vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, June 1, 2019


( சிறுகதை )

ஒவ்வாமை

- வைதீஸ்வரன் -இரவு கடந்து மணி நான்காகி விட்டது. சாம்பு சுருண்டு படுத்துக் கொண்டு அந்த முள் நகருவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சை ஒரு கை பிடித்துக் கொண்டே இருந்தது. அந்த இருமல் இன்னும் வரவில்லை!
கடந்த ஒரு வாரமாக அவன் இந்த நேரத்தில் பயங்கரமாக குலுங்கிக் குலுங்கி இருமிக் கொண்டிருப்பான். முழங்கால்களை மடித்துக் கொண்டு தலையை தலையணையில் ஓயாமல் முட்டிக் கொண்டு வயிற்றை எக்கி எக்கி இருமிக் கொண்டிருப்பான். வீடே நிலைகுலைந்து போயிருக்கும். செய்வதற்கு எதுவுமில்லாமல் அவன் அம்மாவும் அப்பாவும் அரற்றிக் கொண்டிருப்பார்கள். அம்மா முதுகைத் தடவி தடவிக் கொடுப்பாள். சாம்புவின் முகமெல்லாம் கண்ணீரும் சளியுமாக மூச்சுக்குத் தவித்தவாறு பதறிக் கொண்டிருக்கும். வெளியில் நிரம்பி இருந்த அத்தனை காற்றும் அவன் நுரையீரலுக்கு மட்டும் எப்படி போகாமல் விரோதமாக இருக்கிறது ?

இந்த இருமல் வேதனை அவனுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்திருந்தது. அவ்வபோது குடும்ப டாக்டர் வந்து ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். “இது வியாதியல்ல. ஏதோ allergy ஒவ்வாமை " என்று சொல்லுவார். ஓரளவு சகித்துக் கொள்ளும்படியாக பள்ளிக் கூடத்துக்கு போக முடிந்தது. ஆனால் இந்த முறை அந்த அவஸ்தை மிகவும் தீவிரமாகி விட்டது. எழுந்து நடக்க முடியாத அளவுக்கு மூச்சு இரைத்தது. அநேகமாக படுத்த படுக்கையாகி விட்டான் . .

ஒரு வாரமாக பள்ளிக் கூடம் போகமுடியாமல் சாம்பு இந்த அவஸ்தையில் வீட்டில் முடங்கிக் கிடப்பதை நினைத்து நினைத்து துக்கப் பட்டுக் கொண்டிருந்தான். . இன்றாவது எப்படியாவது பள்ளிக் கூடம் போய் விட வேண்டும். ..அவன் படிப்பதில் எப்போதும் மிகுந்த ஆசையும் அக்கறையும் உள்ளவன். அன்றன்று பாடங்களைப் படிப்பதிலும் வீட்டுப்பாடங்களை கருத்தாக எழுதிக் கொண்டு போவதிலும் அவன் கவனமாக இருப்பான்.

உடம்பின் அவஸ்தையை விட இப்படி ஒரு வாரமாக பள்ளிப் பாடங்களை தவற விட்ட வருத்தம் அவன் மனதை பாரமாக்கிக் கொண்டிருந்தது. எப்படியாவது இன்னிக்கு பள்ளிக் கூடம் போய் விட வேண்டும்! என்று ஆதங்கத்துடன் நினைத்துக் கொண்டான்.

ஏதோ சித்த வைத்தியர் மூலமாக தழைகளையும் மூலிகைகளையும் காய்ச்சிக் கஷாயம் வைத்து இரண்டு நாட்களாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இருமல் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தது, கொஞ்சம் வேதனைகள் குறைந்தாலும்...விடியலில் நான்கு மணியானால் இந்த இருமல் பிசாசு அவனைப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

சாம்பு இன்றும் அந்த கடிகாரத்தை பயத்துடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். நான்கு மணி ஆகும் போது அவனை உலுக்கி வருத்தக்கூடிய அந்த இருமல் ஆரம்பமாகப் போவதை பயத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான். ஆனால் அதிசயமாக அவன் சாதாரணமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான் . அவனுக்கு சரியாகி விட்டதா!! அவனால் நம்ப முடியவில்லை! அவனுக்குள் சந்தோஷம் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு கண்ணில் நீர் தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

சாம்புவின் அவஸ்தையை வழக்கம் போல் எதிர்பார்த்தவாறு அவன் அம்மாவும் நான்கு மணியானால் எழுந்து விடுவாள். இன்றைக்கு வீட்டிலிருமல் சத்தமே இல்லாமல் இருந்ததால் அவளுக்கு நம்ப முடியாமல் இருந்தது. எழுந்து போய் சாம்புவை பார்த்தாள். சாம்பு உட்கார்ந்து கொண்டிருந்தான். .

“ என்னடா கண்ணூ!....ஒனக்கு நன்னாயிடுத்தாடா!..”

அம்மா அவனை நெருங்கி அவன் தலையையும் முதுகையும் வருடி விட்டாள். அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டான்..அவள் கண்ணில் நீர் வழிந்தது.

“ அம்மா! இன்னிக்கு பள்ளிக்கூடம் போறேம்மா! “...

“ தைரியமா போய்ட்டு வாடாப்பா!...உனக்கு உடம்பு சரியாயிடுத்து...இனிமே அந்த பீடை இருமல் ஒனக்கு வராது. எழுந்து வந்து குளி. சாமிக்கு நமஸ்காரம் பண்ணு"
அவனுக்கும் பரபரப்பாக இருந்தது.

சாம்பு தயாராகி விட்டான். பாட புத்தகங்களையெல்லாம் பார்த்து பைக்குள் போட்டுக் கொண்டான். சாம்புவின் அப்பா அவனை கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

“ சாம்பு .நெஜமாகவே .சரியாயிடுத்தாடா? ஸ்கூலுக்கு போறயா? “ என்று முதுகைத் தடவிக் கொண்டே சற்று கவலையுடன் கேட்டார்.

“சரியாயிடுத்துப்பா!.....நான் போறேன். இன்னும் ரெண்டு வாரத்துலே பரிட்சை வந்துடும்!...” என்று பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்.
பிறகு சட்டென்று அப்பாவைப் பார்த்தான்.

“ அப்பா....எனக்கு இப்பத் தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு வாரமா ஸ்கூலுக்கு போகலே!. எங்க க்ளாஸ் டீச்சர் டாக்டர் கிட்டேருந்து லெட்டர் கேப்பாங்க! “

“ ஆமாம்... எனக்குக் கூட மறந்து போயிடுத்து!. இப்ப யார் கிட்டே லெட்டர் வாங்கலாம்?...சித்த வைத்தியரெல்லாம் லெட்டர் கொடுக்க மாட்டாங்க! அப்படிக் கொடுத்தாலும் ஸ்கூல்ல ஒத்துக்க மாட்டாங்க!
“ இதுக்கு என்ன கஷ்டம்! பக்கத்துத் தெருவுல தான் நம்ம டாக்டர் ஈஸ்வர மாமா இருக்காரே!. . அவரு கிட்டே சொல்லி ஒரு சர்டிபிகேட் வாங்கிடுங்களேன்! “ என்றாள் அம்மா அவசரமாக.

“அதுவும் நல்ல யோசனை தான்! “ அப்பா சாம்புவைப் பார்த்து சொன்னார்.

ஈஸ்வரன் அவர்கள் குடும்ப டாக்டர். சாம்புவையும் அவர் அப்பாவையும் பார்த்தவுடன் சந்தோஷமாக சிரித்தார்.

“என்னடா சாம்பூ...உடம்பு நன்னாயிடுத்தா?..என்று கேட்டுக் கொண்டே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

“ “ இன்னிக்குப் பரவாயில்லே!...அதான் ஸ்கூலுக்கு போறேன்னு பிடிவாதம் பிடிக்கிறான்....ஒரு சர்டிபிகேட் வேணும்!...” என்றார் சாம்புவின் அப்பா.

“ ஸ்கூலுக்குப் போறதுலே அக்கறையா இருக்கானே..உங்க பிள்ளை!..நல்ல பையன் தான்..” என்று டாக்டர் ஈஸ்வரன் அவன் மார்பில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து பரிசோதித்தார். பிறகு சற்று நீண்ட யோசனையுடன்

“ஸர்டிபிகேட் கொடுக்கறேன். .ஆனா அதிகம் அலையாமே இருக்கணும்!”
என்றார்.

சாம்பு சர்டிபிகேட்டை மகிழ்ச்சியுடன் பையில் போட்டுக் கொண்டு அப்பாவுடன் சைக்கிளில் போய் பள்ளிக் கூடத்தில் இறங்கிக் கொண்டான்

பள்ளிக் கூட வாசலில் இருந்து அவன் வகுப்புக்குப்போக அந்தப் புல் வெளி மைதானத்தைக் கடந்து போக வேண்டும். சாம்பு பரபரப்பாக விரைந்து போய்க் கொண்டிருந்தான். இரண்டு வாரங்களுக்கு பின் அவன் பள்ளிக் கூடம் போகிறான்! அவனுக்குள் அந்தக் கவலை பரவிக் கொண்டிருந்தது. தூரத்தில் சில பையன்கள் கூடி நின்று கொண்டிருந்தார்கள். அங்கே ட்ரில் மாஸ்டர் மகிமை தாஸும் நின்று கொண்டிருந்தார்.
மகிமைதாஸ் மாஸ்டரைப் பார்த்தாலே பொதுவாக பையங்களுக்கு ஒரு பயம் வந்து விடும். அவருடைய கருமையான முகத்தில் முறுக்கு மீசையும் எப்போது சற்று சிவப்பாகவே இருக்கும் கண்களும் கட்டைக் குரலும் பையன்களை கைகட்டி நிற்கச் சொல்லும். அவர் ட்ரில் க்ளாஸில் அவர் சொன்னபடி கை கால்களை நீட்டிப் பயிற்சி செய்யா விட்டால் அவர் தன் பிகில் மாட்டியிருக்கும் ரப்பரால் சுரீரென்று அடிப்பார். “ஏன்னடா பெராக்குப் பாக்கறே? “ என்று கத்துவார்.
சாம்புவால் ஒரு சம்பவம் மறக்கவேமுடியாமல் பதிந்து போயிருந்தது.

அன்று பையன்களை குனிந்தும் நிமிர்ந்தும் வளைந்தும் நிற்கச் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு கைகளை அகலமாக விரித்து நிற்கச் சொன்னார். எல்லோரும் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவருக்குத் தெரிந்த ஒருவர் அவருடன் பேச வந்தார்.

மகிமைதாஸ் அவருடன் பேசிக் கொண்டே இருந்தார். ஐந்து நிமிஷத்துக்கு மேல் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது. பையன்களுக்கு கைகளின் வலி தாங்கவில்லை. நரம்புகள் விண்ணென்று இழுத்துக் கொண்டு நின்றது. அதற்கு மேலும் கைகளை விரித்து நிற்க முடியாமல் எல்லோரும் நெளிந்து கொண்டே இருந்தார்கள். ட்ரில்மாஸ்டர் கவலைப் படவே இல்லை. சாம்பு வலி தாங்க முடியாமல் சற்றுக் கைகளை கீழே இறக்கினான். மகிமைதாஸ் அப்போது தான் பேச்சை முடித்துக் கொண்டு அவனைப் பார்த்தார். எல்லோரையும் கைகளை இறக்க சொல்லிவிட்டு சாம்புவை நெருங்கி சுளீரென்று ரப்பரால் இரண்டு முறைஅடித்தார். “ஏன்னடா! அவ்வளவு வலியா உனக்கு? என்னடா சோறு திங்கறே!.. “
என்று கைகளை அமுக்கினார்
சாம்பு விக்கி விக்கி அழுது கொண்டே தோளைப் பிடித்துக் கொண்டு வகுப்புக்கு போனான். அந்த ட்ரில் வாத்தியாரைப் பார்த்தாலே அவனுக்கு எப்போதும் ஒரு கிலி வரும்.

இன்று மகிமைதாஸ் அவனுக்கு எதிரிலேயே நிற்கிறார்!

சாம்பு வேக வேகமாக புல் வெளியில் நடந்து வகுப்புப் பக்கம்போய்க் கொண்டிருந்தான். மகிமைதாஸ் அவனைப் பார்த்து விட்டார். அவருடைய பார்வை அவன் நடையைத் தளர்த்தி நிற்க வைத்தது.

அவர் இவனைப் பார்த்து கூப்பிட்டது போல் சாம்புவுக்கு ஒரு பிரமை.
அவன் அவரிடம் தன்னிச்சையின்றி நெருங்கிப் போனான். மகிமை தாஸுக்கு ஞாபகம் அதிகம்

சாம்புவைப் பார்த்தவுடன் அவனை ஊடுருவது போல் கண்ணை உருட்டி இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டார்.

“என்னாடா சோம்பு....ரொம்ப நாளா பள்ளிக் கூடம் பக்கமே வரலே! ஊர் சுத்தப் போயிட்டயா? “ கட்டைக் குரலில் அதட்டலாகக் கேட்டார்.

சாம்புவுக்கு ஒரு நிமிஷம் தலைசுற்றுவது போல் இருந்தது. உடம்புக்குள் ஒரு நடுக்கம்!

“ இல்லே ஸார்!...உடம்புக்கு வந்துடுத்து ஸார்...ரொம்ப இருமல் ஸார்..அதான் வரலே! “ வாய் குழறி பேசினான்.

மகிமைதாஸ் அவனை ஊடுருவது போல் பார்த்தார்.
“ அப்பறம் என்னாச்சு? இப்போ உடம்புக்கு சுகமாயிருச்சா? ஆங்.....”
ஏன்று அவன் தோளை அழுத்திக் கொண்டு கேட்டார்.

“ சரியாயிடுத்து ஸார். இப்போ மூச்செல்லாம் வாங்கறதில்லே! இருமல் சரியாயிடுத்து ஸார். டாக்டர் கூட சர்டிபிகேட் கொடுத்திருக்காரு! “

மகிமைதாஸ் அலட்சியமாக சிரித்தார். “ஓ …..சட்டிபிகேட் வாங்கிட்டு வந்திருக்கயாடா? எங்கே காட்டு...பாக்கலாம்! “ .

சாம்புவுக்கு "இதையெல்லாம் இவரிடம் ஏன் நான் சொல்ல வேண்டும்? என்று ஒரு கணம் தன் தவறை எண்ணிக் கடிந்து கொண்டான். . பயமாக இருந்தது.
சட்டைப் பையிலிருந்து தயக்கமுடன் சர்டிபிகேட்டை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அந்த சர்டிபிகேட்டைப் பிரித்து அதில் இருந்த கையெழுத்தைப்பார்த்தவுடன் மகிமைதாஸின் முகத்தில் ஜிவ்வென்று ஒரு உஷ்ணம் மின்னலடித்து மறைந்தது.

“ ஓ அப்படியா?..இங்கே கிட்ட வாடா பாக்கலாம்..” மகிமைதாஸ் சாம்புவை தன் பக்கம் இழுத்து அவன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தார்.

“ இப்ப ஒனக்கு இளைப்பு வாங்காதோ!..”

“ சாம்பு நடுங்கிக் கொண்டே பதில் சொன்னான். “ எனக்கு சரியாயிடுத்து ஸார்...மருந்தெல்லாம் சாப்பிட்டேன் ஸார்..”

“ அப்படியா! ஒங்க டாக்டர் சொல்லிட்டாரோ?.”

“ ஆ ….மா...ம்..ஸார்..”

அப்போது பள்ளிக் கூடத்தில் முதல் மணி அடித்து விட்டது. இன்னும் ஐந்து நிமிஷத்தில் இரன்டாம் மணி அடிக்கும் போது எல்லோரும்வகுப்புக்குள் போய் விட வேண்டும்.

மகிமை தாஸ் சாம்புவின் தோளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
“ டேய்.....ஒனக்கு இப்ப நல்லா ஆயிடுச்சின்னா..நான் சொல்ற மாதிரி செய்யணும். அதோ பாரு அங்கே கோல் போஸ்ட் தெரியுதுல்லே!. வேகமா ஓடிப் போயி அதைத் தொட்டுட்டு வேகமா திரும்பி ஓடி வந்து நேரா க்ளாசுக்குப் போவணும்! தெரியுதா! நடுவுலே நின்னே.....அப்பறம் பாரு! “
சரியா!......இப்பொ .ஓடுரா!” என்று முதுகில் தட்டித் தள்ளி விட்டு வகுப்புப் பக்கம் நடந்தார்.

சாம்புவுக்கு ஒரு கணம் படபடப்பாக இருந்தது. தோளில் கனக்கும் புத்தகப் பையுடன் மெள்ள ஓட ஆரம்பித்தான். மற்ற பையன்கள் வேகமாக வகுப்புகளுக்கு ஓடி விட்டார்கள்.

இரண்டு வாரமாக படுக்கையில் இருந்த அவனுக்கு அப்படி ஓடுவது மிகவும் கடினமாக இருந்தது. கால்கள் பின்னிக் கொண்டன.

முக்கால் தூரம் ஓடுவதற்குள் நெஞ்சு முட்டிக் கொண்டு வந்தது. இரண்டுவாரமாக படுத்த படுக்கையாக இருந்தவன். அவன் வேகமாக நடந்தே பல நாட்களாகி இருக்கும். எங்கே அந்த கோல் போஸ்ட்? அது அவனை நெருங்காமல் மேலும் மேலும் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அவன் இருதயத்தின் துடிப்பு மேலும் மேலும் சத்தமாகி காதில் இரைந்து கொண்டே இருந்தன. மூச்சின் இரைப்பு பெரிதாகிக் கொண்டிருந்தது,
வியர்வை வெள்ளமாக உடம்பு முழுதுவதும் வழிந்து கொண்டிருந்தது. . பின்னால் மகிமைதாஸ் வாத்தியார்..அவனை துரத்திக் கொண்டே வருவது போல் மனதில் பயமும் கிலியும் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. . எங்கே அந்த கோல் போஸ்ட்? மேலும் மேலும் அது விலகிப் போய்க் கொண்டே இருந்தது. அதைத் தொட்டு விட்டு திரும்பி ஓடி வகுப்புக்குப் போக வேண்டும்! வகுப்பு ஆரம்பித்திருப்பார்களோ!...எங்கே அந்த சர்டிபிகேட்? பத்திரமாக வாத்தியாரிடம் கொடுக்க வேண்டுமே! அய்யோ! இதென்ன!!... சாம்பு நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். எல்லாம் இருட்டாக இருக்கிறதே!.. கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லையே!. மூச்சு முட்டுகிறதே! நெஞ்செல்லாம் புடைத்துக் கொண்டு பறக்கிற மாதிரி...இதென்ன!....அய்யோ....அய்யோ! குதிரைக் குளம்பு மிதித்த மாதிரி விலா எலும்புகள் விண் விண்ணென்று தெறித்தன.. …
சாம்பு வாயை அகல விரித்துக் கொண்டு உண்ட சோறெல்லாம் வழிய தரையில் போட்ட மீனாக மூச்சு விட முடியாமல் மைதானத்தில் விழுந்து விலாப் புடைக்க அரற்றிக் கொண்டிருந்தான்...சுற்றிலும் எல்லாம் இருண்டது போல் நினைவற்றுப் போய்விட்டது..


* * *

கண் விழித்து பார்த்த போது அவன் எங்கோ மிதந்து கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றிக் கூட்டமாக நின்று கொண்டிருந்த முகங்கள் மெல்ல மெல்ல தெளிவாகிக் கொண்டிருந்தன. டாக்டர் ஈஸ்வரன் அவன் கையில் ஊசி போட்டு விட்டு தேய்த்துக் கொண்டிருந்தார்.

“ ஏண்டா கண்ணு...என்னடா ஆச்சு? எப்படிடா இப்படி ஆச்சு? “ என்று கண்களில் நீர் தளும்ப சாம்புவின் அப்பாவும் அம்மாவும் அவன் முகத்தினருகில் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

சாம்புவுக்கு வார்த்தைகள் வெளி வரவில்லை. மூச்சின் இறுக்கம் இன்னும் தளரவில்லை. சுற்றிலும் பார்த்து விக்கி விக்கி அழுகை வந்தது. கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது

"” கம்பௌண்டர் கந்தசாமி தான் ஒன்னைத் தூக்கிண்டு வந்து எல்லா விவரத்தையும் வந்து சொன்னான்...
யாரு..... அந்த மகிமை தாஸ் ஒன்னை வெரட்டினானா?....அவன் ஓடச் சொன்னா நீ ஓடணமா? க்ளாசுலே தான் அவன் சொன்னதைக் கேக்கணும். மத்தபடி அநாவசியமா ஒன்னைத் தண்டிக்க அவனுக்கு அதிகாரம் கிடையாது!..” தெரிஞ்சுக்கோ! “ என்றார் டாக்டர் ஈஸ்வரன் அவன் நெஞ்சைத் தொட்டவாறு. .

“ ஆமாம்....நல்ல வேளையா அந்த வழியா ஒங்க கம்பௌண்டர் கந்தசாமி சைக்கிள்ளே போனதினாலே சாம்பு கீழே கெடக்கறதைப் பாத்து இங்கே தூக்கிண்டு வந்தான்.......சாம்பு... கடவுள் தான் ஒன்னைக்காப்பாத்தி இருக்கார்!” என்றார் சாம்புவின் அப்பா.

சாம்புவுக்கு இன்னும் மூச்சு சமனமாகவில்லை. மனதுக்குள் விவரிக்க முடியாமல் துக்கம் ஆறாமல் பொங்கிப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. “ இந்த ட்ரில் மாஸ்டர் ஏன் என்னிடம் இப்படிக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா? க்ளாசுக்கு போக முடியவில்லையே!.... வார்த்தை வராமல் அந்த நிகழ்வு ஆறாத ரணமாக அவன் பிஞ்சு மனதைக் கீறிக் கொண்டிருந்தது. .

சாம்பு அம்மாவுக்குத் தாங்கவில்லை.
“டாக்டர்...ஒரு உடம்பு நலிந்த குழந்தை மேல் அந்த மகிமை தாசுக்கு அப்படி என்ன ஒரு மிருகத்தனமான வன்மம்! இப்படி ஏன் அவன் நடந்து கொள்ள வேண்டும் ? என்று கேட்டாள்..

டாக்டர் அவர்களை கையமர்த்தி நகர்ந்து வந்தார்.
" அம்மா..........குழந்தை கொஞ்சம் தூங்கட்டும். ஏதோ கெட்ட வேளை.....தற்செயலாக நேர்ந்து விட்ட அசம்பாவிதம். எனக்கு விவரமா இப்போ சொல்ல முடியலே! இது எனக்கும் மகிமைதாஸ் குடும்பத்துக்கும் எப்போதோ ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம்...அது இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இன்று சாம்பு அவதிப்பட்டு விட்டான். சூழ்நிலை தான் காரணம் அது மாற வேண்டும். “ என்றார்.

“ சாம்பு இதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“டாக்டர் மாமா.....அப்போ என் இருமலுக்கும் சூழ்நிலை தான் காரணும்னு சொன்னீங்க! அப்படீன்னா இதுவும் அந்த மாதிரி அலெர்ஜியா..டாக்டர்” ..” என்றான் மெதுவான குரலில்.

டாக்டர் ஈஸ்வரனுக்கு சாம்பு தான் இதைப் பேசினானா என்று ஒரு கணம் நம்ப முடியவில்லை.

_________________________________________________________________________


(அம்ருதா ஜூன் 2019)

No comments:

Post a Comment