vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, October 26, 2012


என்னை  வளர்த்த  சென்னை
    வைதீஸ்வரன் 
         

 ஒரு குழந்தை  பிறந்து விளையாடி  வாலிபனாய் வளர்ந்து  நடு வயதின் பக்குவத்தை அடைந்து  வயதாகி முதுமை எய்தி  நலிவுற்று நோய் படர்ந்து  பிறகு மெல்ல மறைந்து போகும் பான்மையில் தான்  நம் பூமியில் நகரங்களின் சரித்திரமும்  பரிணமிக்கிறது  என்று  நினைக்கிறேன்..

நான் வளர்ந்து வாழ்ந்த சென்னை பட்டணத்தையே எடுத்துக்கொண்டால்  இத்தகைய கால வளர்ச் சியை கண்டு    அறிய முடிகிறது.

கடலை நம்பி வாழ்ந்த  ஏழை மக்கள் ஜீவிக்கும்  கால்வாய்கள்  நிறைந்த கிராமமாக கடந்த நூற்றாண் டுகளில் தோற்றம்  கொண்ட சென்னை  இன்றைய காலம் வரைக்கும்  எத்தனையோ வாழ்வு மாற்றங் களை  ஏற்றுக் கொண்டு  ஒவ்வொரு  கால கட்டத்திலும் ஒரு புதிய நாகரீகத்தை போர்த்திக்கொண்டு வளர்ந்திருக்கிறது.

கடந்த அறுபது வருடங்களாக நான் கண்கூடாக பார்த்து வரும் இந்த சென்னை நகரம் தான் எத்தனை சாயல்களை  மாற்றிக் கொண்டிருக்கிறது??

நாற்பதுகளில் தெருக்களின் நட்ட நடுவில் தண்டவாளத்தில் ட்ராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தன.. மக்கள்   எதிர்ப்படும் ரிக் ஷாக்களையும்  சைக்கிள்களையும் கடந்து  சுதந்திரமாக  வீதியில் திரிய முடிந் தது. கார்கள் அபூர்வமாக  தெருவின் காட்சிக்கு ஒட்டாமல் அன்னியனைப் போல்  ஓடிக் கொண்டிருந் தன.


பையில் பத்து ரூபாய் இருந்தால் ஒரு பெரிய தொகையை சுமந்து செல்லும் கவலையும் எச்சரிக்கையும் மனதை ஆட்கொண்டவாறு  பையை அடிக்கடி தொட்டுப்பார்த்துக் கொண்டே நடக்க வேண்டி வரும்!..

 அந்த காலகட்டத்தில்  கூவம் அத்தனை அழகாக பருவத்தை எட்டும்  கிளுகிளுப்புடன் ஓடிக் கொண்டி ருக்கும்.. அந்த நினைப்புக்கு  என் வயதும்  ஒரு காரணமாக இருக்கலாம்.

சென்னையின் குறுக்கு மறுக்காக ஓடும்  கூவத்து வாய்க்கால்களில் நீண்ட பெரிய படகுகளில் தேங்காய் மூட்டைகளும்  மீன்கூடைகளும் வைக்கோல் பொதிகளும் கடந்து போவதை நான் கரையோரம் நின்று  வேடிக்கை பார்ப்பதுண்டு.

 அந்த காலத்து  ஓவிய மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த சில   வாரங்களுக்குள்ளே இந்தக் கூவக் காட்சிகளை நேரில் பார்த்து   வரைவதை  ஒரு ஒரு பெரிய கலா அனுபவமாகவே பயின்று வந்தார்கள்.  


 அந்த வருடங்களில் ஒரு முறை  கூவத்தில் படகு மூலமாக பயணம் செய்து மகாபலிபுரம் போயிருக் கிறேன். அப்போது சென்னையிலிருந்து மகாபலிபுரம் போவதற்கு நேரடியான சாலைகள் கிடையாது.


 உ.வே.சாமினாதய்யர் கூட ''என் சரித்திரத்தில்'' இந்த மாதிரி பயணத்தை குறிபிட்டிருக்கிறார்..

சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகளில் எங்குபார்த்தாலும் தொழில் வளர்ச்சிகளின் வேகமும் பொருளா தார வளர்ச்சியின் பாதிப்புகளும் ஊர்களை நகரமாக  சந்துகளை சாலைகளாக மாற்றத்தொடங்கியது. சின்ன சின்ன ஓட்டு வீடுகள்  லாயக்கற்ற கிழவர்களைப்போல் ஆட்டங்கண்டு இடிந்து புதிய காங்க்ரீட்  மாளிகைகள்  முளைக்க   ஆரம்பித்தன. 

    
இத்தனை மாற்றங்களையும் சாதிப்பதற்கு  நிறைய மனித உழைப்பு  தேவையாக இருந்தது. நகரத்தை சுற்றியிருந்த கிராமங்களில் இருந்து   நிறைய  தொழில் சார்ந்த மனிதர்கள் சென்னை யில் குடியேற ஆரம்பித்தார்கள்.

அதிகவசதிகள் இல்லாத  பல ஏழைத்தொழிலாளி கள் கூவம் வாய்க்கால் கரைகளில் குடிசைகளை போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். அப் போது கூவத்தில் துணிகளை துவைத்து குளிக்க முடியும். 

இம்மாதிரி காட்சிகளை பார்த்துக்கொண்டிருப்பது எனக்குள்  ஒரு கனிவான நெகிழ்ச்சியை கொடுக்கும்..அந்த ஏழை மாந்தர்களின் எளிய ஜீவனத்துக் குள் ஆசைகள் நிராசைகள் கனவுகள் காதல்குடும்ப பாசங்கள் என்று எத்தனை உணர்வுகள் அந்த கூவத்தின் ஓட்டத்தைப்போல் ஓடிக் கொண்டிருக்கும்!


அந்த அனுபவத்தின்  பாதிப்பில் எழுந்த இந்த மெல்லிசைக் கவிதை  இப்போது மீண்டும் கண்டெடுத் தேன். நீங்களும் வாசியுங்கள்..
              
                                      ********************
                ஏழையின் கனவு
    [1961-இல் எழுதப்பட்டது]
             ----------------


        கூவம் நதிக் கரையோரத்திலே


        கேளடி பொன்னம்மா

        குடிசை யொண்ணு கட்டப் போறேன்
        நானடி பொன்னம்மா


        பாயி பானை சட்டி யடுப்புகள்


        கோடித் துணிமணிகள்

        சீப்புகள் சாப்பிடத் தட்டுகளும்
        சீராய் வாங்கிடுவேன்


        நானும் நீயும் நல்ல ஜோடியடீ


        ஆமடி  பொன்னம்மா

        நாளொன்று பார்த்து நல் நாழிகையில்
        பால் காய்ச்சி உண்போமடீ


       காலையில் உன் முகம் கண்டு விழித்தால்


       கஞ்சியு மேதுக்கடீ

       காதலமிர்தத்தை உண்டவனுக்கே
       சாதமும் ஏதுக்கடீ


       வேலை முடிந்ததும்  கூலி கிடைத்ததும்


       ஓடோடி வந்திடுவேன்

       சாலையில் விற்றிடும் சாமந்தி முல்லையை
        சலீஸாய் வாங்கிடுவேன்
       
        மாலை வெய்யிலிலே நீலக்குயிலென
       கோலமாய் நிற்பாயடீ
       கால்வலி கைவலி யாதுமறந்து நான்
       காதல் மொழிவேனடீ


      கூலிக் காசு கொஞ்சம் குறைவென்றாலும்


      குழந்தை வேணுமடீ

      கூழுக் கஞ்சி மிகக் கொஞ்சமென்றாலும்
      பாசங்கள் வேண்டுமடீ


      பாலனொருவனைப் பெற்று விடு  நானும்


      பார்த்து மகிழ்வேனடீ

      கூவம் நதிக் கரை பிள்ளைகளோ டவன்
       கூடிக் களிப் பானடீ
       
      ஆத்திச் சுவடிகள் அரிச்சுவடிகள்
      யாவையும் கற்பானடீ
      சாலை விளக்கினில் பாடம் படித்தாலும்
      ஜகத்தை ஆள்வானடீ
     
     0
                   

No comments:

Post a Comment