vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, December 30, 2016

மேதைக்கு ஏது ஜாதி? - வைதீஸ்வரன்

மேதைக்கு   ஏது  ஜாதி?

வைதீஸ்வரன்
நய்னா பிள்ளை
  சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை





ஒரு மேதையின் மனவெளியில்  மனிதனின் புற அடையாளங்கள் பொருட்படுத்தத்தகுந்ததாக  இருப்பதில்லை.

காஞ்சீபுரம் நயினா பிள்ளை அவர்கள்  ஒரு சங்கீத விற்பன்னர்.  சங்கீத குடும்பத்தில் சூழலில் இருந்தாலும்  பதினெட்டு வயது வரை  மல்யுத்தப் பயிற்சியிலும் மற்ற விளையாட்டுக்களிலும் காலங்கழித்துக் கொண்டி ருந்தவர். திடீரென்று ஒரு நாள் கோவில் சன்னிதியில் பைராகி  ஒருவர் இவரை உட்காரவைத்து சங்கீதப் பயிற்சி  கொடுக்க ஆரம்பித்தார். பிறகு இவர்  வாழ்க்கையே  சங்கீதத்துக்கான அர்ப்பணிப்பாக மாறியது.

அந்த பைராகி தான் யார் என்றுகூட தெரிவித்துக்கொள்ளவில்லை.

நய்னா பிள்ளை சங்கீதத்தை ஒரு விஞ்ஞானியின் பார்வையில்  அணுகி யவர். மேலோட்டமான  ரஸனையைவிட  அதன் தத்துவங்களை  மேலும் அலசிப்பார்ப்பதுதான் அவரது சங்கீத பாணியாக இருந்தது.  இதனால் அவருக்கு பரவலான  ரஸிகர் கள்  இல்லாமல் போனாலும் தனித்தன்மை யான சிறந்த பாடகர்களின் தலைமுறையை அவரால் உருவாக்க முடிந்தது.

அப்படி இவர் உருவாக்கிய சிஷ்யர்களில் சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை  மிக முக்கியமானவர். ஆனால் இந்த சிஷ்யரின் பெயர் முற்றிலும்  வேறானது  என்பது தான்  இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

 1930ல்  சென்னையில்  காங்கிரஸ் மகாநாடு கூடியது.  அது  ஒரு பெரிய கலை இசை விழாவாகவும் கொண்டாடப்பட்ட்து. அரிய பெரிய வித்வான்களெல்லாம் அங்கே கச்சேரி செய்தார்கள். நயினா பிள்ளையும் பின்பாட்டாக சித்தூர் வெங்கடரங்க ராமானுஜ நாயுடு என்கிற ஒருவ ரும்  கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார்கள்.

அப்போது மகாநாட்டு கச்சேரிகளின் ஒருங்கிணைப்பாளர் அங்கே வந்தார்.

நய்னா பிள்ளை   “ என்ன விஷயம்?  “ என்று  கேட்டார்.

அவர் சொன்னார் “அய்யா.. உங்கள் பின்பாட்டுக்காரரின் பெயர் மிக நீளமாக  இருக்கிறது.  கொஞ்சம்  சுருக்கமாக  மாற்றிக்கொடுக்க முடி யுமா?”  என்று  கேட்டார்.

தீவிர சங்கீத சாதகத்தில் இருந்த நயினாபிள்ளை  சற்றும் யோசிக்க வில்லை. இதென்ன பிரச்னைசித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை என்று  போட்டுக்கோங்க”...  என்று  விஷயத்தை முடித்து விட்டார்.

ஒரே நொடியில்  பின்பாட்டுக்காரரின்  ஜாதி குலம் கோத்திர அடையா ளங்களையும்  பெயரையும் நய்னாபிள்ளை மாற்றிவிட்டார். பின்பாட்டுக் காரரருக்கும்  இது  ஒரு பெரிய  விஷயமாகப்படவில்லை. சித்தூர் சுப்பிர மண்யப் பிள்ளை  என்கிற பெயர்  நிலைத்து  நீடித்துவிட்டது.  நய்னா பிள்ளையின் சங்கீதத்துக்கு  நேர் வாரிசாக  ஆதர்சமாக  அவர் இன்றும் கருதப்படுகிறார்.

மேதைகளுக்கு  ஜாதியில்லை.


 தகவல்  V. Sriram                     



Sunday, December 4, 2016

யந்திரக் கவர்ச்சி - வைதீஸ்வரன்

யந்திரக் கவர்ச்சி
வைதீஸ்வரன்





அவன்
 தாடியைத்  திருகிக்கொண்டு
யோசித்தான்  
கை செயற்கையாகப்  பரபரத்தது
உலோகக்  கம்பிகளை உருவி யெடுத்து
நீட்டி  வளைத்து  சுருட்டி
சின்ன  வடிவாக்கிப்  பரத்தி
மூக்கு வைத்து
சன்னக் கால்களில்  நிறுத்தினான்
குறிக்கு பதிலாக  பேட்டரியைப்
பொருத்தினான்.  முடுக்கி விட்டான்
தகரச் சிறகுகள்  படுவேகத்தில் துடிதுடிக்கக்
காற்றில்  எழும்பியது  வண்ணமற்ற  பூச்சி. ஒன்று
தோட்டம்  முழுக்க சுற்றிப் பார்த்து
வருத்தமாய்  வீட்டுக்
கூடத்திற்கு  திரும்பி வந்து வட்டமிட்டது.


மூலையில் நின்ற  பித்தளைப் பூ  ஜாடி கண்டதும்
பேதுற்று  சத்தமாகப்    பறந்து போய்
காலை விரித்துக் குந்திக்கொண்டது
ஒரு  ப்ளாஸ்டிக் பூவின்  நடுக்குழிக்குள்




Tuesday, November 15, 2016

ஒரு புகைப் படத்தின் கதை-வைதீஸ்வரன்


        ஒரு புகைப் படத்தின்  கதை

******************************************
வைதீஸ்வரன்


 இந்த  புகைப்  படம்  எடுத்த  போது  எனக்கு  ஐந்து  வயது  இருக்கலாம்.  சேலத்தில்  என்  அப்பாவின்  நண்பர்  ஒருவர்  திடீரென்று  ஒரு போட்டோ ஸ்டுடியோவை  ஆரம்பித்து  விட்டார். அப்போது  அந்தத்  தொழில் மிக  வித்யாசமானது.  நூதனமானது.  ஆனால்  அவர்  தொழிலில்  மிக ஊக்கமானவர்.  தன்  நண்பர்களையெல்லாம்  அழைத்து  வந்து  போட்டோ  எடுத்துக் கொள்ளும்  ஆர்வத்தைத்  தூண்டி விட்டார்.

அநேகமாக  நான்  பிறந்த பிறகு  எடுத்துக் கொண்ட  முதல்  போட்டோ  இதுவாகத் தான் இருக்கும்.  அதற்கு முந்தைய  வருஷங்களில்  போட்டோ எடுப்பதை  என்  பாட்டி பிடிவாத மாகத்  தடுத்து   நிறுத்திவிட்டாள்போட்டோ  எடுத்தால்  ஆயுசு குறைந்து  விடும்என்பது  அவளுடைய  அபிப்ராயம். இப்போதெல் லாம்  வயிற்றுக்குள்ளிருந்தே  குழந்தையை போட்டோ எடுக்க  ஆரம்பித்து விடுகிறார்கள் !! 

   இந்த போட்டோவில்  என் கூட  நிற்கும் அக்கா  எனக்கு  இரண்டு வயது  மூத்தவள்.  சாயங்காலங்களில்  திண்ணையில்  கல்லாட்டமும் பாண்டியும்  மற்ற  சிறுமிகளோடு விளையாடிக் கொண்டிடிருப்பதைத் தடுத்து  என் அம்மா  அவளை  இப்ப்டி  இழுத்து வந்து  விசேஷமாக  அலங்கரித்து  போட்டோவுக்குத்  தயார் செய்ததில்  அவளுக்கு ரொம்பக் கோபமும்  அழுகையும்  வந்திருக்க வேண்டும்.

 “போட்டோவில்  சிரிக்காமல்  இருந்தாலும்  பரவாயில்லை.  அழுகாம  இரு..”  என்று என் அப்பா  அதட்டி இருக்க வேண்டும்.  தவிர  எங்களுக்கு எதிரே  பளீரென்று விளக்குப் போட்டு  கருப்புத் துணிக்குள்  தலையை  நுழைத்துக் கொண்டு நிற்கும்  அந்த காமிரா  மாமாவைப் பார்க்கும் போது  ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது  போல்  இருந்திருக்கலாம்.

    எனக்கு  அந்த  மூன்று சக்கர  சைக்கிள்  மிஅவும் பிடிக்கும். அப்போது  அப்பா  சேலத்தில்  சைக்கிள்  கடை  வைத்திருந்தார்.  அவர் கடைக்கு  இந்த  சைக்கிள்  பழுது பார்ப்பதற்கு  வந்திருந்தது.  அதை நான்  சில நாட்கள்  ஓட்டிக் கொண்டிருந்தேன்.

 சைக்கிளை  ஓட்ட விடாமல்  அந்த  காமிரா  முன்னால்  அசை யாமல்  உட்காரச் சொன்னது   எனக்கு பிடிக்கவில்லை.  அப்பாவின் கண்டிப்புக்காக  அசையாமல்  உட்கார்ந்திருக்கிறேன்.

   இந்தப் புகைப்படம்  சுமார்  75 ஆண்டுகளுக்கு  முன் எடுத்தாலும்  அதை எடுத்தவரின்  தொழில் நேர்த்தியை நிச்சயம் பாராட்ட வேண்டும்  .அப்போதைய  காமிராவில்  மிகக் குறைவான  நுணுக்கங்களே இருந்தன.. இதை இயக்குவதற்கு  தீவிரமான  மனப் பயிற்சி வேண்டும்  லென்ஸை  சரியான  நேர அளவுக்கு  சில வினாடிகளுக்கு  கையால் திறந்து மூடவேண்டும்   இந்தக்  கைத் திறமை  ஒரு தியான நிலைக்கு  சமமானது

 எண்பது  வருஷங்களுக்கு  பிறகு  நம்மையே   நாம் திரும்பிப் பார்த்துக்  கொள்ளும் போது  நமது  வாழ்வின்  ஆச்சரியமான  பரிணா மமும்  புதிரும்  வளர்ச்சியின் அரூபமான  ஒழுங்கும்   தீராத  நெகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.  ஏதோ  ஒரு  மகாசக்தியின்  விசாலமான  கருணையை         நினைக்கத்  தூண்டுகிறது

        


Friday, October 28, 2016

வைதீஸ்வரனும் நானும் அசோகமித்திரன்

  வைதீஸ்வரனும் நானும்
அசோகமித்திரன்



நான் சென்னையில் வசிக்க வந்த 1952ம் ஆண்டிலேயே எனக்கு அறிமுகம் ஆன மிகச் சிலரில் வைதீஸ்வரனும் ஒருவர். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சைக்கிளில் போய் வருவார்.அவர் எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் கடைசி சகோதரியின் மகன்.

இன்று நினைத்துப் பார்க்க முடியாது. சஹஸ்ரநாமம் பெரிய ஹீரோ அல்ல. ஆனால் திரைப்படத்துறையில் மிகவும் மதிக்கப் பட்டவர்.நெருங்கினவர்களுக்குத்தான் தெரியும் அவர் என்.எஸ்.கிருஷ்ணனையும் பாகவதரையும் விடுவிக்க எவ்வளவு வகையில் பாடுபட்டார் என்று.  என்.எஸ்.கே சார்பில் அவருடைய நாடக்க் குழுவைச் சிதற விடாமல் பார்த்துக் கொண்ட்தோடு சில வெற்றிகரமான நாடகங்களையும் தினம்தோறும் நடத்தினார். ‘பைத்தியக்காரன்,’ மனோஹரா ஆகிய நாடகங்கள் அவருடைய நிர்வாகத் திறமையில் சிறப்பாகப் பல முறை மேடையேறின. என்.எஸ்.கே அவர்களுக்கு அவ்வளவு விசுவாசமான நண்பர் சஹஸ்ரநாமம் தவிர யாரும் இருந்திருக்க முடியாது.

சென்னை ராயப்பேட்டை தாண்டவராயன் கோயில் தெருவில் வசித்த சஹஸ்ரநாமத்தின் வீடும் ஓர் அதிசயம். எவ்வளவு முதியவர்கள், இளைஞர்கள்,  குழந்தைகள் அந்த வீட்டில் இருந்தார்கள்! வைதீஸ்வரன் ஒரு கட்டத்தில் வேறு இடத்தில் இருந்தாலும் அவரை நான் தாண்டவராயன் தெரு வீட்டின் தொடர்ச்சியாகத்தான் உணர முடிந்தது. அவர் படிப்பு முடித்துச் சில காலம் நாடகம், சினிமாத் துறைகளில் இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் பாடல்களுக்கு வரிகள் எழுத முற்பட்டது. ஏதோ ஒரு வித்த்தில் அவர் கவிஞனாகவே இருந்து வந்தார். அவருடைய கவிதை அச்சில் முதலில் வந்தது சி.சு.செல்லப்பா வெளியிட்ட எழுத்து பத்திரிகையில் வந்த்து. ’எழுத்து பத்திரிகை சிலரை அதிதீவிரமாகச் செல்லப்பா வழிபாடு செய்பவர்களாக மாற்றியது. உன்னத மனிதர்களை வழிபாடு செய்வதில் தவறில்லை. செல்லப்பா ஓர் உன்னத மனிதர். ஆனால் அவரிடம் ஒரு இளைய தலைமுறையை உருவாக்கக்கூடிய தலைமை ஆற்றல் சற்றுக் குறைவு. அப்படி இருந்தால் அவருடைய பத்திரிகையையும் அவருடைய பரிச்சயத்தையும் பெறும் பேறாக நினத்தவர்களை அவர் ஊக்குவித்திருக்க வேண்டும். அவர் நிறைய நூல்களை வெளியிட்டார். ஆனால் அவரே உலகம் என்றிருந்த முக்கியமானவர்களை நூலாசிரியர்களாகக் கௌரவிக்கத் தவறி விட்டார் என்றே கூற வேண்டும்..வைதீஸ்வரனின் முதல் கவிதை தொகுப்பு உதய நிழல் சென்னை வாசகர் வட்டம் பிரசுர அமைப்பு விற்றது.

வைதீஸ்வரனின் முதல் உரைநடைப் படைப்பு கணையாழிபத்திரிகையில் வெளியாயிற்று. இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் பல வெளியீடுகளில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் சென்னை கவிதா பிரசுரம் வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 34 கதைகள் உள்ளன. பல கதைகள் நம்மைத் தூக்கிவாரிப் போடுகின்றன. கவிதைகள் எழுதினாலும் அவர் அகவயப்பட்டவர் அல்ல. அவருடைய கவனத்தில் ஏராளமானவர்கள் உண்டு. ‘கனவில் கதை,’  எங்கிருந்தோ வந்தான்,’ ‘தவளை ரத்தம்,’ ‘முத்தம்மா’ 9இன்னும் பல கதைகளில்) அவர் எல்லாத்தரப்பு மனிதர்களையும் அந்தரங்கமாக அறிந்திருக்கார், நேசித்திருக்கிறார்.

நான் அவருடைய பெரியம்மவின் மகன் ராஜாமணி மூலம் அவரைச் சந்தித்தேன். அவரை மேடையில் பார்த்திருக்கிறேன். திருப்பதி அருகில் உள்ள திருச்சானூரில் அவருடைய திருமணத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்போது அவர் பரோடா பல்கலைக்கழகம் சென்று அருங்காட்சியியலில் பட்டம் பெற்றுத் திரும்பியிருந்தார்.

வைதீஸ்வரனின் கவிதைகள் பல மொழிகளில் வெளி வந்திருக்கின்றன.அவருடைய முதல் உரைநடைப் படைப்பு கணையாழி பத்திரிகையில் வந்த்து என்று நினக்கிறேன். சமீபத்தில் அவருடைய 34 கதைகள் கொண்ட சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பை சென்னை தி.நகர் கவிதா பதிப்பகம் வெள்யிட்டிருக்கிறது. அதில் பல கதைகள் நம்மைத் தூக்கிவாரிப் போட வைப்பவை. கவிஞனாக இருந்தாலும் வைதீஸ்வரனின் கவனம் ஏராளமானோர் பால் சென்றிருக்கிறது கனவின் கனவு’ ‘முத்தம்மா’ ‘கனவில் கனவு’ ’தவளையின் ரத்தம் ஆகிய கதைகள் படிப்போரைத் திடுக்கிட வைக்கும்.

வைதீஸ்வரனுடன் என் உறவு அறுபது ஆண்டுகள் முடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் அவருடைய பெரியம்மா மகன் என்.வி.ராஜாமணியின் நிழல்  படர்ந்திருக்கிறது.