vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, December 14, 2015

இரவல் வாழ்க்கை {தொலைந்து மீண்ட டைரிக் குறிப்பு 1962 }


      இரவல்  வாழ்க்கை
{தொலைந்து  மீண்ட  டைரிக் குறிப்பு  1962 }
------------------------------------------------

எத்தனை நாளைக்கு  இரவல்  
சட்டையைப்போட்டுக்கொண்டிருப்பது?

எத்தனை வருடங்களுக்கு  இரவல்
வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது?

நாம் வாழ்க்கையில் 'ஒரு கணமாவது'
 'நாமாக' நமக்கே சொந்தமான  நாமாக 
இருக்கப் பழகி  இருப்போமா?

ஒரு  நாளில்  ஆறு  மணி  நேரம்  
குமாஸ்தாவாகவும் 
ஆறு மணி நேரம்  
கணவன் தந்தை என்ற உறவுச்சட்டையிலும் 
மீதியுள்ள நேரத்தை 
அசைவற்ற கட்டையாகவும் 
கழித்துவிடுகிறோம்.

கணவன் தந்தை குமாஸ்தா 
காதலன் மாணவன் 
இத்தனை  உறவுச் சட்டைகளையும்  
பாம்பு உரிப்பதுபோல்  உரித்துவிட்டு 
எஞ்சியிருப்பது என்னவென்று  
பார்க்கவேண்டும்.

அப்படிப் பார்ப்பதில்தான் 
சுயப்பிரக்ஞை தெரியும்.
விசாலமாகும்... பிறப்பின் பயன் ஒரு  வேளை   புரியலாம்.

அதைத்தான் 
தவம் என்றும் 
துறவு என்றும்
நம் முன்னோர்கள்
 பாடியிருக்கிறார்களோ?

நான்  தந்தை  மட்டுமல்ல  

தந்தை  +1

கணவன்  மட்டுமல்ல   

கணவன்  + 1

குமாஸ்தா  மட்டுமல்ல   

குமாஸ்தா  +1

இப்படியாக +1என்ற 
ஸ்திரமான அஸ்திவாரத்தின் மேல் நாம் விதவிதமான  
உறவுமாயங்களை 
உண்டாக்கி  நிற்கிறோம்.

இதில்
 பரிதாபம் என்னவென்றால் 
காலப்போக்கின்அசுரவேகத்திலே 
அதன் ராட்ஷஸ தேவைகளுக்கு ஏற்ப நாம் கூத்தாடும் மருட்சியில் நமது  அஸ்திவாரத்தை 
மறந்துவிடுகிறோம்.

 மறப்பது  மட்டுமல்ல... 
திரும்பி ஞாபகப்படுத்திக்கொள்ளும் முயற்சியையே
இழந்துவிடுகிறோம் !!

வாழ்க்கை முழுவதுமே 
இரவலாக கழிந்துவிடுகிறது..

இரவல்
  சிந்தனை
இரவல்  லட்சியம்
இரவல்  காதல் ......

இப்படியே
  தேய்ந்துவிடுகிறது  
நம் ஆயுட்காலம்.  ..

வைதீஸ்வரன்  { தொலைந்து  மீண்ட டைரிக் குறிப்பு } 1962



No comments:

Post a Comment