vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, November 30, 2014

கானகத்தே....



கானகத்தே


 வைதீஸ்வரன்   


பறவைக்  கூவலின்
ஆழ்ந்த  இடைவெளிகளில்
ஒரு  போதி  மரத்தின்  மௌனம்
உறைந்திருக்கிறது
  ஒன்றி  உன்னிப்பாகும்  மனதில்
  மௌனம்  வெளிச்சமாகிறது
            


Wednesday, November 26, 2014

உறக்கத்துக்குள் ஒரு உறுத்தல்

  உறக்கத்துக்குள் ஒரு உறுத்தல்

_ வைதீஸ்வரன் 



கனவுகள்  மீது  நமக்கு  கட்டுப்பாடே  இல்லை.  கனவுகளை  முன்கூட்டியே  தீர்மானிக்க  முடிவதில்லை. 
அது  பலமயம்  சங்கடமாக  இருக்கிறது. 

கனவுகளுக்கு  பலன்கள்  வேறு சொல்லித் தொலைக்கிறார் கள்.....புதுமைப்பித்தன் பிசாசுகளைப் பற்றி  சொன்னதைப் போல் நம்மால் கனவுகளை  நம்பா மல்  இருக்க  முயன்றாலும்  ஏதோ சலனப் படுத்திவிடுகிறது.. 

எப்படி இந்த  மாதிரி  சம்பவங்களெல்லாம்  இந்த  மாதிரி
முகங்களெல்லாம்  நமக்குள்  தோன்றி  மயக்குகிறதென்று புதிராக  இருக்கிறது...

இதற்கெல்லாம்  ஒரு  சூசகமான  அர்த்தம்  இருக்கக் கூடுமா?  

அதுவும்  கடந்த  சில  நாட்களாக  எனக்கு  கனவுகளில்  சாதாரண  மனிதர்கள்  வருவதில்லை...


எல்லாம்  பெரிய  பெரிய  ஞானிகள்  பெரிய பெரிய அரசியல் வாதிகள்  நடிகர்கள்....என்  சராசரி  வாழ்க்கையில்  அண்டவே     முடியாத  ஆளுமைகள்....இவர்கள்  ஏன்  வருகிறார்கள்  என்று  தெரிவதில்லை. 

இவர்கள்  கனவில் வந்ததால்  எனக்கு  என்ன  பலன்  நேரப் போகிறதோ..... ஏதாவது நேரக்  கூடுமோ  என்று  குழப்ப மாகவும்  இருக்கிறது.

இப்படித்  தான்  போன  செவ்வாய்க்கிழமை  நள்ளிரவில்  ஏசு நாதர்  வந்தார்.  நான்  திடுக்கிட்டு நின்றேன். எனக்கு  மண்டி யிட்டு  வழக்கமும் இல்லை. பேசாமல்  பார்த்துக்கொண்டு நின்றேன்.



 ”ஒரு  நடை  போகலாமா?”  என்று  கேட்டார். 

நான்  தயங்கினேன்.

“தயவு செய்து  வாருங்கள்.  பேசிக் கொண்டே  போகலாம்.” என்றார்.

நான்  தயக்கமுடன்  நடக்க ஆரம்பித்தேன். 

“நீங்கள்  முதலில் செல்லுங்கள் உங்கள்  பின்னால் நடந்து வருகிறேன்,”  என்றார்.

”எனக்குப்பின்னால்  நீங்களா?”  என்றேன். 

”ஆமாம்..அதனாலென்ன?  இதற்கெல்லாம்  பெரிய உள்ளர்த்தமே  இல்லை.”  என்றார்.

நான்  குறுகிப் போய்புரண்டு  படுத்தேன்......

மறைந்துபோய்விட்டார்.

மறு  வெள்ளிக்க்கிழமை  சங்கராச்சாரியார்.....வந்தார். மிக  சகஜமாக.....

சற்று  விடிகாலை  நேரமாக  இருந்தது... 

அவர் குளக்கரையில் 
என்னோடு  உட்கார்ந்து
கொண்டு தோள்    தட்டி அன்புடன் தன்  தம்பி 
யைப்  போல்  
“என்ன சௌக்கியமா? 
என்றார். 

 நான்  விலகி நின்று  
கைகட்டிக்  கொள்ள  முயன்றேன்.

அவர்  என்னை அருகில் உட்கார்த்தி வைத் துக் 
கொண்டு ஏதோ  பேசிக் கொண்டிருந்தார். 

கொஞ்சங்கூட  ஆன்மீக விஷயமாக  இல்லாமல்  எல்லாம்     லௌகீகமாகவே  இருந்தது...

”வீட்டில்  பவர்கட்  எப்படி?...கொசுத்  தொந்தரவு  இருக்கிறதா?  ஆட்டோக்காராசிலபேர்  நல்லவாளாவும்  இருப்பா...”  என்று  பேசுகிறார்...

எனக்கு மிகவும்  திகைப்பாக  இருந்தது.  அவருக்கு நமஸ்காரம் கூடப் பண்ண முடியவில்லை,  அதற்குள்  கண் விழித்துக் கொண்டேன்..

இவர்  எப்படி கனவில் தோன்றினார்...

கனவில்  வந்து என் உபாதைகளுக்கு விடிவுசொல்லியிருந்தால் கூட  நன்றாக  இருக்கும்  அதுவும் இல்லை..

ஒரு  திங்கட்கிழமை  என்று  நினைக்கிறேன்  விடிந்தும்  தூங்கிக்  கொண்டிருந்தேன்.....இல்லை  கனவு  கண்டு கொண்டிருந்தேன்..

அப்போது  தான்  புத்தர்  வந்தார்...”புத்தர்  இன்னும் எத்தனை யுகங்கள்  மனித ரூபத்தில்  வந்து கொண்டிருப்பார் என்று என்று  வியப்பாக  இருந்தது. 
ஒரு வேளை மனித வடிவத்தைத்  துறந்து பஞ்ச பூதங்களாக மாறவில்லையோ பூரணமுக்தியடையாத  நிலையில்  இருக்கிறாரோ’ என்று  ஆச்சரியமாக  இருந்தது. அவருக்கு  என்னிடம்  பேச  என்ன இருக் கிறதென்று  தெரியவில்லை. 

ஊரை பற்றி  உலகத்தைப் பற்றியும்  எதுவும்  அவரால் சந்தோ மாக  நம்பிக்கையாக  எதையாவது  சொல்லக் கூடுமா  தெரிய வில்லை... ..

நான்  நினைத்தது  சரியாகத்  தான்  போய்விட்டது.. அவர்  என் தோளைப்  பிடித்துக் கொண்டு  சற்று  அழுதார்.. 

நான்  சமாதானப்படுத்த  முயன்றேன்  எனக்குத்  துணிச்சலாகவும்  இருந்தது...

“நாங்கள்  நன்றாக  இருக்கிறோம்  அய்யா..  வருத்தப்படாதீர் கள்...ஆறுதலாக  அமைதியாக  இருங்கள்.....எல்லாம்  சரியாகி விடும்.  நாங்கள்  துக்கத்துடன் சந்தோஷமாகத் தான் இருக்கி றோம்..” என்று சொன்னேன்.

அவருக்கு  கனவை  விட்டுப்  போக  மனமே  இல்லை.”துக்கம்  தான் வாழ்க்கை”என்று  சொல்லிவிட்டு மறைந்து  போனார்.
 நான்  மிகுந்த  துக்கத்துடன்  அவரை  போகச்  சொல்லிவிட்டு     தூங்க  முயன்றபோது விழித்துக் கொண்டு விட்டேன்.

எனக்கு  இவர்களெல்லாம் என்  கனவில்  ஏன்  இடம்  பிடிக் கிறார்கள்  என்று    குழப்பமாகவும்  இதற்கெல்லாம் அர்த்தம் விளங்காமலும் இருந்தது.

ஆனால், அடுத்தடுத்த கனவுகளில் வந்த ஆளுமைகள்  என்னை ஆட்டி  அலைக்கழித்து விட்டன!

ஏதோ  ஊர்வலத்தில்  போய்க் கொண்டிருந்த  கலைஞர் கருணா நிதி    எங்கோ  தெருவோரத்தில் நின்று  கொண்டிருந்த என்னைப் இறங்கி வந்து  சிரித்து பேச  ஆரம்பித்து விட்டார்.


என்னை  உங்களுக்கு தெரியாதய்யா!” என்கிறேன்.

“இல்லை  இல்லை  தெரியும்  எத்தனையோ  வருஷங்களுக்கு முன்  பார்த்தாலும்  எனக்கென்ன  மறந்தா  போய் விடும்.  பத்திரிகை  ஆபீஸில்  பார்த்திருக்கிறேன்.. பேசி இருக்கிறேன்... நீ  தான்  என்னை  மறந்துட்டே!”  என்கிறார்.

 அவர்  மீண்டும்  என்னை ஏன் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்  என்று  புரியவில்லை. 

 ஊர்வலம்  எங்கள்  சந்திப்பினால் நின்றுபோய்விடுகிறது.

நான்  மிகவும் சங்கடப்பட்டு  விலகி நகர்ந்து  கூட்டத்தோடு போக  பிரயத்தனப் படுகிறேன்.

அவர் மேலும் ஏதோ பேசிக்  கொண்டிருக்கிறார். எனக்குத்தான் விளங்கவில்லை.

வெகுதூரம்  நகர்ந்து  போய்  மெதுவாக திரும்பிப்  பார்க்கிறேன்.

அவர்  இன்னும் தெரிந்து கொண்டு தான்  இருக்கிறார்…

’என்ன  இப்படி  சம்பந்தமில்லாத  ஒரு  கனவு’  என்று  அலுத்துக்  கொண்டே  எழுந்துகொண்டிருக்கிறேன்.

வர  வர  தூங்குவதற்கே  பயமாக  இருக்கிறது….

இருந்தாலும் முடியவில்லை  ஏதோ பலஹீனத் தில் நேற்று அயர்ந்து  தூங்கி விட்டேன்.

“அய்யொ..இதென்ன...” ரஜினீகாந்த்....ரஜினீகாந்தா இது…


என்னைக்  கை குலுக்கி  அழைத்துக்  கொண்டு  வேகமாக  இங்கு மங்கும்  நடக்கிறார்.

அவர்  நடை எப்போதுமே எதையோ உதைத்து  விரட்டிக் கொண்டு  போவது போலவே  இருக்கும்..

அவர்  மாதிரி  என்னால்  நடக்க  முடியவில்லை.

தடுமாறித்  தொங்கிக்கொண்டு இழுபட்டபடியே பின்னால் போகிறேன். 

அவரோ  அவர் வழக்கமான  சிரிப்புடன்  திரும்பி  நிற்கிறார்.. 

“வாங்க  பேசிக்கிட்டே  போகலாம்..ச்சும்மா...பல  விஷயத்தைப் பத்திப்  பேசறதை  நான்  Like பண்ணறதில்லே...இருந்தாலும்  சிலவிஷயத்தை பலவிதமா பேசினாலே  interest ங்கா இருக்கும்…. பெரியவங்க  எளுதறதெல்லாம்  நான்  படிக்கிற  அறிவு  இருக்கறதா...  எனக்குத்  தெரியலே..ஆனா....ஒரு  பார்வை  ஒரு  look    ஒரு  சின்ன வார்த்தை போதும் அதுலெ புரிஞ்சு  போவுது.. தெரியுது..... அது  தான்    த்ருஷ்டி...அருளு....  ஹா..ஹ..ஹா....வாங்க, டீ சாப்பி
டலாம்..”  என்று எங்கோ அழைத்துக்  கொண்டு  போகிறார்.

எப்படி  அத்தனை  மக்கள் கூட்டத்துக்கு மத்தியில்  தெருவில் தொந்தரவில்லாமல்  ரஜினியும்  நானும்  போய்க்  கொண்டிருக்கிறோம்..  நம்பவே  முடியவில்லை... அப்படி மக்கள் கவனிப்பில் லாமல்  நடப்பது  ஒன்றும் எனக்கு எந்த ஒரு  பெரிய வித்யாசமோ பாதிப்போ  இல்லை.. ஒரு  பெரிய  விஷயமே  இல்லை....ஆனால் அவரால்  எப்படி  இந்த மாதிரி நிலைமையை  சகஜமாக  எடுத் துக் கொள்ள  முடியும்? …

குழப்பமாக  இருக்கிறது.... கனவுகளே இல்லாமல் தூங்க வேண் டுமென்று  இப்போது  கடவுளைப் பிரார்த்தித்துக்  கொள்ளு கிறேன்...அடுத்தது  கடவுளே கனவில்  வந்து விடுவாரோ!!



மனச்  சிக்கல்  மலச்சிக்கல்  இல்லாமல்  இருந்தால்  கனவுகள் வராதென்று  எங்கோ படித்திருக்கிறேன்  அது  இரண்டும் சாத்தி யமேயில்லை  என்னைப்  போன்றவர்  வாழ்க்கையில் .

இனிமேல் கனவுகள் கண்டாலும் அதை  வெளியே சொல்லுவதி ல்லை  என்று  தீர்மானித்துக் கொண்டேன்  அது  தான் மற்றவர் களுக்கு  பெரிய  ஆறுதலாக  இருக்கும்....என்று தோன்றுகிறது.

                     

Saturday, November 22, 2014

உயிர்க்குருவி _ கவிதை









உயிர்க்குருவி

வைதீஸ்வரன்


 கிழித்தெறிந்த கவிதைத் துணுக்குகள் போல்
  சிதறிப்  பறக்கும் பறவைத் துகள்கள்
  மாலை வானம்.......
  பகல் துக்கங்களை
  ஆழப் புதைத்துக் கொண்டு
  இருட்டை அணைத்தவாறு  உறையும்
  நீர் நிலைகள். ஏரிகள்
  தூக்கத்தின் சகதியில்
  மொழி அழிந்த நினைவுகள்
  கீறி விடும்  துயரக்கனவுகள்..
  அவள் ஏன் முகத்தைத் 
திருப்பிக் கொண்டாள்?
  இவன் ஏன்  வெறுப்புடன்  முறைத்தான்?
  நாய்களுக்கு ஏன் நான் 
திருடனாகத் தெரிகிறேன்?
  எனக்கு ஏன் என் மேல் 
வெறுப்பு?............இவ்விதம்
  உலகம்  தட்டைத் தகரமாகி
  வெளியை ரத்தக் களரியாக்குகிறது.
  சிதறும் பறவைத் துணுக்குகளாய்..............
  அலைகிறது  உயிர்க் குருவி
   இறப்புக்கு முன்னும் பின்னுமாக






0
                      

Sunday, November 16, 2014

தேவமகள் அறக்கட்டளை ‘கவிச்சிறகு’ விருது ஏற்புரை (19.3.2006) _ கவிஞர் வைதீஸ்வரன்


                                    தேவ மகள் அறக்கட்டளை
கோவை 
         
கவிச் சிறகு விருது  ஏற்புரை
-  19/3 / 2006
(*தளம்நவம்பர்
  14)
---------------------------------------------
_ வைதீஸ்வரன்


இந்த  ஆண்டு  தேவ மகள் அறக்கட்டளை  என்னை  எப்படியோ கண்டு பிடித்துவிட்டது. இந்த விருதை  ஒப்புக்கொள்வதில்  எனக்கும்  மகிழ்ச்சி  தான். காரணம் சுமார்  70 ஆண்டுகளுக்கு முன் நான் இந்த  ஊரில் தான் பிறந்து  என் முதல் சுவாஸத்தைத் தொடங்கினேன். பிறகு எத்தனையோ அனுபவங் களையும் அவஸ்தைகளையும் சேகரித்துக்கொண்டவனாக பெரும்பாலர் ஒப்புக்கொள்ளக் கூடிய கவிஞன் என்ற அந்தஸ்துடன் இன்று உங்கள் முன்னே நின்று உங்கள் அன்பான  கௌரவிப்பை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

 இதே  சிங்கநல்லூரில் என் தாத்தா வீட்டில் நான்  வளரும் பருவங்களைக் கழித்த நினைவுகள் இப்போது என்னுள் பசுமையாக மலர்ந்து கொண்டிருக்கிறது. என் தாத்தா  அப்போது நீர்மணியக்காரர் ஆக இருந்தார்இப்போது அந்த மாதிரி உத்யோக மிருக்குமா  தெரியவில்லை. ஊர்ப்புறத்தில்  ஓடும் பெரிய நீரோடையின் குறுக்கே உள்ள  மதகுகளை ஏற்றி இறக்கி  ஊர் வயல்களுக்கு முறையாகத் தண்ணீர் பங்கிட்டுவழங்கும் பொறுப்பான  வேலை அதுஇந்த வேலை மிக சிக்கலா னது  கூட...  வயலுக்கு சொந்தக்காரர்களான  மிராசுகளையும் மதகுத் தண்ணீ ரையும்  அமைதியாகவும் அதிகாரத்தோடும் ஆளத்தெரிய வேண்டும் சமயத்தில் நிறைய உட்பகைகளை சமாளிக்க வேண்டி வரும்.

என்  தாத்தா  வீடு ரயில்பெட்டி போல ரெண்டு கட்டு  வீடு.வாசலில் நீளமாக  ஒரு  மண் திண்ணை இருக்கும். அந்த திண்ணை தான்  எங்களுக்கு ஒரு மந்திரக்கம்பளம் போல. நாங்கள் சிறுவர்களெல்லாம் இரவு  சாப்பாட்டுக்குப் பிறகு  வட்டமாக உட்கார்ந்து கொள் வோம். வளர்பிறை நாட்களில் நிலா வெளிச்சம் மங்கலாக  சாய்வாக  எங்கள் மீது பரவிக் கொண்டிருக்கும் எங்கள் கற்பனைகள் சிறகடித்துப்பறக்கும். கட்டுக்கதைகள் எங்களுக்குள் ஊற்றுப்போலக் கிளம்பும்.

பயங்கர மீசைவைத்த சித்திரக்குள்ளன் கையில் வாளுடன் பறக்கும் மாயக்குதிரையில் மலைக்கும் முகட்டுக்கும் தாவி எதிர் வரும்பூதங்களை வெட்டிச் சாய்ப்பான். ஆனாலும் பெரிய பெரிய பயங்கரமான உருவங்களில் மிருகங்கள் பல வந்துகொண்டே இருக்கும். சித்திரக் குள்ளன் அஞ்ச்சாமல் அவைகளை வெட்டிச் சாய்த்துக்கொன்டே  இருப்பான் நீருக்கும் நெருப்புக்கும் தாவுவான் ஒவ்வொரு இரவும்அந்தக் குள்ளனின் சாகசங்கள் தொலைகாட்சி ஸீரியல்கள் மாதிரி தொடரும் நாங்கள் ஒவ்வொருவரும் முறை வைத்து கதையை நீட்டிக்கொண்டேபோவோம். விடுமுறை கழித்து  நான்  சேலத்துக்குப் போய் விடுவேன். மீண்டும் அடுத்த  விடு முறையில் இந்த சித்திரக் குள்ளன் தன்  சாகஸங்களைத்  தொடரு வான்



இரண்டாவதாக எனக்கு இந்த  ஊரில்தான் ஸாமியைப் பற்றிய பயமும் பூதங்களைப் பற்றிய நடுக்கமும் தெரிய  ஆரம்பித்தது. எங்கள்வீட்டுக்கு அருகில் பெருமாள்கோயில் இருக்கும். சாயங்காலத்தில் தெருப்பையன்களோடு சேர்ந்து கோவிலுக்குப் போவது தான் எங்களுக்குஒரே ஒரு பொழுது போக்கு. அந்தி நேரத்தில் கோவிலுக்குள் வெளிச் சத்தை விட இருட்டுதான்  அதிகம் இருக்கும் மின்சார வசதி இல்லை.

அரை இருட்டில் மூலைக்கு மூலை எண்ணை விளக்கேற்றி  வைத்திருப்பார்கள். பார்ப்பதற்கு ஸாமி சிலைகளும்  துவாரபாலகர்களும் யாளிகளும் உயிருள்ளது போலவே லேசாக அசைந்து நம்மை கவனித்துக் கொண்டிருப்பது  போல் ஒரு பிரமையை ஏற்படுத்தும். தவிர  இருட்டு மூலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களின் சடசடப்பும் வயதான அர்ச்சகரின் வருஷக் கணக்காக சொல்லி தேய்ந்து போன உச்சாடனங்களின் எதிரொலிகளும் இனமறியாத பதற்றத்தை ஏற்படுத்தும். நாம்  ஏதாவது தப்பு செய்திருந்தால் இங்கே தண்டனை கிடைக்கும் என்பது போல் உள்ளூர திகில் தோன்றும்.

கோவிலைவிட்டு விடுதலையாகி வெளியே வந்தால் புழுதி பறக்க காற்று சுழற்றி அடைக்கும்ரோட்டோரத்தில் உயரமாக சாய்ந்து நிற்கும் கருவேலமரங்களும் கொடுக்காப்புளி புதர்களும் காற்றுக்குப் பேய்த்தனமாக ஆடும் நான் கூட வரும் பையன்களின் கைகளை கெட்டியாகப்பிடித்துக் கொள்வேன்.



மரக் கிளைகளில் கொடுக் காப் புளிக்காய்கள் கருப்பாக கூர்மை யாக வளைந்து தொங்கிக்கொண் டிருக்கும்.. “டேய்..அதெல்லாம் பேய்ப் பல்லுடா......நடுராத்திரில பிசாசுங் கள்ளாம் இங்கிருந்து  தான் ஊருக் குள்ளே வந்து நடமாடுமாம்...நீ தனியா வெளியே வந்தே... அப் படியே கழுத்தை நெறிச்சுக் கொன்னூடுமாம்.....” என்று பயமு றுத்துவான். ஒரு பையன். சிங்கநல்லூருக்கு எப்போது வந்தாலும் ராத்திரி சிறுநீர் கழிக்கப் போவதென்றால் குலை நடுக்கம்விடியும்வரை முட்டமுட்டப்படுத்திருப் பேன்!

 
சேலத்தில் என் பள்ளிப் பருவம் மிக அற்புதமானதுதமிழ் கற்பதிலும் வாசிப்பதிலும் எனக்கு அலாதியான பிரியம். தமிழ்ப்பாடத்தில் எனக்கு பரிசுகளாகக் கிடைத்த பாரதி யாரின் பாப்பாப் பாட்டு ஞானரதம் தேசிக விநாயகம்பிள்ளை அழ வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் எனக்கு உற்சாகமூட்டும் வாசிப்புகள்.  

சேலம் சேர்வராய மலைகளின் சூழலும் அப்போது அங்கே அழியாமல் இருந்த ஏரிகளும் வயல்வரப்புகளும் என் தமிழ்மொழி ஆசையும் ஒருவித உற்சாகமான தூண்டுதலாகி சுயமாக என்னை எழுதிப் பார்க்க  என் கற்பனையைத் தூண்டிவிட்டன.

இந்த உற்சாகத்தின் வடிகாலாக என் உற்ற நண்பர்களுடன் சேர்ந்துகொண்டுகதிரவன்என்ற கையெழுத்துப் பத்திரிக்கை தொடங்கினேன். கதைக்குத் தேவையான சித்திரங் களை என் பெரியப்பா மகன் வரைந்து கொடுப்பான்.

பத்திரிகையில்  பாப்பாப்பாட்டுகள் துப்பறியும்கதைகள்  இயற்கைவர்ணனைகள்  தேச பக்தி பாட்டுக்கள் சகலமுமிருக்கும்  அட்டையில் மகாத்மாகாந்தி  அல்லது  பாரத மாதா  அல்லது  பாரதியார் படங்கள்  காட்சி தரும்  இந்தப்பத்திரிகையின் ஆண்டு மலரை விசேஷமாகத்  தயாரித்து அப்போது முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி ராஜா..  கவர்னராக  இருந்தராஜாஜி  இவர்களுக்கு அனுப்பி அவர்களின்  ஆசிக்  கடிதங்களைப்  பெற்றோம். அது  எங்களுக்கு பெருத்த  வியப்பாகவும்  சந்தோஷமாகவும் இருந்தது.

நான்  இளம் வயதிலிருந்தே  புற ஓசைகளால்  தூண்டப் படுபவன்….. வீட்டையும் \தெருவை யும் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் எத்தனையோ விதமான  ஓசைகள்.. உருண்டு திரும்பும் வண்டிச் சக்கரங்கள் மாட்டுச் சலங்கைகள்  கடங் கடங்கென்று அடிக்கடி ஒலிக்கும்.. காய்கறி வண்டிக் காரன்  தெருப்பிச்சைக்காரன் குகுடுப்பாண்டி சினிமா விளம்பர வண்டிகள், கடந்து போகும் மக்களின்  பேச்சொலிகள் காக்காய் குருவிகளின் கூவல் எல்லாமே  ஏதோ ஒரு ஒழுங்குடன் நிகழ்வதாக தோன்றும்.



 அப்போது  யுத்தகாலம் இரவு எட்டுமணிக்கு சரியாக  ஊருக்குள்  அபாயச்சங்கு  ஊது வார்கள். சங்கொலி கேட்டவுடன் எல்லோரும் பிரகாசமான  விளக்குகளை அணைத்து விட்டு ஜன்னல்களை மூட வேண்டும். மேலே குண்டு போட வரும் எதிரி விமானத் துக்கு கீழே  ஊர் தெரியக் கூடாதுஎன்பதற்குத்  தான் இந்த ஏற்பாடு. அப்போது அந்த நீண்ட சப்தம் தேய்ந்து கரைந்தவுடன் தொடரும் மௌனம் மிக அடர்த்தியாக மனதுக் குள் அலையடித்துக் கொண்டிருக்கும்.

 பக்கத்திலிரண்டொரு வீடுகளில்  கிராமபோன் பெட்டிகளிலிருந்து அன்றைய சினிமாப் பாட்டுகள் கேட்கும் அந்தப் பாட்டின் இசை அலை அன்று முழுவதும் எனக்குள் ஒலித் துக்கொண்டே இருக்கும்.இந்த  ஓசை  அல்லது லயம் என்கிற உள்வயமான  நீரோட்டம் தான் என் கவிதையின் பான்மையை அல்லது வடிவத்தை தீர்மானித்ததாக தோன்று கிறது.

 
சேலத்தை விட்டு சென்னை நகரத்திற்கு வந்த பிறகு என் ஊர் அனுபவம் உலக அனுப வமாக  விரிந்து பரவ நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் இலக்கிய வாசிப்புக்கும் ஆங்கில இலக்கியங்களின் பரவலான அறிமுகத்துக்கும் சாதகமான சூழல் எனக்குக் கிடைத்த்து

அதே போல் ஓவியக் கலையில் ஆர்வம்கொள்ளவும் பகுதி நேர வகுப்பில் சேர்ந்து ஓவியங்கள் பயில்வதற்கும் எனக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன

இலக்கியம் மட்டுமல்லாமல் எப்படி எல்லாக் கலைகளுமே காலத்தின் பாதிப்புகளை உள்வாங்கிக் கொண்டு ஒரு  அர்த்தமுள்ள தற்காலத் தன்மையைநோக்கி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக பார்க்க முடிந்தது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் மேற்கத்திய இலக்கியங்களில் தொடங்கிய நவீன புரட்சிகள் தான் மற்றெல்லா மொழிகளிலும் பரவி நமது இந்திய மொழிகளிலும் சுதந்திரத்துக்கு பின் மிக உத்வேகத்துடன் வேர் பிடித்து வளர  ஆரம்பித்தது. மூத்த கவிஞர் .பிச்ச மூர்த்தி அவர்கள் வால்ட் விட்மன் கவிதைகளையும் பாரதியின் வசன கவிதைகளையும் ஒரு  உந்துவிசையாக ஏற்றுக் கொண்டு புதிய வடிவங்களில் கவிதை படைக்கத்துணிந்தார்சி.சு.செல்லப்பாவின் எழுத்து வும் ..சு வின் இலக்கிய வட்டமும் இவ் வகையான  கவிதைகளை அறிமுகப்படுத்துவதிலும் அவைகளை நியாயப்படுத்தி இலக்கிய அங்கீகாரம் கிடைக்க தீவிரமாக மூர்த்தண்யமாக செயல்பட்டன.



சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு உள்ளும் வெளியும் நேர்ந்த  சமூகபொருளாதார லட்சிய எதிர்ப்பாடுகளை கூர்மையான கவிதைக மொழியில் எதிரொலிக்க வேண்டிய பொறுப்பு புதுக் கவிஞனுக்கு ஏற்பட்ட்து.

 
மேலோட்டமான உப்பு சப்பில்லாத வர்ணனைகளை- காதுக்கு மட்டும் இதமான ஜிலுஜிலுப்பான வெற்று வார்த்தைகளைகவிதையின் கருத்துக்குத் துணை போகாத வெறும் கட்டமைப்புக்கான அகராதித்தன்மையை புறக்கணிக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம்.அடிப்படையான  மனக் கிளர்ச்சியுடன் ஒரு சுரணையுள்ள மனிதன் சொல்ல நினைக்கும் சத்தியமான அவஸ்தைகளை இன்றைய கவிதைகள் சொல்லவேண்டுமென்று ஆதங்கப் பட்டோம்.

இத்தகைய  ஆதங்கத்துடன் நாங்கள் வெளிப்பாட்டு முயற்சியில் ஈடுபட்ட போது மொழி பற்றிய பிரக்ஞை எங்களுக்குள் நுண்மையாகி வருவதை உணர முடிந்தது.
ஒரு மொழியின் பொருள் கவிஞனின் மனோதர்மத்துக்கு ஏற்ப வியக்கத்தக்க  வகையில் வெவ்வேறு அர்த்தங்களை சாத்தியப் படுத்துவதை  நாங்கள் புதுக் கவிதை  மூலம் கண்டறிய  முடிந்தது ஒரு சொல்  வாக்கியங்களாகும் போது அல்லது இடமாற்றம்
கொள்ளும் போது அல்லது  தீர்மானிக்கப் பட்ட மௌன்ங்களை அவற்றோடு கலக்கும் போது அதன் பொருள் அனுபவம் எவ்விதம் ஒரு  எதிர்பாராத  கவி அனுபவத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்த போது மிகவும்  சந்தோஷமாமாக இருந்த்து.

இது எனக்குத் தெரிந்த வரை நான் சொல்லக் கூடிய அந்தக் காலகட்ட்த்தின் பொதுவான சில  கோட்பாடுகள், இந்தப்பொதுவான பின்னணியில் அன்று ஒவ்வொரு கவிஞனும் அவனுடைய ஆளுமை  படிப்பறிவு  பாரம்பரீய  ஞாபகங்கள் இதற்குத் தகுந்தவாறு கவிதைகளை  எழுதிக் கொண்டிருந்தான்

என்னைப் பொறுத்தவரையில் ஏற்கனவே நான்  சொல்லிய படி கவிதையில் மரபு அல்லது அதன் மீறல்  என்பது  முக்கியமில்லை. வாசிப்பில் ஓசையின் லயமும் கருத்துக்களின் பாங்கான அமைதியும் வேண்டும். ஒரு கவிதை  யானைக் கண்களைப் போல சிறுத்திருந்தாலும் அதற்குள்  ஒரு உலகம் அடக்கமாகி  இருக்க வேண்டும்
தனிமனித  உளைச்சல்களையோ வீறாப்புகளையோ தோல்விகளைப் பற்றிய  பிலாக்கணங்களையோ ஊதுகின்ற ஒலிப்பெருக்கி வார்த்தைகளாக் கவிதை  இருக்கக் கூடாது

காலத்துக்கு உட்பட்டு அன்றாட  வாழ்வுப் பிரச்னைகளுக்கு  உட்பட்டுத்தான் சராசரி மனிதன் வாழ வேண்டியிருக்கிறது. அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. கலைஞ னுக்குள் அப்படிப்பட்ட சராசரிமனிதன்  இருக்கிறான். இந்த மனிதனைத் தான் ஒரு கலைஞன் சுரணையுடன் தன் கவிதைக்குத் தூண்டுதலாகப் பார்க்க வேண்டும்
 
ஆனால் இவற்றைப்பிரதிபலிக்கும் விதத்தில் பிரச்னைகளின் ஊடாக மனிதனுக்கு சாத்தியமாகிற விடுதலையை ஒரு வெளிச்சக்கீற்றை தன் வாழ்வை சற்றே நகர்ந்து பார்க்கிற ஒரு மன விழிப்பை தர வேண்டும்.

 
கவிஞன் பாரபட்சமுள்ள செய்தித் தாள் நிருபன் அல்ல. அவன் மனம் மிகவும் பரந்த தாக ஒரு பேருண்மையுடன் தொடர்புகொண்டதாக இருக்கவேண்டும். துண்டுதுண்
 
டான  அனுபவங்களில்  கூட  வாழ்வைப்பற்றிய முழு பிரக்ஞை கவிதையில் மிளிர வேண்டும்

 
இலக்கியமும் கவிதையும் நமக்கு ஏன் அவசியமாகிறது?

தன் கசப்பான யதார்த்தங்களிலிருந்து விலகி நின்று தன்னைப்பார்த்துக் கொள்ள; சதா இயங்கிக் கொண்டே வளர்ந்து  கொண்டே இருப்பது  நமது உடல்  மட்டுமல்ல நமது உள்ளறிவும் ஞானமும் தான். இதற்கு ஏதோ ஒரு வகையில் தூண்டுதலாக  இருப்பது நல்ல இலக்கியங்கள்  தான்  தன்னை மேன்மையான மனிதனாக மாற்றிக்கொள்ளும்  உள்ளுணர்வுபெற்று நம்பிக்கை கொள்ள நமக்கு இலக்கியங்கள் அவசியம்.

 
இலக்கியத்தில் காணப்படும் யதார்த்தம் புற வாழ்க்கையில் காணப்படும் யதார்த்தத் திலிருந்து வேறுபட்டது. இலக்கிய யதார்த்தம் மனிதனுக்கு வித்தியாசமான தெளிவை ஏற்படுத்தக் கூடியதுசீண்டி விட்டு செயலுக்கு ஏவி விடக் கூடியது.

 
இன்று இளங்கலைஞர்கள் அற்புதமாக  யோசிக்கிறார்கள்  மொழியைக் கூர்மையாக துணிச்சலாக  பயன்படுத்துகிறார்கள்.

 
உள்மனதின் லேசான சலனங்களைக் கூட  கவிதையாக்கும் உந்துதல் பெற்றவர்கள். உண்மையைக் கலைத்துப்போட்டு வித்யாசமான வினோதமான ஒரு கட்டமைப்பை எழுப்பிக்காட்டக் கூடியவர்கள்

 கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டுதான் இருக்கும்  மாறாமல் இருந்தால் இலக்கியம் தேக்கமுற்று மடிந்துவிடும். அந்தப் புதிய கோட்பாடுகள் அதன்  காலத்தில் தவிர்க்கமுடியாத்தாக இருக்கவேண்டும்அர்த்தச்செறிவுள்ள மலர்ச்சியாக பரிணமிக்க வேண்டும் கடந்த இலக்கிய அம்சங்களின் ஆதாரங்கள் மீது அந்த புதிய தோற்றம் உருவாகி இருக்க வேண்டும்.

 
புதிய கோட்பாடுகள் இலக்கியத்தில் இயல்பாக  மாற  ஒரு தலைமுறையாவது செல்ல வேண்டி இருக்கிறது.



கவிதையைப்பற்றி நிறைய பேர் பேசுவது நல்லது  தான். பேசாமலிருப்பது அதைவிட  நல்லதுநல்ல  கவிதை வாசகனுடன் பேச  வேண்டும்

 
பரவலான  வாசிப்பினால் தான் கவிதை உயிர் தரிக்கிறது. வாசிக்க வாசிக்க கவிதை  வளர்ந்துகொண்டே போகிறது.

 “வரப்புயர  நெல்லுயர்வது “  மாதிரி




.

  
     0