நானறிந்த அசோகமித்திரன்
[ வைதீஸ்வரன் ]
“” Asokamithran’s MAN IN HIS
STORIES IS A FONDLING ABANDONED BY THE
FORCES THAT CREATED HIM….””
இலக்கியத் துறையில் நீண்ட காலம் காத்திரமான பங்களிப்பு செய்த இத்தகைய ஒரு முதிய எழுத்தாளருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவமும் அங்கீகாரமும் அவருக்கு சில தாமதமாகவும் மேலும் சில கொடுக்கப்படாமலும் போனதற்காக பொதுவாக அங்கங்கே ஊடகங்களில் கருத்துக்கள் பேசப்படுகின்றன.
ஆனால் அது அவருக்கு ஒரு பெரிய இழப்பல்ல என்று தான் நான் நினைக்கிறேன் ஒரு நல்ல இலக்கியம் அது படைக்கப்படுகிற காலத்தில் எத்தகயை உத்வேகமான பாதிப்பை அனுபவ விஸ்தீரணத்தை வாசிப்பவர்களிடையே படைப்பாளிகளிடையே ஏற்படுத்த வேண்டுமோ அதை அவர் படைப்புகள் சாதித்திருக்கிறது.
இந்தியாவின் மற்ற பிரதேச
எழுத்தாளர் வட்டங்களையும் அது
பாதித்திருக்கிறது.
அதுவும் இலக்கிய
வளர்ச்சிக்கு பாதகமான பல
விதமான சமூக
சார்புகள் குறுக்கிடும் அவலமான தமிழ்
எழுத்து சூழலில் அவர் படைப்புகள் அதன் மனித
நேயத்தின் குரலை பறை சாற்றி
இருக்கிறது.
இத்தகைய அர்த்தமுள்ள அங்கீகாரத்துக்கு முன் சடங்குத்தன மான விருதுகளும்
கௌரவங்களும் படைப்பாளியின்
பெருமி தத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்ற கட்டாயம் ஒன்றுமில்லை.
1953 என்று நினைக்கிறேன். ஒரு நாள் என் அண்ணா ராமநரசு [ பெரியம்மா மகன் } ஒல்லியாக சற்று தாடை நீண்ட முகமுடைய எளிமையான உடை அணிந்திருந்த ஒரு இளைஞரை வீட்டுக்குக் கூட்டி வந்தார். நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம். “ இவர் பெயர் ஜ. தியாகராஜன்...என்னுடன் ஜெமினியில் வேலை செய்கிறார்” என்றார். அண்ணா.
என் அண்ணா அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் உதவி இயக்குனராக இருந்தார். தியாகராஜன் என்ன வேலை செய்கிறார் என்று நான் கேட்கவில்லை.
அதற்குப் பிறகு அடிக்கடி தியாகராஜன் என் அண்ணாவுடன் வீட்டுக்கு வருவார், என்னிடம் ஆர்வமாக பேசுவார். . அவர் சில சமயம் இரவு முழுதும் கூட எங்கள் வீட்டில் தங்குவார், அப்போது என் அண்ணா மேரீ கார்லீ எழுதிய நாவலின் கருவைத் தழுவி “வானவில் “ என்றொரு நாடகம் எழுதிக் கொண்டிருந்தார். தியாகராஜன் அது சம்பந்தமாக என் அண்ணாவுக்கு உதவிகள் செய்திருக்கலாம்.
இந்த தொடர்பில் என் அண்ணாவைப் பற்றியும் இரண்டொரு விவரங்கள் சொல்லத் தூண்டப் படுகிறேன் என் அண்ணா 1944ல் கலாசாலையில் M A படித்து விட்டு பெரிய உத்யோக வாய்ப்பு கௌரவம் செழிப்பான எதிர்கால வாழ்க்கை இவற்றையெல்லாம் நிராகரித்து விட்டு எங்கள் மாமா நாடக திரைக் கலைஞர் எஸ். வி சஹஸ்ரநாமம் நிர்வகித்து வந்த என். எஸ். கே நாடக சபையில் நிர்வாகியாக ஒருங்கிணைப்பாளராக ஊழியம் செய்ய முற்பட்டார். இதனால் அவர் குடும்ப சூழலில் பயங்கர அதிர்ச்சி!!! .
என். எஸ். கே நாடகமன்ற இயக்கம் நின்று விட்ட பிறகு எனது மாமா தொடங்கிய ஸேவாஸ்டேஜ் நாடக மன்றத்துக்காக “கண்கள்” “ இருளும ஒளியும்” ... “வானவில்” போன்ற முற்றிலும் தமிழுக்குப் புதியதான நவீன நாடகங்களை எழுதிக் கொடுத்தார். ராமநரசு. இந்த தயாரிப்புகள் தமிழ் நாடக உத்திகளிலும் மேடை அமைப்புகளிலும் அன்று புதுமையானது இந்த நாடகங்களில் எனது மாமாவுடன் சிவாஜி கணேசன் பண்டரி பாய் முதலிய முன்னணி நடிகர்கள் நடித்தார்கள்.
இந்த கால கட்டத்திற்குப் பிறகு தான் என் அண்ணா ஜெமினியில் வேலைக்கு சேர்ந்தார். ஜ. தியாகராஜனுக்கு என் அண்ணா ஒரு
மூத்த ஆதர்சமான பெரியவராக இருந்தார். . அவரை “ குரு” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவர். அப்போது தியாகராஜன் கதைகள் எழுத ஆரம்பித்திருந்தார். பிரசுரமாகவில்லை. ரேடியோவுக்கு ஒரு நாடகம் எழுதி அது பரிசு பெற்றதாக ஞாபகம்.
என் அண்ணா எழுதிய வானவில் நாடகத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தின் பெயர் “அசோகமித்திரன்” தியாகராஜன். அதையே தன் புனைப் பெயராக தேர்ந்து கொண்டார். அது அவர் எழுத்து வாழ்க்கைக்கு உகந்த நல்ல தேர்வு என்று பெயர் ராசிக்காரர்கள் சொல்லக்கூடும்.
நானும் அப்போது பாரதியார் கல்கி தேவன் வள்ளலார் போன்றோரின் எழுத்துக்களை ஆர்வமுடன் வாசிப்பவனாக கதை கவிதைகள் எழுதுவதில் நாட்டமுள்ளவனாக இருந்ததால் எனக்கும் அசோகமித்திரனுக்கும் ஒரு ஆழ்ந்த சமமான நட்புறவு தளிர்த்தது.
நான் கல்லூரி இல்லாத நாட்களில் அடிக்கடி ஆர்வம் காரணமாக ஜெமினி ஸ்டுடியோவுக்குப் என் அண்ணாவை பார்ப்பதற்கும் அப்படியே அங்கே வேடிக்கை பார்ப்பதற்கும் போவதுண்டு.
அப்போது அசோகமித்திரன் ஸ்டுடியோ முகப்பறையில் வரவேற்பாளனாகவும் இன்னும் பற்பல கண்காணிப்புகளை ஏற்றுக் கொண்ட காரியஸ்தராக பணிசெய்து கொண்டிருந்தார். முக்கியமாக அன்றாடம் பட இயக்கத்துக்கு தேவையான நடிகர்களை தொழில் திறனாளிகளை அழைத்து வர வாகன ஏற்பாடுகள் செய்வதும் நுழைவாயில் போக்கு வரத்துகளை கட்டுப் படுத்துவதும் அவர் பணியாக இருந்தது.
இந்தப் பணி அவருக்கு மிகுந்த ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவருக்கு எழுத்துவன்மையும் கனவுகளும் நிறைய அப்போதே இருந்தது. இந்த வேலை ஏதோ ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்.
அப்பா இறந்தவுடன் அம்மா தங்கைகள் தம்பி யோடு சென்னைக்கு குடியேறிய சூழலில் அவருக்கு இது ஒரு தட்டமுடியாத ஆதாரமாக இருந்திருக்கிறது.
ஆனால் அவருடைய வாழ்க்கையை இந்த விதமான முரண்பாட்டுடன் 14 வருஷங்கள் சகித்துக் கொண்டிருந்திருக்கிறார். என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.
அந்த வருஷங்களில் ஜெமினி ஸ்டுடியோ புத்தக லைப்ரரியிலும் பொறுப்பாளராக ஏற்றுக் கொண்டு ஏராளமான நல்ல புத்தகங்களை வாசிக்கும் ஆழ்ந்த அனுபவத்தை சேகரித்துக் கொண்டிருக்கிறார். பிந்தைய வருஷங்களில் அவருக்கு ஜெமினியில் வேறு வேறு பொறுப்புக்கள் கொடுக்கப் பட்டிருக்கலாம். அங்கே அவருக்கு வாய்த்த நண்பர்களும் சினிமாபிரபலங்களின் தொடர்புகளும் மிக சாதகமாக அவருடைய எழுத்தின் விஸ்தரிப்புக்கு உதவியாக இருந்திருக்கின்றன.
. இருந்தாலும் ஜெமினியில் கதை இலாகாவில் பணி செய்யும் வாய்ப்புக் கூட அவருக்குக் கொடுக்க வாஸன் தயாராக இல்லை. திடீரென்று ஒரு நாள் ஜெமினி வேலையை விட்டு விட்டார்.
ஒரு நாள் பகலில் என் வீட்டுக்கு வந்து கோபமாக வேகமாக பேசினார்.
“ அந்த கோஷ் ஒரு ராஸ்கல்!.. நீ ஏன் அவசரப்பட்டு வேலையை விட்டேன்னு கேக்கறான்! “ என்று கத்தினார். சில மாதங்களுக்கு முன் கோஷ் என்கிற வங்காளி இளைஞனுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவனும் இவரைப் போலவே கல்கத்தாவில் எழுத்துத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் தீவிரமாக இறங்கி ஏதாவது சாதிக்க வேண்டுமென்று எண்ணங் கொண்டவனாக இருந்திருக்கிறான். பத்திரிகை ஆரம்பிக்க நிதி உதவி கூட கிடைத்து விட்டதாகவும் அந்த பத்திரிகையின் சென்னை கிளை ஆசிரியப்பொறுப்பை அசோகமித்திரன் ஏற்கலாம் என்றும் நம்பிக்கை கொடுத்திருக்கிறான். அசோகமித்திரன் ஏதோ பலஹீனத்தில் ஜெமினி வேலையை விட்டு விட்டார். ஆனால் கோஷ் திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு பத்திரிகைத் திட்டத்தை கை விட்டு விட்டதாகவும் வேறு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும் அறிவித்து விட்டு பேச்சை நிறுத்திக் கொண்டான் .
அப்போது அசோகமித்திரனுக்கு ஆன்மீக விஷயங்களிலும் நாட்டம் இருந்தது. லாயிட்ஸ் சாலையில் ஒரு அம்மையார் மீனாட்சி உபாஸகராக இருந்தார். அசோகமித்திரன் அடிக்கடி அவரிடம் போய் வருவார். காரைசித்தர் ச.து.சு யோகியார் போன்றவர்களும் அங்கே வருவதுண்டு, அவர் மூலமாக நானும் அந்த அம்மையாரிடம் பல வருஷங்கள் தொடர்புடன் இருந்திருக்கிறேன். அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்து ஆசிகள் பெற்று வருவேன் அவர் சில மானஸீக அனுபவங்களை எனக்கு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
அங்கே நிறைய பேர் முக்கியமாக குடும்ப ஸ்த்ரீக்கள் வருவார்கள் அந்த அம்மையார் வெற்றிலையை ஒருவரிடம் வாங்கி வாயில்
போட்டு சிவக்கும்படி நன்றாக சவைத்து ஒரு விதமாக கெட்டியான ஈரமற்ற உருண்டையாக்கி நாக்கு முனையில் திரட்டி நீட்டி வெற்றிலை கொடுத்தவரிடம் கொடுத்து உண்ணச் சொல்லுவார். அதை உண்பவருக்கு அவருடைய் பிரச்னைகள் தீரும் என்று சொல்லப் பட்டது பரவலான நம்பிக்கை இருந்தது... அசோகமித்திரனின் “ விமோசனம்” கதைக்கு அப்படிப்பட்ட சூழல் தான் ஆதாரமாக இருந்தது.
தவிர அசோகமித்திரன் அவருடைய உபதேசத்தினால் லக்ஷக் கணக்காக மந்திர உச்சாடனம் செய்திருப்பதாகவும் என்னிடம் பூடகமாக சொல்லியிருக்கிறார்.
காரை சித்தர் என்ற அபூர்வ சக்திகள் கொண்டவரையும் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஒரு முறை மாயவரம் ஸ்டேஷனில் அசோகமித்திரனுக்கு முதல் வகுப்பில் போவதற்காக காரை சித்தர் சுவற்றைத் தட்டி காசு கொடுத்திருக்கிறார், அவர் இரண்டு இடங்களில் ஒரே சமயம் காட்சியளித்த சாட்சியத்தை நான் நேரடியாக அறிவேன். ஆனாலும் அந்த மகாசித்தரின் முடிவு ஏதோ இரண்டு ஊர்களுக்கிடையே காட்டுப் பகுதியில் தண்டவாளங்களுக்கிடையில் ..நேர்ந்தது....
அசோகமித்திரனுக்கு நாடி ஜோஸியத்தில் ஒரு ஈர்ப்பும் ஸ்வாரஸ்யமும் இருந்தது. எழுபதுகளில் என்னுடைய உடல் நிலை மிகவும் மோசமாகி மூச்சிறைப்பால் அவதிப் பட்ட போது அவர் என் பாதகமான தோஷங்களை கண்டறிய என்னை ஒரு நாடி ஜோஸியரிடம் அழைத்துப் போனார். என் பெற்றோர்கள் பெயர் ஊர் எல்லா விவரங்களையும் மிகச் சரியாக நாடி அப்படியே சொல்லியது. ஆச்சரியமாக இருந்தது. எதிர்காலத்தில் வியாதி தீர்ந்து சுகம் கிடைக்கும் என்ற சமாதானமும் சொல்லியது. ஆனால் சொன்ன தேதியில் அது நடக்கவில்லை. கடுமையாக அனுபவித்த பிறகு தான் வேதனைகள் தீர்ந்தன.
இந்த மாதிரி இள வயது ஸ்வாரஸ்யங்களால் வாழ்க்கை பற்றிய பார்வை எங்களுக்கு மேலும் தெளிவடைந்ததாக தோன்றுகிறது. .வாழ்க்கையின் சிக்கல்களை தீர்க்க அமானுஷ்ய உதவிகளை நம்புவது நம் சிந்திக்கும் தெளிவை பாதித்து மேலும் பலஹீனமாக்கி விடுவதை அனுபவ பூர்வமாக உணர ஆரம்பித்தோம். .
நாம் தேர்ந்து கொண்ட வாழ்க்கைக்கு முழுப் பொறுப்பை நாமே தான் வருத்தமோ தப்பித்தலோ இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சித்தாந்தம் அசோகமித்திரன் வாழ்க்கையை நெறிப் படுத்தியிருக்கிறது. அவருடைய கதைகள் எல்லாமே அந்த மாதிரியான வாழ்க்கைப் பார்வையை விரவிய சம்பவங்களாகத் தான் இருக்கும். ..மனிதர்களின் தத்தளிப்புகளுக்கும் அல்லாடல்களுக்கும் தீர்வும் விடுதலையும் கண்டு கொள்வது அவரவர்களுடைய தரிசனத்தின் மூலமாக விழிப்புணர்வின் மூலமாகத் தான் நிகழக் கூடும் என்கிற இருத்தலிய சித்தாந்தத்தைத் அழுத்தமாக ஆனால் மௌனமாக வெளிப்படுத்துவது தான் அசோகமித்திரனின் படைப்புகள்.
அவர் வாழ்க்கையையும் மனிதர்களையும் கவனித்த நுணுக்கமான ஆழமான பார்வை வியக்கத்தக்கதாக அபூர்வமானதாக இருந்திருக்கிறது.
நாங்கள் அப்போது ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேடபதில் மிகவும் விருப்பமுள்ளவர்களாக இருந்தோம். டிஸம்பர் மாதங்களில் இருவரும் தொடர்ந்து அடையாற்றுக்கு சைக்கிளில் போவோம். இருட்டிய பிறகு திரும்பும்போது சைக்கிளுக்கு விளக்குப் பொருத்திக் கொள்ள வேண்டும் விளக்கில்லையென்றால் போலீஸ் காரன் பிடித்துக் கொள்வான் அந்தக் காலத்தில் இது ஒரு பெரிய தலைவலி. ஜே.கிருஷணமூர்த்தி பேசுவதை கேட்பது ஒரு ஆருமையான உள்மன அனுபவமாக ஏதோ வகையில் நம்மைக் கலைத்துப் போடும் விதமாகத் தான் இருக்கும், ஆனால் அது அதன் நீடிப்பு குறுகிய காலமாகவே முடிவதை பற்றி நான் யோசித்திருக்கிறேன்!. அசோகமித்திரன் ஒரு நாள் நறுக்கென்று ஒரு வார்த்தை சொன்னார்.
“ வைதீஸ்வரன்...நீங்கள் இதைக் கவனித்திருக்கிறீர்களா? ஜே.கேயின் பேச்சைக் கேட்க வந்து கூடுபவர்கள் நண்பர்களுடன் கலகலப்பாக சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கூட்டம் முடிந்து போகும் போது அவரவர்கள் தனித்துப் போனவர்களாக மற்றவரிடம் பேசாமல் நடந்து போய்க் கொண்டிருப்பார்கள்...” என்று சொல்லி பலமாக சிரிப்பார். எனக்கும் அந்தப் பார்வை விபரீதமாக ஆனால் யதார்த்தமாக உணர முடிந்தது. இந்தப் பார்வை தான் அசோகமித்திரன்!
அவர் “கரைந்த நிழல்கள்” தொடரை தீபத்தில் எழுதிக் கொண்டிருந்தபோது ஒவ்வொரு மாதமும் அதைப் படித்தவுடன் என் அடக்கமுடியாத உற்சாகத்தை அவரிடம் பகிர்ந்து கொள்வதற்காக அவர் வீட்டுக்கு விரைந்து போவேன். அந்த நாவலின் பாத்திரங்கள் ஜெமினியில் யார் யாரையெல்லாம் குறிக்கிறது என்ற விவரங்களை பகிர்ந்து கொண்டு இருவருமே சந்தோஷப்படுவோம். அவருக்கும் அது பிடிக்கும்.
நான் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய காலை உதைக்கும் போது அவரும் ஆர்வமாக வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஸ்கூட்டர் உடனே ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் அவருக்கு கவலையோ அக்கறையோ தோன்றாது. அவருக்கு சந்தோஷமாகக் கூட இருக்கும். என் அவஸ்தைகளைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருப்பார். . என்னுடைய கஷ்டத்தை பார்த்து அவரால் எப்படி சிரிக்க முடிகிறது என்று எனக்கு ஆத்திரமும் கோபமும் வருவதுண்டு. வெகு நாட்கள் அந்த கோபம் நீடிப்பதும் உண்டு.
இவருக்கு ஏன் இப்படி குரூரமான சுபாவம்? “ என்று நான் மருகியதுண்டு. ஆனால் அது என்னை தீவிரமாக யோசிக்கவும் தூண்டி விடும் அவர் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை... ஒரு யந்திரம் மனிதனை எப்படி திண்டாட வைக்கிறது...அதுவும் அவனே செய்த ஒரு யந்திரம்!... என்று அவர் தத்துவார்த்த கண்ணோட்டத்தில் ஏன் சிரித்திருக்கக் கூடாது என்று எனக்குள் ஒரு வியாக்கியானம் செய்து கொள்வேன். வேறென்ன செய்வது? அசோகமித்திரனை என்னால் வெறுக்க முடியாது. இந்த மாதிரியான ரஸிக்கத் தகுந்த முரண்பாடுகளை நான் அவரிடம் பார்த்திருக்கிறேன்.
அவருடைய 85 வருட ஆயுளில் தொழிலில் தொய்வு பெறாத ஆர்வத்துடன் சமூகமனிதர்களின் பன்முக வாழ்க்கை பிரச்னைகளை ஸ்வாரஸ்யம் குன்றாமல் மனித நேயமிக்க இலக்கியமாக ஏராளமாக படைத்திருக்கிறார். ஒரு வலிமையான ஆளுமையை கலை நேர்த்தியை அவர் படைப்புகளின் வடித்திருக்கிறார்.
மேலும் முக்கியமாக சாதாரண வசதியற்ற குடும்பங்களில் ஆண்களின் ஆதரவை நம்பி இருக்கும் பெண்களின் ஊமை வேதனைகளையும் பாரங்களையும் நிறைவேறாத கனவுகளையும் அவருடைய கதைகளில் துக்கமான வடுக்களாக பார்க்கலாம் .
இலக்கியம் பற்றிய அவருடைய பார்வை விசாலாமானது உலகீயமானது. அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர் பட்டறைக்கு இரண்டு முறை அழைக்கப் பட்டிருக்கிறார். முதல் முறை அவர் அமெரிக்க சென்ற போது எனக்கு ஒரு கவிதைப் புத்தகத்தை வாங்கி கப்பலில் அனுப்பியிருந்தார்.
அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளை மிக ஆழமாக வாசித்துத் தேர்ந்தவர். அத்தகைய படைப்புகளின் கச்சிதமான இலக்குத் தவறாத அடர்த்தியான வெளிப்பாட்டு உத்தியை தமிழில் சரியாக பயன்படுத்தியவர் அசோகமித்திரன் தான்.
அவர் ஆசிரியப் பொறுப்பேற்ற கணையாழி பத்திரிகை மூலம் பல நல்ல அறிமுகமில்லாத ஆரம்ப எழுத்தாளர்களை கவனித்து படைப்புகளை பிரசிரித்து ஊக்குவித்திருக்கிறார்.
அவருடைய சினிமா இலக்கிய சமூக சம்பந்தமான ஸ்வாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த கட்டுரைகள் அவரை ஒரு முக்கியமான ஊடக எழுத்தாளராக ஒரு NORMAN MAILER போன்ற பத்தி எழுத்தாளராக தெரிவிக்கிறது. ஆங்கிலத்திலும் எழுதக் கூடைய ஆற்றல் பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி இன்னொருவர்.
அவருக்கு கவிதைகளில் அவ்வளவு ஈர்ப்பில்லை என்று அடிக்கடி பேட்டிகளில் சொல்லி வந்திருக்கிறார். அது எனக்கும் வியப்பாகத் தான் இருக்கிறது. என்னை கவிதைகள் எழுத நிறைய ஊக்குவித்திருக்கிறார்.
உண்மையில் நான் “எழுத்து “ வில் கவிதைகள் எழுதத் தொடங்கிப் பின் பரவலாக எழுதி வந்த கட்டத்தில் என் முதல் கவிதைத் தொகுப்பான “உதய நிழல்” அசோகமித்திரனின் முழு ஒத்துழைப்பால் சுதேசமித்திரன் அச்சகத்தில் தயாரான புத்தகம் அதற்கு பின்னட்டை வாசகம் எழுதியது அவரே தான்!!
அவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த என் கவிதைகள் பல பிரசுரமாகி இருக்கின்றன் WRITERS WORKSHOP CALCUTTA பிரசுரித்தத என் கவிதை மொழிபெயர்ப்புத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரை மிகுந்த ஆதர்சமான மதிப்பீடாகக் கருதப்பட்டது. சீதாகாந்த் மகாபாத்ரா [ஒடிஷாவின் பிரபல கவிஞர்] அவர்களுடைய கவிதைகளுக்கு அசோகமித்திரன் எழுதிய ரஸனைகளை கையடக்கமான பிரசுரமாக நான் அவர் வீட்டில் பார்த்திருக்கிறேன்.
தவிர சினிமா சென்ஸார் போர்டில் பார்வையாளாராக அவர் பெற்ற அனுபவங்கள் வித்தியாசமானது.
நான் அசோகமித்திரனை கடைசியாக சந்தித்தது மார்ச் முதல்வாரம் “விளக்கு” பரிசளிப்பு விழாவுக்கு அவர் தலைமை ஏற்க வந்த நாள். அப்போது எனக்கு அன்பளிப்பதற்காக ஒரு தடிமனான இந்திய ஓவியர்களின் புத்தகத்தை சுமந்து வந்திருந்தார், அவர் கைகளிலிருந்து அதை வாங்கிக் கொண்டு கைகளைப் பற்றிய வாறு நன்றி தெரிவித்தேன். அவருடைய அந்திம நாட்களில் அப்ப்டி ஒரு அன்பளிப்பை எனக்குக் கொடுக்க அவருக்கு தோன்றி இருக்கிறது.
அவருடைய இரண்டாவது கதைத் தொகுதி “இன்னும் சில நாட்கள்” பிரசுரத்துக்கு என்னை முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டார்.
அதில் நான் குறிப்பிட்ட ஒரு ஆங்கில வாக்கியம் எனக்குப் பிடித்தமான ஒன்று.
“” Asokamithran’s MAN
IN HIS STORIES IS A FONDLING ABANDONED BY
THE FORCES THAT CREATED HIM….””
இலக்கியத் துறையில் நீண்ட காலம் காத்திரமான பங்களிப்பு செய்த இத்தகைய ஒரு முதிய எழுத்தாளருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவமும் அங்கீகாரமும் அவருக்கு சில தாமதமாகவும் மேலும் சில கொடுக்கப்படாமலும் போனதற்காக பொதுவாக அங்கங்கே ஊடகங்களில் கருத்துக்கள் பேசப்படுகின்றன.
ஆனால் அது அவருக்கு ஒரு பெரிய இழப்பல்ல என்று தான் நான் நினைக்கிறேன் ஒரு நல்ல இலக்கியம் அது படைக்கப்படுகிற காலத்தில் எத்தகயை உத்வேகமான பாதிப்பை அனுபவ விஸ்தீரணத்தை வாசிப்பவர்களிடையே படைப்பாளிகளிடையே ஏற்படுத்த வேண்டுமோ அதை அவர் படைப்புகள் சாதித்திருக்கிறது.
இந்தியாவின் மற்ற பிரதேச எழுத்தாளர் வட்டங்களையும் அது பாதித்திருக்கிறது.
அதுவும் இலக்கிய வளர்ச்சிக்கு பாதகமான பல விதமான சமூக சார்புகள் குறுக்கிடும் அவலமான தமிழ் எழுத்து சூழலில் அவர் படைப்புகள் அதன் மனித நேயத்தின் குரலை பறைசாற்றி இருக்கிறது.
இத்தகைய அர்த்தமுள்ள அங்கீகாரத்துக்கு முன் சடங்குத்தனமான விருதுகளும் கௌரவங்களும் படைப்பாளியின் பெருமிதத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்ற கட்டாயம் ஒன்றுமில்லை.
வைதீஸ்வரன்
அம்ருதா மே மாதம்