வைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு
மனக்குருவி
இந்திரா பார்த்தசாரதி
‘கிணற்றில் விழுந்த நிலா’வாகத் தொடங்கி இறுதியில் ‘மொழியற்ற கணமாக’ இந்தப் ‘பிடிவாதம்’ பரிணாமம் அடைந்திருக்கிறது.
கவிஞரின் முதல் கவிதையிலிருந்து அவர் எழுதியுள்ள அண்மைக்
காலத்துக் கவிதை வரைத் தொடர்ந்து படிக்கும்போது, அந்தந்தக் காலத்துச் சம்பவங்களின் தாக்கம் வேறுபட்டாலும், குரல் ஒலி மாறவில்லை என்பதை நம்மால் உணரமுடிகின்றது. இதுதான் கவிதையின் ‘உள்ளீடான ரிதம்’.
வியட்நாம் போரின் போது, ஒரு பிரபலத் தமிழ் எழுத்தாளரை ஒருவர் கேட்டாராம்” உங்களை ஓர் அமெரிக்கன் சிப்பாய் கண்மூடித்தனமாக மைலாய் வீதியில் வெறிபிடித்தாற்போல் குழந்தைகளையும், பெண்களையும் சுட்டுக் கொண்டே ஓடியது பாதிக்கவில்லையா? நீங்கள் அதைப் பற்றி ஏன் எழுதக் கூடாது?’ என்று கேட்டாராம். எழுத்தாளருக்குக் கோபம் வந்து விட்டது. ‘நான் எதைப் பற்றி எழுத வேண்டும், எழுதக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்?’என்றாராம்.
எழுத்தாளர் கூறிய பதிலை என்னாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ’மைலாய் வீதிச்’ சம்பவம் ஒரு குறியீடு. அந்தப் போர்வீரன் மீதும் தவறில்லை. போர் எப்படி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது என்பதின் குறியீட்டு உருவகந்தான் அந்தச் சம்பவம்.
இந்தத் தொகுதியில் வைதீஸ்வரன் அதை ஒரு குறியீட்டு உருவக மாகத்தான் கையாளுகிறார்.
‘கற்கால இருட்டுக்குள்
கண் புதைத்து
இருதயத்தைப் பிடித்துக் கொள்
உயிர் வாழப் பழகிக் கொள்
இருபதாம் நூற்றாண்டு’
கற்காலத்தில் மனிதனை நோக்கியிருந்த ஒரே பிரச்னை கொடிய விலங்குகளினின்றும், இரக்கமற்ற இயற்கையினடமிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான். இன்று மனிதனே கொடிய விலங்காக மாறி விட்டான்! ஓர் அணுகுண்டு வீசி லட்சம் பேரைக் கொல்கின்றான்! மனிதன் தன்னைச் சக மனிதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! கவிஞரின் நயமான குரலில் எவ்வளவு கூர்மை!‘சொல்லொக்கும் சுடுசரம் ‘ !
கடலில் ஒரு துளியாக ‘மைலாய் வீதி’ என்ற கவிதையைச் சுட்டிக் காட்டினேன். தொகுப்பு முழுவதும் வைரமென மின்னும் கவிதை ஒளி மின்னல் கீற்றுக்கள்1
அநாமிகா பிரசுராலாயத்தின் அதிபர் லதா ராமகிருஷ்ணனைப் பாராட்ட வேண்டும். அற்புதமான வடிவமைப்பு. கவிஞரே வரைந்த நுண்ணிய சித்திரம் முகப்போவியமாக அமைந்திருக்கிறது..’கவிதை நுண்கலைக ளின் அரசி என்றால் ஓவியம் இளவரசி’ என்பார் ஆடன். அரசி, இளவரசி ஆகிய இருவர்மீதும் ஆளுமை கொண்டிருக்கும் வைதீஸ்வரனுக்கு என் பாராட்டுக்கள்!
No comments:
Post a Comment