vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, September 1, 2016

எப்படி இது நேருகிறது?

   எப்படி  இது  நேருகிறது?

வைதீஸ்வரன்    .


  நான்காம்  வகுப்பிலிருந்து  எனக்குத்  தமிழ்ப் பாட  புத்தகத் தைப்  பார்க்கவும் படிக்கவும் அப்படி  ஒரு  ஆனந்தம்.  சீக்கிரமே எழுத்துக்  கூட்டிப் படிக்கும் பழக்கம் வந்து விட்டது. 

 அத னால்  பள்ளிக் கூடம் திறந்து புதிய புத்தகங்கள்  கிடைத்த வுடன்  தமிழ்ப்புத்தகம்  தான் எனக்கு மிகப் பிரியமான ஒன்று.

   முதல்  நாளே  வாசலில் மரநிழலில்  உட்கார்ந்து  அந்தப் புத்தகத்தின்  முதல் பக்கத்திலிருந்து  கடைசி  வரை வாசித்துப்  பார்ப்பேன். 

அதுவும்  இடை இடையே  பாப்பா  பாட்டுகள்  போன்ற பாடங்கள்  மிகப் பிரியம். அதை  ஓசையுடன்  படிப்பதில் எனக்கு  ஏக மகிழ்ச்சி.

  அவ்வையாரின்  வெண்பாக்களை  வீட்டை சுற்றி விளையாடும் போதும் திண்ணையில் ஏறிக் குதிக்கும் போதும் மரத்தில்  ஏறும் போதும் வித வித ராகத்தில்  நீட்டி சுருக்கி சொல்லிக் கொண்டே  இருப் பேன்.

  தமிழும்  அதன் ஓசையும் எனக்குள் அப்படி ரத்த ஓட்டமாக  ஒட்டிக் கொண்டு விட்டது.  அதை விட வினோதமாக  அந்த  வெண்பாக்களை  கடைசி வரியில் ஆரம்பித்து முதல் வரியில்  முடிக்கும் விதமாக  தலை கீழாக  சொல்லிப் பார்ப்பது  எனக்கு  ஒரு  சவால்!

    இந்த  தமிழ்ப் பாசத்தால்  எனக்கு  வகுப்பில்  தமிழ்ப் பரிட்சைகள்  ஒரு மிக சாதாரண  சவால்.

முத்து  முத்தாக  அத்தனை  கேள்விகளுக்கும்  வெகு  சீக்கிரமாக பதில்  எழுதி விட்டு வந்து விடுவேன்.

  எனது நான்கு  ஐந்து ஆறாவது  தேர்வுகளில் வருடா வருடம் எனக்கு தமிழில் முதல் மதிப்பெண்  கிடைத்துக் கொண்டிருந்தது.
அந்த வருஷங்களில் எனக்கு மிக ஆப்த  நண்பன் ஒருவன்  இருந் தான் அவன் பெயர் நரசிம்மன்.  மிக அன்பாக இருப்பான்  மற்ற மாணவர்கள் போல் அட்டகாசமாக ஓடியாடி குதித்துக்  கொண்டி ருக்காமல் சாதுவாக இருப்பான். நெற்றியில் பிறை போல சந்தனக்கீற்று தரித்துக் கொண்டிருப்பான்.

அது  அவனுக்கு  லட்சணமாக  இருக்கும்.   எனக்கும்  அப்படிப்  பட்ட  இயல்பு தான்.  அதனால் அவனுடன் உட்கார்ந்து கொண்டு பேசுவது எனக்கு  பிரியமாக  இருக்கும்.

 ராமர் கதைபிரஹலாதன்  கதைஹரிச்சந்திரன்  கதை  இப் படி  தினமும் ஒரு  கதையை சொல்லுவான்.

கேட்கக் கேட்க  எனக்கு ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கும்.

  “எப்ப்டீடா....இவ்வளவுகதையை  தெரிஞ்சிண்டிருண்டிருக்கே? “ என்று  கேட்டேன்.

 “எங்க பாட்டி  நறையா  கதை சொல்லுவாடா!.....தவிர  எங்க அப்பா  நறைய படிச்சிருக்காராம். எங்க வீட்டுலே  அலமாரி நெறையா புஸ்தம் இருக்கு தெரியுமா?””  என்றான்.

 எனக்கு அது  ஒரு பெரிய ஆச்சரியம். எங்கள்  வீட்டில் அப்படி இல்லை. வசதிகளும்  குறைவு. என் அப்பா  எளிமையாக சைக்கிள் வியாபாரம் செய்து கொண்டு ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார்.  வீட்டில் அந்த மாதிரி புத்தகங்கள் நிறைந்த  அலமாரிகள்  கிடையாது எனக்கு  அவன்  மீது பொறாமையாகக் கூட  இருந்தது.

  தினமும்  அவன்  சொல்லுவதைக் கேட்பது எனக்கு மிக ஸ்வாரஸ்யமாக  இருந்தது.

 “காத்தாலெ  ஸ்கூலுக்கு வரதுக்கு முன்னால  நீ ஸாமிக்கு நமஸ்காரம் பண்ணுவியா..என்று  கேட்டான்.

 “ம்.....பண்ணுவேனே! “  என்றேன்.

என்ன ஸ்லோகம்  சொல்லுவே?  “ என்று  கேட்டான்.

ஸ்லோகமா?..எனக்குத் தெரியாதே...நமஸ்காரம் பண்ணும் போது  கூட எனக்கு  அவ்வையார்  வெண்பா  தான் ஞாபத்துக்கு வரும்  சொல்லி நமஸ்காரம் பண்ணுவேன்..”.என்றேன்.

விநாயகர் ஸ்தோத்திரம்..சரஸ்வதி  ஸ்லோகம்  எல்லாம்  சொல் லணும்...அப்படி சொன்னாத்   தான்  நறையா  மார்க்கு  வரும். ங்க பாட்டி சொல்லி இருக்கா..”  “  என்றான்.

 நான்  அப்போது  முதல்  மார்க்  வாங்கிக்  கொண்டிருப்பது கூட  ஞாபகத்துக்கு  வரவில்லை. 

எனக்கு அந்த  ஸ்லோகங்களை சொல்லிக் கொடுரா...சொல்லிக் கொடுரா  என்று  அவனை  நச்சரித்துக்  கொண்டிருந்தேன்.

  “நாளைக்கு  சொல்லிக் கொடுக்கறேன்..”  என்றான் நரசிம்மன்.

 அப்போது  தான்  அந்த ஆறாம் வகுப்பு ஆரம்பத்தில் அந்த நிகழ்வு நேர்ந்தது. 

  எங்கள்  வகுப்பு வாத்தியார்  வந்தார். 

எல்லாரும்  வரிசையாக  நில்லுங்கோ...”  என்றார்.

 வரிசையாக  நின்றோம். 

எனக்கு  முன்னால்  நரசிம்மன்  நின்று  கொண்டிருந்தான். 

  வாத்தியார்  சொன்னார்.ஒவ்வொத்த ரா  நான்  கேக்கற கேள்விக்கு  பதில் சொல்லுங்கோ!    தமிழ் language   எடுத்துக் கறவா  ..இடது பக்கம்  போங்கோ!...............சமுஸ்கிருதத்தை எடுத்துக்கறவா  வலது  பக்கம்  போங்கோ!.” ............ என்றார்.

எனக்கு  அவர் கேள்வியின் முக்கியத்துவம்  புரியவில்லை.
வரிசை  நகர்ந்து  கொண்டிருந்தது.

 எனக்கு  முன்னால்  நரசிம்மன்  நின்று  கொண்டிருந்தான் 
அவன்  என்னைத் திரும்பிப் பார்த்து  ரகஸியமாய்  “டேய் நான்  ஸமுஸ்கிருதம்  எடுத்துக்கப் போறேன்..”  என்றான்.

வாத்தியார்  கேட்டவுடன்  அவன் தயங்காமல்  அதையே  சொன் னான்.

வாத்தியார்  அவனை  வலது பக்கம்  அனுப்பி னார்.  அடுத்த தாக  வாத்தியார்  என்னைக்கேட்டவுடன்  எனக்கு  எதுவுமே   தோன்றவில்லை.

இதென்ன  ஸமுஸ்கிருதம்....தமிழ்.......என்று  ஒரு  கேள்வி...... இதற்கு  பதில்  சொன்னால்  என்ன  லாபம்  என்ன  நஷ்டம்           எது  உசத்தி  எது  தாழ்த்திஇதையெல்லாம் என்  அப்பா விடம்  ஏன்  கேடகவில்லை? இதைச் சொன்னால்  அது  என்ன ஆகும்? “  “  என்று எனக்கு ஏகப்பட்ட  குழப்பம்...

நரசிம்மனுக்கு குழப்பமே   இருக்கவில்லை,,  அவன்   அப்பா ஏற்கனவே சொல்லி வைத்து  விட்டாரோ?  எனக்கு அப்பா ஒன்றுமே சொல்லித் தரவில்லை.  நான் படிப்பதைப் பார்த்து  பரிவுடன் அணைத்துக்  கொண்டது  தவிர வேறு எந்த உபதேசங்களும்  செய்ததில்லை.

எனக்கு  ஒன்றும் புரியவில்லை.

 வாத்தியார் என்  தோளைப் பிடித்து  “சீக்கிரம்  சொல்லுடா?” என்று  உலுக்கினார். 

வலது பக்கம் பார்த்தேன்  அங்கே நரசிம்மன்  மிகுந்த  ஏக்கத் துடன் என்னைப் பார்த்துக்  கொண்டிருந்தான்  அவனுக்கு என்னை விட்டுப் பிரிய மனமில்லை.

எனக்கும்  அப்படித்தான்  தான்  இருந்தது. எனக்கு தமிழா...சமுஸ் க்ருதமா...முக்கியமில்லை.  நரசிம்மனின் நட்பு முக்கியம். அவன் தோழமையும்  அவன் சொல்லும்  கதைகளும்  முக்கியம்.

 நான்  “ ஸமுஸ்கிருதம் “  என்றேன்  என்னை  வலது பக்கம் தள்ளி  விட்டார்  ஆசிரியர்.   நரசிம்மன்  என்னைக்   கட்டிக் 
கொண்டான்!!
  அன்றிலிருந்து  பள்ளிக் கூடத்தில்  தமிழ் படிக்கும் வாய்ப்பை நிரந்தரமாக  இழந்து  விட்டேன். இன்றும் எனக்குள்  அது  ஒரு முக்கியமான  இழப்பாக என்னை வருத்திக்  கொண்டே இருக்கிறது..

 சமுஸ்கிருதத்தில்  ஆறாவது  வகுப்பில் ஆவன்னாவிலிருந்து ஆரம்பித்தார்கள்.  தமிழில்  கதை பாட்டுகளெல்லாம்  படித்து
பழகிய எனக்கு  சமுஸ்கிருத்ததில்  அணில் ஆடு  மரம் என்று ஆரம்ப பாடங்கள்  தான் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது.

 ஆனாலும்  தமிழ் ஆர்வம்  என்னை விரட்டிக் கொண்டே இருந்திருக்கிறது.

வகுப்பில் தமிழ் படிக்கும் சிலரின்  சிநேகிதங்கள் எனக்கு கிடைத்தது.  மாலை நேரங்களிலும்  விடுமுறை நாட்களிலும் அவர்களுடன்  பேசும்போதெல்லாம்  நான்  ஆவலாகக் கேட்ட றிவது அவர்களுடைய தமிழ் வகுப்புகளில்  என்ன  சொல் லிக்  கொடுக்கிறார்கள்  என்பது தான்.

அவர்களுடைய தமிழ்ப் புத்தகங்களை  வாங்கிப் பார்ப்பதும் உண்டு.

கம்பனையும்இளங்கோவையும்  தனிப்பாடல்களையும்  பாரதியையும் அப்படித்  தான்  ஒழிந்த நேரத்தில் படிக்க வேண்டி இருந்தது!

 ஒரு நட்புக்காக  இயல்பிலேயே ஈர்க்கப்பட்ட ஒரு  ஆசையான மொழியை கல்விப்பாடமாகப் படிப்பதை இழந்தவன்  நான்.

 அதற்குக் காரணமான அந்த  நரசிம்மன்  இப்போது திடீரென்று என்னைத் தொடர்பு கொண்டான்.

என்னைப் பற்றி  “கவிஞராகஏதோ பத்திரிகையில்  பார்த்த தாகவும் என்  தொலை பேசியை  வாங்கி  அமெரிக்கா விலிருந்து  பேசுவதாகவும்  சொன்னான்.

 அவனுடைய குரல்  எனக்கு  ஆச்சரியத்தையும்  கடந்த சம்பவத்தின் வருத்தத்தையும்  கிளறி விட்டது.

எப்படி இருக்கே................நரசிம்மன்?  “  என்றேன்.

நன்னா  சௌக்கியமா  இருக்கேன்.  அது சரிடா.... நீ  அந்த காலத்துலே  எங்கூட  சமுஸ்கிரதம்  தானே  படிச்சே!  நீ  எப்படித் தமிழ்க் கவிஞனானே?  “  என்றான்.

அதாண்டா..............எனக்கும்  ஆச்சரியமா  இருக்கு!  “  என்றேன்.Ø       

  .


4 comments:

 1. Beautiful!அருமையான பதிவு!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. http://rprajanayahem.blogspot.in/2016/09/blog-post_4.html

  http://rprajanayahem.blogspot.in/2016/09/blog-post_2.html

  ReplyDelete
 4. http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_9.html

  ReplyDelete