vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, February 2, 2013                    
  மரத்தில் வாழ்ந்தவன் 

வைதீஸ்வரன் [செப் 2009]             
எனக்கு தெரிந்த வரையில் என் முந்தைய இரண்டுதலை முறைகளை  மரங்கள் தான்  காப்பாற்றி பேணி வளர்த்திருக் கின்றன.  அதற்கு முன்பு  வாழ்ந்த என் தலைமுறை மக்கள் தக்காண பீட பூமியில்  இன்றைய மைசூருக்கு அருகில்  எங்கோ வாழ்ந்து வந்ததாகவும் முகலாயர் ஆட்சி காலத்தில்  ஏற்பட்ட கலகங்களினால் விரட்டப்பட்டு இடம் பெயர்ந்து மெள்ள மெள்ள தர்மபுரி மேட்டுர் பக்கம். நகர்ந்து சேர நாட்டிற்கு இன்றைய சேலம் ஜில்லாவிற்குக் குடியேறியதாக எனக்கு கிடைத்த பழைய   தகவல்  சொல்லுகிறது

என் கொள்ளு தாத்தாவின் காலத்திலிருந்து மேட்டுர்   அருகில் உள்ள நங்கவள்ளி கிராமத்தில்  ஒரு  தென்னந் தோப்பை பராமரித் துக்கொண்டு  ஜீவனம்  செய்து வந்திருக்கிறார்கள்..என் முந்தை யவர்கள்..

 மாரிக் காலம் பார்த்து நிலத்தை உழுது பண்படுத்தி சவலை  மாடு களைப் பூட்டி கிணற்றில் ஏற்றம் இரைத்து தென்னம்பிள்ளைக ளுக்கு  நீர் பாய்ச்சுவதும்  தேங்காய்களை இறக்கி  வண்டியில் போட்டு வாரச்சந்தையில் வியாபாரம் செய்வதும் தான் அவர்களுக்கு வாழ்க்கையாக  வாழ்க்கையின் பேராசையற்ற  சுகமாக  இருந்திருக்கிறது..

 இன்று நமக்கு தெரிய வருகிற வர்ணாஸ்ரம விதிகளும்  குலங்களுக்கு ஏற்ற தொழில்முறையும் என் முந்தைய தலை முறை களை  எப்படி கட்டுப்படுத்தாமல் இருந்தது என்று எண்ணி  நான் ஆச்சரியப்படுகிறேன்..என் தாத்தாக்கள் அதை பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை!

 என் தாத்தாவும் அவருடைய அப்பாவும் குடியானவர்களுக்கு சரி சமமாக நிலத்தில் வேலை செய்ததை என் தந்தை எனக்குசொல்லியிருகிறார்.. சின்ன வயதில் என் அப்பாவுடன் நங்கவள் ளித்  தோட்டத்திற்கு போன போதெல்லாம்  கிணற்று ஏற்றத்தில் இரண்டு  மாடுகளைப் பூட்டி தண்ணீர் இறைத்துக் காட்டி  என்னை குஷிப்படுத்தியிருக்கிறார்.

 என் அப்பாவின் தலை முறை முடியும் போது பல வேறு   புற வாழ்க்கை மாற்றங்களினால்  அந்த தொன்மையான பாரம்பரிய   நிலம் எங்கள் கைவிட்டுப் போனது.. ஒரு முன்னூறு வருடங் களாக எங்களை காப்பாற்றி வந்த   இளமை மாறாத அந்த தாயை   பரராமரிக்க முடியாமல் விற்று விட்டோம்..இந்த சோகமான இழப்பு அநேகமாக கடந்த பரம்பரைகள்  எல்லாவற்றிற்குமே நேர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை.

                     *****
        
இந்த பரம்பரை ஞாபகத்தினாலோ என்னவோ எனக்கு  சின்னவயதிலிருந்தே மரங்களின் மீது அலாதியான பற்று  ஏற்பட்டிருந்தது.

பிற்காலத்தில் மரங்கள் எனக்கு நிறைய நல்ல கவிதைகளை தந்திருக்கின்றன....

 என் இளம் பிராயத்தில் நான் ஏற்காடு அடிவாரத்தில் சின்ன திருப்பதியில்  குடியிருந்தேன்..கிராமமா வயற்காடா என்று தீர்மானிக்க முடியாத பரப்பில்  ஒரு பத்து வீடுகளுக்கு இடையில் இருந்த ஓட்டு வீடு  எங்களுடையது. சுற்றிலும் பசுமையான வயற்காடு.. தூரத்தில் மெலிதாக   நெளிந்தோடும்  ஒரு ஓடை..

  
வாசலில் அழகான பசுமையான லட்சணமான பாதாமி மரம்..  கொல்லைப் புறத்தில்  ஒரு செழிப்பான கொய்யா மரம் .இரண்டுமே எனக்கு உயிர்த் தோழர்கள் போல..

 பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் என்னை மரத்தின் மேல் தான் பார்க்கலாம்!..அதுவும்  முன் வாசலில் இருந்த மரத்தில் கிளைகள்அருமையாக அளவாக விரிந்து நான் உட்காருவதற்கு ஏற்ற பான்மையில் இருக்கும்..

 மரத்தில் உட்கார்ந்து பாடம் படித்தால் மனத்தில் நன்றாக பதிவது போல் இருக்கும்..அதுவும் காற்றுக் காலங்களில் மரத்தின் பலவிதமான   அசைவுகளின் எதிர்பாராத ஆட்டங்களை எதிர்பார்த்து ஏமாறுவது எனக்கு  சந்தோஷமான பொழுது போக்கு..ஒரு தாய் மடியின் சுகத்தை நான் அந்த 
 
சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

அந்த மரக் கிளைகளில் நான் பலசமயங்களில் தலை கீழாக தொங்குவதும் உண்டு. ஆனாலும்  அந்த வயதுப் பையன்கள் போல் நான் ஒரு முறை கூட  மரத்திலிருந்து   விழுந்து கையை உடைத்துக் கொண்டதில்லை...

இது அந்த மரத்தின் கருணையாகத் தான் இருக்க வேண்டும்!
                    
 ********

 அந்த  வயதில் எனக்கு திடீரென்று  நெஞ்சில் கபம் கட்டி மூச்சுத்  திணறல் ஏற்பட ஆரம்பித்தது.. இரவு நேரங்களில் தீராத அவஸ்தை..

 
உட்கார முடியாமல் படுக்க முடியாமல் ஓயாத இருமலுடன் போராடுவதே  என் நிலைமையாகி விட்டது. இரவு நேரங்களில்  ஓடி ஓடிப் போய்   டாக்டரை கூப்பிட்டு வருவார் என் அப்பா.. ‘’ஆஸ்த்த்மா”” என்றார்  டாக்டர்..

ஆஸ்த்மாவுக்கு  இன்று போல் அந்த நாட்களில் மருந்துகள் இல்லை..  எப்போதும் ஊசி தான் போடுவார்கள்.. ஊசி போட்ட சில வினாடிகளில்  இருதயம் தொண்டைக்கு ஏறியது போல் விம்மி விம்மி பயங்கரமாக   படபடக்கும்.  வாயிலிருந்து மூக்கிலிருந்து கபம் கொட்டும்.. பிறகு  உடல் ஓய்ந்துபோய்  மூச்சடங்கி விடியும் வரை வெலவெலத்துக் கிடப்பேன்  ..இப்போது இந்த   ஊசி  மிகவும் ஆபத்தானது  என்று டாக்டர்கள் இதை தவிர்க்கிறார்கள்.

  நாளுக்கு நாள் என் உபாதைகள்  இடைவெளியற்றுப் போய் நான்   உணவு செல்லாமல் பலஹீன மாகிப் போனவுடன் என் பெற்றோர்கள்   ரொம்ப கவலைப் பட்டு பயந்து போனார்கள்..காரணம் தெரியாத கஷ்டங் களுக்கு  கடவுளையும் கேட்க முடியாத  நிலைமை யில் ஜோஸியம் பார்ப்பது  தான்  ஒரு தற்காலிகமான  ஆறுதல்..

எங்கள் உறவுக்காரர் ஒரு கனபாடிகள்..நல்ல ஜோஸியர் என்று  அறியப் பட்டவர்..அவர் என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு என் பெற்றோர்களின்  கவலையை மேலும் அதிகரித்தார்..””பய்யனுக்கு  பதிமூணாவது வயசுலே  ஆயுசுல கண்டம்..உடனடியா பரிகாரம் பண்ணலைன்னா  நீங்க தான்  வருத்தப்படுவேள் “ என்றார்.

அவசரம் அவசரமாக  ‘’ஆயுஷ்ஹோமத்திற்கு என் வீட்டில் ஏற்பாடு செய்  யப்பட்டது.. நான்கு புரோகிதர்கள் ஹோமம் வளர்த்து உரத்து கோஷமாக  மந்திரங்கள் .....பரிகாரம் நான்கு நாட்கள்..  வீடு நிறைய  உறவினர்கள் கும்பல் ..சாப்பாடு  அல்லோலகல்லோலம் ..  வந்தவர்கள் எல்லாம் என்னை அனுதாபமாக பார்த்து கண்ணை துடைத்துக்  கொண்டார்கள்.. நாளுக்கு நாள் புகையின் மூட்டம் தாங்கவே முடியவில்லை
  
 
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி எனக்கு மரம் தான்.. நான்  பாதாமி மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி உட்கார்ந்துகொண்டு காற்றாடிக் கொண்டிருந்தேன்.. 
   
 
 
வீட்டுக் கூடத்தில் நான் இல்லாதது கண்டு திடீரென்று என்னைத் தேடினார்கள்..என் அம்மா சொன்னாள்; அவன் மரத்தில் தான் இருப்பான்   என்று. என் பெரியப்பா மரத்தடிக்கு வந்து மேலே இருந்த என்னைப் பார்த்தார்..அவர் முகம்  சற்று  கலவரமாக மாறியது..

கொழந்தே..நீ அசையாம இருந்தா  ஒனக்கு பேனா வாங்கி தருவேன்  என்றார் . எனக்கு பேனா என்றால் உயிர் .. நான் அசையாமல் இருந்தேன்..

பெரியப்பா  அருகில் கிடந்த நீளமான தடி ஒன்றை எடுத்து மேலே என்னருகில் கழுத்துப் புறமாக உயர்த்தி தடியை வேகமாக பக்கவாட்டில் இழுத்தார்.

 
ஒரு நீளமான பாம்பு கிளை விழுந்தது போல் மண்ணில் விழுந்தது..பெரியப்பா  கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் மண்டையில் ஒரு போடு போட்டார்..

 
நான் திகைத்துப் போனேன்.. மரத்தை விட்டு மெள்ள இறங்கினேன்..

 பெரியப்பா உரத்த குரலில் ‘’சுந்தரம்.. சுந்தரம்..என்று கத்தினார்..

 
உள்ளேயிருந்து என் அப்பா ஓடி வந்தார்..””ஒம் பிள்ளையோட  கண்டம்  இன்னியோட போச்சு .. பாரு பாம்பு எவ்வளவு நீளம் ..நல்ல வேளையா அது என் கண்ணுல பட்டது.... குழந்தே  இனிமே தைரியமா இருடா...” என்று என்னைத் தட்டிக் கொடுத்தார்.

என் அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.. கனபாடிகள்  ஒரு விதியை தடுத்து  மாற்றியது போல்  வந்திருந்தவர்களை கர்வமாக பார்த்து தலையை ஆட்டினார். உறவினர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள்..

எனக்கு இதனால் அதிர்ச்சி பெரிதாக  ஏற்படவில்லை.  குழப்பமாக  இருந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு பின்  எனக்கு சங்கடங்கள் தான் அதிகமானது. 

டேய்..இனிமே இந்த மரத்துலெ ஏறினே..காலை ஒடிச்சுடுவேன்”, என்று மிரட்டினார் அப்பா, கண்டிப்பான குரலில். 

 ”
பேசாம இந்த இரண்டு மரத்தையும்  வெட்டிடுங்கோ! என்றாள் என் அம்மா .என்னால் மரம் ஏறும் வழக்கத்தை  விட முடியாது  என்பது  அவளுடைய  எண்ணம்.

நான் அழுது அடம் பிடித்து தரையில் புரண்டு அழுதேன்..நான் நிச்சயமா இனிமே மரம் ஏற மாட்டேன்..தயவு செஞ்சி அந்த மரத்தை  மட்டும்  வெட்டிடாதீங்க “” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

நல்லவேளை மரம் பிழைத்தது.. ஒரு பாம்பு  இருந்த காரணத் துக்காக  மரத்தையே வெட்டுவது எவ்வளவு அநியாயம்? மரத்தை வெட்டுவது ஒரு பாவச்செயலாக யாருக்கும் தோன்றுவதில்லையா? எத்தனை அறியாமை!

 மேலும் அந்தப் பாம்பு இவர்கள் கண்ணில் படாமல் எத்தனையோ நாட்கள்  என்னுடன் கூட மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்திருக்கலாம். என்னயும் சக நண்பனாக ஏற்றுக்கொண்டு நான் ஸ்வாரஸ்யமாக படிப்பதை காதருகில் உராய்ந்து ரஸித்திருக்கலாம்.

 இந்த பெரியப்பா அதை பார்த்திருக்க வேண்டாம் . அந்த நல்லபாம்பை கழியால் அடித்துக் கொன்று விட்டு என்னை ஏதோ கண்டத்திலிருந்து என்னை காப்பாற்றி விட்டதாக எல்லோரி டமும்  மார் தட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.

 ஏனென்றால் அந்த பரிகாரங்களுக்குப் பின்பும் எனக்கு மூச்சிரைப்பும் ஆஸ்த்மா நோயும்  பல வருஷங்கள்  என்னை  தொந்தரவுபடுத்திக்கொண்டுதான் இருந்தன!!!
 

                   

  
 
 
 

No comments:

Post a Comment