vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, March 2, 2016

எறிந்த விதை.

           எறிந்த  விதை.



திருலோகசீதாராம்  அவர்கள்   பாஞ்சாலி  சபதத்தை
சேவாஸ்டேஜ் நடிகர்களுக்குப்  படித்துக்  காட்டுவதற்காக  
சென்னைக்கு  வந்திருந்த போது   அவருடன்  நெருங்கிப் 
பழக   எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.  

சிலசமயம்  வீட்டிலிருந்த  குழந்தைகள்  அவர்  அறைக்கு  
வந்த போது "செந்தமிழ் நாடென்னும்    போதினிலே....” 
பாட்டை  கும்மி மெட்டில் பாடிக்கைதட்டி  அவர்களை உற்சாகப்படுத்துவார்.  

அவர் பாடிய உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது.  
அதே மெட்டில் சற்று  பாரதியாரின்  குரலைப்  போலவே  
எனக்கும்  ஒரு  பாட்டு தோன்றியது.    

அதை  எழுதி  சீதாராம்  அவர்களிடம்  காண்பித்தேன். 

அவர் ஆசிரியராக இருந்த "சிவாஜி" பத்திரிக்கையில்  
பிப்.1961ல் பிரசுரித்தார்.  

இதை படிப்பதைவிட அதே மெட்டில் பாடுவது  
கேட்பதற்குப் பொருத்தமாக  இருக்கும்.

என் ஆரம்பக் கவிதைகளில் இதுவும்  ஒன்று.


எறிந்த  விதை.
வைதீஸ்வரன்  1961

கொட்டும் மழைதன்னில்  நீராடிப்- -  பின்னே
கொத்துக்  கொத்தாய்  நல்லபூச்சூடி
பட்டுத்தழை மேனி  பொங்கி  நிற்கும்  - என்றன்
பாரிஜாதக் கொடி  பாருங்கடி
பந்தலின் மேலேறிப் பாங்காக அவள்
பாசமுடன்  என்னைப் பார்த்திருப்பாள்
தென்றலில் தேன்மணம்  சேர்த்துவிட்டுத்-  தெரு
வெங்கணும்  இன்பத்தைப்  பாய்ச்சிடுவாள்
செங்கதிரைக் கண்டு   எக்களிப்பாள் -  நல்ல
சங்கீதம்  கேட்டுக்குலுங்  கிடுவாள்
அந்திநன்  நேரத்தில் அன்னையைப்  போல்-  அவள்
செஞ்சுடர்த் திங்கள்  வணங்கி  நிற்பாள் - 

மாதவன் தாளடி சேர்ந்திடவே-    தினம்-
மாமலர்  ஆயிரம்  பூத்திடுவாள்
காதலனை யெண்ணிக்  காத்திருக்கும் இளங்
காரிகைக் காறுதல்  பூக் கொடுப்பாள்

சின்ன்ஞ் சிறுவிதையா யிருந்தாள்  - அன்று
சிந்தனை செய்யாமல்  நானெறிந் தேன்
இன்று  வளர்ந்தவள்  எந்தனுக்கே மணம்
ஈந்து  மலர்களைக்  கொட்டுகின்றாள்

என்ன பெருந்தன்மை காட்டி விட்டாள்!- -  அன்பில்
என்னென்ன   வண்மையைக்  கூட்டுகின்றாள்!
சின்னத்தனம்  கொண்ட  சித்தத்தையே-   மலர்
வெள்ளத்தினால்   பெரிதாக்கி விட்டாள்.

(சிவாஜி  இதழ்  21-2-61   ஆசிரியர்  திருலோக சீதாராம்)







No comments:

Post a Comment