vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, September 27, 2012

தாகம் -a poem by vaidheeswaran


தாகம்
                      ---------------------------
 
வானத்து உச்சியில்
 குதிரையை அவிழ்த்து விட்டு
 வாசலுக்கு ஓடி வந்தான்.
 கொதிக்கும் உலை நின்று
 கூத்தாடும் ஆவியாய்
 பதைத்த சுடு மூச்சில்
 பகற்கனவு கலைந்தெழுந்தேன்
“நீ யார் “என்று நினைக்கவும்
நேரமில்லை.--------------
“தாகம்...தாகம்...” என்று
 தோள்மீது குடை சாய்ந்தான்.
“நாக்கில் கனல்தாங்கி
நாயாய் அலைகின்றேன்
மேற்கும் கிழக்காக
மேய்த்துத் திரிகின்றேன்
தாகம் தண்ணீர்..என்று
தவித்துக் கையேந்தினான்.

நெஞ்சில் சுரந்த ஈரம்
கையில் பெருகவில்லை.
 பஞ்சாகப் பறந்தோடி
பூவாளி தூக்கிப்போய்
படுத்திருந்த நதி முதுகைக்
குடைந்து குடைந்து பார்த்தேன்.
நகமும் நனையவில்லை
புதுக் கிணற்றில் காலை விட்டுக்
கொப்புளமாய் எழுந்து வந்தேன்
வறண்ட பூமியெங்கும்
வாடிக்கை கை விடவும்
நேற்று விதைத்த விதை
நெஞ்சில்  தட்டுப்பட---
“விதைத்தவன் நான் கேட்டேன்...
நீரில்லை-  தேனிருக்கோ?..
நேரமில்லை நிற்க” வென்றேன்
“காலம்வர வேண்டுமப்பா...
சூலாகிச் சுரக்க..
வாயேன் பார்க்கலாம்..”
என்று வளைந்தது முளை.
“ஹூம்...காலம்..
தாகத்திற்கு காலமில்லை...
தண்ணீருக்கு என்ன காலம்?..
வாசலில் வெந்து  நிற்கும்
வாய்க்கு என்ன சொல்வேன்?...
இதென்ன தேசம்?.......”
என்னெஞ்சும் உடலும்
உருகி  உப்பாச்சு.
கண்கள் குளமாக
வெறுங்கையில் வாளி யேந்தி
வாசலுக்குத் திரும்பி வந்தேன்.
“அரைக்கணம் பொறுக்க வேணும்..
மலருக்குள்  தேனில்லை
நதி மனசில்  நீரில்லை
அரைக் கணம் பொறுக்க வேணும்..
அமருங்கள்..”  என்றேன்
“ ஐய்யய்யோ...நான் கடவுள்...
காலம்  எனக்கில்லை..
மேலும் பொறுத்து நின்றால்
குதிரை கட்டவிழ்ந்து
திசையைத் தின்று விடும்..
நீயும்  வியர்த்தாய் -  --“என்று
நெற்றியைத் துடைத்து விட்டு
சிறகை விரித்துப்
படபடத்துப்  பறந்தான்
“தாகம்....தாகம்.. என்று 
தனைமறந்து பின் தொடர்ந்தேன்
“ஆமாம்...தாகம்....
நீர் கொடுக்கவில்லை நீ..
நானோ தாகத்தைக் கொடுத்தேன்..
பாடு! “ --- என்று பறந்தான்  விண்ணுக்குள்.
மேகம்  கனைத்தது.

           -வைதீஸ்வரன்    –1962
[*If I could say    this  can be   treated    as  a  Metaphorical  poem  and   has  a  Classic   tone
  Published   in  a  TAGORE  -SPECIAL  issue from  Calcutta  and  the   creative  writings from Tamil.
Was  compiled    by  Ashoka Mitran]


. 

No comments:

Post a Comment