட்டிவா பண்ணனும்னு ஆசைப் படறியேனு " கேட்டார். பயங்கரமா இருந்தது, அவருடைய statement . "எழுத்து, சிற்பம் எல்லாம் அப்படியில்லே ". ஆமாமென்றேன். "அதனாலதான் நாங்கள் சிற்பம் செய்யறோம்." We are immortalising life " ன்னார் . அதை நான் எழுத்துல பண்ணனும்னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டேன்.

சிறுகதைகள் நிறைய எழுத ஆரம்பிச்சேன். எதுவும் வெளியிடலே . காலேஜ் படிக்கும்போது நிறைய எழுதி கிழிச்சு போட்டிருக்கேன். எதுக்கும் அனுப்பணும்னு ஆசையில்லாமல் எழுதினது. சிறுகதைகள்தான் நிறைய எழுதினேன். மெயினா தாக்கமெல்லாம் காண்டேகர்; தாகூர் எழுத்துக்களெல்லாம் ரொம்ப பாதிப்பேற்படுத்தின; அப்புறம் புதுமைப்பித்தன். அவருடைய கதை, நடையெல்லாம் ஏதோ புரிஞ்சும் புரியாமலும் இருக்கேன்னு, ஸ்கூல் படிக்கும்போது படிச்சிருக்கேன். தாகூர் படிக்கும்போது உள்ளுக்குள்ளே "ஆனந்தக்கனவு காட்டல், கண்ணீர் துளி வர உள்ளூருக்குதல் " எல்லாம் வரும். ஏன்னா  தாகூர் பிரபஞ்சத்தன்மையைக் கொண்டு வந்தார். அவரளவுக்கு அது சத்தியமா இருந்தது. அதுக்கப்புறம், அது மத்தவங்க செய்த போது  falsehood  ஆகப் போவதற்கு வாய்ப்பு இருக்கு; அந்த தொனி , அவரத் தவிர வேறு யாரும் imitate  பண்ண முடியாத விஷயம். ஆனால் பிரமாதம்.

நான் மனுசுக்குள்ளேயே தாடி வளர்த்துண்டு, நானும் இயற்கையும் ஒன்னுன்னு நெனச்சுப்பேன். Empathy with Nature. இயற்கையை நானா நெனச்சுக்கறது;  கொழந்தைகளுக்குச் சொல்லித் தராங்க. அவ்வளவு பெரிய பிலாசபி , இப்பதான் கல்வி முறையிலே  வந்திருக்கு . அதைத்தான்  உபநிஷத்துக்களெல்லாம்  கூட சொல்றது. இந்த தத்துவ சார்போட கவிதையும் எழுதினேன்.

அப்புறம் இந்த நவீன தொனி இருக்கே, பழைய தொனியோடு சேரவில்லை. சுதேசமித்திரன்  தீபாவளி மலர், அப்புறம் வேற சில தீபாவளி மலர்களிலெல்லாம்  எழுத வாய்ப்பு கெடச்சது . ஆனால்  standard metrical form-ல  எழுதிக் கொடுத்த மாதிரி இருந்தது. 5,6 கவிதைகள் வந்தது. அந்தக் கவிதை வரிகள் தாளக் கட்டோட இருக்கும். கும்மி கோலாட்டப் பாட்டு மாதிரி. இந்த மாதிரியெல்லாம் எழுதினேன். ஆனால் அதில முழுத் திருப்தி  இல்ல. என்னையே ஏமாத்திக்கறேனோ, யாரையோ ஏமாத்தறேனோ. ஏதோ ஒன்னு. ஏனா  தொனி ப்ராப்லம்  . தொனியும் நான் உள்ள நினைக்கற விஷயமும் சேரல்ல. இரண்டும் சேந்தாத்தான் திருப்தி கிடைக்கும். சில பிரெஞ்சு மியூசிக்கல் திரைப்படங்களைப் பார்த்தேன். Ballet படங்கள் பார்த்தேன். அதுலே  டயலாக் ஒரு Tone-ல வரும். அது அப்படியே ம்யூசிக்கா மாறிடும். திருப்பியும் சம்பாஷணையாயிடும். அப்புறம் "டேனிக்கே " Frank Sinatra நடித்த Musical Movies, சில அமெரிக்கப் படங்கள் இசையோடு பார்க்கும் போது அந்த ஒரு தொனியுடைய பாதிப்பு ஏன் மனசுல பதிஞ்சது. நம்முடைய வழக்கமான செய்யுள் படிக்கிற தொனிக்கும் , ஏற்படுகிற சிந்தனைக்கும் ஏதோ ஒதைக்கராப் போல இருந்தது. என்னைப் பொறுத்தவரை வெளிப்பாட்டுக்கு ஒரு பிரச்சனையா இருந்தது. என்னன்னு பார்த்தப்போ இப்ப நாம நேரடியா பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போச்சு. நேருக்கு நேர், ஒருத்தன் கற்பனை பண்ணிக்கொண்டு என் பாஷையில் அவனோட பேச வேண்டும். நம்முடைய audience-யுடைய முகம் பற்றி நமக்கு ஏதோ ஒரு அடையாளம் இருக்கணும் . நாம் யாருக்காகப் பேசுகிறோம், யாருடைய சந்தோஷத்திற்காக பேசுகிறோம்னு தெளிவிருந்தா நம்ம பேச்சுத் தொனியில ஒரு அன்னியோன்யம் ஏற்படும். அவனுக்குப் புரியற தொனி வேணும், மொழி வேணும், கட்டம் வேணும். அந்த மாதிரி பார்க்கும்போது, இந்த "எழுத்து" வந்தது.

கோமல் சுவாமிநாதன் எனக்கு "எழுத்து" ஒண்ணு ரெண்டு இதழ்கள் கொண்டு வந்துக் காட்டினார். சில கவிதைகள் பார்த்தேன். அது வேற மாதிரி கவிதைகளாக இருந்தன. அந்த சொல்லெல்லாம் வித்தியாசமா இருந்தது. கொஞ்சம் தெளிவு குறைவோ இருக்கோ , அல்லது எனக்குதான் தெரியலையோ . ஆனா, வித்தியாசமா இருந்தது. ஆனா இப்படி வெளிப்படுத்த  முடியும் போல இருக்குனு எனக்கு ஊர்ஜிதம் கொடுத்தது "எழுத்து". "கிணற்றில் விழுந்த நிலவு" கவிதையில பேச்சுத் தொனியுடைய அழகு இயல்பா அமைஞ்சது.


இதெல்லாம் உங்களுடைய கவிதைக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு தூரம் உதவியது?

என்னுடைய வளர்ச்சியே வித்தியாசமானது. கவிதையை இப்படித்தான் எழுதணும்னு அதிகம் யோசிக்காம ஒரு அதிசய விபத்தாகவே கவிதை வந்தது. இப்பவும் அந்தத் தேடல் இருந்துக் கொண்டே இருக்கிறது.  இடையே சிறுகதைகளும் எழுதினேன். அதுதான் "கால் முளைத்த மனம்". அந்த தொகுப்புல, நல்ல சிறுகதைகளா  ஒப்புக்கொள்ளக்கூடிய கதைகள் இருக்குனு நம்பறேன்.

அதனால, I am constantly searching for expression in various phases. அப்புறம், drawings நிறைய பண்ணியிருப்பேன். புத்தக மேல் அட்டை பண்ணியிருப்பேன். மௌனி கதைகள், கோடை வயல், அசடு, என்னுடைய "உதய நிழல்" எல்லாவற்றுக்கும் மேலட்டை நான் தான். குஜராத் லலித் கலா அகாடெமியில் என் drawings பார்வைக்கு வைக்கப்பட்டது. அனந்த குமாரசாமி சொல்றா மாதிரி " Every artist is not a special kind of man, but every man is a special kind of artist".

மேலும் இதுல என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒவ்வொரு நொடியும் நாம Life-ஐ  பிரக்னையுடன் பார்ப்பதற்கான உபகரணம் ஓவியம். மிக நுண்மையாக வாழ்க்கையை அணுக முடியும். அதைப் பண்ணும்போது நமக்கு பிரமிப்பும் ஆனந்தமும் கிடைக்க வாய்ப்பிருக்கு.

முதல் கவிதை எழுதி விட்டீர்கள். வெளி வந்து விட்டது. ஆனால் அப்போது புதுக்கவிதைக்கான எதிர்ப்பு நிறைய இருந்ததே. பதில்களும் இருந்தன. அதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?

நான் சொன்ன மாதிரி நான் இதுக்கு வயலெண்டா React பண்ணலே. ஆனால் செல்லப்பாவின் புதுக்கவிதையின் தீவிர முயற்சிகள் இன்னும் அகலமும், வலிவும் அங்கீகாரமும் பெற்று அதுக்கு ஒரு பாதை கிடைத்தது. எல்லோருக்கும் இப்படி நடந்தா ஒரு சுதந்திர வெளிப்பாடு கிடைக்கும்னு தெளிவாச்சு. சமகால தொனிக்கு வாய்ப்பிருக்கிறது என்பதும் தெளிவாச்சு.

கவிதை பழைய மரபுல செத்துப் போன காலம் அது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு மரபு கவிதையினுடைய சட்டத் திட்டங்களுக்குள்ளே வீரியமான கவிதைய நான் பார்க்கல.

அதுக்கு நல்ல கவிஞனில்லையோ, அந்த வடிவத்தினுடைய தப்போ? எனக்கு அனுமானிக்க முடியலை. ஏன்னா , ஞானக்கூத்தன் ஒரு இடத்துல, " நான் மரபு கவிதை மூலம் கூட நல்ல கவிதைகள் பண்ணியிருக்கேன்"னு சொல்லியிருக்கிறார். நான் நெனச்சது என்னன்னா மரபு மூலம் அவர் அதை மேலும் நிரூபித்திருக்கலாமே என்பதுதான். அவருக்கு அந்த பலம் உண்டுன்னா, இந்த நவீன தொனியை மரபு சட்டத்துக்குள்ள கொண்டு வந்திருக்கலாம்.

முதல்ல எந்த "நவீனமான முயற்சிக்கும் எதிர்ப்பிருக்கும்  எதிர்பார்த்ததுதான். ஏன்னா தெளிவின்மை. இவன்  சொல்லறான்னு புரியலைன்னா , கோபம்தான் வரும். அப்புறம், இந்த 1960-65-க்குப் பிறகு குழு மனப்பான்மைகளும் ஆரம்பிச்சுடுதுன்னு நினைக்கிறேன்.

நவீன கவிதையில் நாம தொனியை மட்டும் மாத்தலையே . செல்லப்பா சொல்றாப்பல இங்கே கருத்துதான் கவிதையை தீர்மானிக்கக்கூடியது. கருத்துதான் அதன் வடிவத்தை தீர்மானிக்கக்கூடியது. அதுதான் அவருடைய வரையறை.

அதேபோல, கருத்துக்கு ஏதும் ஆசாரங்கள் கிடையாது. வானமே எல்லை. அப்போ டிசிப்ளினுக்கான வரையறையே மாறிப் போச்சு. அப்போ மரபுக்காரனுக்கு, இந்த சட்டத்துக்குள்ள குடுத்தா பாஸ் மார்க்கு; சீர் தளை ஆசை எல்லாம் சரியா இருந்தா, புலவர் பட்டம் கிடைத்துவிடும். அப்போ புலவர்கள்தான் இருந்தார்கள்.கவிஞர்கள் குறைவுதான். டிசிப்ளினுக்கு அர்த்தம் மாறிப் போன  உடனே, Individualism, democratisation of knowledge எல்லாம் வந்துடுத்து.

இந்த ட்ரெண்ட் வந்தபோது தவிர்க்கும்படியான சில தோல்விகள் ஏற்படத்தான் செய்தன. படைப்பு தோல்விகள். ஏன்னா ஐரோப்பிய கவிதை, பிரெஞ்சு கவிதை போன்றவைகளில் இந்த சோதனைகள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அமைதிக்கு வந்திருக்கு. மேலை நாட்டுக்காரனின் சுதந்ததிர உந்துணர்ச்சியை மட்டும் நாம எடுத்துக்கலாம்.தப்பில்லே. ஆனால் கவிதையிலே நாம் உணர்ந்த அனுபவந்தான்  பிரதிபலிக்கனும். நம்ம வாழ்க்கைக்கு சொந்தமான வேதனை சோதனையெல்லாம் இருக்கு. அதை, நவீன இந்தியத்தன்மைக்கு ஏற்றாற்போல மாற்றி யோசித்திருக்கணும். நவீன கவிஞன் இதைச் செய்யல. கவிதை parochial-ஆ போயிடுத்து .

கவிஞன் தன்னைப் பத்தி நெனைக்ககூடாது. கவிஞன் எழுதும்போது அவன் எழுதறதா நெனைக்க மாட்டான். அவனுடைய ஆத்மா எழுதறது. அந்த ஆத்மாவுடைய அகலமா நீளமோ பிரபஞ்ச அளவுள்ளது. Signature of the soul என்று சொல்லுவார்கள். கவிஞனுக்கு ஒரு ஆழ்ந்த தரிசனம் வேணும். பாரதியாரை மஹாகவியாக்குவது அவருடைய தீர்க்கதரிசனம். அந்த தீர்க்கதரிசனம் இருந்தாத்தான் கவிதை நிற்கும்.

பிரக்ஞை லெவலுக்கு மீறின விஷயம்தான் கவிதை.  பிரக்ஞையா பண்றது கவிதையில்ல. அது புரோஸ்ஸா  போய்டும்.ஏன்னா, மன உலகத்திற்கும், புரா உலகத்திற்கும் தொடர்ந்து எதிர்வினை நடந்துகொண்டே இருக்கு. கவிஞனுக்கு இன்னும் அதிகம். இந்த எதிர்வினையில "பளிச்"னு சில உந்துதல்கள் வார்த்தைகளா வரும். அதுதான் கவிதை.

கவிதை போக்கு எப்படியிருக்க வேண்டுமென்று எல்லோரும் சேர்ந்து யோசித்ததுண்டா?

பல விஷயங்களை பரிமாறிக்கிட்டோம். ஆனா ஒரு வழக்கமான கூட்டமா செய்ததில்லை . ஏன்னா, மணியினுடைய குரல் வேற. என்  குரல் வேற. ஆனால், ஒரு சில விஷயங்களில் ஒத்துமையிருந்தது. எதுன்னா, அலங்காரம் கூடாது, கருத்துனுடைய உக்கிரம் தான் முக்கியம். என் கவிதை கொஞ்சம் more visual-ஆக இருந்ததுன்னு நினைக்கிறேன். கண்ணுக்கு அர்த்தம் அதிகமில்லாம தெரியற நிஜங்களை மனதுல விதம்விதமா குலுக்கிப் போட்டு ஒரு வியப்பையும் சலனத்தையும் ஏற்படுத்துற மாதிரி அல்லது உண்மை, அழகு போன்றவை ஒருவித distortion மூலம் கூர்மைப்படுத்துவது, இசையில் மனோதர்மம் மாதிரி.

உங்களுடைய கவிதையில "அழகு", "புத்துணர்ச்சி" இரண்டும் இருந்துக்கொண்டே வருகின்றன. நீங்கள் ஒரு சாதாரண வாழ்வைத்தான் வாழ்ந்து வருகிறீர்கள். அப்படியிருக்கும்போது உங்களுக்குள் இருக்கும் கவிஞரை எப்படி தக்க வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ?

இந்த மனுசுக்குன்னு தனியா ஒரு உலகமும் பார்வையும் உண்டு. வெளிலே வாழற வாழ்க்கைக்கும் மனம் படைக்கிற உலகத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். அப்புறம், I know the art of forgetting .அடிக்கடி எனக்கு பல விஷயங்கள் மறந்து போய்டும். அது காரிய மறதியில்லை. பெரிய பெரிய விஷயங்கள் நடந்தாலும், என்னை பாதிக்காம உள்ளே போய்டும். என்னில் இருந்தே நான் தனித்திருப்பது மாதிரி. அது மாதிரி சில யோகம் எல்லாம் பண்ணுவேன். அப்புறம் ஜே. கிருஷ்ணமூர்த்தி எனக்கு ஒரு நல்ல பாதிப்பு. அவருடைய பாதிப்புகளினால் என் கவிதைகள் எனக்கு நிறைவு கொடுத்திருக்கு.

அப்புறம் poetic innocence என்று ஒண்ணு உண்டு. யாரையும் சுலபமா நம்பிடற பலஹீனம்.இதெல்லாம்தான் கவிஞன் உள்ளே தங்கியிருக்கிற காரணமோ என்னமோ ?

உங்கள் கவிதையில் சமூகத்தின் மேல் கோபமோ, விமர்சனமோ பெரிய அளவில் இல்லையே ?

நான் பொதுவா கோபப்படாத தெரியாத பிராணின்னு  பேர் வாங்கினவன். என் ஊழியத்துலக் கூட, இவருக்கு கோபமே வராதான்னு கேப்பாங்க.

அது நான் ஏன்னு யோசிச்சு பாத்தேன்: 1. கோபம் என்னை பலவீனப்படுத்திவிடுகிறது. 2. நான் கோபப்படுவதால் அந்த பிரச்சனை தீர்ந்துடுமா  வேற ஏதாவது பலன் விளையுமான்னு யோசிக்கிறேன். சமூகத்து மேல ஏற்படற கோபத்தை, கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா, முடிவுல அது நம்ம மேலேதான் பாயக்கூடும்னு தோணுது.

குழாய்ல தண்ணீர் வரலைங்கறதுக்காக , குடம் குடமாக கண்ணீர் வடித்து கூக்குரலிடுவதில் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. அப்புறம் கலைஞன் போலீஸ்காரனோ, நீதிபதியோ , மடாதிபதியோ இல்லை. சராசரி மனித சலனங்களுக்குக் கொஞ்சம் அதிகமாக, கூர்மையாக பாதிக்கப்படுபவன். அவ்வளவுதான்.

இன்னிக்கு கவிதை மூலமா கோபப்படுவது, சாபமிடுவது, சளைக்காமல் நிழல் விரோதிகளோட போரிடுவது, ஒரு வழக்கமான களைப்பூட்டும் விஷயமாகி விட்டது. இந்தப் பொய் ஆவேசங்களுக்கும், கவிதை மூலம் மனதை உயர்த்தக்கூடிய உன்னத அனுபவங்களுக்கும் சம்பந்தமேயில்லை.

பாரதியினுடைய கோபத்த எல்லோரும் மேலோட்டமா நகல் எடுப்பதனால, தோல்விதான் மிஞ்சும்.

மனித சமூக பலஹீனங்களால பாதிக்கப்பட்டு  நானும், உபதேசம், சாலை ஒரு பூதம், நிறம், காரணம், உரிப்பு , சகஜம், மனதின் நிறம், பயம், மைலாய வீதி எல்லாம் எழுதி இருக்கேன். "நகரச் சுவர்கள்" தொகுப்புலே பார்க்கலாம்.

90-க்குப் பின் வரும் கவிதைகளில் நீங்கள் காணும் மாற்றங்கள் என்ன?

அப்போது புதுக்கவிதை என்றால், ஒற்றையடிப் பாதையில் தன்னந்தனியாகப் பேசிக்கொள்வது போல் பல கவிதைகள் வெளி வந்தன. இப்போது பாதை, நெடுஞ்சாலையாகிவிட்டது. பயணம் செய்யும் கவிஞனும் தன சிந்தனையையும், குரலையும் உயர்த்தி உரக்கக் கத்துகிறான். எல்லோருக்கும் தன் குரல் கேட்க வேண்டுமென்ற கவலையும் ஆதங்கமும்,  மொழியில் தெரிகிறது. ஏன்னா கவிதை யார் காதிலும் விழுவதில்லை. சமூகத்தில் கொஞ்சம் பேர்தான் கவிதையில் நாட்டம்  உள்ளவர்கள்.அவர்களிலும் அநேகம் பேர் கவிஞர்களே!

ஆனா, மொழியின் ஆழமும் வீச்சும் நிச்சயமா விரிந்திருக்கு. இப்போது, நம் நாடு கலாச்சாரத்தையும், இந்து சமுதாயத்தையும், இந்திய பெண்களையும் பத்தி கவிதை எழுத வேண்டும் என்ற  உந்துதலும்,தரிசனமும் கவிதைக்கு உதவாத லட்சியம் போலாகிவிட்டது. இது ஜனநாயகத்தால ஏற்பட்ட தாக்கம். நாடு விடுலையான பின்பு, நமது வீடும், தெருவும், வர்க்கமும், குலங்களுக்கிடையேயான பிரச்சனைகளும், நமது மாநிலமும், நமது மொழியும் அரசியல் பான்மைகளும் இன்றைய கவிஞனை ஈர்க்கின்றன.

"சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று இனி வரும் தமிழ் கவிஞனால் எழுத முடியுமா, எழுதுவானா  என்று ஆச்சர்யத்துடன் யோசிக்கிறேன்.

இன்று இலக்கியத்துக்குள் தலித்தியம்,பெண்ணியம் மற்றும் பிற இனங்களுக்குக் கொடுக்கப்படும் கவனம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஒரு சமூகத்தின் பிரச்சினைகள் வேறு. அது இலக்கியமாக பரிமளித்து நிலைக்கும் விஷயம் வேறு. உலகின் எந்த மூலையில மனித குலம்  வேதனைப்பட்டாலும் ஒரு உண்மையான கலைஞன் தனது சொந்த பிறப்பு, குலம் , தேசம் என்ற வட்டத்தை மீறி, அதனால் இயல்பாக பாதிக்கப்பட்டு எழுத உந்துதல் பெற வேண்டும்.

இன்று, ஒரு நிராகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கத்தைப் பற்றி - அதன் கடுமையான பிரச்சினைகளை மட்டும் முன் வைப்பதற்கு இலக்கியம் படைக்கப்படுகிறது.

பிரச்சினைகளை உரக்கப் பேசுவது வேறு. அவற்றை ஒரு இலக்கிய கலைப் படைப்பாக வெளிப்படுத்துவது வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.தலித் அல்லது எந்த வர்க்கப் பிரச்சினையாயிருந்தாலும் அது இலக்கிய வெற்றி எவ்வளவு தூரம் அடைந்திருக்கிறது என்றுப் பார்க்க வேண்டும். ஒரு நல்ல உதாரணமாக "கோவேறு கழுதை"யை சொல்லலாம்.

இரண்டாவதாக, எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை என்னவென்றால்,இலக்கியதால் சமூக உத்தாரணம் செய்துவிட முடியாது என்பதுதான்.

60 வருடத்திற்கு முன் பாரதியார் "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கை இனியுண்டோ" என்று பாடிவிட்டுப்  போனார்.இன்று ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தீ வைத்துக் கொளுத்துவதைப் பார்த்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறது.

பாரதியார் சுட்டிக் காட்டிய ஆனால் இன்னும் அழியாத பிரச்சினையாக விசுவரூபமாகி சீரிக் கொண்டிருப்பது, நிகழ்காலம். ஆனா, பாரதியின் வாக்கு எக்காலத்திலும் நிலைக்கும். அவர் வரிகள் என்றும் மனித மனதில் ஒலித்துக்கொண்டிருக்கக்கூடிய வரிகள்.

 மேற்சொன்ன சில கருத்துக்கள், பெண்ணியத்திற்கும் பொருந்தும்.

இத்தனை  ஆண்டுகளுக்குப் பின் இப்போது உங்கள் கவிதை பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

நான் ஆரம்பத்துல மரத்தைப் பத்தி எழுதறேன்னா , மரத்துக்குள்ளேயே போய் உட்கார்ந்து எழுதுவேன். அவ்வளவு தன வயப்படுத்திக் கொள்ளும் தன்மை இருந்தது. அதனால நிறைய பிரச்னையும் இருந்தது. இன்னிக்குத் தள்ளி நின்னு மரத்தைப் பார்த்து எழுதறேன்.

ஆனால் நான் இன்னும் objective ஆக  ஆகவில்லை.  என்னால் வெளியே நின்று என் கவிதை பத்தி சொல்ல முடியாது.