vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, June 28, 2015

என் அம்மாவின் காப்பிப் பாட்டு

         
                என்  அம்மாவின்  காப்பிப்  பாட்டு  

வைதீஸ்வரன்
------------



இந்த    “காப்பி ”  குடிக்கும் வழக்கம்  நமக்கு  எப்போது  தொத்திக்  கொண்டது?   இந்த  வழக்கத்தை   நம்  கலாசாரத்தோடு  கலந்து  கரைத்தது   வெள்ளைக் காரர்கள்தான்  என்று  தெரிகிறது.   எனக்குத் தெரிந்தவரை  1920க்கு  மேல்  தான்  பிராமணக் குடும்பங்களின்  சமையலறைக் குள்   இந்தக்  காப்பி பானம்  சகஜமாக  புகுந்திருக்கலாம்.

1916ல்  கல்யாணம்  செய்து  கொண்டு புகுந்த  வீட்டுக்கு  வந்தபோது  குடும்பத் தில்   புருஷர்கள்  மட்டும்  தான்  காப்பி   குடிக்க  அனுமதிக்கப் படுவார்கள்  என்று  என்  தாயார்  சொல்லக்  கேட்டிருக்கிறேன் .

பிறகு  இந்த  பானத்தின்  ஆதிக்கம்  மெள்ள  மெள்ள   பொதுவான  காலைப்  பழக்கமாக  மாறி  பிராமணக் குடும்பத்தைத்  தாண்டி  சமூகத்தின்  பிற  ஜாதி  வட்டங்களிலும்   இன்றியமையாத  பானமாக நிலைத்து  விட்டது.
..
1920க்கு முன்பு .. காப்பி குடிப்பது  ஆசாரத்துக்கு அவ்வளவு பொருத்தமான விஷயமாக   ஒப்புக்கொள்ளப் படவில்லை. மேலும் அது வெள்ளைக்காரனின்   நாகரீகம் என்ற அன்னியத்வேஷமும்   நிலவி வந்திருக்கக்  கூடும்.. ..

ஐம்பதுகளில்  வெளிவந்த  ஒரு  சினிமாவில்  கூட   என்.எஸ்.கிருஷ்ணன்  பகட்டான  வாழ்க்கையை  கேலி  செய்து  பாடுகிற பாட்டில்  “ அவ  கார்லெ  போவா.... ஊரைச்  சுத்துவா...கண்ணாடி  பாப்பா...காபீ  குடிப்பா.....”  என்று  இளக்காரமாக  பாடுவார். கஞ்சி  குடிப்பது  தான் நமது கலாச்சாரப் பண்பு...என்று  சொல்லுவார்.

ஆனால் சூடான காப்பியின்  விறுவிறுப்பு  உள்ளே போனபோது அது இந்த   சம்பிரதாய தயக்கங்களை மீறிக்கொண்டு நாக்கையும் மனதையும்   வளைத் துப் போட்டு விட்டது. முக்கியமாக சங்கீதக்காரர்களும்  கலைஞர்களும்  இதை சோமபானமாகவே’’ பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் ..கர்நாடக சங்கீதத்துக்கும்  காப்பிக்கும்  ஏதோ ஒரு அபாரமான  பொருத்தம்..  மெள்ள மெள்ள காப்பியின் இந்த ஆக்ரமிப்பு  இந்தியக்  குடும்பங்களில் இன்றிய மையாத  ஒரு கலாசார அடையாளமாகவே  மாறிவிட்டது.

 ஒரு சுமுகமான வரவேற்புக்கு  காப்பி ஒரு அவசியமான ஆரம்பமாக ஆகி  விட்டது...

வீடு  தேடிப்  போன  போது  ஒரு  வாய்க்  காப்பி  கூடவா  கொடுக் கலே... அந்தக்  கடங்காரி..”  என்ற  வசனத்தை  நாம்  கேட்டிருக்கிறோம்.

இந்த காப்பி பானத்தின் அன்னியத்தன்மையை பின்னுக்குத்  தள்ளி  நம் கலாசாரத்தோடு சகஜமாக  ஒட்டவைக்கும் முயற்சி அந்தக்  காலத்தில்  பரவலாக  இருந்திருக்கும்போல்  தெரிகிறது..

அதற்கு  ஆதரவாக  அந்தக் காலத்தில்  யாரோ ஒருகாப்பி வெறித் தாத்தாஒரு பாட்டு எழுதி  எல்லோரையும்  பாடச்  சொல்லி  சமூகத்தின்  உளவி யலை பாதித் திருக்கிறார்..

 கீழ்க்காணும்காப்பி  பாட்டை “  என்  அம்மா தான்  சிறு வயதில் கேட்ட  பாட்டை  தன்  90  வயதில் எனக்கு  பாடிக்காட்டினாள்அதை  உடனே  எழுதிக்கொண்டேன். “அந்தக் காலத்துலே  எல்லாரும் பாடுவா. கல்யாணத் துலே  கூட  பாடுவா... கேலியும்  சிரிப்புமா  இருக்கும்..  ஆனா  வார்த்தை  கொஞ்சம்  விட்டுப் போயிடுத்து...”  என்றாள்..
  

                   *****

       காப்பீ குடிக்க வேணும் ஜனங்களெல்லாம்
       க்ருஷ்ணனை ஸ்மரிக்க வேணும் ஜனங்களெல்லாம்
       காசு பணம் செலவில்லை ஜனங்களுக்கு
       கடன் காரன் தொல்லையில்லை ஜனங்களுக்கு

       *க்ளப்புக்கு போகவேண்டாம் ஜனங்களெல்லாம்
காபி  வீட்டில்  அனுமதியில்லை...க்ளப்புக்குப்  போக வேண்டியிருந்தது ..என்கிற   சூழ்நிலை  தெரிகிறது..}

       ஜப்திவாரண்டு இல்லை இல்லை ஜனங்களுக்கு

     [அடுத்த சில வரிகள் தெளிவாக இல்லை }
  [விருத்தம் ]

        உத்தரத்து  உரியிலேருந்து  பாலெடுத்து
        ஆசையெனும் பாத்திரத்தில் பொடியைக்கொட்டி
        பாசமுள்ள வஸ்திரத்தில் வடியக் கட்டி
        நேசமுடன் சூடு பண்ணிய  திக்குக்   காப்பி
        திக்குத்  திக்கான  காபி.....]
              **

       தருமர் சாப்பிட்ட தரமான காப்பி
       அர்ஜுனன் சாப்பிட்ட அசலான காப்பி
       பீமன் சாப்பிட்ட பேஷான காப்பி
       நகுலன் சாப்பிட்ட சூடான காப்பீ
      சகதேவன் சாப்பிட்ட ஸ்ட்ராங்கான காப்பீ

       எல்லாரும் சாப்பிடுங்கோ..
       தேவாளும்  தேடி வருவா!!!

                 
             ******

       [வேதாந்தப் பாட்டு   எஸ். வி கிருஷ்ணம்மாள்]
      


    


Sunday, June 7, 2015

முடிவாக ஒரு வார்த்தை

முடிவாக ஒரு  வார்த்தை

வைதீஸ்வரன்


 

 நான் வேலையிலிருந்து களைப் புடன் உள்ளே நுழைந்தேன்.

நான் வருவதை அம்மா கவலை யுடன் பார்த்துக் கொண்டிருந் தாள்.

 நான் "என்ன?“ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தேன் அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.

எப்படி இருக்கே அப்பா?   சட் டையைக் கழட்டிக் கொண்டே கேட்டேன்.

அப்பா அரை மயக்கத்திலிருந் தார்.  போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ள தலையைத் திருப்பி குரல் வந்த  திசையைப் பார்த்தார்.

“ நீ வந்துட்டியா?”

நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது.  அம்மா மெது வான குரலில் சொன்னர்.

இதோட ஆறெழு தரம் சிறு நீர் கழிச்சுட்டார்..

நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன்  அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்கு தேவையான மாத்திரைகள் இருந்தன.டாக்டர் நாளைக்குத் தான் வரச் சொல்லியிருந்தார்.

 கடந்த ஆறு மாத காலமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப் பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது. அவருக்கு சிறுநீர கக்கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக் களெல்லாம்  சிறுநீர் மூலமாக வெளியேறிக்  கொண்டிருந்தன. ஆபத் தான நிலைக்குப்  போய் விடுவார்.

ஆஸ்பத்திரிக்குப்போய் இரண்டு மூன்று நாட்களுக்கு  நாலைந்து பாட் டில்கள் ஊட்டத்தை செலுத்தினால் தான்   ஓரளவு நிலைமை சீராகி  வீட்டிற்கு வருவோம்.  ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பி விடும்.

"இது தற்காலிக வைத்தியம் தான்... வயதாகி விட்டது...   பார்த் துக் கொள்ளுங்கள்...””   என்றார் டாக்டர் எச்சரிக்கையுடன்

 அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்.

 "இன்னிக்குத் தானே போகணும்...?” 

இன்னிக்கு இல்லேப்பா..நாளைக்குத் தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்....

 “அப்போ...இன்னிக்கு இல்லையா?...”

இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை இருக்கே!அதுமுடிந்தபின் நாளைக் குப் போகலாமே...

என் பதில் அப்பாவுக்கு   ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக் கொண்டார்.  நான்  உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனேன்.

அப்போ இன்னிக்கு இல்லையா?... இன்னிக்கே போ..க. லா..மே...

 அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன்  தனக் குள்ளே  முனகலுடன்  முடிந்தது.

 எனக்கு அவர் வேதனையை  உணர முடிந்தது.  இதை கவனித் துக் கொண்டிருந்த  அம்மா அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே... அவருக் கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு இருக்கு . ..” என் று எதிர்பார்ப்புடன் என்  முகத்தைப் பார்த்தாள்.

 சிறிது தயக்கத்துக்குப் பிறகு நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில் தான் நகரத்தின்  பிரதான சாலை இருந்தது.  ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும்சிரமம் அல்ல.

கடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும்  அப்பாவின்டல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் நிவர் த்தி யில்லாத   துக்கத்தையும்  சலிப்பையும் ஏற்படுத்தி யிருந்தன.

அப்பாவைப் பற்றி அப்படிப்பட்ட  சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாதெ ன்று எனக்குள் எவ்வளவோ எச்சரிக்கை செய்து கொண்டேன்.

அப்பா  சமீபகாலம்வரை ஆரோக்கியத்துடன்  இருந்தவர்.  சொல்லப் போ னால் என்னை விட  உடல் தெம்புடன் இருந்தவர்.  இர ண்டு வரு டங்களுக்கு முன்பு கூட தீராத  ஆஸ்துமா  வேதனை யில் நான் தவித்த போது  மழை கொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்து கொண்டு நடந்து போய்  டாக்டரை அழைத்து வந்து  ஊசிபோடச் செய்து  மூச்சுத் திணறலை  ஆறுதல்படுத்தி னார். அவருக்குவயதாகி உடல்நலம் இப்ப டிக்  கெட்டுப் போகு மென்று  நான்  எண்ணிப் பார்த்ததேயில்லை

பிரதான சாலை  ஒரு ஆட்டோ கூட இல்லாமல் விரிச்சோடிக் கிடந் தது. வித்யாசமாக பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலை யின் இருபக்கமும் காவல் காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக் கொடிகள் எந்த அக்கறையுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

மெதுவாக ஒரு காவல்காரரரை நெருங்கி   "இன்னிக்கு என்ன ஸார் விசே ஷம்?..”  என்று கேட்டேன்.

இது தெரியாதா?.. பேபர்லே எல்லாம் வந்திருக்கே! இந்தத் தெரு முனையிலே இருக்கற பெரிய ஆஸ்பத்திரியை  பிரதமர் வந்து தொறக் கறாரே... முதல் மந்திரி எல்லாம்  வரப் போறாங் களே!.....

 “அப்போ...

இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்...

 நான்  உதவியற்று  சாலையின் வெறுமையைப் பார்த்து  விட்டு நடந்தேன்.

 வீட்டுக்குள் நுழைந்து சட்டையை கழட்டினேன். நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி  தலையைத்  தூக்கினார் அப்பா.

இன்னிக்குப் போக முடியாதுப்பா...

 “ என்னாச்சு? “ 

பிரதம மந்திரி இந்தவழியா போறாராம். அதனாலெ ட்ராபிக்கை எல் லாம் நிறுத்தி வச்சிருக்கான்.  இப்போ போகலைன்னா  டாக் டரை நாளைக்குத் தான் பாக்க  முடியும்.  

அப்பா  இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார் .பெருமூச்சு விட்டார்.

பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா...நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”

 அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாக சொன்னதாக தெரியவில்லை.   அவர் கேட்டது ஒரு வகையில் நியாய மாக யதார்த்தமாகக் கூட இருந்தது. 

மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை .அவர் வாயில் மெள்ள  ஊற்றி   மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன் . போர்த்தி விட் டேன். 

கொஞ்சம் பொறுத்துக்கோங்கோப்பா.....நாளைக்கு போயிடலாம்... ஏற்கனவே நாளைக்குத் தான் டாக்டர்  அப்பாய்ண்ட்மெண்ட்  கொடுத் திருக்கார்..

நான் மெதுவாக என் அறைக்குள் போய்க் கொண்டிருந்தேன்.

ஏம்ப்பா..பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா ஜனங்களை இப்படிவிரட்டி அடிக்கணுமா?.. எம்மாதிரி பிராணாவஸ்தை பட்றவ...னெ..ல்லாம்...... வார்த்தை வரா மல்    துக்கம்  தொண்டையை அடைத்து    ஏதோ முணுமுணுப் பாக முடிந்தது.  ..

அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுமுணுப்பாக தொனிக் காமல்இதுமாதிரி வேதனைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் எத்தனையோ பாமர மக்களின்  குரலாக ஒலித்தது.
   


* * *

 மறு நாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனேன்.

நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகிவிட்டது. அப்பா பெரி தாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையை  பார்த்து அறிந்து கொண்ட  நர்ஸ் ஓடிப்போய்  டாக்டரை  அவசரமாக வெளியே அழைத்து வந்தார்.

 டாக்டர்  அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு
 “அய்யய்யோ...” என்றார், தனக்கு மட்டும் சொல்லிக்கொண்ட மாதிரி.

நேற்றே வந்திருக்க வேண்டும் டாக்டர்...  .வரமுடியாமல் போய் விட்டது....”  என்றேன்  கவலையுடன்

 "அடடா..... நேற்று  வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!   .....ஏன் இப்படி தாமதப் படுத்தினீங்க? .  என்னா ஆச்சு?””””

அது  வந்து..   ரோட்லே ....”  நான் சொல்ல வாயெடுத்தேன்.
அதற்குள் அப்பாவின் கையும்  தலையும்  வேகமாக அசைந்தது. 

 பேச்சு வராமல்   மூச்சு  தொண்டையில் சிக்கிக்கொண்டு உயிரின் இரைச்சலுடன் இழுத்துக்கொண்டிருந்தது ..

 அப்பா  நடுங்கிய விரல்களை அந்தரத்தில் யாரையோ சுட்டிக் காட்டியவாறு  அவர் சொன்ன அந்த முடிவான  வார்த்தை.....

பி...ர....தழ்..  ம்ம ….. ர்..