வைதீஸ்வரன்



அஹிம்சை என்றால் என்னவென்று
கேட்டான் என் குழந்தை
அர்த்தம் எனக்கு எப்போதோ படித்தது.
மறந்து போச்சு.
அக்கம்பக்கத்திலும் ஆருக்கும்
நினைவில்லை.
ஊருலகத்தில் அப்படி ஒரு
வார்த்தை உண்டாவென்று
என்னை வேடிக்கையாகப் பார்த்தார்கள்
பழங்கால அகராதியைப் புரட்டினால்
நிச்சயம் பொருள் இருக்குமென
தூசு தட்டிப் பார்த்தேன்
நல்ல வேளை அகராதி மீதி இருந்தது;
செல்லரித்த வரை படமாக
ஆவன்னா பக்கத்தைப்
பிரித்துப் பார்த்தேன்
ஒட்டிக் கொண்டு கிடந்தது சடையாக.
போராடித் தான் அதைத்
திறக்க முடிந்தது.
ஆனாலும் “ஆ”வில் ஒரு பொத்தல்
அறம் அன்பு ஆனந்தம்
ஆறுதல் அமைதி அத்தனையும் பொத்தல்
“அ”ஹிம்சை ஹிம்சையாக இருந்தது
அகராதியைத் தூக்கி எறிவது தவிர
வழியில்லை. அல்லது எடைக்குப் போட்டு
குச்சிக் கிழங்கு வாங்கலாம்
மறந்து போன விஷயத்தை
மகனிடம் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.
வெட்கமாயிருந்தாலும்.
பொருளைத் திரித்துக் கூறுவது
ஒரு தலைமுறைக்கு நான் செய்யும்
துரோகம்.
மகனே!..எனக்குத் என்றோ தெரிந்ததை
உனக்கு நிரூபிக்க முடியாத சூழல் இன்று.
முடிந்தால் அதன் பொருளை
மீண்டும் நீ கண்டறிந்து கொள்..ஆனால்
மீண்டும் தொலைத்து விடாதே....
என்று பொதுவாகச் சொல்லி வைத்தேன்.
No comments:
Post a Comment