vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, April 3, 2019


காலத்தின் நீளம்

அசோகமித்திரனும் புதுக் கவிதையும்

வைதீஸ்வரன் -


அசோகமித்திரன் அவருடைய இலக்கிய ஈடுபாடுகளில் உரை நடையில் தான் மிகுந்த நம்பிக்கையும் ஆழமான ஈர்ப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். ஆனாலும் அவர் அறுபது எழுபதுகளில் புதுக் கவிதைகளிலும் ஆர்வமுடன் அக்கறை செலுத்தியிருக்கிறார்..

IOWA வில் இருந்த போது ஞானக்கூத்தனின் "அம்மாவின் பொய்கள்"   கவிதையை மொழிபெயர்த்து அங்கே ஒரு கவிதை நிகழ்வாக ஏற்பாடு செய்திருக்கிறார். என்னுடைய பல கவிதைகள் அவர் மொழிபெயர்ப்பின் மூலம் Indian Literature / National Book Trust Antholoy பிரசுரங்களில் வெளி வந்துள்ளன..


அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். இரண்டாவதாக வந்த " இன்னும் சில நாட்கள் " என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்தது.!

ஆனாலும் அவருடைய புதுக் கவிதைகளை மதிப்பிடும் போது சற்று நிதானத்துடன் தான் தன் அபிப்ராயங்களை தெரிவித்து வந்ததாக தோன்றுகிறது. செறிவான புதிரான மனித உறவுகளை இப்படிப்பட்ட கவிதைகளை விட உரை நடைகள் மூலம் தேர்ச்சியுள்ளவர்களால் சொல்லி விடமுடியும் என்று அவருக்குள் ஒரு அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது.

அவர் மிக நேரடியான எளிமையான நேர்மையுள்ள வெளிப்பாடுகளைத் தான் நேசித்தார். வார்த்தைப் புதருக்குள் கருத்தைப் புதைத்து அனுபவத்தை ஒரு சோதனையாக மாற்றி விடும் எழுத்துக்களை பற்றி அடங்கிய குரலில் கிண்டலாக பேசுவார்.

ஷேக்ஸ்பியரின் படைப்புகளை விட Anton Chekov படைப்புகள் சற்று மேலானவையாக பல சமயம் எனக்குத் தோன்றுகிறது " என்று சொல்லுவார். அவருடைய கருத்து எனக்கு நம்பமுடியாமல் இருக்கும்.

இந்தக் கவிதைகள் சம்பந்தமாக அவர் ஆற்றிய இரண்டு விஷயங்கள்
எனக்கு இன்னும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன அவற்றைப் பகிர்ந்து கொள்வது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

முதலாவது விஷயம் அவர் தயாரித்து அளித்த ஒரு கவிதை மொழிபெயர்ப்பு நூல். 1994ல் நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
ஒரிய மொழியில் மிகச் சிறந்த கவிஞராக அங்கீகரிக்கப் பட்ட சீதாகாந்த் மஹாபாத்ராவின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கவிதைகளை இவரும் மேலும் இரண்டு பேரும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இப்புத்தகத்துக்கு முன்னுரையாக சீதாகாந்த் மஹாபாத்ராவின் கவிதைகள் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் அருமையான முன்னுரை எழுதி இருக்கிறார் அசோகமித்திரன்.

சீதாகாந்த் மஹாபாத்ரா அப்போது ஞானபீட பரிசு பெற்றிருந்தார். . ஆங்கிலத்தில் மிகுந்த தேர்ச்சி உடையவர் . அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் I A S அதிகாரியாகவும் இருந்தவர்.
தன் படைப்புகளைத் தவிர இந்தியப் பழங்குடி மக்களின் கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டவர்.
கவிதைக்காக நிறைய விருதுகள் பெற்றவர். ஞானபீடத்தின் மத்திய தேர்வுக் குழுவில் அங்கத்தினராக இருந்தவர்.

ஒரு கவிஞரைப் பற்றிய தீவிரமான மதிப்புரையை தமிழில் அசோகமித்திரன் முன்னுரையாக எழுதியது இது ஒன்று தான் என்று நினைக்கிறேன். இது அபூர்வமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.


இரண்டாவது அசோகமித்திரனே தன் வாழ்க்கையில் ஒரே ஒரு புதுக் கவிதையை எழுதி இருக்கிறார். இதுவும் அபூர்வமான விஷயம்.. இந்தக் கவிதையை உங்கள் வாசிப்பிற்காக இங்கே தருகிறேன்......


காலத்தின் நீளம்
---------------------------

யாருக்கு நினைவிருக்குமோ என்னவோ
மௌண்ட் ரோடு பச்சை சிவப்பாக
மாறும் விளக்கில்லாத மௌண்ட் ரோடாக
இருந்த காலமது.
நடுத் தெருப் போலீஸ்காரனுக்கு
இருட்டில் விளக்குத் தொப்பி.
அவனும் எட்டு மணிக்குப் போய் விடுவான்.
விளக்குத் தொப்பி மட்டும் இருக்கும்.
இன்னும் சிறிது நேரம்.
நான் சைக்கிளில் நடுத் தெருவில்.....
எதிரே வெகு வேகமாய் லாரி ஒன்று.
அதுவும் நடுத் தெருவில்!...எனக்கு
என்னென்னமோ மனச்சுமைகள்.
தக்க தருணத்தில் சைக்கிளை
சிறிது ஒடித்து சுமை தாங்கி வரும்
அந்த லாரியில் மோதினால்
இருட்டில் யாருமில்லா அந்தத் தார்பரப்பில்
யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரிந்தாலென்ன?
பின் எனக்குத் தெரியாதே!
அந்த ஒரு கணத்தில் கணமா?
அது கணத்தில் ஐந்தில் பத்தில் நூறில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தானிருக்கும்.

அந்தக் கால அணுவில்
என்னை சைக்கிளை ஒடித்துப் போகாமலிருக்க
எது செய்தது?

எது செய்ததோ...அந்தக் கால அணு
இப்போது இருபது ஆண்டுகளுக்கும்
மேல் நீண்டு விட்டது......
இன்னும் நீண்டு கொண்டே இருக்கும்.

நான் இருக்கும் வரை
நானிருக்கும் வரை காலமே அணு.

________________________________________________

No comments:

Post a Comment