எழுச்சி
- வைதீஸ்வரன் -
பாறைக் கூட்டங்களிடையே
நீ கல்லுடைக்கும் ஓசைகள்
யாருக்குக் கேட்குமடீ பெண்ணே!
தலையைத் தொட்ட மாதிரி
அங்கே ஒரு நிலவு...
அது உன் கண்ணுக்கு வெகுதூரம்....
அவ்வப்போது வீசுகிறது அமைதியாகக் காற்று
ஆனாலும் அகாலங்களிடையே
இடை இடையே மிதக்கும் சாம்பல் தூள்
உயிர் ஓலங்களின் பேரோசையுடன்...
.அய்யோ கடவுளே!
இறங்கி வா....
இறங்கி வா...
கையில் பாறைத் துண்டை இறுக்கிக் கொண்டு
இறங்கி வா
உன் வீட்டை யாரோ இடிக்கிறார்கள்..
பாதைகள் தாறுமாறாகின்றன.
கிலுகிலுப்பைகளை இரைத்து விட்டு
குழந்தைகள் எங்கோ தொலைந்து போனார்கள்..!
கண்டு பிடி..கண்டு பிடி...
வானத்தைக் கிழித்துப் பார்
சூரியனை மீண்டும் பெற்றெடு
உலகத்தை இன்னும் ஒரு முறை
ஒரே ஒரு முறை
சத்தியமாய்க் கட்டிப் பார்...
பெண்ணே!
பாறைகளுக்கிடையே நீ கல்லுடைத்த ஓசைகள்
தான் அதற்கு உரமாகக் கூடும்.....
..
(Bob Dylan இசைத்த மொழியை மீண்டும் கேட்ட போது)
_____________________________________________________________