இது கனவல்ல...... அபூர்வமான நிஜம்
வைதீஸ்வரன்
ஆச்சரியமாக இருக்கிறது. இன்றுஎன்அம்மா என் பகல் கனவில் தத்ரூபமாக வந்து பேசி சிரித்து விட்டுப் போனது.!!!
ஒரு காரணமாக இன்று அம்மாவின் வருஷதிதி என்றுசொல்லலாம்.... ஆனால் அதற்காக நான் வெகு சம்பிரதாயமாக ஆசார நியமனமாக எதுவும் செய்யவில்லை. மாம்பலத்தில் உள்ள ராக வேந்திரா மடத்தில் 750ரூபா பணத்தைக் கட்டி பத்து ஏழைகளுக்கு அன்னதானம்
செய்வித்தேன். அர்க்கியம்
விட்டேன் அவ்வளவு தான் அதோடு மறந்துவிட்டு வேறு காரியங்களைப்பார்த்து வீடு திரும்பினேன். ஏதோ கடமை முடிந்தது.. அம்மாவின் ஞாபகம் சுத்தமாக மறந்து விட்டது.
பிறகு உண்ட பிறகு வந்த பகல் தூக்கக் கனாவில் நான் சென்றது என் ஆபீஸ் சிநேகிதன் அனந்து வீட்டுக்கு.அவனும் நானும் சேர்ந்து இன்னொரு நண்பன் வீட்டுக்குப்போகவேண்டுமென்பது முன் கூட்டிய தீர்மானம்...அங்கே போனவுடன் அனந்து தனக்கு விலாஸம் சரியாகத் தெரியாதென்றும் எனக்குத் தெரியுமாவென்றும் கேட்டுக்கொண்டிருந்தான்.நான் தெரியாதென்றேன். அப்படியென் றால் நண்பன் வீட்டுக்கு அநேகமாகப் போகமுடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
நாங்கள் இருவரும் அவன் வீட்டு உள்ளறையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
நாங்கள் இருவரும் அவன் வீட்டு உள்ளறையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது திடீரென்றுஇடது கதவைத் திறந்துகொண்டு கையில் காபியுடன் கொசாம்புடவை கட்டிக் கொண்டு ஒரு மாமி உள்ளே நுழைந்தாள். நான் யாரென்று பார்க்க தலை தூக்கினேன்.
“அம்ம்மா..!!!!
எனக்கு திக்கென்று இருந்தது. அதிர்ச்சியாக இருந்தது அப்படியேஅசல்.. தத்ரூபம்… என்ன அதிசயம் நான் சடாரென்று எழுந்து நின்றேன் அவள்
கையிலிருந்த காபியை என்னிடம் கொடுத்தாள். நான் வாங்கி அருகில் உள்ள ஸ்டூலில் வைத்தேன்..
அதற்குள் அவள் கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டாள்..பலமாகச்சிரித்தாள்.
மிக்க இளமையாக
இருந்தாள்.. பல்வரிசை சீராக இருந்தது!!!.
ஏதோ நிறைய பேசின மாதிரி எனக்கு ஒரு பிரமை..ஆனால் நான் தான் பேசி இருக்கிறேன். .
அருகில் நின்ற அனந்து “என்ன என்ன..” என்று கேட்டான்.
“எங்க அம்மாடா அம்மா..தெரியலே!..” என்றேன்.
அவன் ”தெரியலையே!” “என்றான் திகைப்புடன்!!
அம்மா பலமாக சிரித்தாள்.
.”நான் எப்படி வந்தே” எங்கேஇருந்து வந்தே?”என்று நிறையக் கேள்விகள் கேட்கிறேன். “மூர்த்தி இப்போ வந்திருந்தான் “ என்கிறேன்....”
முர்த்தியா?” என்று ஏதோ கேட்கிறாள் அவளுக்குஅடையாளம் தெரியவில்லை.
ஆனால் என்னை பார்த்து மட்டும் சிரிக்கிறாள்..கடைசியாக ”மஞ்சுரொம்ப கஷ்டப்படறாளா? அவா குடும்பத்துலே தொந்தரவு..”என்றுமட்டும் சொல்லுகிறாள்.. எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது.. உடனே வீட்டில் சீதா வுக்கு போன் பண்ணி அம்மம்மாவைப் பார்க்க உடனே வரவழைக்க வேண்டு மென்று செல்போனைஎடுக்கிறேன்.
எடுத்த உடனே செல்போன்புடைத்துக்கொண்டு உருண்டையாக ஆகிவிடுகிறது!! .
அம்மாவின்உருவமும் தேய்ந்து கொண்டேவருகிறது ஸ்டூலில் வைத்த காபி ஞாபகம் வருகிறது. எடுத்துக் குடிக்கிறேன் அனந்து என் செய்கை யைப் பார்த்து புரியாமல்நிற்கிறான்..
அதற்குள் அவன் மனைவி இந்த பேச்சுக்கள்கேட்டுக் கொண்டு வேகமாக உள்ளே வந்து,”என்னது?என்ன ஆச்சு?. ஏதோ யாரோ பேசற மாதிரி இருந்ததே?” என்று கேட்கிறாள்..
அனந்து “ஒண்ணும் புரியலே..இவர் ஏதோ அம்மா அம்மான்னு சொல்றார் இவர்?”என்கிறான் அப் போது ஒரு மலையாள மாமா வந்து ஒரு புத்தகத்தை விரித்து அதிலிருந்து ஸ்லோகம் ஒன்றைச் சொல்லுகிறார்.
அதற்குள் அம்மம்மா முழுக்க மறைந்து காணாமல் போய் விடுகிறாள் .
என் செல்போன் சகஜ உருவத்துக்கு வருகிறது!!.
நடந்தது அவ்வளவு நிஜமாக இருந்தது.
நான் அநந்துவிடம் பரபரப்பாக விடைசொல்லிவிட்டுஉடனே வீட்டுக்குப்போய் இங்கெ நடந்ததை சொல்லவேண்டுமென்றுவேகமாக வெளியேறுகிறேன்.
ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பியவுடன்
எதிரே நான் வந்த தெருக்களே அடையாளம் மாறிப் போயிருக்கிறது. திடீரென்று கோடம்பாக்கம் திருவெல்லிக்கேணியாக ஆனது போல …வீடு திரும்பும்வழி சுத்தமாக காணாமல் போய்குழப்பமாக நடுச்சந்தியில் நின்றுகொண்டிருந்தேன்.
நெஞ்சில்பசுமையாகஇருக்கும் கனவு அழிந்துமறந்துபோவதற்கு முன்னால் வீட்டுக்குப்போய் இதைச்சொல்லவேண்டுமென்றுஅவசரத்தில்மனசு தவிக்கிறது சூல்முற்றிய தாயின் வேதனை வலியுடன் நான் அம்மாவின் கனவை சுமந்துகொண்டு வீடு திரும்பும் வழிக்காகத் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
மெல்ல மெல்ல திருவெல்லிக்கேணி கோடம்பாக்கமாக மாறிக்கொண்டு வருகிறது…அதோ அசோக் நகர் அதோ மேற்கு மாம்பலம் அதோ ரங்கராஜ புரம்.......”
இந்தஅவஸ்தைக்கு நடுவில் கத்தி மாதிரி ஒரு குரல் உள்ளே பாய்ந்தது. “ஏன்னா… மணி நாலரை யாறது...காபி கலக்கட்டுமா?“மனைவியின் நிஜக்குரல்!
நான் திடுக்கிட்டு எழுந்தபோது அந்த நிஜத்தை நம்பவே முடியவில்லை. நான் இருந்த கனவு
உலகம் இன்னும் அத்தனை நிஜமாக பளிச்சென்று இருந்தது.
அவசரமாக எழுந்து, மறந்துபோவதற்கு முன்னால் நான் கண்ட அபூர்வமான கனவை [நிஜத்தை] எழுதி வைத்து விட வேண்டுமென்று கணிணியை முடுக்க ஆரம்பித்தேன்
“கனவுகள் மார்கழிப் பனி மாதிரி...கொஞ்சம் விழிப்பு வந்தாலே கரைந்து மாயமாய்போய்விடக் கூடும்” திரும்ப நினைவுக்கு கொண்டு வர முடியாது.
அதுவும் அம்மாவின் திதியன்று இப்படி ஒரு கனவு அபூர்வமானதாக
தோன்றுகிறது இதெல்லாம் திட்டமிட்டு தோன்றக் கூடியதா??!!!!!!!!!
பி. கு. சீதா –என் மனைவியின் பெயர்
மஞ்சு -- எங்கள் சமையல் சேவகி