vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, September 5, 2015

யோசிக்கும் போது

யோசிக்கும் போது
 - வைதீஸ்வரன் --
     நீருக்குள் 
    புதை மணலில் சிக்கிய பிணங்கள் போல்
    சில சமயம் மேலுக்கு வருகின்றன
    எண்ணங்கள்

     இன்னும் மலராகாத மகரந்தப் பொடியாய்
     மிதக்கும் மனவெளியில் சில எண்ணத்           
     துகள்கள்.

     இன்னும் கால் விரல் கண் முளைக்காத
     மெழுகு விந்தாய் இருட்டுக்குள்
     அனாதியாய் நீந்துவதும் அதன் வழக்கம்
         
      இன்னும் மொழியாகாத ஒலிச் சிதறலாய்
      ஞாபகக் காட்டுக்குள் வழி தொலைந்து
       அரற்றுவதும் அவை தான்.
              
       பல சமயம்
       எண்ணங்கள் அழையா விருந்தாளி
       பிடிவாதமான பங்காளி..
            
       விட்டு நகர்ந்தால் விழித்துக் கொள்வான்
       என்ற  அச்சத்தில்
       ஓயாமல் நெஞ்சை உதைத்துக்  
       கொண்டிருக்கும்
       பேய்ப் பிள்ளை..

       எண்ணங்கள் காற்றாடியாகும் போது
       மனம் பரவசமாய் பறக்கிறது.

       அதுவே கருநாகம் போல் 
       என்னையும் உன்னையும் வளைத்து 
       சீறும் போது  
       உயிர் கருகிக் கருகி
       எரிந்து கொண்டேயிருக்கிறது
       விடுபடத் தெரியாமல்...


(*கணையாழி  செப்டம்பர்  2015)



No comments:

Post a Comment