vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, June 15, 2012



சிறுகதை


அதிர்ச்சி

எஸ்.வைதீஸ்வரன்


ந்த அதிர்ச்சியான சேதியைக் கேள்விப்பட்டவுடனேயே என்னால் அந்த  வீட்டுக்கு போக முடியவில்லை. அவர்களைப் போய்ப் பார்ப்பதற்கு இரண்டு  வாரங்களுக்கு மேல் ஆகிவிட் டது.  செய்தி வந்த சமயத்தில் நான் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தேன்..பிரயாணம் போய்க் கொண்டிருக்கும் வழியெல்லாம் எனக்கு என் நண்பனின் நினைப்பாகவே இருந்தது. துக்கமும் ஞாபகங்களும் மாறி மாறி  மனதுக்குள் பரவிக்கொண்டிருந்தது. ஒன்றிரண்டு வருஷங்களல்ல. நெடுங்காலமாய்  நானும்அவனும் நண்பர்கள். ஒன்றாக  ஒரே  நிறுவனத் தில் உத்யோகம்  பார்த்தவர்கள். அநேகமாக ஒரேசமயத்தில் ஓய்வு பெற்றவர்கள். இப்போது மட்டும்  அவன்  என்னை முந்திக்கொண்டான்...

ஓய்வுபெற்ற சில மாதங்களுக்குள் நான் புண்ணியத் தலங்களைப் பார்ப்ப தற்காக  நீண்ட பிரயாணம் மேற்கொண்டு விட்டேன்.  பல   மாதங்களுக்கு அவனை சந்திக்கவே இல்லை  அவன் உடம்புக்கு அப்படியென்ன  பெரிய உபாதை  வந்து விட்டது?  இடைப்பட்ட சில மாதங்களுக்குள் அவனை நான் இழந்துபோகும்படி அவனுக்கு என்ன நேர்ந்துவிட்டது? வேலையில்  இருந்த   சமயத்தில்கூட அவன் அடிக்கடி   தலைவலி   காய்ச்சல்  என்று  வேலைக்கு  வராமல் இருந்ததில்லை.  வேலையில் ரொம்ப உற்சாகம். வேலை  செய்யும் போது கூட ஏதோ விளையாட்டில் ஈடுபடுவதுபோல்  இருப்பான்.  இடை இடையே  ஏதாவது வேடிக்கையாகப் பேசிக்கொண்டே இருப்பான். பலசமயம் அவன் ஏன் ஒரு ஜனரஞ்சகமான  எழுத்தாளனாகக்கூடாது என்று எனக்குத்தோன்றும். வாழ்க்கையின்மேல் அவ்வளவு ரஸனை.  அவன் ஏன்  இறந்துபோகவேண்டும்?

பயணம் திரும்பியதும் முதல்காரியமாக அவன் வீட்டுக்குப் போக வேண்டும்...அவன் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும்....

ன்று அவன் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். சற்று தாமதமானா லும் பஸ்ஸில்போவதைவிட நடந்துபோகலாம் என்று  தோன்றியது. இழப் பின் சோகத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்று தயக்கமாக இருந்தது. அவன் எங்களுடன் இருந்த போதெல்லாம்  சிரிக்கச்சிரிக்கப் பேசிக் கலக்கிக்கொண்டே இருப்பான். எப்போது நிறுத்தப் போகிறான் என்றுகூட சில சமயம் மனம் பொய்யாக அலுத்துக்கொள்ளும். ஒரு கலகலப் பான மனுஷனுடன் இவ்வளவு வருஷங்கள் வாழ்ந்துவிட்டு இப்போது நேர்ந்த திடீர் இழப்பை அவர்கள் எவ்விதம் தாங்கிக்கொண்டிருப்பார்கள்?

ஒருதடவை பஸ்ஸுக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டு நின்றோம். வெகுநேரமாக பஸ் வரவில்லை. நண்பன் பின்னாலிருந்த இரண்டு மரங்களைக் காட்டி “இந்த ரெண்டு மரத்தைப் பாத்தேளா? இந்த ரெண்டும் ஆரம்பத்துலே நம்ப மாதிரி பிரயாணிகளாத்தான் இங்கே நின்னிருக்கும்..   என்றான். நாங்கள் கால் வலியையும் மீறி வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்.

ஒருமுறை  மிக உயரமான அடுக்ககம் ஒன்றில் குடியிருந்த ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். அவர் வயதானவர் வீட்டில் அவரும் அவர் மனைவியும் தான்.. கீழே இறங்கும்போது என் நண்பனுக்கு ஏதோ ஞாபகம் வந்துஅடக்க முடியாமல் சிரித்தான். விஷயத்தைக் கேட்டாக வேண்டுமென்ற ஆவலுடன் நான் வெளியில் காம்பௌண்டுக்கு அருகில் நின்றுவிட்டேன்.

இந்த மனுஷன் எப்படி வாகிங் போறார் தெரியுமோ?”

எப்படீ?  

அவர் மனைவி ரொம்ப கண்டிப்பு. தினமும் இவரை வாக்கிங் போய் விட்டு  வரணும்னு விரட்டிவிடுவா.இவருக்கோ சோம்பல்.  கொறைஞ்சது அரைமணியாவது நடந்தாகணும்..... இவர்   என்ன  பண்ணுவார்னா . ....

மேலும் பேச்சைத்தொடராமல் நினைத்துநினைத்து சிரித்துக்கொண்டே இருந்தான்.

அட,விஷயத்தை சொல்லீட்டுசிரீப்பாஅப்படி என்ன  சிரிப்பு?  எனக்கு ஆவல் தாங்கவில்லை..

இவர் என்ன பண்ணுவார் தெரியுமோஇவர் இருக்கறது  பத்தாவது  மாடி பேசாம லிப்டிலே போய் கதவை சாத்திப்பார். கீழ்வரைக்கும் இறங்குவார்.. மறுபடியும் பத்தாவதுமாடி வரைக்கும் போவார் மறுபடியும் கீழே   எறங்குவார். இப்படியே  அரைமணி மேலேயும் கீழேயுமா போய்ட்டு வீட்டுக்குள்ளே  அப்பாடான்னு பெருமூச்சு விட்டுண்டு   ரொம்ப   களைச்சுப் போன  மாதிரி நாற்காலிலே உட்கார்ந்துப்பாராம் . .

இதை எதுக்கு உங்கிட்டே  சொல்லணும்? “

நானும் அதைத்தான் அவர்கிட்டே கேட்டேன்.எதுக்கும் தேவைப்பட்டா ஒனக்குமொரு உபாயமா இருக்கட்டுமேன்னு சொல்லிவைச்சேன்’,   என்றார்”. 

கேட்டவுடன் எனக்கு  சிரிப்புத் தாங்கவில்லை. என்னோடு சேர்ந்து அவனும்  சிரித்துக்கொண்ட்டே இருந்தான்.அவனுடன் இருந்த எந்த நிமிஷமும் எனக்கு மகிழ்ச்சிகர மானது. அவனுடைய தோழமையில்லாமல் நான் எப்படி என் மீதிக்காலத்தை  கடத்தப் போகிறேன்?..... அந்தக் குடும்பத்தைப் பற்றி, அவர்கள் இழப்பைப் பற்றி மீண்டும் நினைத்துக்கொண்டேன்..

அதோ வீடு வந்துவிட்டது. அந்தஅடுக்ககத்தில் இரண்டாவது மாடியில்  இருக்கிறது அவர் வீடு. படியேறிப்போனேன். படிகளில் குப்பைக்கூளம்.  மேலே அவர்வீட்டுக்குப்போகும் வெளித் தாவாரம் சற்று இருட்டாக  சுவர்கள் சாயம் வெளுத்துக் கிடந்தது. இருட்டில்அந்த நாலாம் நம்பரைத் தேடினேன்.  தெரிந்தது. கதவின் மேலிருந்த மணி யைஅழுத்தியபோது  உள்ளே  பெரிய  இரைச்சலாக சத்தம் கேட்டது ஏதோ சினிமாவின் குத்துப்பாட்டு. இதென்ன இப்படி... வீட்டில் எல்லோரும் செவிடா?. குத்துபாட்டுக்கு ஏற்ற மாதிரி கும்மாளமாய் யாரோ பையன் குதிப்பதுபோல் இருந்தது. அந்த பேரிரைச்சலில் என் மணி சத்தம் இன்னும் அவர்களுக்குக் கேட்கவில்லை. கதவு உடனே திறக்கவில்லை.

நான் விட்டுவிட்டு இரண்டு மூன்று தடவை மணியை நீளமாக அழுத்திக் கொண்டிருந்தேன். நான் வந்த வேளை சரியில்லையோ?  இந்த  நிலைமையில் உள்ளே போய் யாரை எப்படி துக்கம் விசாரிக்கப் போகிறேன்?

திடீரென்று யாரோ பாட்டி கத்திய குரல் கேட்டது. “டேய் சுரேஷு.. யாரோ மணி அடிக்கிறாடா...   யாரூன்னு    பாரு..  டேய். .அதை அணைச்சுட்டுப் போடா...”  

ஒரு பதிமூணுவயசுப் பையன் கலைந்த பரட்டைத்தலையும் சொட்டும்  வியர்வையுமாக கதவைத் திறந்து எட்டிப்பார்த்தான். நான் வந்தது அவனுக்குத் தடங்கல் ஏற்பட்டதுபோல் அவன் முகம் சற்று கடுமையாக தெரிந்தது.

யாரு..வேணும்?..”அவன் என்  பதிலுக்கு அவசரப்பட்டான்.

“...இல்லே....   .ஜா..ன..கி...ரா...ம ன்......

அவர் இல்லே இப்பொசெத்துப்போய்ட்டார்....பையன்   கதவை மூட யத்தனித்தான்.

தெரியும்ப்பா..தெரியும்ப்பா...அம்மா...இருக்காளா?...” 

அதிர்ச்சியை அடக்கிக்கொண்டு அவசரமாக அவன் கதவை மூடுவதை நிறுத்தினேன்.

உள்ளிருந்து “யாரூ........  என்ற   குரல் கேட்டது.

நான் தான்  கிருஷ்ணமூர்த்தி...

அந்த மாமாவை வரச் சொல்லுடா....

பையன் என்னை வெறித்தவாறு கதவைத் திறந்துவிட்டு உள்ளேஓடினான்.  மீண்டும் பாட்டை முடுக்கமுடியாத வருத்தத்துடன் கைகளைக் கட்டிக் கொண்டு என்னை வெறித்துக் கொண்டிருந்தான்.

நான் தயக்கமுடன் உள்ளேபோய் கூடத்தை சுற்றி பார்த்துக்கொண்டே  நின்றேன்.

ஒக்காருங்கோ....

உட்கார்ந்தேன்.

இந்தப் பிள்ளை யாரு? “

நண்பனின் மனைவி சமையல்கட்டிலிருந்து வெளியே வந்து  எம் பேரன் தான்...பிள்ளை வெளியூர்லெ இருக்கான்...என்று கதவில் சாய்ந்தவாறு நின்றாள். ஏதோ பாதி காரியத்தை நிறுத்தி விட்டுவந்தது போல் இருந்தது. ஜானகி ராமனின் அம்மா சற்று வயதானாலும் ஆரோக்கியமாக காலை நீட்டிக்கொண்டு மூலையில் அரிசி புடைத்துக்கொண்டிருந்தாள்.!!

எனக்கு எப்படி  ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.எப்பிடி ஆச்சு இது திடீர்னு.?.  நன்னாத்தானே இருந்தான்..

அவன் மனைவி பாட்டியை பார்த்தாள். பாட்டி பதில் சொல்லாததால் அவள் சொன்னாள்.

அதான் எங்களுக்கும் தெரியலே..டாக்டர் ஏதோ  silent attack ன்னு சொன்னார். அது என்ன  silent அட்டாக்கோ?முணு முணுப்பது போல் சொன்னாள்.

பாவம் உள்ளூர  அவனுக்கு உபாதை ரொம்ப நாளா இருந்திருக்கும் போல  இருக்கு.. ஒங்ககிட்ட ஏதும் மொதல்லியே சொல்லலையா அவன்? "

ஹூஹூம்.” அதற்குமேல் அவள் ஏதாவது விவரங்கள் சொல்லுவாள் என்று எதிர்பார் த்தேன். அவள் பேசவில்லை.

ஒங்க பொண்ணு வரலையா?..”

அவளுக்குஅமெரிக்காவுலேருந்து வர உடனே டிக்கட் கிடைக்கலியாம். மானசீகமா அப்பாவை நெனைச்சிக்கிறோம்னு  சொல்லிட்டா...

எனக்கு வருத்தமாக இருந்தது. 

பிள்ளை?.....”

பிள்ளை யதேச்சையா அன்னிக்கு ஊர்லேருந்து வந்துஇறங்கினான். மள மளன்னு காரியத்தை பண்ணி கரைக்கிறத்துக்கு தடங்கல் ஏற்படலே! அவன் ரெண்டாம்நாள் ராத்திரியே ஊருக்கு கிளம்பிட்டான்... லீவு இல்லே! 

நான் இவ்வளவு சிக்கனமாக பதிலை எதிர்பார்க்கவில்லை. எனக்கு வருத்தமாக இருந்தது.

.நானும்ஜானகிராமனும் ரொம்ப வருஷமா சிநேகிதம்.எப்பவும் கலகலப்பாருப்பான்...அவன் இருந்தா போறும்  எல்லாருக்கும் சிரிச்சு வயித்து வலியே வந்துடும்... திடீர்னு அவனுக்கு இப்படி ஆயிடுத்தே! எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு”,  என் மனதில் பொங்கிவந்த துக்கத்தை அவர் களிடம்  எப்படி யோ  சொல்லிவிட்டேன்..

கண்ணில் ஈரம்துளிர்த்தது. அழுகையைஅடக்கிக்கொண்டேன். ஜானகி ராமனின் தாயார் முறம் சலிப்பதை நிறுத்தவில்லை. நான் அவரை அனுதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந் தேன்.. யாரும் எதுவும் பேசாமலிருப்பது போல்  கூடம் நிசப்தமாக இருந்தது;  முறத்தைத் தவிர...

துக்கத்தை பகிர்ந்துகொள்ளத்தான் சற்றுமுன் நான் ஆதங்கத்துடன் உள்ளே நுழைந்தேன் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஏன் யாருமே எதுவுமேபெரிய இழப்புநேர்ந்த அதிர்ச்சியின் சுவடு கூட இல்லாமல்  ஏதோ இன்னொரு காலண்டர் காகிதத்தை  கிழித்த சாதாரணத்துடன் இப்படி துக்கமற்று இருக்கிறார்கள்.? அவன்கூட வாழ்ந்த வாழ்க்கையும் அந்த ஞாபகங்களும் அவன் பழகுகிற பேசுகிற விதங்களும் எதுவுமே அவர்களுக்கு நினைத்து நினைத்து துக்கப்படும்படியாக இல்லையா!!! எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

அப்போது லொட்டென்றுஎன்  அருகில் காபிடம்ளரை வைத்த சப்தம் கேட்டு திரும்பினேன்.அந்தப் பையன். விறுவிறுவென்று  நகர்ந்து போனான்.

அய்யோ..இதெல்லாம் எதுக்கு?  நான் காபி குடிக்கிறதை நிறுத்திட்டேன்..  நான் பொய் சொன்னேன்.நானும் ஜானகி ராமனும் ஆபீஸ் விட்டாச்சுன்னா பேசிண்டே தெருத் தெருவா சுத்துவோம்.. பொழுது போறதே தெரியாது,...”

என் அனுதாபவார்த்தைகள் யாரையும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.  நான் சொன்னதைக்கேட்டு யாரும் விசும்பவோ தேம்பவோ இல்லை. எல்லோரும்  என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் புறப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லையோ!

சரி...போய்ட்டுவரட்டுமா?’என்றுசொல்ல நினைத்ததை நல்லவேளை சிரமப்பட்டு நிறுத்திக்கொண்டேன். சம்பிரதாயத்தை மீறி அப்படி சொல்லியிருந்தால்கூட அது அவர்களை   ஒன்றும் பாதித்திருக்காது என்று தோன்றியது. எழுந்தேன். இருந்தாலும் என் மனம் ஆறாமல் இருந்தது. என்னை மிகவும் பாதித்த ஜானகிராமனின் இழப்பைப்பற்றி இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று  மனசு பதறியது.

பாவம், இந்த வயசானகாலத்துலே ஒங்களை ஏங்கவைச்சுட்டு அவன் முன்னாலே போயிருக்கவேண்டாம்...ஒங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியலே!....என்று அவன் தாயாரைப் பார்த்து சொல்லி விட்டு மெள்ள புறப்படத் திரும்பினேன்...

ஏண்டா  ஒம்பேரு கிருஷ்ணமூர்த்தியா? “

குரல் கேட்டு சற்று திகைப்புடன் திரும்பினேன். அந்தப் பாட்டி தான்..

ஆமா...

நீ  அவனுக்கு ரொம்ப ப்ரெண்டா? “

நான் பாட்டியிடமிருந்து இப்படிப்பட்ட குரலை எதிர்பார்க்கவில்லை!

நீ  இத்தனை நன்னா பேசறயே!......

........................ம்...

 ”ஏன் ஒன் ப்ரெண்டுக்கு அந்த சுபாவம் இல்லே?”

நான் திரும்பி நெருங்கிவந்தேன். என்ன சொல்றேள் பாட்டி?’’’

என்னத்தைசொல்றது? ஒம் ப்ரெண்டு ஒரு உம்மணாமூஞ்சி... வீட்டுலே யார் கிட்டயும் பேசமாட்டான். வந்தா அவன் ரூமுக்கு போய் கதவை சாத்திண்டுடுவான், அவன் கிட்டே யார்  போய் பேசறது? எதானும் கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுவான்...எதாவது ரெண்டு வார்த்தை பேசிருப்பானா  அவன்....எல்லா பாரமும்  பாவம் கோமதி தலையில தான்...

என்ன பாட்டி  சொல்றேள்..?  ஜானகிராமனா!!...

திடீரென்று பாட்டிக்குப் பேசமுடியாமல் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள். நான் நெகிழ்ந்துபோய் நின்றேன்.

படுபாவி.......தனக்குநெஞ்சுவலின்னாவது  யார்கிட்டயாவது சொன்னானாசொல்லாம வலியை நெஞ்சிலையே அடைச்சிண்டு தூக்கத்திலயே  போய்ச்சேர்ந்தான்...அப்படி ஒரு மௌடீகம்...நாங்க எதைச் சொல்லி அழறது?   அவன் போனதையா,  இருந்ததையா?.....”

அவள் தலையில் அடித்துக்கொண்டு  விசும்பிக்கொண்டிருந்தாள். அவன் மனைவி உள்ளே போய்விட்டாள். நான் மேலும் பேசுவதற்கு எதுவுமற்ற தாக உணர்ந்தேன். வெளியே வந்து காலணியைப் போட்டுக்கொள்ள ஆயத்தமானேன்.

கதவு சற்றுவேகமாக சாத்திக்கொண்டது. மீண்டும் சத்தமாக உள்ளே குத்துப்பாட்டு கேட்கத் தொடங்கியது.

  story appeared in THEERANADHI

No comments:

Post a Comment