வைதீஸ்வரனும் நானும்
அசோகமித்திரன்
நான் சென்னையில் வசிக்க வந்த 1952ம் ஆண்டிலேயே எனக்கு அறிமுகம் ஆன மிகச் சிலரில் வைதீஸ்வரனும் ஒருவர். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சைக்கிளில் போய் வருவார்.அவர் எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் கடைசி சகோதரியின் மகன்.
இன்று நினைத்துப் பார்க்க முடியாது. சஹஸ்ரநாமம் பெரிய ஹீரோ அல்ல. ஆனால் திரைப்படத்துறையில் மிகவும் மதிக்கப் பட்டவர்.நெருங்கினவர்களுக்குத்தான் தெரியும் அவர் என்.எஸ்.கிருஷ்ணனையும் பாகவதரையும் விடுவிக்க எவ்வளவு வகையில் பாடுபட்டார் என்று. என்.எஸ்.கே சார்பில் அவருடைய நாடக்க் குழுவைச் சிதற விடாமல் பார்த்துக் கொண்ட்தோடு சில வெற்றிகரமான நாடகங்களையும் தினம்தோறும் நடத்தினார். ‘பைத்தியக்காரன்,’ மனோஹரா’ ஆகிய நாடகங்கள் அவருடைய நிர்வாகத் திறமையில் சிறப்பாகப் பல முறை மேடையேறின. என்.எஸ்.கே அவர்களுக்கு அவ்வளவு விசுவாசமான நண்பர் சஹஸ்ரநாமம் தவிர யாரும் இருந்திருக்க முடியாது.
சென்னை ராயப்பேட்டை தாண்டவராயன் கோயில் தெருவில் வசித்த சஹஸ்ரநாமத்தின் வீடும் ஓர் அதிசயம். எவ்வளவு முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அந்த வீட்டில் இருந்தார்கள்! வைதீஸ்வரன் ஒரு கட்டத்தில் வேறு இடத்தில் இருந்தாலும் அவரை நான் தாண்டவராயன் தெரு வீட்டின் தொடர்ச்சியாகத்தான் உணர முடிந்தது. அவர் படிப்பு முடித்துச் சில காலம் நாடகம், சினிமாத் துறைகளில் இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் பாடல்களுக்கு வரிகள் எழுத முற்பட்டது. ஏதோ ஒரு வித்த்தில் அவர் கவிஞனாகவே இருந்து வந்தார். அவருடைய கவிதை அச்சில் முதலில் வந்தது சி.சு.செல்லப்பா வெளியிட்ட ‘எழுத்து’ பத்திரிகையில் வந்த்து. ’எழுத்து’ பத்திரிகை சிலரை அதிதீவிரமாகச் செல்லப்பா வழிபாடு செய்பவர்களாக மாற்றியது. உன்னத மனிதர்களை வழிபாடு செய்வதில் தவறில்லை. செல்லப்பா ஓர் உன்னத மனிதர். ஆனால் அவரிடம் ஒரு இளைய தலைமுறையை உருவாக்கக்கூடிய தலைமை ஆற்றல் சற்றுக் குறைவு. அப்படி இருந்தால் அவருடைய பத்திரிகையையும் அவருடைய பரிச்சயத்தையும் பெறும் பேறாக நினத்தவர்களை அவர் ஊக்குவித்திருக்க வேண்டும். அவர் நிறைய நூல்களை வெளியிட்டார். ஆனால் அவரே உலகம் என்றிருந்த முக்கியமானவர்களை நூலாசிரியர்களாகக் கௌரவிக்கத் தவறி விட்டார் என்றே கூற வேண்டும்..வைதீஸ்வரனின் முதல் கவிதை தொகுப்பு ‘உதய நிழல்’ சென்னை வாசகர் வட்டம் பிரசுர அமைப்பு விற்றது.
வைதீஸ்வரனின் முதல் உரைநடைப் படைப்பு ‘கணையாழி’பத்திரிகையில் வெளியாயிற்று. இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் பல வெளியீடுகளில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் சென்னை கவிதா பிரசுரம் வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 34 கதைகள் உள்ளன. பல கதைகள் நம்மைத் தூக்கிவாரிப் போடுகின்றன. கவிதைகள் எழுதினாலும் அவர் அகவயப்பட்டவர் அல்ல. அவருடைய கவனத்தில் ஏராளமானவர்கள் உண்டு. ‘கனவில் கதை,’ எங்கிருந்தோ வந்தான்,’ ‘தவளை ரத்தம்,’ ‘முத்தம்மா’ 9இன்னும் பல கதைகளில்) அவர் எல்லாத்தரப்பு மனிதர்களையும் அந்தரங்கமாக அறிந்திருக்கார், நேசித்திருக்கிறார்.
நான் அவருடைய பெரியம்மவின் மகன் ராஜாமணி மூலம் அவரைச் சந்தித்தேன். அவரை மேடையில் பார்த்திருக்கிறேன். திருப்பதி அருகில் உள்ள திருச்சானூரில் அவருடைய திருமணத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்போது அவர் பரோடா பல்கலைக்கழகம் சென்று அருங்காட்சியியலில் பட்டம் பெற்றுத் திரும்பியிருந்தார்.
வைதீஸ்வரனின் கவிதைகள் பல மொழிகளில் வெளி வந்திருக்கின்றன.அவருடைய முதல் உரைநடைப் படைப்பு ‘கணையாழி’ பத்திரிகையில் வந்த்து என்று நினக்கிறேன். சமீபத்தில் அவருடைய 34 கதைகள் கொண்ட சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பை சென்னை தி.நகர் கவிதா பதிப்பகம் வெள்யிட்டிருக்கிறது. அதில் பல கதைகள் நம்மைத் தூக்கிவாரிப் போட வைப்பவை. கவிஞனாக இருந்தாலும் வைதீஸ்வரனின் கவனம் ஏராளமானோர் பால் சென்றிருக்கிறது ’கனவின் கனவு’ ‘முத்தம்மா’ ‘கனவில் கனவு’ ’தவளையின் ரத்தம்’ ஆகிய கதைகள் படிப்போரைத் திடுக்கிட வைக்கும்.
வைதீஸ்வரனுடன் என் உறவு அறுபது ஆண்டுகள் முடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் அவருடைய பெரியம்மா மகன் என்.வி.ராஜாமணியின் நிழல் படர்ந்திருக்கிறது.