ஞானக்கூத்தன்
( இரங்கல் நினைவுகள் - 2016)
( மீள் பதிவு )
- வைதீஸ்வரன் -
கவிஞர் ஞானக்கூத்தனை நடை பத்திரிகை ஆரம்பித்த நாட்களிலிருந்து எனக்குப் பழக்கம். முத்துசாமி சி. மணி நடத்திய நடை இதழ் ஞானக்கூத்தன் என்கிற அருமையான கவிஞரை அறிமுகப் படுத்தியது முக்கியமான நிகழ்வு.
அந்த இதழில் வந்த அவர் கவிதைகளை யார் வாசித்தாலும் அடக்கமுடியாமல் வாய்விட்டு சிரிப்பார்கள். திரும்பத் திரும்பப் படித்து படித்து சிரிப்பார்கள். இதுவும் ஒரு முக்கியமான நிகழ்வு. ஏனென்றால் அரசாங்கக் கட்டிலில் முதல் முறையாகத் தூங்கிய மோசிகீரனாரைப் போலவே எழுபதுகளில் வாசித்தவுடனே வாய்விட்டு சிரிக்கும்படியாக முதல் புதுக் கவிதை எழுதியவர் ஞானக்கூத்தானாகத் தான் இருக்க முடியும். புதுக் கவிதைக்கு முதல் சிரிப்பை வரவழைத்தவர் ஞானக்கூத்தன் என்று கூட சொல்லலாம்
அவர் தமிழ் மொழியிலும் கவிதையியலும் சீரிய தேர்ச்சியும் நாட்டமும் கொண்டவர். ஆயுட்கால முழுவதும் அதைப் பற்றி மேலும் விரிவான நுண்மையான தகவல்களை சேகரிப்பதிலும் அதன் அடிப்படைகளில் கவிதைகளை வடிவாக்குவதிலும் ஒரு படைப்புமனம் கொண்ட தமிழ் அறிஞர் போலவே செயல் பட்டவர்.
அந்தக் காலத்தில் சங்க இலக்கியங்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் அறிமுகப் படுத்திய ஏ. கே ராமானுஜனின் புத்தகங்களின் வரவு புதுக் கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விழிப்புணர்வைக் கொடுத்தது. நவீன கவிதையின் அம்சங்கள் எல்லாமே சங்க இலக்கியங்களிலிருந்து தொடங்குவதை அடையாளப் படுத்திய அந்த வெளியீடு புதுக்கவிஞர்களின் ஆர்வத்தையும் முயற்சிகளையும் வெகுவாக பாதித்தது.. அதற்கு இணையாக தமிழில் நமது மரபு இலக்கியங்களைப் பற்றியும் சமுஸ்கிருத கவி இயல் கோட்பாடுகள் பற்றியும் செய்திகளை எளிமையாக மீட்டுத் தந்த பெருமை கவிஞர் ஞானக்கூத்தனையே சாரும்.
அவர் கவிதைகள் அவரைப் போலவே மிக எளிமையானவை உரத்துப் பேசாதவை. ஆனால் மீள் வாசிப்பைத் தூண்டுபவை. அழமான கருத்துக்களின் அதிர்வை ஏற்படுத்தக் கூடியவை .அவர் விட்டுச் சென்ற கவிதைகளும் கவிதை இயல் பற்றிய வெளியீடுகளும் தமிழின் முக்கியமான ஆவணமாக நிலைக்கக் கூடியவை
க நா சு வின் அடிச்சுவட்டில் தொடர்ந்த ஞானக்கூத்தன் புதுக்கவிதைக்கு இன்னொரு வித்யாசமான முகத்தைக் கொடுத்தவர். . அவரும் ஆத்மாநாம் ராஜகோபாலனுடன் இணைந்து வெளியிட்ட “ழ” பத்திரிகை அந்த வித்யாசமான கவிதைப் போக்கை அருமையாக ஆவணப் படுத்தி இருக்கிறது
ஞானக் கூத்தனின் கவிதைகள் பல இளங் கவிஞர்களை உற்சாகப் படுத்தி ஊக்குவித்திருக்கிறது.
அவர் கவிதைகள் என்றுமே ஸ்வாரஸ்யம் குறையாதவை. சிறந்த இலக்கியத்தின் செழுமையைக் கொண்டவை.
*
ஒருவரின் மரணம் நாம் எதிர்பார்க்க்க் கூடியது தான். ஆனாலும் அது நாம் மிகவும் நேசித்துக் கொண்டாடும் ஒருவருக்கு நேரும்போது சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.
அவர் விட்டுச் சென்ற கணிசமான படைப்புகள் என்றும் அவர் இருப்பை நிரந்தரமாக நிலைக்க வைக்கும்
அப்பாவை மிகவும் நேசிக்கும் அவரது இரண்டு புதல்வர்களுக்கும் மனைவிக்கும் இது ஒரு மிகவும் வேதனையான பிரிவாக இருக்கலாம்.
அவர்களுக்கு நம் ஆழ்ந்த ஆறுதலும் இரங்கலும் நாம் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம் .
________________________________________________________________________________________