vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, October 13, 2012



                 
மரத்திற்கு ஒரு இரங்கல்
                                        ----------------------------------------------------- வைதீஸ்வரன் 



 இன்று வரை ஒவ்வொரு அடுக்ககங்கள்   நிலத்தை ஆக்ரமிக்கும் ஒவ்வொரு காலத்திலும் அங்கே இருந்த மரங்கள் அடியோடு  வீழ்த்தப் படுகின்றன.  எனக்குத் தெரிந்த  ஒரு நண்பரின் பழங்கால வீடு. சின்ன ஆசிரமம் போல் இருக்கும். அதைச் சுற்றி மாமரங்களும் தென்னையும் கொய்யாமரங்களும் அடர்ந்து சூழ்ந்திருக்கும்   எங்கு பார்த்தாலும் பசுமை பசுமைதான்.  வெளிவீதியில் எரிக்கும் வெய்யில் அவர் வீட்டுக்குள் எப்போதும் அண்டாது குளு குளுவென்றிருக்கும்.  அங்கே உள்ளே சென்றதுமே  மனம் ஏதோ தன்னிச்சையாக அமைதியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். அதற்கு முன் உள்ளே புரட்டிப்போட்டுக் கொண்டிருந்த கோபங்களும் வருத்தமும்  ஏமாற்றங்களும்  மௌனமாகி மெள்ள வீர்யம் கெட்டு   மயக்கங் கொடுத்த நோயாளிகளைப் போல் மனதின் ஓரத்தில் ஒதுங்கி விடும்   ஜிவ்வென்று  மனம் விரிந்து பரந்து லேசாகி உடல் தாண்டி மிதக்கத் தொடங்கி விடும்...அந்த  மரங்களுக்கு  அவ்வளவு ஆக்க சக்தி இருந்தது என்பதே  எங்களுக்கு ஞாபகம் இல்லை.

ஒரு நாள் வெளி நாட்டிலிருந்து வந்த அந்த நண்பருடைய மகன்கள் ஒரே வாரத்தில்   தீர்மானித்து முடிவெடுத்து  அதைத் தடுக்க முயன்ற அந்த நண்பரின் வயதான முனகலை அலட்சியம் செய்து விட்டு அந்த இடத்தை அடுக்ககமாக  மாற்றினார்கள்.  பலமாதங்களுக்கு அந்த வீட்டை சுற்றி  வெடி வைத்துப் பிளந்த  பிணங்கள் போல் அந்த  நெடுங்கால மரங்கள் சிதறிக் கிடந்ததன..

இது போன்ற அதிர்ச்சியான ஊமைக் கொலைகள் நகரங்கள் முழுவதிலும் நடந்து கொண்டே இருக்கின்றன.  மரம் நடு விழா என்று அவ்வப்போது  அரசியல்  சினிமா நாயகர்கள்   கையில் மம்மட்டியுடன் காட்சியளிக்கும்   போட்டோவிற்குப் பிறகு அந்த மரமும் அந்த இடங்களும் என்ன வாயிற்று?
              
               1] மன்னிப்பு
               மரங்கள் ஓயாமல்
               அழிந்து கொண்டிருந்த போதிலும்                              
               குயில்களுக்கு இன்னும்
                 கோபமில்லை  யாரிடமும்
                 அதன் குரல் இன்னும்
                 காதலையே  பாடுகின்றன
                 இனி வரப் போகும்
                 “ஒரு மனிதனுக்காக..
                      **************

                   2] காத்திரு
                  மரங்கள் சிரித்த்தைப் போல்
                  பறக்கின்றன  காகங்கள்
                  கொஞ்சம்  தென்றலும்
                  குளிர்ந்த வானமும்  போதும்
                  அவைகள்  சிரிப்பதற்கு.
                   எப்போது அவைகள்
                   சிரிக்குமென்று
                   எதிர்பார்க்க முடியாது.
                   .........காத்திருக்க வேண்டும்.
                   காசுகளைக் கூட்டிக் கழித்து
                    கணக்கு சரி வராமல்
                   சலிக்கும்  தருணங்களில்
                   கண்களை சற்றே  உயர்த்துங்கள்
                   ஒரு வேளை
                    அது சிரிக்கலாம்.
                    எதற்கும் காசுகளை எண்ணும்போது
                    சில இடை வெளிகளை
                     ஒதுக்கிவிடுவது  நல்லது..
                     மரங்களின் சிரிப்பைப் பார்ப்பதற்காக
                          ****************************    
                     
          3] சிலிர்ப்பு
                    மரத்திற்கு மரம் பறந்து
                    கிளைகளில் நெஞ்சு விம்ம அமர்ந்து
                     சிலிர்க்கும் பறவைக்குஞ்சுகளுக்குத் தான்
                    எவ்வளவு கர்வமற்ற  ஆனந்தம்!
                    இந்த விடியலும் வானும்  மரங்களும்
                    தனக்கே  சொந்தம் போல்
                     எத்தனை அதிகாரமற்ற  பாந்தவ்யம்
                     அந்தப் பறவைகளுக்கு
                     பறவைகளில்லாத வானத்தின் சோகத்தை
                     என்னால் யோசிக்க முடியவில்லை.
                     நிச்சயம்
                     அது வானத்தை விடப்  பெரிதாக
                     இருக்கும்  

                       -----வைதீஸ்வரன்  தொகுப்பு  கால் மனிதன்


No comments:

Post a Comment