vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, May 25, 2012

அது ஒரு “அந்த நாள்” - வைதீஸ்வரன்          
அது ஒரு   “அந்த நாள்

      வைதீஸ்வரன்
சிங்கநல்லூர் என்ற சின்ன  கிராமம்.  நாலைந்து பிராமணத்  தெருக்கள், மீதியுள்ள ஐந்தாறு தெருக் களில் ஆலைத்தொழிலாளி  களும் விவசாயிகளும்  குயவர்களும் தோட்டிகளும் அநேகமாக மானம்   தெரிகிற மாதிரியான ஓட்டு குடிசை வீடுகளில் ஜீவித்துக்கொண்டிருந்தார்கள்..

கிராமத்துக்கு ஒட்டியதுபோல் வளைந்துஅணைத்துக்கொண்டு ஒரு மடை வாய்க்கால்        [தண்ணீருடன்!] ஓடிக்கொண்டிருந்தது.  கிராமத்துக்கு மேற்குப்புறமாக   ஒரு அடி இடைவெளியில் இரண்டு  தண்டவாளங்கள்  எந்தெந்த ஊர்களிலோ கிளம்பி இந்த ஊர் வழியாக  எந்தெந்த ஊர்களுக்கோ போய்க்கொண்டிருந்தது. இதற்கு வடக்குப்புறம் ஒரு மசானமும் உண்டு.. சிங்கநல்லுர்    மூதாதைகள்  பலருடைய ஆவிகள் அந்த மண்ணுக்கடியில்தான் தங்களை ஆஸ்வாஸப்படுத்திக்கொண்டிருந்தன.  சில சமயம் அந்த    ஆவிகள் விளையாட்டாக நள்ளிரவில் எழுந்து வந்து இளம் விதவைகளையும், சுகப்படாத கன்னிகளின் உள்மனங்களையும் பீடித்துக்கொண்டு ஊரிலுள்ள ஆண்கள் செய்யும் அக்கிரமங்கள் அத்தனையும் அம்பலப்படுத்திவிடும்.. இருட்டு வேளையில் அதன் வார்த்தைகளைக்   கேட்டுக்கொண்டு முடங்கிக் கிடக்கும் ஆண்களின் நெஞ்சை அது   படாத பாடு  படுத்தி விடும்..

 இது சிங்கநல்லூருக்கு மட்டும் ஏற்படும் விபரீதம் என்று சொல்லிவிட முடியாது.. பெண்களை சமூக அங்கீகாரத்துடன் கொடுமைக்கு  உள்ளாக்கும்  எல்லா ஊர்களிலும் இப்படித்தான நடக்கும்

அதே சிங்கநல்லூரில்  சிருஷ்டிகளும் வளமாகவே விருத்தி ஆகிக் கொண்டிருந்தன...ஆண்டுக்கு ஒரு தடவை வயிறு நிறைய குழந்தையை  சுமந்து கொண்டு  லட்சணமான பெண்கள் கோவிலுக்கு போய் வரு வதை பார்க்கும் போது வாழ்க்கை அறுவடைக்கு  நிற்கும் நஞ்சை  வயலைப் போல்  குளுகுளு வென்று இருக்கும்..

அப்படித்தான்  ஒரு பெண்  சுமார் 75  ஆண்டுகளுக்கு முன்நிறைமாதப் பெருமூச்சுடன்  பூபழங்களுடன் அர்ச்சனை செய்து  விட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். வெள்ளை முகத்தில்  சற்று பசலை கண்டிருந்தது.  சந்தோஷமும் பயமும் மனதுக்குள்  மாறி மாறி அலைந்து கொண்டிருந்தது..

முதல் அக்ரஹாரத்தில் 4வது வீட்டுக்குள் மெல்ல நுழைந்தாள்.‘’ஏண்டீ.. நிதானமா போய்ட்டு வந்தியா?  நீ வர்ர வரைக்கும் எனக்கு    பக்கு பக்குனு இருந்தது.....இந்த இக்கட்டுலயும் கோவிலுக்கு     போயாகணுமா?.. இது அந்த பெண்ணின் மூத்த சகோதரி .
  
கர்ப்பிணிப்பெண் சிரித்துக் கொண்டாள்..  ”போனா என்ன? “
     
இல்லே  தப்பில்லேடீ..... ஆனா துணையில்லாம போறே.. நானும் உங் கூட துணைக்கு வர முடியாத முண்டச்சி ஆய்ட்டேன்..   இருவத்தஞ்சி வயசுலே என்னை இருட்டுல தள்ளி ஒக்கார வச்சுட்டான்   அந்தப் படுபாவி ஆண்டவன் ....சரி வாடி உள்ளே ..சுத்தி போடணும்..”  என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள்

குச்சு உள்ளெல்லாம் ஒழிச்சு வச்சுட்டேன் ...உள்ளெ கிடந்த   ஓலை சட்டிப் பானை நெல்லு அண்டா எல்லாத்தயும் கொல்லைலே    போட்டுட்டேன் .. ஒழிக்கும் போது ரெண்டு தேளு ஓடித்து..அதை   அடிக்க கைவரலெ..பிள்ளைப்  பெர்ற சமயம் எதுக்குன்னு விரட்டிவிட்டுட்டேன்...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பதில் சொல்ல எதுவும் இருக்கவில்லை. கூடத்து  முற்றத்தில் உட்காந்து கொண்டு துளசிச்செடியை வருடிக்    கொண்டிருந்தாள்..சகோதரி கரண்டியில் சம்பிராணிப் புகையோடு     எதையோ கலந்து அந்தப் பெண்ணுக்கு சுற்றிப்போட்டு எச்சில்துப்ப சொன்னாள். தூஉ

இருட்டிக்கொண்டிருந்தது. புரட்டாசி மாச வானம்    மழைக் காலம் .. லேசாக தூறலும்  ஆரம்பித்து விட்டது..  மாடத்து    சிம்னி விளக்குகளை  ஏற்றி விட்டு  சௌந்தர்யலஹரி படிக்க ஆரம்பித்தாள்....

சுவற்றில் தாத்தா காலத்துக் கடிகாரம் நாக்கை ஆட்டிக்கொண்டு பொழுதை ஓட்டிக்கொண்டிருந்தது.

 
இருவரும் சாப்பிட்டு விட்டு  படுத்துகொண்டார்கள்..ஏதோ நினைத்துக்   கொண்டவள் போல் சகோதரி எழுந்து போய் குச்சு உள்ளில் ஒரு   சிம்ணி விளக்கை வைத்து விட்டு வந்து ஈஸ்வராஎன்று படுத்தாள்.

மழை சற்று பலமாக பெய்ய ஆரம்பித்தது.. ஒரு சின்னக் குழந்தை   அழுகை கேட்காத அளவு மழையின் இரைச்சல் ஓட்டில் விழுந்து  கொண்டிருந்தது..எப்போது விடியும்’’ என்ற ஆதங்கத்துடன்   சகோதரி அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்..கர்ப்பிணிப் பெண்ணும் தூக்கம் வராமல் பாயில் புரண்டு புரண்டு   படுத்துக்கொண்டிருந்தாள்..

 ”நன்னா போத்திக்கோடீ...”” 

 ”
தூக்கம் வரலே அக்கா.."

மனசை உழட்டிக்காம தூங்குடீ.. இது ரெண்டாவது தானே! "ஒன்னோட செல்லப் பொண்ணு சேலத்துல சமத்தா இருக்குமோல்யோ?..”

அவளுக்கென்ன அக்கா.. ஒம் மாதிரி அவளுக்கு ஒரு அத்தை    இருக்கா..அத்தை இருந்தா போறும் அவளுக்கு ..யாரும் வேண்டாம்..ஊர்லேருந்து வரும் போது ஒனக்கு ஒரு பாப்பா பொம்மை வாங்கிண்டு   வர்ரேன்னேன் .. சிரிச்சிண்டு ஓடிப் போயிடுத்து. குழந்தேளுக்கு கூட நம்ப எப்பொ நிஜம் பேசறோம் எப்ப இட்டுகட்டிப் பேசறொம்னு   தெரியும்  போல இருக்கு !..

சொல்லிக்கொண்டே தனக்குள் சிரித்துக்கொண்டாள் தங்கை. சிறிது வெளிச்சம் வந்ததுபோல் முற்றத்தில் மேகம் விலகிக்கொண்டிருந்தது. கர்ப்பிணிப்பெண் மெல்ல எழுந்து உட்கார்ந்து    கொண்டாள்..

  ”என்னடீ? “

 “ஒண்ணுமில்லே ..ஆனா என்னமோ போல இருக்கு...”  


 ‘ஐயய்யோ  ஒண்ணும் வலி கிலி இல்லையே.? “

சகோதரி மறுபடியும் மணியைப் பாத்தாள். ..மணி  அப்போது   தான் மூன்று அடித்து ஓய்ந்தது. மழை மெல்லத் தூரலாச்சு.

   அக்கா..அக்கா...

  
ற்று கண்ணைத் துடைத்துக்கொண்டு தங்கையை பார்த்தாள்.

சின்ன வயசுலெ நம்ப வீட்டுக் கொல்லைலெ எவ்வளவு    பாகக்கா காச்சு தொங்கும் ..ஒனக்கு ஞாபகம் இருக்கா?

ஆமாண்டி அதுக்கு என்ன இப்ப? “

இல்லே அப்போ நம்ப அம்மா இருந்தா.. அம்மா எது பண்ணி னாலும் கை மணக்கும் .

 ‘’ஆமா..  “

அம்மா  கொல்லையிலேருந்து  இளசா பாகக்கா பறிச்சு வந்து..   தேங்காத் துருவி போட்டு மணக்க மணக்க பாகக்கா கறி பண்ணிக்    குடுப்பா..இப்பொ நெனைச்சிண்டாலும் நாக்குலே ஜலம் ஊறது..

இப்ப எதுக்குடீ இந்த நடு ராத்திரிலே அதை நெனைச்சிண்டே?”

நெனைப்பு நம்மை கேண்டுண்டா வருது அக்கா? ஏதோ மனசுலே   பட்டுது வாயில சொல்லிட்டென்..அதை நீ  மனசுல வெச்சிக்க    வேண்டாம் ....மறந்துடு...

அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.. திடீரென்று எழுந்து   உட்கார்ந்து கொண்டாள்..கைகளை இரண்டு தடவை தேய்த்துக்  கண்ணில் உத்திக் கொண்டு மணியைப் பார்த்தாள்.மணி 03 30.

சித்தே படுத்துக்கோ, இதோ வரேன்.. அக்கா எழுந்து கொண்டாள்.

தாவாரத்திலிருந்த ராந்தல் விளக்கை எடுத்துக்கொண்டு வாசக்  கதவை சாத்திக்கொண்டு வெளியே போய் அடுத்த வீட்டுக் கதவை   இரண்டு மூன்று தடவை தட்டினாள். அப்போது தான் காமாட்சி வெளியே  வருவாள் என்று அவளுக்கு தெரியும் காமாட்சி சற்று வயதானவள்.

 காமாட்சி மாமி சித்த எங்கூட வரேளா? “

 
தூக்கம் கலையாமல் எட்டிப் பார்த்த காமட்சிக்கு சரியாக பிடிபடவில்லை என்னடீ இந்த  இருட்டுலே வந்தே?’’

ஒடனே சித்தே வாங்க மாமி கோடியாத்து வரைக்கும் போய்ட்டு   வரணும் .. அவாத்துக் கொல்லையிலே பாற்கா காச்சி தொங்கறதை   நான் பாத்துருக்கேன்.. சிரமம் பாக்காம உடனெ வாங்கோ .. போயிண்டே சொல்றேன்....

 
காமாட்சி அவசரத்தைப் புரிந்துகொண்டு உடனே அவளுடன் கிளம்பினாள். நாம்ப கதவத் தட்ட வேண்டாம் மாமி ....பேசாம  இந்த சந்து வழியா  கொல்லைக்குப் போயி காயை பறிச்சிண்டு விரைசலா வந்துடலாம்..  ஊரை கூட்டி அமக்களம் பண்ண வேண்டாம் ...

ஏண்டீ.. கேக்க வேண்டாமா? திருடவா சொல்றே...?”

அவசரத்துக்கு பாவம் இல்லே மாமி.. வயத்தெல இருக்கற குழந்தைக்கு  திருட்டுப் பாகக்கா... நல்ல பாகக்கான்னு வித்யாசமெல்லாம் கெடையாது.   அது பரப்ப்ரும்மம்...நீங்க பேசாம வாங்கோ!

சமயத்துக்கு ஏத்த சாதுரியம்  ஒங்க பரம்பரைக்கே உண்டு..  சரி பறிச்சுண்டு வாடி”” காமாட்சி மாமி  வெளியில் காவலுக்கு நின்றாள்.

 விறகடுப்பில் வைத்திருந்த வாணலியில் கொதிக்கிற எண்ணையில் பிஞ்சுப் பாகக்காய்  மினு மினு வென்று புரண்டுகொண்டிருந்தது..

  
மணி ஐந்து இருக்கும்..

 “அய்யொ அக்கா ஐய்யோ அக்கா வலி தாங்கலியே அய்யோ..”  கூடத்திலிருந்து குரல் கேட்டு அக்கா ஓடினாள்..
தங்கை புரண்டு புரண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். உட்காரமுடியாமல் படுக்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தாள்.

 “ஐயய்யோ.. ஈஸ்வரா..  கொஞ்சம் பொறுத்துக்கோடி..

பிறையிலிருந்த விபூதியை எடுத்து வாயில் போட்டு வயிற்றில் பூசினாள்.  இதோ வரேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. வலி வந்தா முருகா.முருகா  சொல்லுஎன்று விறகடுப்பை அணைத்து விட்டு வெளியே ஓடினாள்.

இரண்டு தெருக்கள் தள்ளி இருந்தது  வண்ணாத்தி முத்துப் பேச்சி வீடு வீட்டில் கதவைத் தட்ட வேண்டிய அவசியமில்லை.. பனை ஓலையில் வேய்ந்த குடிசை.. அது எப்போதும் எல்லா பிரசவ வலிகளுக்கும்  திறந்திருக்கும்...அவள் நல்ல கைராசிக்காரி என்று பெயர். அவளுக்கு  தெரிந்திருந்த பரம்பரை  மருத்துவ   ஞானமும் தேர்ச்சியும்   சாதுர்யமுள்ளவர்களை இன்று  கோடீஸ்வரர்களாக ஆக்கி யிருக்கும்..   அவள் ஒரு பிரவசத்துக்கு  கூலி  ஒரு நூல் சேலையும் 4 படி     அரிசியும் தான்!

முத்துப்பேச்சீ ..என்று கத்தினாள்.  உள்ளே இருந்து வந்த முத்துப்பேச்சி ஓடிவந்த இரைப்புடன்அக்கா. நல்லா வலி எடுத்துருச்சா...தேதி நாளெல்லாம் பாத்துட்டியா..  இப்போ மணி என்னா?.. அஞ்சறையா? இதோ நான் பின்னாடியே     வர்ரேன்..நீ  ஓடு..”” என்றாள்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே போன போது தங்கை     இன்னும் புரண்டு கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.. அவளை மெல்ல     கைத்தாங்கலாக  அழைத்துக கொண்டு போய் குச்சு’’ உள்ளில்   பாயில் படுக்கவைத்தாள்..சிம்ணி விளக்கை பெரிதாக ஏற்றிவைத்தாள்.
    
அதற்குள் முத்துப் பேச்சி வந்துவிட்டாள்.  காலை அலம்பிக் கொண்டு குச்சு உள்ளுக்கு போய் ‘’ஏங்கண்ணு என்னா செய்யுது..? என்று கண்ணைப் பார்த்தாள்..கையைப் பிடித்து நாடி பார்த்தாள்.. அடிவயிற்றை லேசான அழுத்தத்துடன்  சோதித்துப்பார்த்தாள்..எந்தா கண்ணு தவலையிலெ வென்னீர்  போட்டு வெச்சிருக்கையா?..”என்று  அக்காவைப் பார்த்துக் கூவினாள்.

அப்போதுதான்   அக்கா அவசரம் அவசரமாக சமயலறைக்கு ஓடினாள்.. அடுப்பில் பாகற்காய் கறி சூடு குறையாமல் வாணலியில் இருந்தது பரபரப்பில் எப்படி கவனிக்காமல் போனோம் என்று திக்கென்றது    அக்காவுக்கு.

குச்சு உள்ளிலிருந்து..இதோ ஆயிடுச்சீ அதோ ஆயிடுச்சீ..  இழுத்து மூச்சை விடு.. என்று  பேச்சியின் குரல் கேட்டது.

அக்கா..எதோ ஒரு  ஆவேசம் வந்தது போல் ஒரு கரண்டியில்  பாகக்காய் கறியை எடுத்துக் கொண்டு  சாத்தியிருந்த உள்ளைத்  திறந்து தடாலென்று உள்ளே ஓடினாள்.  வலிவேதனையால் திறந்துகொண்டிருந்த தங்கையின் வாயில்  பட்டென்று போட்டாள்.. தின்னுடு தின்னுடு.. ஆசைப் பட்டது கொறையாக கூடாது தின்னுடூ...’’ என்று அவசரப்படுத்தினாள். முத்துப்பேச்சி விவரம் புரியாமல் குழப்பமுடன்  பார்த்துக்கொண்டிருந்தாள். வாய் வழியாக பாகற்காய் கறி இறங்கிக் கொண்டிருந்தது.

 
வயிற்று வழியாக நான் இறங்கிக் கொண்டிருந்தேன்!!

 மணி 06 05   ஞாயிற்றுக்  கிழமை  புரட்டாசி 6அம் தேதி 1935

                   **********

ஏண்டீ இப்படி பிள்ளையை பத்தி இப்படி கசந்துக்கிறே? பாகக்காயை முழுங்கிட்டு பெத்தவ தானே  நீ? “ என்று  கண்ணக்கா தங்கையை விஷமமாக கேலி செய்வதை நான் பிற்காலத்தில்  கேட்க நேர்ந்தி ருக்கிறது!

                                   ************** 

பின்குறிப்பு: இதைப் படித்து விட்டு நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.. நான் பிறப்பதற்கு முன்பே என்னைப் பிரசவித்த சம்பவத்தை எப்படி உண்மை என்று        நம்புவது??  உண்மை தான்.. ஆனால் இதே சம்பவத்தை இன்னொரு குழந்தை பிறந்த விஷயமாக நான் சொல்லியிருந்தால் நீங்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டிருப்பீர்கள் இல்லையா? அந்தக் குழந்தை நானாகவே இருந்தால்  ஒரு கற்பனை உண்மைபோல் தோன்றும் இல்லையா? மேலும் நான் அன்று அங்கே பிறந்தது நிஜம்..என் தாயார் அந்த சமயம் விவரித்தது போல் பாகற்காய் தின்றதும் நிஜம் !                                                                                                        வைதீஸ்வரன்
        
     
         
    


No comments:

Post a Comment