நான் மிக விரும்பிய கவிதைகள் - வைதீஸ்வரன்
(யார் இந்தக் கார்த்தி? வாழ்த்துக்கள்! )
இறகின் பிறகும்
பாலொத்த வெள்ளையும்
பரிச்சயமில்லாதொரு மென்மையும்
அந்த இறகில் இருந்தது.
இறந்திருக்க முடியாதென்ற பெரு நம்பிக்கையுடன்
தேடி யலைந்தேன்
அப்பறவையை.
எதிர்ப்பட்ட மின்கம்பங்களில்
எருமையின் முதுகில் என
எங்கேயும் இல்லை.
அம்மாதிரியொரு பறவை
கவலை பெருக்கியும்
கையிலிருந்த இறகு கருக்கியும்
கவிழ்ந்து கொண்டிருந்த இரவில்
வெண்பறவை தென்படா
வானம் வழி
பறந்து மறைந்ததொரு கருங்காக்கை
எஞ்சியிருந்த அவ்விறகின்
நிறமொத்த எச்சமிட.
*****************
மொண்ணை மனசு
முற்றத்தில்
மழை நீர் கொஞ்சம்
மிச்சமிருந்தது.
கத்திக் கப்பல் செய்து தாவென்றது
குழந்தை.
கத்தி எதற்கு? என்றேன்
முட்டும் மீனை
வெட்டுவதற்கு “ என்றது.
விழிகள் விரிய…
முனை கொஞ்சம்
மழுங்கலாக செய்து
கொடுத்து விட்டேன்!!
---கார்த்தி ---
(Picture Courtesy: Landon Parenteau)
________________________________________________________________________________
No comments:
Post a Comment