vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, August 8, 2016

கொலை வரிகள்


               கொலை வரிகள்

வைதீஸ்வரன்


கீழ்க்காணும்  கவிதையை
யுவன்  சந்திரசேகர் எழுதிய பகடையாட்டம்  
என்ற  நாவலிலிருந்து  வாசித்தேன்.
யூதர்களைக்கொன்ற  ஹிட்லரின்
நிதானமான  அழுத்தமான  கொலை வெறியின் வியூகம்  ஞாபகத்துக்குவந்தது.
வரிகள் நிதானமாக  நகரும்போது
மனதில்  துக்கம்  மெதுவாகப் பீறிட்டு  இரட்டிப்பாகி  முடிவில் வெள்ளமாய்  நிரம்புகிறது .

 ஒரு  சிட்டுக்  குருவியைக்  கொல்வது
மிக  சுலபம்.
முதலில்  உள்ளங்கை  நிரம்பிய
தானிய  மணிகளால்  அதைக்
கவர்ந்திழுக்க  வேண்டும்.
ஆகாயத்தை  விடவும்
கூண்டு  பாதுகாப்பானது
என்று நம்பச் செய்ய வேண்டும்
ஸ்வாதீனம்  படிந்த  பிறகு
எதிர்பாராத  தருணமொன்றில்
அதன்  சிறகுகளைத் தரித்துக்
குப்பையில்   வீச வேண்டும்
தூவிகளில்  ஒட்டிய  ஆகாயக் கனவுகள்
மட்கும்  வண்ணம்.
பிறகு
அதன்  கால்களை  ஒடித்து  விட வேண்டும்.
உயிர் வாழும்  வேட்கையால்
நடந்தேனும்  இரை  தேட  விடாதபடி.
அடுத்ததாக  அதன்  அலகை  முறித்து விடுவது
நல்லது...தானாய்  வந்து
சிக்கும்   இரையைப் பிடிப்பதையும்
தடுத்து  விடலாம்.
இப்போது  சிட்டுக் குருவி  கூழாங்கல்
ஆகி விட்டது.  சிறு  வித்யாசத்துடன்
கல்  போலின்றி
பறந்த  நாட்களை
நினைவு  கூறும்  குருவி
பூர்வீக  ஞாபகம்  போல
உயிர்  துடிக்கும்  அதன்  கண்களில்
இனி  நீங்கள்  செய்ய வேண்டியது
ஒன்று  தான்.  குருவி மிச்சத்தைக்
தரையில்  இட்டுக் காலால்
தேய்த்து  விட  வேண்டும்.
சிட்டுக் குருவியைக் கொல்வது
ஒரு  நட்பையோ  \ஒரு  ஆத்மாவையோ
முறிப்பது  போல
மிக மிகச் சுலபம்.


***************
.


No comments:

Post a Comment