vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, December 3, 2013

அவனுக்கு ஏன் நடந்தது?

அவனுக்கு  ஏன்  நடந்தது?
 வைதீஸ்வரன்
சுமார்   அறுபதுவருஷங்களுக்கு  முன்  என்  கல்லூரி  ஹாஸ்டலில்  பி ப்ளாக்கில்  இருந்த  நாராயணனைப் பற்றிய  நினைவுகள்  இப்போது
வருகின்றன. நான்  கடைசி ஆண்டு படிக்கும் போது தான் அதே வகுப்பில்
 படித்துக் கொண்டிருந்த  நாராயணனும்  ஹாஸ்டலில்  வந்து சேர்ந்தான். 
 அவன் ஊரும் என் ஊராக  இருந்ததனால்  அவன் ஓரளவு எனக்கு பரிச்சயமாக இருந்தான். 

 பார்ப்பதற்கு மெலிந்தவனாக இருப்பான். குரலையர்த்திப் பேசமாட்டான் நண்பர்களோடு இருந்தாலும் அவன் பேசுவது ஓரிரு வார்த்தைகளாகத்  தான்
இருக்கும்.

 நீ  ஏண்டா..இப்ப வந்து கடைசி  வருஷத்துலெ   ஹாஸ்டல்லெ  சேந்தே?
இதுக்கு முன்னால  ஏன் வரலே?”  என்று கேட்டேன்.

அவன்  அப்பா  சொற்ப சம்பளத்தில்  குடும்பத்தைப் பராமரித்து வந்தவர்.
சிறிய வீடு.  அவனுக்கு   ஒரு  அக்காவும் ஒரு தங்கையும்.  பிள்ளை  
எப்போது  கல்லூரிப் படிப்பை முடிக்கப் போகிறான் என்று ஒவ்வொரு நாளையும்  கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். அவன் அப்பா..  அவன் தலையெடுத்தால் தான் தன் கஷ்டங் களுக்கு ஓரளவாவது நிவார ணம்   கிடைக்குமென்று  பொறுமையற்று  நாளை ஓட்டிக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் சமீபத்தில் கல்யாணமான அவன்   மூத்த சகோதரியின்  
கணவன்  ஏதோ தகறாரினால்  மனைவியை  பிறந்த வீட்டுக்குத் துரத்தி
விட்டான்.  ஏதோ சமரஸங்கள்  நடந்துகொண்டிருந்தன. 

வீட்டில் எப்போதும்  நிம்மதியற்ற  சூழல். யாராவது வந்து கொண்டே
இருப்பார்கள்  அப்பா அடிக்கடி கோபத்தில் யாருடனாவது கத்திக்கொண்டே 
இருப்பார்.  விளைவாக  நாராயணன்  அங்கே  படிக்கவே முடியவில்லை. 

 நாராயணின் அம்மா தான்  அந்த யோசனை சொன்னாள். இத பாருங்கோ...
.இன்னும் ஒரு வருஷம்தான்..  இங்கே  இருந்து  குழந்தை எப்படிப் படிக்கப் போறான்?  படிக்க முடியாம  பெயிலாகி வைச்சான்னா..அதுக்கு  அவனைக் குத்தம்  சொல்ல முடியாது...எப்படியாவது   கடனோ  உடனோ வாங்கி அவனை 
இந்த வருஷம்  ஹாஸ்டல்லே  சேத்துடுங்கோ.....படிப்பு முடிச்சு வேலைக்கி சேந்தான்னா ரெண்டுமூணுவருஷத்துலே  எல்லாம்  சரியாயிடும்...  

நாராயணனின் அப்பாவுக்கு அது  பெரிய சுமை தான்... இருந்தாலும்  இதை விட வேறு  உபாயமான வழி தெரியவில்லை.

அந்த சுமையின் அழுத்தமும்  கவலையும்  நாராயணனை நிறையவே  பற்றிக் கொண்டிருந்தது.  அந்தக்கவலையே   அவனை   கலகலப்பிலாதவானாக அடக்க
மானவனாக   ஆக்கியது.

ஆனாலும்    பி ப்ளக்கில்   பக்கத்து அறைகளில்  இருந்த அழகிரி சந்து லால்  தர்மராஜ்  எல்லோரிடமும் அவன்   சிநேகிதமாக பழகினான். முக்கிய மாக நண்பர்களுக்கு  பாடங்களில் வரும் சந்தேகங்களை  அவ்வப்போது
அக்கறை யுடன்தீர்த்துவைப்பான்.அதனால்   அவர்களின்நன்மதிப்பை   பெற்றிருந்தான்.  அவர்கள்துணைஅவனுக்கும் வேண்டியிருந்தது.  அதே 
வரிசையில்   மாடிப்படிகளுக்குப் பக்கவாட்டில்  கடைசி அறையில்  இருந்தவன் தான்  கெங்கு ரெட்டி...

கெங்கு ரெட்டியை  பார்த்தால்  மாணவனைப் போலவே  இருக்காது. வயதுக்கு 
மீறிய வளர்ச்சி.  தடித்த கைகால்கள். .கன்னங்கள் உப்பி  கழுத்தின் அடியில்
சற்று சதை தொங்கிக் கொண்டிருக்கும்  குரல் கரகரப்பாக இருக்கும்  சற்று தாங்கி  நடப்பான். அநேகமாக இம்மாதிரி நகரத்திற்கு வந்து  கல்லூரி ஹாஸ் 
டலில் தங்கி படிப்பது  அவனுக்கு முற்றிலும்  புது அனுபவமாக இருக்கலாம் 
 பி ப்ளாக்  எதிரிலேயே   மாணவர்கள் முகம் கழுவிக் கொள்ள  குழாய்
 வசதிகள் இருந்தன.  காலையில்  நண்பர்கள்  எல்லோரும்அங்கே தான் கூடி     முகம் கழுவிக் கொள்வார்கள்.... மாணவர்களின் சிரிப்பும் கூத்தும் கிண்டலும்  தினமும் அங்கே  நடக்கும்.. எல்லோரும் உரத்த குரலில் 
சுதந்திரமாகப் பேசிக் கொண் டிருப்பார்கள்.வாய்திறந்துகொப்பளிப்பது
போல்மனதைத் திறந்து  எதையாவது  பேச வேண்டும். அப்போது தான்   அவர்களுக்கு  பொழுது நன்றாக  விடியும்.

யாராவது  யாரைப் பற்றியாவது  கேலி செய்யாமல்  இருக்கமாட்டார்கள் ...அதுவும் முக்கியமாக  ஸெக்ஸ் ஜோக்ஸ்....

 சந்து லாலுக்கும் தர்மராஜுக்கும்  அதில் எப்போதுமே  ஒரு  ஈர்ப்பு.
 என்னடா  நம்ப  ஆறுமுகம்  லுங்கியிலே  புதுப் புது  மேப்பெல்லாம் வரையறான்.... கொலம்பஸ் மாதிரி  எதாவது கண்டு பிடிக்கப் போறானா?  ஹ்ஹ்ஹா....

 ஏண்டா  சோமு... நேத்து ஒங்கிட்டே  கௌரி க்ளாஸிலே பேனா வாங்கிட்டு போனாளே....திருப்பிக் கொடுத்தாளா?.... அங்கெல்லாம்   பேனா  போனா  
திரும்பி வராது!!!!!!!!!!...ஹிஹ் ஹிஹ்ஹீ.... 

நம்ப  சேகரு ப்ராக்டிகல் நோட்டைப் பாத்திருக்கையா... பக்கம்பக்கமா பத்மினி படமா  ஒட்டி வச்சிருக்கான்....இவனை  அவன் மாமா பொண்ணு 
 லவ் பண்றாளாம்.டா....!!!

 வாயில் பேஸ்ட் நுரைகளைத் துப்பிக் கொண்டே  இப்படி எல்லோரும்
பேசிக் கொண்டே  இருப்பார்கள்..

அந்த  மாதிரி  சமயங்களில்  நாராயணன் ஒரு வித சகிப்புடன் ஒட்டியும் ஒட்டாமலும்  நின்று  சிரித்துக் கொண்டிருப்பான்.  ஆனால் கெங்குரெட்டிக்கு
இந்த ஜோக்குகள் எதுவும்  பெரியதாக புரியாது. அவர்கள் சிரிப்பதை
பார்க்கும் போது அவன் முகம்   சற்று கடுகடுப்பாக  மாறி விடும்
தனக்குத் தெரியாத எதை எதையோ அவர்கள்  பேசி சிரித்துக்
கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றும். அவர்கள் சந்தோஷம் 
அவன் ஆத்திரத்தை அதிகமாக்கும்.  பொறாமையுடன்  பல் விளக்கிக்
கொண்டிருப்பான். 

என்னடா..அவ்வளவு  ஜோக்பண்றீங்க?...யாரைப்பாத்துடா .கிண்டல்பண்றீங்க?..     
என்று காரி உமிழ்வான்..

மற்ற நண்பர்களுக்கு   அவன்  சுபாவம்  வினோதமாகஇருந்தது..புரியவுமில்லை.    
அவனை தங்களோடு  ஒருவனாக  சேர்த்துக் கொள்ள முடியவில்லை.

 ஒரு  நாள்  காலையில்  கெங்குரெட்டி   கையில் பிரஷ்ஷுடன்  வந்து கொண்டிருந் தான்..  சந்து லால்  தர்மராஜ்  நாராயணன் எல்லோரும் பல தேய்த்துக் கொண்டி ருந்தார்கள்.....சந்துலால்  அவன் அசைந்து வருவதைப் பார்த்து  “”இந்த  எருமை மாட்டை  எந்த  ஊர்லெருந்துஓட்டிவிட்டுருக்காங்கடா..?  என்றான்.   மற்றவர்கள் 
அவனைப் பார்த்தும் பார்க்காமலும்  தமக்குள் ரஸித்து சிரித்துக் கொண்டார் கள். அப்போது  நாராயணன்  தனக்குத் தெரிந்த தகவலை சொன்னான்.

காட்டுப் பட்டியிலேருந்து... 

 எல்லோரும்  பலமாக  சிரித்துவிட்டார்கள். நாராயணன் உண்மையைத் தான் 
சொன்னான் .கெங்குரெட்டி  இதை கவனித்து விட்டான்.  நேராக  அவன்  நாரய
ணன் அருகில் வந்து நின்றான்.

டேய்..என்னைப்பத்தி எதாவதுசொன்னயா? என்னடா சொன்னே?   எல்லாரும் சிரிக்கிறாங்களே....என்னைப் பத்தி   கிண்டல்   பண்றீங்களா...?
 டேய்..என்னடா..சொன்னே?”

 நாராயணன் சட்டையைப் பிடித்துக்கொண்டான்.. அவன் நடத்தை எல்லோருக்
கும் ஆத்திரத்தைக் கிளப்பியது.

 டேய் விடுரா. அவனை....நாராயணன் எதுவும் பேசலே .நாங்க யாருமே 
உன்னைப்பத்தி பேசலே...ஒன்னைப் பத்தி பேச என்னடா இருக்கு?   

”நீ  என்ன  எங்க ப்ரண்டா..?விடுராஅவன்சட்டையை...தர்மராஜ்  கத்தியவாறு
  நாராயணனை அவன் பிடியிலிருந்து விலக்கினான்.  சந்துலால் அவன்  
முகத்தை நெருங்கி  கோபமாகப் பார்த்தான்.

நாராயணனுக்கு  உடம்புபதறியது..அவன்இந்தமாதிரி  சண்டைகளில் எப்போ
துமே  மாட்டிக் கொண்டதில்லை.  விரும்பியதுமில்லை.   கெங்குரெட்டியைப்
பார்க்க பயமாக இருந்தது. நான் உண்மையைத் தானே  சொன்னேன் “ .

கெங்குரெட்டியின்  கண்கள்  சிவப்பாக  உதடுகள்  ஒருவிதமாகத் துடித்தது. 
அவன் நாராயணனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். .அவனுக்கு  
ஏதோ  ரத்த அழுத்த பிரச்னையாக இருக்க்க்கூடும்.  சற்று  விலகிப்  போய்  
தலையைத் திருப் பிக்கொண்டுவேகமாக பல்துலக்க ஆரம்பித்தான்.  மற்றவர்கள்  அங்கிருந்து  விலகிப் போனார்கள்.

அன்றிரவு  நாராயணனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.  கெங்குரெட்டியை
நேரில் பார்ப்பதற்கே  பயமாக  இருக்கும் போல் தோன்றியது.  ஆனால்
மறுநாள் பயந்த மாதிரி  நடக்கவில்லை.

காலையில்  கெஙுகுரெட்டி  நாராயணன்  அறைப்பக்கமாக  நடந்து  போனபோது  
உள்ளே  எட்டிப்பார்த்தான்....என்னா..நாராயணா....ஸீரியஸாபடிக்கிறயா?”  
என்று கேட்டு விட்டுபலமாக  சிரித்து  விட்டுப்போனான்.நாராயணனுக்கு
அதைசகஜமாக  எடுத்துக் கொள்ள முடியவில்லை.

மறு நாள்  மாலை  சந்துலால் தர்மராஜ்  நாராயணன் மூவரும் கேண்டீனுக்
குப் போய்விட்டுவந்துகொண்டிருந்தார்கள்..எதிரே   கெங்கு ரெட்டி  எதிர்ப்பட்டான்.  மூவருக்கும்அவனை எப்படி தவிர்ப்பதென்று  
சங்கடமாக  இருந்தது .தர்மராஜ்  அவனை அலட்சியப்படுத்தி விட்டு  இன்னிக்கு   கெமிஸ்ட்ரி  க்ளாஸுலே ஒரு தமாஷ்... இதைக்கேளேன்...என்று   நிலைமையை  சமாளிப்பதற்காக  ஏதோ சொன்னான்.

எல்லோருக்கும் சிரிப்பு வந்தது...கெங்குரெட்டி  கடந்து போய்க் கொண்டிருந்
தான்.

அன்று இரவு  9 மணியிருக்கும் ..நாராயணன் அறைக்கதவை யாரோ தட்டினார் கள் . திறந்து பார்த்தான்..அங்கே கெங்குரெட்டி....   அவன்   கண்கள்  இப்போதும் சிவப்பாக இருந்தது.பெரிதாக  மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான்..உதடுகளை  
துருத்திக் கொண்டு கத்தினான்...டேய்  அந்தப்  பயலுக சாயங்காலம் என்னைப்  
பத்தி என்ன சொன்னாங்க..  மறைக்காம  சொல்லு....என்னைக்  கிண்டல்பண்ணி
எல்லாரும் சிரிக்கிறீங்களா?....என்னைப்  பாத்தா   சிரிக்கணும்னு தோணுதா..?” 
என்று கத்தினான்.

நாராயணன்  நடுங்கிப்போய்விட்டான்  ..இல்லை  இல்லை...உன்னப்  பத்தி 
யாருமே  பேசலையே.!!....கெங்குரெட்டி .ஏன்  இப்படி கோவிச்சுகிறே?  நீ   
ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டிரு க் கே!!...வேணும்னா உன்கிட்டே மன்னிப்பு 
நான் ஒன்னைப் பத்தி எப்பவுமே பேசமாட்டேன்...  நாராயணனுக்கு நா தழுதழுத்தது.  பயம் வேறு. அவன் அளவுக்கு மீறி  பணிந்து போயிருந்தான்
கெங்கு ரெட்டி  அவனைக் கோபமாக  சற்று நேரம் முறைத்துவிட்டு திடீ ரென்று   அவன்  அறைக்கு  போய்விட்டான்.

அன்று இரவு  பன்னிரண்டு மணியிருக்கும்..  கெங்கு ரெட்டியின் 
அறையில் பெரிதாகசத்தம்கேட்டுக்கொண்டிருந்த்து.  மேஜையை
தடாரென்று   நகர்த்துவதும்  குத்துவதும் கேட்டுக்கொண்டிருந் த்து.   நாற்காலி  உருண்டது  போல்  இருந்த்து.  கெங்குரெட்டி கன்னபின்னாவென்று  
கத்திக் கொண்டிருந்தான்.  அறைக்குள்  அடிபட்ட புலிமாதிரி உலாவிக்
கொண்டு  தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் இருந்தது...

சத்தம் கேட்டு பயந்து நாராயணன்  வெளியே வந்து பக்கத்து அறைகளில் 
இருந்த சந்துலால் தர்மராஜை எழுப்பினான்.  எல்லோருக்கும்  கெங்கு
ரெட்டியின் இந்த விபரீத கூச்சல்  மிகவும் கலவரப்படுத்தியது.

கெங்குரெட்டியின் அறைக்குப் பக்கத்திலிருந்த மாடிப்படிகளில்  இரண்டு
மூன்றை ஏறினால்  அந்த  உயரத்திலிருந்து  அவன் அறைக்கதவுக்கு 
மேலிருந்த கம்பி ஜன்னல் வழியாக  அறைக்கு உள்ளே பார்க்க முடியும்.
மூவரும்  ஏறி பார்த்தார்கள்.

டேய்...என்னாடா  நெனைச்சிகிட்டிருக்கீங்க...சொமாரிப்பசங்களா....என்னைக்
கண்டா அவ்வளவு  எளப்பமா?...சிரிக்கிறீங்களா?...வந்து  மயித்தைப் புடிச்சி
வயித்துலெ ஒண்னு விட்டென்னா ஒங்க அம்மா வயித்துக்குள்ளே போயி ருவீங்க...நீங்கள்ளாம் பட்டணத்துக்காரகளா....உங்க  பாச்சாவெல்லாம்  எங்
கிட்டெ பலிக்காது....அறுவா வைச்சிருக்கேன்....ஹாஹ்ஹா.... 

கெங்குரெட்டி  ஆவேசம் வந்தவன் போல் உலாவியவனாய் ஒவ்வொரு  
வரியையும் பேசி    மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு  கண்ணுக்குத் தெரி யாத  யாரையோ  குத்திக்கொண்டிருந்தான்..பாய்ந்துபாய்ந்து    அடித்துக்கொண்
டிருந்தான். நாற்காலியையும்கட்டிலையும்   கால்களால்உதைத்துக்கொண்
டிருந்தான்.       நல்லவேளை    மறைந்தவாறு மாடிப்படிகளில் நின்று பார்த்துக் 
கொண்டிருக்கும் அவர்களை  அவன் பார்க்கவில்லை.

 நண்பர்கள்  மூவரும்  கதவைத்தட்டி  அவனைக்கூப்பிடலாமா  என்று யோசித்
தார்ள். அது  அபாயமானது என்று உணர்ந்து  அவரவர்  அறைக்குத் 
திரும்பிப் போய்  விடிய விடிய  விடிவதற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
இரவில் நடந்த  கலவரத்தை  ஹாஸ்டல் வார்டனிடம்  போய் சொன்னார்கள். அடுத்த  இரண்டு  மூன்று  நாட்கள்  வார்டன்  இரவு நேரங்களில்  அங்கே ரோந்து போய்க்கோண்டிருந்தார்.கெங்குரெட்டியை  அவனுக்குத்தெரியாமல்  கண்
காணித்துக்கொண்டிருந்தார்.

மற்றொரு   இரவிலும்  கெங்குரெட்டி  அதேபோல்  கத்திக் கலவரம் செய்த கூச்சல்  கேட்ட்து.  மறு  நாள்  வார்டன்  கெங்குரெட்டியின்  
இந்த  மனபிறழ்வைப்பற்றி  அவன் பெற்றோருக்கு கடிதம் எழுதி  உடனே 
 வந்து ஆவன  செய்யச் சொன்னார்.

இப்போது  நாராயணனுக்கு  உறக்கம் போய்விட்டது.  காரணமில்லாமல்
ஒருவன் தன்னைவிரோதியாக  எண்ணிக்கொள்ளும்போது  அது  மனதை
மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிவிடுகிறது .  ரணத்தை  ஏற்படுத்துகிறது.

 இரண்டுநாட்களுக்குபிறகு  கெங்குரெட்டியின்அப்பாவந்தார்  கிராமத்துக்காரர்
 கருத்த முகத்தில் பெரிய நரை மீசை  தடித்த சட்டை காலில் முரட்டு செருப்பு. விவசாயி  குடும்பமாக இருக்க வேண்டும்.

அவர் கவலையுடன் இருந்தார்.  அவருடன்  இன்னொருவரும் வந்திருந்தார்.
 சடை போட்ட  முடியும்  கழுத்தில்  ருத்ராக்ஷ மாலையும்  மஞ்சளாக  ஒரு 
சட்டையும் நெற்றியில்  பெரிய சிவப்புப் பொட்டும் ....ஏதோ  உள்ளூர் அம்மன்  
கோவில் பூசாரியாக இருக்க வேண்டும்.  

கெங்குரெட்டியின் அறையில்  அவர்கள்  வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார் கள். அந்த  பூசாரி  பையனின்  உபாதைகளைபற்றி  அறிந்துகொள்ள  ஏதேதொ  
மாந்திரீக சோதனைகளை செய்து கொண்டிருந்தார். என்று தோன்றியது.

நாராயணன்  சாப்பிடுவதற்காக  சட்டை போட்டுக்கொண்டு  சாவியை 
எடுத்துக் கொண்டு  வெளியே புறப்பட அறைக்கதவை  திறந்தான்.  அதே  
நேரம் கெங்கு ரெட்டியும்  அவர்களும்  தற்செயலாக  இவன்  அறையைக்
 கடந்து கொண்டிருந்தார் கள். அப்போது  கெங்குரெட்டி  நாராயணனை 
சுட்டிக் காட்டி ஈ வாடு....என்று தெலுங்கில்  ஏதொ  சொல்லிக் கொண்டே போனான்.  அந்த சடை போட்ட சாமி    தலையைத் திருப்பி நாராயணனைப் பார்த்துக்கொண்டேபோனார்.  எதிர்பாராத   இந்தச் சந்திப்பு    நாராயணனுக்கு   
சற்று சலனத்தை   ஏற்படுத்தியது.

அடுத்த  இரண்டு மூன்று  நாட்கள் நாராயணால்  சரியாக  வாசிக்க முடிய வில்லை.  மனம்  காரணமற்று   குழப்பத்தில்இருந்தது.அறைக்குள்  இருப்பதற்கே  வெறுப்பாக  இருந்தது.  அவனுக்கு எங்கேயாவது வெளியே போய் 
விட வேண்டு மென்று  பரபரத்தது. 

நல்ல  வேளை  கல்லூரியில்  இரண்டு  மூன்று  நாட்கள் சேர்ந்தாற்போல் விடு முறைகள்  வந்தன..  அவன்வீட்டுக்குகிளம்பிப்போனான்.  அம்மாஅப்பா  சகோதரிகளுடன்பொழுதைப்  போக்கியதுஅவனுக்குஆறுதலாகஇருந்தது.  
ஆனாலும்  அப்பா  கேட்டார்...ஏண்டா  லீவுலே  ஹாஸ்டல்லெயே  இருந்தா 
இன்னும்நல்லா  படிக்கலாமோல்லியோ?பரிட்சைக்கு இன்னு ம்  ஒருமாசம் கூட இல்லே!  எப்படி  நன்னா  படிக்கிறயா?“

நாராயணனுக்குஅப்பாவிடம்   நிறையப்  பேசவேண்டும்போல்இருந்தது. 
தன்னுடைய   உள்வேதனையை  இப்போது  யாரிடமாவது  பகிர்ந்துகொள்ள
வேண்டும் போல் தொண்டை வரை வார்த்தைகள்  வந்தன.. ஆனால்  அவன் 
எப்படி சொல்வது?  மன நிலைமைகளை  யாரும் புரிந்து கொள்ளக்கூட மாட்டார்கள்.  அவன் சொல்வதை யாரும் பெரிய விஷயமாக  எடுத்துக் 
கொள்ள மாட்டார்கள். சரி..சரி..  ஏதோ பசங்க  தகறாரு....போய் படிச்சு பாஸ் 
பண்ணு   என்று சொல்லுவார்  அப்பா.

 விடுமுறை கழிந்து  நாராயணன்  ஹாஸ்டலுக்குத் திரும்பியபோது இருட்டி
 விட்டது. திரும்புவதற்கு மனமில்லாமல் நடை கூடத் தள்ளாடியது.   
பி ப்ளாக்குக்கு போய் தன் அறைக் கதவைத் திறக்கப் போனான்.  ஆனால்
 கதவு ஏற்கனவே சற்று திறந்த நிலையில் இருந்தது. மனசு திக்கென்றது.
 உள்ளே யாராவது இருக்கிறார்களா? இருட்டில் எதுவும் தெரியவில்லை. 
அவன் இல்லாதபோது யாரோ அறைக்குள் வந்திருக்கிறார்கள்....நாதாங்கியில் 
 பூட்டு உடைந்துதொங்கிக் கொண்டிருந்தது.

அவனுக்கு திகில்   பரவியது.  மெள்ள கதவைத் திறந்து எட்டிப்பார்த்தான்.
 ஒருவினாடி தான்...... ஒருவினாடிக்கும்  குறைவு தான்..  விர்ரென்று  ஆயிரம் வௌவால்கள்  கத்திக்கொண்டுவெளியேபறந்தமாதிரி     பெரிய  கூச்சல்ஒன்று     
அவன் செவிகளை அறைந்து   அதிர்ந்து கடந்து போனது. அவன்  ஆடிப்போய் விட்டான்அதுஎன்னவென்று  புரியவில்லை.  கண்கள்இருட்டியது. .   உடம்பு 
நடுங்கி வியர்த்தது.  அழுகை வராமல் தொண்டையை வறண்டது.. ,  இது
ஏன் இப்படி?  இது  என்ன  சத்தம்..?  எனக்கு மட்டும்  தான் கேட்டதா?..”

பக்கத்தில் சந்து லால் தர்மராஜு  இருவரையும்  கூப்பிடலாமென்று  கதவைத் தட்டிப்பார்த்தான். அவர்கள்இருவருமே   அறையில்  இல்லை.  மெதுவாக
கெங்குரெட்டியின்   அறைப் பக்கம் போய் பார்த்தான். அது பூட்டி இருந்தது
 அறையைக் காலி செய்த  அடையாளமாக வெளியே  சில உதிரிப்பொருள்கள்
 றைந்து கிடந்தன.

வேறுவழியில்லை..அவன்  அவனுடைய  அறைக்குத்தான்திரும்பவேண்டும்.
அங்கேதான்    இருந்தாக  வேண்டும்   அதிலிருந்துஅவன்தப்பிக்கமுடியாது.  
அவனுடைய பயங்களை வேதனைகளை பகிர்ந்து   கொள்ள  அவன்  யாரையும் உதவிக்குக் கூப்பிட முடியாது..

அடுத்த  சில  வாரங்களுக்கு  அவன்  சரியாக  உறங்கவில்லை  சாப்பிடக்கூட 
முடியவில்லை.  நண்பர்கள்  என்னடா  ஆச்சு  உனக்கு?  உடம்புசரியில்லையா?” 
என்று   கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரவு  நேரங்களில்   அவன் புத்தகத்தை  வாசிக்கத் திறந்தால்    எழுத்துக்கள்  
அவனுக்கு புரியாத  மொழி போல் தென்பட்டது.

எல்லாமே  அர்த்தமற்று  சூன்யமாக இருந்தது. எந்த நிமிஷமும்   .எதோ 
பெரிய ஆபத்து நிகழ்ந்து விடும்போல  மனம் பதறியபடியே இருந்தது.
ஏதோ ஒரு பயம் பாம்பு மாதிரி  அவன்  நினைப்பை சுற்றிக்கொண்டே
இருந்தது....படுத்துக் கொண்டாலும் அவன் விழிகள்  திறந்து கொண்டே
இருந்தன....

காரணமற்ற  இந்த  அவஸ்தைகளுக்கு  நிவர்த்தி காண முடியாமல்
அவன் தனக் குள் தேம்பித் தேம்பி  அழுவதுமுண்டு.ஒரு  மாதமும்  
கழிந்தது. எதிர்பார்த்தது போல்  அவன்  பரிட்சையில் தேறவில்லை.
 பரிட்சை  ரிஸல்ட்  வந்தபோது  அவன்  வீட்டில்  தான்  இருந்தான்
அவன் அப்பா தலையில் அடித்துக் கொண்டு கத்தினார்.

இந்த  மாதிரி  ஊமைவேதனைகளும்  தோல்வியும்  ஒருவனை  தற்கொலைக்கு
இட்டுச் செல்லக் கூடியவை தான்...நாராயணன் தற்கொலை செய்து
கொண்டிருந் தால் அது  ஆச்சரியமில்லை. நாராயணன்  அப்படித் தான்  செய்திருப்பான்  என்று  எனக்கு தோன்றியது. ஆனால் அப்படி
நடக்கவில்லை.!!

 ஏதோ  நல்ல  சக்திகள்  விழித்துக்கொண்டு  அவனுக்கு   நம்பிக்கையையும்
 வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. அப்போது அவனுக்கு யாரோ 
ஒரு பெரியவர் குருமாதிரிஅவனுக்குஆதரவாகஇருந்திருக்கிறார்.  அவருடைய
பரிவான  அணுக்கத்தினால்அவனுக்குமீண்டும்நம்பிக்கையும் சிந்தனைத் தெளிவும் துணிச்சலும்  வந்து விட்டன. நல்ல வாய்ப்புகள் அவனை   வாழ்க்கையில்  நிமிரச் செய்து விட்டது .அவன் இப்போது நல்ல 
 உயர்ந்த நிலையில் இருக்கிறான்நல்லவர்களுக்கு  இப்படி நேர்ந்தால்
சந்தோஷமாகத் தான்  இருக்கிறது. 

ஆனால்  பிள்ளை பரிட்சையில்  தோல்வியடைந்த  செய்தியைக் கேட்ட   உடனேயே அவன்  தந்தை  தாளாத   அதிர்ச்சியால்  சில நாட்களிலேயே செத்துப் போனார்.  பிள்ளையை  நம்பி  அவர்  வளர்த்துக்கொண்ட கனவுகள் அத்தனை யும்  நிரந்தரமாக சுக்குநூறாகிப்  போனதாக  முடிவுக்கு வந்து அவர் மாய்ந்து போனார்.   அவர் அவசரப்பட்டிருக்க வேண்டாம்.

No comments:

Post a Comment